நல்லோரைச் சார்ந்தால் நன்மை
-----
ஐந்து அறிவு மட்டுமே பெற்றவர்கள் மக்கள் வடிவில் இருந்தாலும் அவர்கள் மாக்களே (விலங்குகளே). ஆறாவது அறிவாகிய மன உணர்வு சிறப்பதற்கு, நல்லொழுக்கம் அவசியம். அற வாழ்வு அவசியம். அறிவு நூல்களையும், அருள் நூல்களையும் ஓதி, அதன் வழி நிற்க முயலவேண்டும். ஏன் முயலவேண்டும் என்கிறேன் என்றால், ஓதுவது எளிது, உணர்வது முயற்சி இருந்தால் முடியும், ஓதியவழி நிற்பது என்பதுதான் நம்முடைய முயற்சிக்கு எட்டாததாக இருப்பதாக நம்மில் பலருக்கும் தோன்றுகிறது. காரணம், மாயா காரியமாகிய, முழு அறிவு அற்ற உலகியல் பொருள்களோடு மட்டுமே பழகி, அதன் மூலம் சிற்றறிவைப் பெற்று வருவதுதான். ஒன்றைப் பெறவேண்டும் என்றால், ஒன்றை விட்டால்தான் முடியும். உலகியல் இன்பங்களில் பற்று விட்டால்தான், பற்றவேண்டிய பேரின்பத்தைப் பெறமுடியும்.
நாம் எதைச் சார்ந்து இருக்கிறோமோ, அதைப் பொருத்துத் தான் நம்முடைய அறிவு விளக்கமும், வாழ்வும் அமையும். அறிவு சிறந்து விளங்காததால், வாழ்வு சிறக்கவில்லை. இப்பொழுது நாம் அடைகின்ற இன்ப துன்பங்களுக்குக் காரணம், நாம் இப்பொழுது சார்ந்து உள்ளவைகளால் தான் என்பதை உணர்ந்து, இனிச் சாரவேண்டியது எதை என்று தெளிந்து, அதைச் சார்ந்து நின்றால், முன் சார்வால் வந்த துன்பங்கள் இல்லையென்று ஆகும். இந்த உண்மையைத் திருவள்ளுவ நாயனார், பின்வருமாறு நமக்குக் காட்டி உள்ளார்.
"சார்பு உணர்ந்து, சார்பு கெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா சார்தரும் நோய்".
இதன் பொருள் ---
நாம் சார்ந்த இருக்கவேண்டிய மெய்ப்பொருள் சார்பை உணர்ந்து, நம்மைச் சார்ந்து இருக்கும் மலங்களின் சார்பு கெடுமாறு ஒழுகினால், பிறவித் துன்பம் அணுகாது.
நான் ஏன் திருவள்ளுவ நாயனாரையே எதற்கெடுத்தாலும் காட்டுகின்றேன் என்றால், திருவள்ளுவ நாயனார் தான் சமயநிலை கடந்த முதல்ஞானி. திருக்குறளுக்கு உரை எழுதவந்த பரிமேலழகர், பிறப்பால் வைணவர் என்றாலும், தான் சார்ந்துள்ள சமயம் சார்ந்து உரை காணாமல், சமய நெறியினர் யாரும் இறுதியாகப் பெறவேண்டிய நல்லுணர்வோடு உரை கண்டு இருப்பதால், அவரும் சமயம் கடந்த ஞானியே. இத்தன்மை உடைய அருளாளர்களை நாம் போற்றிக்கொள்ள வேண்டும். அவர்களைச் சார்ந்து நின்றால், நாமும் அவர்கள் ஆவோம் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.
"திருக்களிற்றுப்படியார்" என்னும் சைவசித்தாந்த நூலிலும் மேற்குறித்த திருக்குறளை வைத்தே சமய உண்மை விளக்கப்பட்டு உள்ளது.
"சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்
சார்பு உணர்தல் தானே தியானமுமாம் --- சார்பு
கெட ஒழுகின் நல்ல சமாதியும் ஆம், கேதப்
பட வருவது இல்லைவினைப் பற்று".
திருவருளை உணர்ந்து, திருவருள் நீங்கும்படிக்கு ஒழுகினால் என்று திருவள்ளுவர் உரைத்த படியினாலே, திருவருளை உணருகிறதே தியானம் ஆகும். திருவருள் நீங்கும்படிக்கு ஒழுகினால் அதுவே நல்ல சமாதி நிலை ஆகும். இவை கைகூடினால் நாம் துன்பப்படும்படிக்கு வினைப் பாசம் நம்மை வந்து பொருந்துவது இல்லை. நாம் சாரவேண்டிய சார்பாகிய பரம்பொருளை உணருகின்ற நிலைதான் தியானம் என்பது.
கேதம் --- துன்பம்.
சமாதி --- ஆதி எனப்படும் இறைவனுக்குச் சமம் ஆகின்ற நிலை.
திருக்குறளின் பெருமைகளை விளக்க வந்த நூல்களில் "திருத்தொண்டர் மாலை" ஒன்று. அதில் ஒரு பாடல் இதோ...
"தரைசேர் சமண்நீங்கிச் சைவம்சேர் நாவுக்கு
அரைசர் வயிற்றுவலி அற்றார் - உரைசேர்ந்த
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய்".
நிலையாமை என்பது உலகியல். அது எல்லாச் சமயத்திற்கும் பொருந்தும். எல்லா நிலைக்கும் பொருந்தும். உலகில் தோன்றிய பொருள்கள் நம்மால் அறியப்படுபவை எல்லாம் ஒரு காலத்திலே தோன்றி, நின்று, அழிபவையே. உயிர்களும், உயிரற்ற பொருள்களும் எல்லாமே இதற்கு உட்பட்டவை.
வாழ்விலே பலவளங்களும் இருந்தும் இளமையிலேயே தாய்தந்தையரை இழந்தும், தமக்கைக்குக் கணவராக வர உள்ளவர் இறந்தும், துன்ப நிலைக்கு ஆளான திருநாவுக்கரசு நாயனார், நிலையாமை என்பதைத் தெளியமுடியவில்லை. இறையருள் அவருக்கு வாய்க்கவில்லை. சமய அறிவு படைத்தவர்களும் அவருக்குத் தெளிவிக்கக் கூடிய நல்வினைப்பயனும் அவருக்கு இல்லாமலே போனது. சமயம் என்பதன் உண்மை அவருக்கு விளங்கவில்லை. அதனால், சைவ சமயத்திலே பிறந்த அவர், சமண சமயத்தைத் தழுவினார்.
"நில்லாத உலகுஇயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து, சமயங்கள் ஆனவற்றின்
நல் ஆறு தெரிந்து உணர, நம்பர் அருளாமையினால்,
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகினார்".
இது தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணப் பாடல்களில் ஒன்று.
உலகம் முழுதும் பரவியிருந்த ஆருகத சமயத்தை இறையருள் இன்மை காரணமாக மருள்நீக்கியார் (இது திருநாவுக்கரசு நாயனாரின் பிள்ளைத் திருப்பெயர்) அநுட்டித்து அச்சமயத்திற்குத் தலைவரும் ஆயினார். தருமசேனர் என்னும் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். திலகவதியார் வேண்டிக்கொள்ள, அவர் முன்பு செய்த சிவபுண்ணியம் முதிர, மருள்நீக்கியாரை ஆட்கொள்ளும் கருணையினால் சிவபெருமான் சூலைநோயை ஏவினார். அவர் அதனால் உண்டாகிய துன்பம் அதிகரித்துச் சமண் பள்ளியை விட்டுத் திருவதிகையை அடைந்தார். சிவத்தொண்டு செய்துகொண்டிருந்த தமக்கையாரின் ஆணைப்படி சைவசமயம் சார்ந்தார். வயிற்று வலியும் அற்றார். "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்று தொடங்கும் அற்புதமான தேவாரத் திருப்பதிகம் பாடினார். திருநாவுக்கரசர் என்ற பெயரைக் கொடுத்து இறைவன் ஆட்கொண்டு அருளினார்.
ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின், அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ் உணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
நம்மில் பலரும்கூட, தற்போது சார்ந்து உள்ள சமய உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல், தாம் உணர்ந்ததையே பெரிதாக எண்ணியும், பிறருக்குச் சொல்லியும் வருகின்றோம். முழுதாகத் தெரியாத நிலையிலேயே உயர்வு தாழ்வு கற்பித்தும் வருகின்றோம். உயர்ந்தது என்பதையும் முழுதாக அறிந்திருக்க வேண்டும். தாழ்ந்தது என்று சொல்லப்படுகின்ற ஒன்றையும் முழுதாக அறிந்து இருந்தால், அது எவ்விதங்களில் தாழ்ந்தது என்பதைக் காட்டமுடியும். இரண்டும் கெட்டான் நிலையிலே பலரும் உள்ளனர்.
இதனால், பெறுதற்கு அரிய, உயர்ந்ததான மானுடப் பிறவியைப் பெற்றவர்களாகிய நாம் இந்தப் பிறவியை ஒழித்துக் கொண்டு, இதற்கு மேலானதான இறைவன் திருவடி இன்பத்தில் திளைக்க முடியாமல், மீண்டும் மீண்டும் பிறப்புக்கு ஆளாகி உழல்கின்றோம். நல்லொழுக்கம் இல்லை. நல்லறிவு இல்லை. இவை இரண்டும் உள்ளவர்களைத் துணைக் கொள்வதும் இல்லை.
நல்லவர்கள் என்பதை அவருடைய அறிவால், செயல்களால், அவர்களால் பிறருக்கு விளையும் பயன்களால் விளங்கிக் கொள்ளலாம். அவர்களும் எங்கும் பிறந்து இருக்கலாம். இந்த உண்மைய உணர்த்த "நீதிவெண்பா"வில் இருந்து ஒருபாடல்...
தாமரை, பொன், முத்து, சவரம், கோரோசனை, பால்
பூமருதேன், பட்டு, புனுகு,சவ்வாது, - ஆம்அழல், மற்று
எங்கே பிறந்தாலும் எள்ளாரே, நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என்.
இதன் பொருள் ---
தாமரை மலரும், பொன்னும், முத்தும், சாமரை, கோரோசனை, பால், மணமிக்க பூவில் கிடைத்த தேன், பட்டு, புனுகு, சவ்வாது நெருப்பு ஆகிய இவை எவ்வளவு கீழான இடத்தில் இருந்து கிடைத்தாலும் அவற்றை யாரும் இகழமாட்டார்கள். அதுபோல, நற்குணம் உடையவர்கள் எந்த இனத்தில் பிறந்து இருந்தாலும் இகழப்படமாட்டார்கள்.
தாமரை சேற்றில் விளைவது. தாமரையை விரும்புபவர்கள் சேற்றை விரும்பமாட்டார்கள். மண்ணை விரும்பாமல், அதிலிருந்து கிடைக்கும் பொன்னையே விரும்புவார்கள். முத்து சிப்பியில் இருந்து பெறப்படுவது. சிப்பியை விரும்பாமல் முத்தையே விரும்புவார்கள். சாமரை கவரிமானின் மயிர்த்தொகுதி. கோரோசனை பசுவின் வயிற்றில் இருந்து கிடைப்பது. பால் பசுவின் மடியில் இருந்து கிடைப்பது. பசு மாட்டின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் பித்தம் ஆகும். பிச்சு என்றும் வழங்கப்படும். இது சித்த மருத்துவத்தில் குழந்தைகளின் சளி தொல்லைகளை நீக்க பயன்படும் கோரோசனை மாத்திரை செய்ய பயன்படுத்தப்படுகிறது. தேன் அடையில் இருந்து கிடைப்பது. பட்டுப்பூச்சியின் எச்சில்தான் பட்டு. புனுகு, சவ்வாது ஒருவகைப் பூனையின் உடலில் இருந்து பெறப்படும் அழுக்கு. நெருப்பு என்பது நம்மால் விரும்பாத இழிந்த இடுகாட்டு விறகிலும் விளங்கும்.
நல்லவர்களைச் சேர்ந்தால் நன்மை விளையும். தீயவர்களைச் சேர்ந்தால் தீமையே விளையும். இதனை விளக்கும் ஒரு பாடல் நீதிவெண்பாவில் இருந்து.
"அரி மந்திரம் புகுந்தால், ஆனை மருப்பும்
பெருகு ஒளிசேர் முத்தும் பெறலாம், --- நரிநுழையில்
வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின்
தோலும்அல்லால் வேறும்உண்டோ சொல்".
இதன் பொருள் ---
சிங்கத்தின் குகையிலே புகுந்தோம் என்றால், அங்கே விரும்பப் படாத பொருள்கள் பல இருக்குமாயினும், அங்கே யானையின் தந்தமும், அதில் இருந்து பிறக்கும் மிக்க ஒளி பொருந்திய முத்தும் கிடைக்கப் பெறலாம். நரியின் குழியிலோ, அறுந்த வால்களும், சிறிய மயிர்களும், உடைந்த எலும்பும், கழுதையின் தோலும் ஆகிய இவ்வகையான தாழ்ந்த பொருள்களை அல்லாமல், வேறு உயர்ந்த பொருள்கள் எவையும் கிடைக்கமாட்டா. அதுபோலத்தான், நல்லவர்களைச் சேர்வதும், தீயவர்களைச் சேர்வதும்.
அரி - சிங்கம். மந்திரம் - குகை. மருப்பு - கொம்பு. நுழை - குழி. கர்த்தபம் - கழுதை.
No comments:
Post a Comment