பொறாமை கொள்ளவேண்டாம் - அழிவு நிச்சயம்

 

 

பொறாமை கொள்ள வேண்டாம் - அழிவு நிச்சயம்

----

 

 

     திருக்குறளில் "அழுக்காறாமை" என்னும் ஓர் அதிகாரம்.

 

     "அழுக்காறு" என்னும் சொல், அழுக்கு ஆறு (வழி) என இரண்டு சொற்களால் ஆனது என்றாலும், அதனை ஒரு சொல்லாகவே கொண்டு, அழுக்காறு என்றனர் நம் முன்னோர். அழுக்காறு என்பது சொல்லால், உடன்பாடாகத் தோன்றினும், பொருளால் எதிர்மறை ஆகி நின்று, உள்ளத்தின் உள்ளே நின்ற  அழுக்கைத் தவிர்த்தலை உணர்த்தி நின்றது. அழுக்கு வழியில் சென்றால் இழுக்கு வந்து சேரும் என்பதை உணர்த்தியது.

 

     "அழுக்காறு" என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ளாத தீய குணம் ஆகும். "அழுக்காறாமை" என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தீய குணத்தை விடுதல் ஆகும். பொறாமைப் படுதல்  பொறுத்துலுக்கு மறுதலை ஆனது. எனவே, பொறை உடைமையின் பின், பொறாமைப்படாமை என்னும் "அழுக்காறாமை" வைத்து அருளினார் நாயனார்.

 

     வேதம் என்பது "செய்யாமொழி" என்னும் எழுதாக் கிளவி ஆகும். திருக்குறள் நாயனாரால், வேதப் பொருள்களை உணர்த்திச் செய்து அருளப்பட்ட "பொய்யாமொழி" ஆகும்.

 

     எங்கள் ஊரில் எழுந்தருளி இறைபணியாற்றிக் கொண்டிருந்த சித்தர் சிவானந்த மவுன சுவாமிகள், தன்னிடத்து வரும் அன்பர்களுக்கு முதலில் கூறுவது வாழ்வியல் அறிவுரைதான். பின்னர்தான், சமயம் சார்ந்த கருத்துக்களும் இறைவழிபாடும் பற்றியது எல்லாம். முதலில் அவர் அறிவுறுத்துவது, "ருசிக்கு உணவு அல்ல. பசிக்குத் தான்; பசித்த பின்னர் புசி", "அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது", "உழைத்து வாழவேண்டும்" "பொறாமை எக்காரணம் கொண்டும் கூடாது" என்பன போன்ற அறிவுரைகளை, தனது கையால் சாக்குக் கட்டி கொண்டு தரையில் எழுதிக் காண்பித்து, கூடியுள்ள அன்பரில் ஒருவரை, தான் எழுதியதை உரக்கப் படித்துக் காட்டுமாறு பணிப்பார். ஒரு நாள், "போறாமை" என்று அவர் எழுதியதை ஒரு அன்பரைக் காட்டி, அதைத் திருப்பிப் படிக்குமாறு படித்தார். திருப்பிப் படித்தால், "மைறாபோ" என்று வந்தது. அடுத்தவனைக் கண்டு மனம் பொறுமினால், இப்படித் தான் ஆகவேண்டும் என்ற சைகையால் காட்டினார். பொறாமை அழிவைத் தரும் என்பதை விளக்குற்கு, இதைவிடச் சிறந்த வழி இல்லை. "கழிபேர் இரையான் கண் நோய் மிகும்" எனத் திருவள்ளுவ நாயனார் காட்டியதையும், "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" எனத் திருமூலர் காட்டியதையும் வலியுறுத்துவார்.

 

     அழுக்காறாமை என்னும் அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறள் வழி, "அறிவு உடையவர்கள் பொறாமைப்படுதல் என்னும் தீய வழியால் தமக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்பம் உண்டாவதை அறிந்து, பொறாமை காரணமாக, அறம் அல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்" என்று அறிவுறுத்தினார் நாயனார்.

 

     அறம் அல்லாதவையாவன --- செல்வம் கல்வி முதலியவை உடையவரிடத்தில், மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும், தீமை செய்ய நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆகிய மூன்றும்.

 

"அழுக்கு ஆற்றின் அல்லவை செய்யார், இழுக்கு ஆற்றின்

ஏதம் படு பாக்கு அறிந்து".

 

என்பது நாயனார் அருளிச் செய்த திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

ஆர்த்த பொறாமைச் சிசுபாலன், கண்ணன் ஆழியினால்

மூர்த்தம்அறுப்பு உண்டான், முருகேசா! - கூர்த்த

அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

 

இதன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானே,  ஆர்த்த பொறாமை சிசுபாலன் --- பேராரவாரம செய்த பொறாமையினை உடைய சிசுபாலன், கண்ணன் ஆழியினால் --- கண்ணனுடைய சக்கரப் படையினாலே, மூர்த்தம் அறுப்புண்டான் --- தலை அறுபட்டு மாண்டான். கூர்த்த --- நுட்பமாகப் பொருந்திய, அழுக்காற்றின் --- பொறாமையினால், ஏதம் படுபாக்கு அறிந்து --- குற்றம் உண்டாதலை உணர்ந்து, இழுக்காற்றில் --- தீ நெறிக்கண் சென்று, அல்லவை செய்யார் --- அறம் அல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.

 

         பொறாமையினால் சிசுபாலன் தலை அறுப்புண்டு மாண்டானாகையால், பொறாமை காரணமாக எவரும் அறம் அல்லாத காரியங்களைச் செய்யார் என்பதாம்.

 

     மூர்த்தம் --- உறுப்பு, தலை. அழுக்காறு --- பிறருடைய மேன்மையைக் கண்டு உள்ளம் புழுங்குதல். 

 

                                    சிசுபாலன் கதை

        

     சிசுபாலன் என்பான், வசுதேவன் உடன் பிறந்தாளும், அதனால் கண்ணனுக்கு அத்தையும் ஆகிய சேதி மன்னன் மனைவி சுருதசிரவை என்பாளுடைய மகன். திருமாலின் வாயில்காவலர்களாகிய ஜயவிஜயர்கள் ஒருகால் வைகுண்டம் புகுந்த சனகாதியரைத் தடுத்தமை பற்றி மூன்று பிறவிகள், திருமாலின் பகைவராய்ப் பிறந்து, திருமாலின் கையால் இறக்க என அவரால் சபிக்கப்பட்டு, இரணிய இரணியாட்சராகவும், இராவண கும்பகர்ணனாகவும், சிசுபால தந்தவக்ரராகவும் பிறந்தார்கள்.

 

     இச் சிசுபாலன் பிறந்தபொழுது அவனுக்கு நான்கு கைகளும், மூன்று கண்களும் இருந்தன. யார் தொட்டபோது அவை மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று ஆகாயவாணி (வானொலி) கூற, அவ்வாறு பலரும் தொடுகையில் கண்ணன் தொட்ட அப்போதே அவை மறையவும், கண்ணனால்தான் அவனுக்கு மரணம் என்று அறிந்தார்கள். கண்ணனும் அவனது அத்தையின் வேண்டுகோளுக்கு இரங்கி, சிசுபாலன் புரியும் நூறு பிழைகளைப் பொறுப்பதாக வாக்களித்தான். ஏற்கெனவே சிசுபாலற்குக் கண்ணனிடத்து உள்ள பகை, தனக்கென இருந்த உருக்குமிணியைக் கண்ணன் மணந்தபின் மேலிட்டது.

 

     தருமர் குதிரை வேள்வியாகிய அசுவமேத யாகத்தை மிகுந்த சிறப்போடு செய்து முடித்தார். வேள்வியின் இறுதியில் முதல் வழிபாடு யாருக்குச் செய்வதென்னும் ஐயம் தருமருக்கு உண்டாகியது. அங்கிருந்த பெரியோர்களை அது குறித்து உசாவினார். கண்ணபிரானே முதல் வழிபாட்டிற்குரியவர் என்று வியாச முனிவர் சொன்னார்.

 

'ஆர்கொலோ, அக்ர பூசனைக்கு உரியார்,

     அரசரில்' அந்தணீர்! உரைமின்-

பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும்

     பார்த்திவர் யாரையும் உணர்வீர்;

தார் உலாம் மார்பீர்!' என்றலும், வியாதன்

     தருமன்மா மதலையை நோக்கி,

'காரின் மா மேனிக் கரிய செந் திகிரிக்

     கண்ணனுக்குஉதவு' எனக் கதித்தான்.

 

     தருமர் கண்ணபிரானுக்கு முதல் வழிபாடு செய்யத் தொடங்கினார். இதனைக் கண்ட சிசுபாலன் கண்ணபிரானிடத்தில் பொறாமை கொண்டான்.

 

     இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட, கண்ணனைப் பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மர் மற்றும் தருமரின் மனதைப் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான். கங்கை மைந்தர் பீஷ்மரை வேசிமகன் என்று ஏசினான். கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்.

 

"பூபாலர் அவையத்து முற்பூசை  பெறுவார்   

     புறங்கானில்வாழ்

கோபாலரோ என்று உருத்துஅங்கு எதிர்த்துக்

     கொதித்து ஓதினான்,

காபாலி முனியாத வெங்காம நிகரான

     கவின்எய்தி எழ், 

தீ பால் அடங்காத புகழ்வீர கயம்

     அன்ன சிசுபாலனே",

 

........     ........ "நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம்

ஒன்றின் ஒன்று உச்சமாக, உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற,

கன்றிய மனத்தினோடும் கட்டுரை செய்தான், மன்றல்

தென்றல் அம்சோலை சூழும் சேதிநாடு உடைய கோவே".

 

"திண்ணியநெஞ் சினனான சிசுபாலன் 

     தன்நெஞ்சில் தீங்குதோன்ற

எண்ணியமன் பேரவையில் இயம்பியபுன் 

     சொற்களெலாம் எண்ணி எண்ணிப்

புண்ணியர் வந்துஇனிது இறைஞ்சும் பூங்கழலோன்  

    வேறொன்றும் புகலானாகிப்

பண்ணிய தன் புரவிநெடும் பருமணித்தேர்    

     மேற்கொண்டான் பரிதிபோல்வான்"

 

     சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு கட்டத்தில் அவனுக்கு மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்தெறிந்தது.

 

     சைவக் கருவூலமாகிய பெரிய புராணத்தை அருளிச் செய்த தெய்வச் சேக்கிழார் பெருமான், தவம் மறைந்து அல்லவை செய்து ஒழுகுகின்ற சமணர்கள், தங்களுக்கு வகுக்கப்பட்ட நெறியை மறந்து, திருஞானசம்பந்தர் வருகையால் தாங்கள் பாண்டிய மன்னனிடத்துக் கொண்டிருந்த ஆக்கம் சிதையுமோ என்னும் ஏக்கத்தால், பொறாமை கொண்டு இருந்து, அது காரணமாகவே அழிந்தார்கள் என்பதைப் பின்வரும் பாடல்களால் திருவள்ளுவ நாயானர் திருவுள்ளத்தைக் காட்டியுள்ள திறம் அறிந்து இன்புறத்தக்கது.

 

பிள்ளையார் செம்பொன்மணிப்

         பீடத்தில் இருந்தபொழுது,

உள்ள(ம்)நிறை பொறாமையினால்

         உழைஇருந்த கார் அமணர்

கொள்ளும் மனத்திடை அச்சம்

         மறைத்து, முகம் கோபத் தீத்

துள்ளி எழும் அனல் கண்கள்

         சிவந்து, பல சொல்லுவார்.

 

இதன் பொருள் ---

 

     திருஞானசம்பந்தர் பொன் பீடத்தில் அமர்ந்திருந்த போது, உள்ளத்தில் உண்டான பொறாமையினால், அருகிருந்த கருநிறமுடைய சமணர்கள் தம் மனத்திடைக் கொண்ட அச்சத்தை மறைத்து, முகத்தில் சினத் தீயானது துள்ளி எழுவதுபோல் கண்கள் நெருப்பெனச் சிவந்து பலவாறு சொல்பவராய்.

 

குறிப்பு --- சமணர்கள் உள்ளத்தில் அச்சம் நிறைந்து இருந்தது. அதனை மறைத்து, கோபத் தீயானது, அவர்களது முகத்தில் வெளிப்பட, கண்கள் சிவந்தன. பொறாமைப் படுபவர்களுக்கு சினமும், அச்சமும் சேர்ந்தே இருக்கும்.

 

     திருநீற்றுப் போரிலும், அனல்வாதத்திலும் திருஞானசம்பந்தரிடம் தோற்றுப் போன, சமணர்கள், புனல் வாதம் புரிவோம் என்றனர். திருஞானசம்பந்தப் பெருமான் அதற்கும் உடன்பட்டார். அப் பொழுது குலச்சிறை நாயனார், "இனி வாதில் தோற்றவர்களை என்ன செய்வது என்பதை முடிவு செய்துகொண்ட பின்னரே, வாதில் இறங்க வேண்டும்" என்றார். அது கேட்ட, சமணர்களுக்கு கோபமும், பொறாமையும் பொங்கி வழிந்தன. அது காரணமாக, அவர்கள் தமது வாய் சோர்ந்து, "நாங்கள் தோற்றாமானால், எங்களை இம் மன்னன் கழுவினில் ஏற்றுவான்" என்று கூக்குரல் இட்டாரகள். பாண்டியன், சமணர்களைப் பார்த்து, "கோபமும், பொறாமையும் எங்களை இவ்வாறு கூறச் செய்தன" என்று சொன்னான்.

 

அங்கது கேட்டு நின்ற

         அமணரும் அவர்மேற் சென்று

பொங்கிய வெகுளி கூரப்

         பொறாமைகா ரணமே யாகத்

தங்கள்வாய் சோர்ந்து தாமே

         தனிவாதில் அழிந்தோ மாகில்

வெங்கழு ஏற்று வான்இவ்

         வேந்தனே யென்று சொன்னார்.

 

இதன் பொருள் ---

 

     அங்கு அவர் உரைத்ததைக் கேட்ட சமணர்கள், அவ்விடத்து மேற்கொண்டு பொங்கிய சினம் மிகுதியால், பொறாமைக் குணமும் மீதூர, தம் வாய் சோர்ந்து, `இந்த ஒரு வாதத்திலும் தோற்றோம் எனில், இம்மன்னனே எங்களைக் கொடிய கழுவில் ஏற்றுவானாக!'என்று தாங்களே கூறினர்.

 

மற்று அவர் சொன்ன வார்த்தை

         கேட்டலும், மலய மன்னன்,

"செற்றத்தால் உரைத்தீர், உங்கள்

         செய்கையும் மறந்தீர்" என்று

பற்றிய பொருளின் ஏடு

         படர்புனல் வைகை யாற்றில்

பொற்புற விடுவதற்குப்

         போதுக என்று கூற.

 

இதன் பொருள் ---

 

     அவர்கள், அங்ஙனம் உரைத்ததைக் கேட்ட பொதிய மலையின் அரசனான பாண்டிய மன்னன், `நீங்கள் சினம் மிகுதியினால் இங்ஙனம் கூறி விட்டீர்கள். உங்கள் செய்கைகளையும் மறந்து விட்டீர்கள்!' என்று சொல்லிப் பின், `உண்மை பற்றிய பொருளை உட்கொண்ட உம் ஓலைகளை ஓடும் நீரையுடைய வைகையாற்றில் அழகுபொருந்த விடுவதற்குச் செல்லுங்கள் ' என்று கூற.

 

     பின்னர் திருஞானசம்பந்தப் பெருமான் திருத்தெளிச்சேரி என்னும் திருத்தலத்தைச் சாரச் செல்லுகையில், போதிமங்கையில் இருந்த புத்தநந்தி முதலானவர்க்கு அறிவித்த புத்தர்கள், திருஞானசம்பந்தப் பெருமானாரின் ஆக்கம் கண்டு, பொறாமை கொண்டிருந்த நிலையை, தெய்வச் சேக்கிழார் பெருமான் அறிவித்து அருளுவதைக் காண்போம்...

 

புல்லறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்

         புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்

எல்லையினில் எழுந்தருளும் பொழுது, தொண்டர்

         எடுத்தஆர்ப் பொலியாலும், எதிர்முன் சென்று

மல்கிஎழும் திருச்சின்ன ஒலிகளாலும்

         மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு, தங்கள்

கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி

         முதலான தேரர்க்கும் கனன்று சொன்னார்.

 

இதன் பொருள் ---

 

     இதனைப் புல்லிய அறிவுடைய சாக்கியர்களுள் அறிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சீகாழியினரின் காவலரான திருஞானசம்பந்தர் ஊரின் எல்லையுள் புகுந்தபோது, திருத்தொண்டர்கள் எடுத்த சிவ ஒலிகளின் முழுக்கத்தாலும், அவர்களின் எதிரே முன் அணியில் திரண்டு எழுந்து ஒலிக்கும் திருச்சின்னம் எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும், தம் உள்ளத்துள் கொண்ட பொறாமையால், மயக்கம் அடைந்து, தம் கல்வியிலே மேம்பட்ட புத்தநந்தி முதலானவர்களுக்குச் சினத்துடன் கூறினர்.

                                                     

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்....

 

தாரணியில் எவரேனும் துயர் உறில், தன்

             தலையின்முடி தரித்தது ஒப்பாம்,

சீரணியும் செல்வம் அவர் படைத்திடில் தன்

             தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,

காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்

             தன்வலியால் கணத்துக்கு உள்ளே

பூரணமா ஆக்கிடுவோன், பொறாமை உளோன்

             அன்றி எவர் புவியின் கண்ணே.   ---  நீதிநூல்.

        

இதன் பொழிப்புரை ---

 

         பிறர் வாழ மனம் பொறுக்காத தீயோருக்கு, உலகில் யார் துன்புற்றாலும், தம் தலையில் முடி சூடியது ஒப்பாகும். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்தது ஒப்பாகும். இப்படி ஒரு காரணமும் இன்றி நொடிப் பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வன்மை பொறாமை உள்ளவர்க்கு அன்றி எவர்க்கு முடியும்?

 

வவ்விடலே முதலாய வினையால் ஒவ்

             வோர் பயன் கை வந்து கூடும்,

அவ்வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி

             சமையமும் வந்து அமைய வேண்டும்,

எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல்

             எரி என்ன இதயம் தன்னைக்

கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகு அளவு

             பயன் உளதோ கருதுங் காலே.      --- நீதிநூல்.

        

இதன் பொழிப்புரை ---

 

     கவர்தல் முதலாகிய தீமைகளால் ஒவ்வொரு பயன் வந்து கை கூடும். அதற்கும் இடம், கருவி, காலம் எல்லாம் பொருத்தமாக அமையவேண்டும். உள்ளத்தைத் தீப்போல் கவர்ந்து மேல் எழும் பொறாமைக் குணத்துக்கு இடம், காலம் ஏதும் வேண்டா. எப்பொழுதும் நிகழும். ஆனால், அதனால் கடுகளவு பயனும் கிடையாது.

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...