இறைவனைச் சீண்டலாமா?

 

இறைவனைச் சீண்ட முடியுமா?

CAN WE TEASE THE GOD? YES, IF WE ARE CAPABLE OF.

-----

 

     அருணகிரிநாதப் பெருமான் பின்வரும் திருப்புகழ்ப் பாடலால் முருகப் பெருமானைச் சீண்டுவதைக் காணலாம்.

 

 

ஏது புத்தியை யாவெ னக்கினி

     யாரை நத்திடு வேன வத்தினி

     லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

 

றேயி ருக்கவு நானு மிப்படி

     யேத வித்திட வோச கத்தவ

     ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

 

பாதம் வைத்திடை யாதெ ரித்தெனை

     தாளில் வைக்கநி யேம றுத்திடில்

     பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

 

பால்மொ ழிக்குர லோல மிட்டிடி

     லாரெ டுப்பதெ னாவெ றுத்தழ

     பார்வி டுப்பர்க ளோவெ னக்கிது ...... சிந்தியாதோ

 

ஓத முற்றெழு பால்கொ தித்தது

     போல வெட்டிகை நீசமுட்டரை

     யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

 

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்

     மான்ம ழுக்கர மாட பொற்கழ

     லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

 

மாதி னைப்புன மீதி ருக்குமை

     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு

     மார்ப ணைத்தம யூர வற்புத ...... கந்தவேளே

 

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ

     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்

     வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.

 

 

     திருப்புகழ்ப் பாடல்கள் படிப்பதற்கும், ஓதுவதற்கும், மனப்பாடம் செய்வதற்கும் எளிதல்ல என்று எண்ணி விடாதீர்கள். பதம் பிரித்துப் படித்து விட்டால், தேனைப் போலவும், அமுதம் போலவும் தித்திக்கும் எம்பெருமான் முருகனின் திருப்புகழ். இத் திருப்புகழ்ப் பாடலைப் பின்வருமாறு பதம் பிரித்துத் தருகின்றேன்.

  

ஏது புத்தி, ஐயா! எனக்கு? னி

     யாரை நத்திடுவேன்? அவத்தினி-

     லே இறத்தல் கொலோ? எனக்கு நி ......தந்தைதாய்

 

என்றே இருக்கவும், நானும் இப்படியே

     தவித்திடவோ? சகத்தவர்

     ஏசலில் படவோ? நகைத்தவர் ...... கண்கள்காணப்

 

பாதம் வைத்திடு ஐயா! தரித்து, னை

     தாளில் வைக்க நியே மறுத்திடில்,

     பார் நகைக்கும் ஐயா! தகப்பன் முன் ......மைந்தன்ஓடிப்

 

பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில்

     யார் எடுப்பது எனா வெறுத்து ,

     பார் விடுப்பர்களோ? எனக்கு இது ...... சிந்தியாதோ?

 

ஓதம் உற்று எழு பால் கொதித்தது

     போல, எட்டிகை நீச முட்டரை

     ஓட வெட்டிய பாநு சத்தி கை ...... எங்கள்கோவே!

 

ஓத மொய்ச்சடை ஆட உற்று, மர்

     மான் மழுக்கரம் ஆட, பொற்கழல்

     ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே!

 

மா தினைப்புன மீது இருக்கும், மை

     வாள்விழிக் குறமாதினை, திரு

     மார்பு அணைத்த மயூர! அற்புத! ...... கந்தவேளே!

 

மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழ-

     லார் வியப்பு உற, நீடு மெய்த்தவர்

     வாழ் திருத்தணி மாமலைப் பதி ...... தம்பிரானே.

 

இதன் பொருள் ---

 

         தண்ணீரோடு கூடிய பாலை வற்றக் காய்ச்சும்போது, அந்தப் பால் எப்படிக் கொதித்து எழுமோ அப்படி எட்டுத் திசைகளிலும் இருந்து சீறி வந்த நீசர்களாகிய அரக்கர்களின் உடலைத் துணித்து, அவர்களது உயிர் எமபுரத்திற்கு ஓடும்படியாக, வெட்டிக் கொன்ற கோடிசூரியர்களின் ஓளியினை உடைய வேலாயுதத்தைத் திருகரத்தில் ஏந்தியவரே! எங்கள் தலைவரே! கங்கை வாழ்கின்ற திருச்சடை ஆடவும், மானையும், மழுவையும் ஏந்தியுள்ள திருக்கரங்கள் ஆடவும், பொன்னாலாகிய வீரக்கழல் இனிது ஒலிக்கவும், ஞானாகாயப் பெருவெளியில் அநவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருளும் சிவபபரம்பொருள் அருளிய பெருவாழ்வே! பெருமை பொருந்திய தினைப் புனத்தில் வாழ்ந்திருந்த, மை தீட்டப் பெற்ற ஒளி பொருந்திய திருக்கண்களை உடையவளாகிய (எம்பிராட்டியும், அகிலாண்ட நாயகியும் ஆகிய) வள்ளிநாயகியாரைத் திருமார்பில் தழுவுகின்ற மயில்வாகனரே! அற்புதமான திருவிளையாடல்களை உடையவரே! கந்தக் கடவுளே! மலரைச் சூடியுள்ள கூந்தலை உடைய மாதர்கள் தமது அழகில் மயங்காதவர்களைக் கண்டு வியக்குமாறு, மன்மதனையும் வென்று, பெரும் தவம் புரியும் ஞானிகள் வாழுகின்ற திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள தனிப்பெரும் தலைவரே!

 

         எனது ஐயனே! எனக்கு ஏது புத்தி உள்ளது? (நான்தான் சேராத இடம் தனிலே சேர்ந்து, உன்னை மறந்து, மதி கெட்டு அற வாடி, கதியும் கெட்டு, அவமே கெடவே கிடந்தேனே!) இனி உம்மை அன்றி யாரை நான் விரும்பி இருப்பேன். அடியேன் இப்படியே இருந்து உய்தி இன்றி, இறந்து போகத்தான் நேருமோ? (அடியவன் ஆகிய இந்தப் பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்து அருளுகின்ற) அத்தனாகவும், அன்னையாகவும் எனக்குத் தேவரீர் இருக்கவும், நானும் இப்படியே தவித்துக் கிடக்கலாமோ? உலகத்தாருடைய ஏச்சுப் பேச்சுக்களுக்கு நான் (இனியும்) ஆளாகிக் கிடக்கவேண்டுமா? என்னைக் கண்டு எள்ளி நகையாடியவர்கள் கண்கள் காணுமாறு, உமது திருவடித் தாமரையை எனது புன்தலை மீது வைத்து ஆட்கொண்டு அருள்புரிவாய், ஐயனே! அடியேனைத் தாங்கி ஆதரித்து, என்னை உமது திருவடியில் வைப்பதற்கு நீரே மறுப்பீரானால், இந்து உலகமானது (உம்மையும், உமக்கு ஆளாக விழைந்த என்னையும்) கண்டு நகைக்குமே, சுவாமீ! பால்மணம் மாறாத ஒரு குழந்தையானது, தனது தந்தையின் முன் சென்று நின்று, தனது இளங்குரலை எடுத்து "ஓ" என்று ஓலமிட்டு அழுதால், தந்தைதான் வாளா இருப்பாரா? அல்லது உலகத்தவர்தான், "அழுகின்ற இந்தக் குழந்தையை யாராவது எடுக்கட்டும்" என்று இருந்து விடுவார்களா? சுவாமீ! இந்த நியாயமானது என்னளவில் உமது திருவுள்ளத்தில் தோன்றாதா? (இனியும் காலம் தாழ்த்தாமல் திருவருள் புரிவீராக)

---------

 

     அருணகிரிநாதப் பெருமான் பாடி அருளிய இத் திருப்புகழ்ப் பாடல் மிகமிக அருமையானது.  ஒரு மகன் தனது அருமைத் தந்தையிடம், தனக்கு உள்ள குறைகளைக் கூறி முறையிடுகின்ற முறையில் அமைந்துள்ளது.

 

     "எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ, சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்" என்று கந்தர் அனுபூதியில் அடிகளார் வேண்டினார். முருகப் பெருமான் அனைத்து உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். நமது துயரங்களை அவன் போக்கி அருளுவான். தந்தையானவன் தமக்கு இரங்கி அருளவில்லையே என்னும் ஆதங்கத்தில், மகன் உரிமையோடு சீண்டுவதை உலகியலில் காணலாம்.

 

     வாய் ஓயாமல் எப்போதும், முருகன், குமரன், குகன் என்று நினைந்து உருகும் செயலில் இருக்கும் அடியவர் ஒருவருக்கு, இறைவன் அருளாது போனால், "முருகா, முருகா என்று உருகியே இவன் உருப்படாமல் போனான்" என்று உலகத்தவர்கள் ஏசுவார்கள். அந்த ஏச்சும் ஏளனப் பேச்சும் அடியவனுக்கு மட்டுமல்ல, நம்பி இருந்து இறைவனுக்கும் கூடப் போய்ச்சேரும். "சகத்தவர் ஏசலில் படவோ?" என்றும் "பார் நகைக்கும் ஐயா!" என்றும் சுவாமிகள் பாடி அருளியது இருவருக்கும் பொருந்தும். அடியவனுக்கு உண்டாகின்ற பழி, ஆண்டவனுக்கும் பொருந்தும். "பார் நகைக்கும்" என்றும் "சகத்தவர் ஏசலில் படவோ?" என்றும் அருணைவள்ளலார் முருகப் பெருமானைச் சீண்டுகின்றார்.

 

     அப்பர் பெருமானும், சிவபரம்பொருளின் திருவருளை விழைந்து சீண்டிப் பாடியருளிய போது, "இவன் சிறிய தொண்டன், இவன் என்ன இப்படி நினைத்தானே என்று எண்ணி, சுவாமீ! நீர் என்னைப் பற்றி உள்ள பிணிகளும், அவற்றால் உண்டான நோய்களும் என்னைத் தாக்காதவாறு காக்கவில்லையானால், உம் மீது பழி வந்து சேரும். எனவே, என்னைக் காத்து அருளவேண்டும்" என்று சீண்டுகின்றார்.

 

ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்!என்று அரும்பிணிநோய்

காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார்

தேவா! திருவடி நீறு என்னைப் பூசு, செந்தாமரையின்

பூஆர் கடந்தையுள், தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!

 

இதன் பொருள் ---

 

     செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! ஐயோஇச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்ற திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

 

     திருச்சத்திமுற்றம் என்னும் திருத்தலத்தில் வழிபடும்போதும், "பெருமானே! இயமன் வந்து என்னைத் துன்புறுத்தும் முன்னர், உமது திருவடிகளின் முத்திரையை அடியேன் மீது பொறித்து வைக்காமல் விட்டீரானால், அழியாத முழுப்பழி உம்மை வந்து சூழ்ந்து கொள்ளும்" என்று சீண்டிப் பாடுகின்றார்.

 

"கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்

பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை, போகவிடில்,

மூவா முழுப்பழி மூடுங்கண்டாய்! முழங்கும் தழல்கைத்

தேவா! திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே".

 

இதன் பொருள் ---

 

     ஒலிக்கும் தீயினைக் கையில் ஏந்திய தேவனே! திருச்சத்திமுற்றத்தில் உகந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தே! தலைமை உடையவனாய் விரைந்து வந்து உயிரைப் போக்கும் திறமையை உடைய கூற்றுவன் என்னைத் துன்புறுத்துவதன் முன்னம், தாமரைப் பூப் போன்ற திருவடிகளின் அடையாளத்தை என்மேல் பொறித்து வைப்பாயாக. அங்ஙனம் பொறிக்காது வாளா விட்டு விட்டால் அழியாத பழி முழுதும் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்பதனை நீ உணர்வாயாக.

 

     தேன் பொருந்திய மலர்களைச் சூடியுள்ள கூந்தலை உடைய அங்கயற்கண்ணித் தாயே! நான் படுகின்ற துன்பங்கள் இவ்வளவு என்று எண்ணிச் சொல்ல முடியாதவை. அவற்றை எல்லாம் உன்னிடம் வந்து பலகாலும் கூறிச் சலித்துவிட்டேன். தாயே! எனக்கு அருள் புரியாமல் நீ இன்னமும் பிடிவாதம் செய்தல் ஆகாது. உனது அடிமையாகிய என்னை இந்த உலகத் துன்பம் என்னும் நிறைந்த வெள்ளத்தை உடைய ஆற்றின் நடுவில் இருந்து என்னைக் கரையேற்றமால், நட்டாற்றில் கைவிட்டு விடாதே. அப்படி நீ செய்தால், உன்னையே நம்பி இருந்த என்னைக் கைவிட்டதால் உண்டான பழியானது உன்னிடம் நெடுங்காலம் நிலைத்து இருக்கும். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், மீனாட்சி அன்னையிடம் சீண்டிப் பாடுவதைக் காண்போம்...

 

"மட்டுஆர் குழல் அங்கயற்கண் அம்மே!

     இம்மட்டு என்று தொகைக்கு

எட்டாத துயரம் நின் பால்

     சொல்லியே சலிக்க,

ஒட்டாரம் நீ செய்யல் ஆகாது, பார்

     உன் அடிமை தன்னை

நட்டாற்றில் கை விட்டிடாதே,

     பழி வெகுநாள் நிற்குமே".

 

     மணிவாசகப் பெருமானும், "பிறைசேர் பாலின் நெய் போலப் பேசாது இருந்தால் ஏசாரோ?" என்று இறைவனைச் சீண்டுகின்றார். "இவன் சிவபெருமானுக்கு அடியவன் என்று ஏசுவார்கள், பேசுவார்கள். ஆனால் நானோ அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல், நான் உனது அருளேயை பேசி இருப்பேன்" என்றும் தனது வேண்டுதலை வலியுறுத்திச் சீண்டி, "இனியாவது இரங்கி அருளவேண்டும்" என்று பாடுகின்றார்.

 

"ஏசா நிற்பர் என்னை உனக்கு

     அடியான் என்று பிறர் எல்லாம்

பேசா நிற்பர், யான் தானும்

     பேணா நிற்பேன் நின் அருளே,

தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும்

     திருவோலக்கம் சேவிக்க,

ஈசா! பொன்னம்பலத்து ஆடும்

     எந்தாய் இனித்தான் இரங்காயே"

 

     அருணகிரிநாதரும் பிறிதொரு திருப்புகழில், "பாசத்தை நாசம் செய்யும் பெருமானே! அழியாத பெருவாழ்வைப் பெறாமல், நெருப்பில் போட்டுக் கொளுத்துகின்ற வாழ்வாகிய இழிந்த நிலையை, முருகா! உமது திருவடிகளைப் போற்றி வழிபாடுசெய்யும், சிறந்த அடியார்கள் பெறுவார்களாயின், தேவரீரை உலகத்தார் நிந்திக்க மாட்டார்களா? நல்வினை தீவினை என்னும் இருவினைகள், ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்கள் அற்றுப் போகவும், இறப்பும் பிறப்பும் இல்லாமல் தொலையவும், தேவரீரும் அடியேனும் ஒன்றுபட்டு அத்துவிதமாகக் கலக்கும் வகையான, பேரின்பப் பெருவாழ்வை அருளவேண்டும்" என்று வேண்டுகின்றார்.

 

........     ........     ........     ........ "எரிதனில் இடும்வாழ்வே

இணையடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும்,

     ஏசிடார்களோ? பாச நாசனே!

     இருவினை, மும்மலமும் அற, இறவியொடு பிறவி அற,

ஏக போகமாய், நீயும் நானுமாய்

     இறுகும்வகை, பரமசுகம் அதனை அருள், டைமருதில்

     ஏக நாயகா! லோக நாயகா! ...... இமையவர் பெருமாளே".

 

     இத் திருப்புகழ்ப் பாடலில் இன்னொரு வகையாகவும் முருகப் பெருமானைச் சீண்டிப் பாடுகின்றார்.

 

     பால்மணம் மாறாத ஒரு பச்சிளம் குழந்தையானது, தனது தந்தையின் முன் ஓடி வந்து, பவளவாய் துடிக்கக் கண்ணீர் வடித்து, தனது ழலைக் குரலால் "ஓ" என்று ஓலமிட்டு அழுதால், உலகத்தவர் யாரும் பார்த்தாலும், "ஐயோ! குழந்தை இப்படி அழுகின்றதே" என்று பரிந்து வந்து எடுப்பார்கள். அப்படி இருக்க, கல்நெஞ்சு உடைய தந்தையானவன் எடுத்து அணைக்காமல் இருக்கமாட்டான். இது உலக நியதி. இந்த நியதி உமது திருவுள்ளத்தில் தோன்றாதா? உம்மையே கதியாக எண்ணி இருந்து, உமது திருவருளே வேண்டி நாள்தோறும் அழுது புலம்புகின்ற என்மீது திருவருள் வைத்து அருளுதல் வேண்டும்" என்று அருணை வள்ளலார், திருத்தணிகை முருகனை வேண்டுகின்றார்.

 

     இறைவன் தனக்கு விரைந்து அருள் புரியவேண்டும் என்னும் கருத்தில், இப்படிச் சீண்டிப் பாடுகின்ற பாடல்கள் நிறைய உள்ளன. சீண்டிப் பார்க்கும் தகுதி நம்மிடம் இருந்தால், நாமும் தாராளமாகச் சீண்டலாம்.

 

     தன்னைச் சீண்டும் மகனைச் சீறுகின்ற தந்தை உலகில் இல்லை. NO FATHER WIL TEASE BACK HIS CHILD, IF HE IS TEASED.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...