திருக் கொள்ளிக்காடு

 

 

திருக் கொள்ளிக்காடு

(கள்ளிக்காடு)

சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். 

     மக்கள் வழக்கில், "கள்ளிக்காடு" என்று வழங்கப்படுகின்றது.

இறைவர்              : அக்கினீசுரர்.

இறைவியார்          : மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை

தல மரம்         : வன்னி.

தீர்த்தம்               : தீர்த்தக்குளம்.

வழிபட்டோர்          : அக்கினி.

 தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - நிணம்படு சுடலையின் நீறு.

 

         திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் இரயில் தடத்தில் உள்ள ஆலட்டம்பாடி இரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது.

         திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து, அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் (திருநெல்லிக்கா) செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மீ. சென்றால், முதலில் திருநெல்லிக்கா திருத்தலமும் அடுத்து 2 கி.மீ. தொலைவில் திருத்தெங்கூர் திருத்தலமும் அதையடுத்து மேலும் 4 கி.மீ. சென்றால் திருகொள்ளிக்காடு திருத்தலத்தை அடையலாம்.

     (திருக்கைச்சினம்) கச்சனத்திலிருந்து மினி பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.\

 

ஆலய முகவரி    

அருள்மிகு அக்னீசுரர் திருக்கோயில்

திருக்கொள்ளிக்காடு

கீராலத்தூர் அஞ்சல்

(வழி) திருநெல்லிக்காவல்

திருத்துறைப்பூண்டி வட்டம்

திருவாரூர் மாவட்டம்

PIN - 610205

         காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

         தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களில் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு என்னும் தலமாகும். திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய தலங்களின் நடுவே அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களையும் கொண்ட இத்தலத்தின் நாயகர் அக்னீஸ்வரர். சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது. சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

         இராஜகோபுரம் இல்லை. மேற்கு நோக்கிய ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் மேறகு வெளிப் பிரகாரத்தில் நாம் காண்பது கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி. அதைத் தாண்டி உள் வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீசுரர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவனுக்கு உள்ள மற்றொரு பெயர் தீவண்ணநாதர். பெயருக்கு ஏற்றாற்போல் இங்குள்ள இறைவன் மேனி சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் சந்நிதிக்கு முன்னால், இடப்பக்கத்தில் இறைவி பஞ்சினும் மெல்லடியம்மை சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் விளங்குகின்றனர். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்குள்ள முருகன் மற்ற கோயிலைப்போலல்லாமல் கையில் வில்லேந்திய தனுசு சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக கோவிலுக்கு எதிரில் உள்ள வன்னியும், தீர்த்தமாக கோயிலுக்கு எதிரில் உள்ள குளமும் உள்ளது.

         மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவானின் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் மிகச்சிறந்த அம்சமாகும். திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீசுவரனுக்கு இத்தலத்தில் தான் விசடம். நளன் இத்தலத்தில் சனீசுவரரை வழிபட்டுள்ளான் என்ற சிறப்பு இடையது இச்சந்நிதி. புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி என்பது பிரசித்தம். சனி  இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிப்பதால், அவர் அருள் வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

         நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள். ஆனால், இவ்வாலயத்தில் "ப" வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி பருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.

 

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

 

பெரிய புராணப் பாடல் எண் : 574

நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,

         நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,

பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,

         பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,

உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்,

         ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,

செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி,

         திருமலிவெண் துறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

 

         பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.

 

         குறிப்புரை : இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

திருக்காறாயில் -      நீரானே (தி.2 ப.15) - இந்தளம்.

திருத்தேவூர் -         1. பண்ணிலாவிய (தி.2 ப.82) - காந்தாரம். -

                                             2. காடுபயில் (தி.3 ப.74) - சாதாரி.

 திருநெல்லிக்கா -      அறத்தாலுயிர் (தி.2 ப.19) - இந்தளம்.

திருக்கைச்சினம் -      தையலோர் (தி.2 ப.45) - சீகாமரம்.

திருத்தெங்கூர் -        புரைசெய் (தி.2 ப.93) - பியந்தைக்காந்தாரம்.

 திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3 ப.16) - காந்தாரபஞ்சமம்.

 திருக்கோட்டூர் -       நீலமார்தரு (தி.2 ப.109) - நட்டராகம்.


3.    016    திருக்கொள்ளிக்காடு               பண் - காந்தாரபஞ்சமம்        

 

திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்று

இணங்குவர் பேய்களோடு இடுவர் மாநடம்

உணங்கல்வெண் தலைதனில் உண்பர் ஆயினும்

குணம்பெரிது உடையர்நம் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர் , உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர் . ஆயினும் அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

 

பாடல் எண் : 2

ஆற்றநல் அடியிணை அலர்கொண்டு ஏத்துவான்

சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்

மாற்றலன் ஆகிமுன் அடர்த்து வந்துஅணை

கூற்றினை உதைத்தனர் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள் இறுதியை அறிந்து யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார்  

பாடல் எண் : 3

அத்தகு வானவர்க் காக மால்விடம்

வைத்தவர் மணிபுரை கண்டத் தின்உளே

மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்

கொத்துஅலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய சிவபெருமான் , ஊமத்தம் பூவும் , வன்னியும் அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

 

பாடல் எண் : 4

பாவணம் மேவுசொல் மாலை யிற்பல

நாவணம் கொள்கையின் நவின்ற செய்கையர்

ஆவணம் கொண்டுஎமை ஆள்வர் ஆயினும்

கோவணம் கொள்கையர் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன் நவிலுமாறு செய்தவர் இறைவர் . அவர் உயிர்களாகிய எங்களை அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவணஆடை உடையவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

 

பாடல் எண் : 5

வார்அணி வனமுலை மங்கை யாளொடும்

சீர்அணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்

நார்அணி சிலைதனால் நணுக லார்எயில்

கூர்எரி கொளுவினர் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு , சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும் சிவபெருமான் , நாண் பூட்டிய மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

 

பாடல் எண் : 6

பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்

மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்

வெஞ்சின மருப்பொடு விரைய வந்துஅடை

குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள் தோறும் தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர் , கொடிய சினத்தோடும் , கொம்போடும் வேகமாக வந்தடைந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

 

பாடல் எண் : 7

இறைஉறு வரிவளை இசைகள் பாடிட

அறைஉறு கழல்அடி ஆர்க்க ஆடுவர்

சிறைஉறு விரிபுனல் சென்னி யின்மிசைக்

குறைஉறு மதியினர் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களையுடைய உமாதேவி இசைபாட, திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க, இறைவர் திருநடனம் புரிகின்றார். அப் பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையில் தாங்கி, கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி, திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

  

பாடல் எண் : 8

எடுத்தனன் கயிலையை இயல்வ லியினால்

அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்

படுத்தனர் என்றுஅவன் பாடல் பாடலும்

கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை , தம் காற்பெரு விரலையூன்றி அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய , இராவணன் தவறுணர்ந்து , தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட , இறைவர் இரங்கி வீரவாளை அருளினார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

 

பாடல் எண் : 9

தேடினார் அயன்முடி, மாலும் சேவடி

நாடினார், அவர்என்றும் நணுக கிற்றிலர்,

பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்

கூடினார்க்கு அருள் செய்வர் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :பிரமன் திருமுடியினையும் , திருமால் திருவடியையும் தேட , அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும் சிவபெருமான் , பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள்செய்வார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

 

பாடல் எண் : 10

நாடிநின்று அறிவில்நா ணிலிகள் சாக்கியர்

ஓடிமுன் ஓதிய உரைகள் மெய்யல,

பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்

கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.

 

         பொழிப்புரை :இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற சமணரும் , புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல . அவர்களைச் சாராதுவிட்டு , நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான் , நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள் .

 

பாடல் எண் : 11

நல்தவர் காழியுள் ஞானசம் பந்தன்

குற்றம்இல் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்

சொல்தமிவ் இன்னிசை மாலை சோர்வுஇன்றிக்

கற்றவர் கழல்அடி காண வல்லரே.

 

         பொழிப்புரை :நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , அழகு தமிழில் , இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள் .

திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...