உண்மை அன்பே சிவபத்தி

 

 

 

உண்மை அன்பே சிவபத்தி

-----

 

     பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவராகிய பிசிராந்தையார் என்பவரும் சோழ நாட்டினை ஆண்டிருந்த கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் காணாமலேயே, அவரவருடைய குணநலன்களைக் கேட்ட அளவிலேயே நட்புப் பூண்டு இருந்தனர் என்பது உண்மை நட்புக்கு இலக்கணமாக அமைந்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் வாயிலாக அறிவோம்.

 

     உண்மை நட்புக்கு மட்டுமல்ல, ஆசாரிய - சீடன் உறவுக்கு இலக்கணமாக அமைந்த ஒரு நிகழ்வினைப் பார்ப்போம்.

 

     மருள்நீக்கியார் என்னும் பிள்ளைத் திருநாமம் உடையவர், இறைவரால் "திருநாவுக்கரசு" என்று அழைக்கப்பட்டார். திருஞானசம்பந்தப் பிள்ளையாரால் "அப்பர்" என்று அழைக்கப்பட்டார். இவர் நடுநாட்டிலே, இப்போதைய பண்ணுருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் என்னும் திருத்தலத்திலே வேளாளர் குலத்தில் பிறந்தவர். திருநாவுக்கரசரின் பெருமைகளைக் கேள்விப்பட்ட அந்தணரின் மேம்பட்டவர் என்று போற்றப்பட்ட அப்பூதி அடிகள், அவர்பால் அன்பு பூண்டு ஒழுகியதோடு மட்டுமல்லாமல், "திருநாவுக்கரசு" என்னும் திருப்பெயரால், தண்ணீர்ப் பந்தல், கிணறுகள், குளங்கள், நிழல் தரும் மரங்கள் முதலான பல அறச்சாலைகளைத் தமது ஊராகிய திங்களூரில் (திருவையாறுக்கு அருகில் உள்ளது) வைத்து நடத்தி வந்தார்.

 

     திங்களூருக்கு வந்த திருநாவுக்கரசு பெருமான் எல்லாவற்றிலும் "திருநாவுக்கரசு" என்னும் பெயர் அழகாக வரையப்பட்டு இருந்ததைக் கண்டார். அது தம்முடைய பெயர் என்று அவர் நினைக்கவில்லை. இத்தனை அறங்களையும் ஒரு பெயராலேயே அமைக்கப்பட்டுள்ளது அவருடைய உள்ளத்தை ஈர்த்தது. அங்குள்ளவர்களை அணுகி, "இந்தத் தண்ணீர்ப் பந்தலை இப்பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார்?" என்று வினவினார். அவர்கள், "ஆண்ட அரசு எனும் பெயரால் செப்ப அரும் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார். தப்பு இன்றி எங்கும் உள சாலை, குளம், கா (சோலை)" என்று சொன்னார்கள். அப்போது தான் தெரிந்தது தண்ணீர்ப் பந்தல் மட்டுமல்லாமல் மற்ற அறச் செயல்களையும் அப்பூதி அடிகளார் "திருநாவுக்கரசு" என்னும் பெயரால் நிறுவி உள்ளது.

 

     அவர் இருக்கும் இடத்தைக் கேட்டு, அங்குச் சென்ற திருநாவுக்கரசு நாயனாரைக் கண்ட அப்பூதி அடிகளார், சிவன் அடியார் வந்தார் என்று மகிழ்ந்தார். அவர்தான் திருநாவுக்கரசர் என்று அறிந்திரார். "நீர் நிகழ்த்தும் அறச் சாலையில் உமது பெயரை எழுதாது, வேறு ஒரு பேர் எழுத வேண்டிய காரணம் என்ன" என்று அப்பூதி அடிகளைக் கேட்டார்.

 

     அப்பூதி அடிகளுக்கு வந்தது பெருஞ்சினம். திருநாவுக்கரசர் என்னும் திருநாமத்துக்கு உரியவர் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பு, அவரது பெருமையை அறியாமல், "அந்தத் திருப்பெயரை வேறு ஒரு பேர் என்று எப்படிச் சொல்லலாம். கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு சிவபெருமான் திருவருளால் கரை ஏறிய அவர் பெருமையை அறியாத சிவனடியார் ஒருவர் இருக்கமுடியுமா? நல்ல சிவவேடத்துடன் இருந்து இவ்வாறு சொல்லுகின்ற நீர் யார்?" என்று கேட்டார்.

 

     அதற்குத் திருநாவுக்கரசர், "சிவபெருமானால் சூலை நோய் தந்து ஆளப் பெற்ற தெளிவுணர்வில்லாத சிறியவன் நான் தான்" என்றார்.

 

     அப்பூதி அடிகளுக்குத் தாம் இதுவரை உணர்வு நிலையில் மட்டுமே கண்டு வந்த பெரியவர் இவர்தான் என்றறிந்ததுமே கைகள் தலைமீது ஏறின. கண்கள் நீர் மல்கின. உரை குழறியது. திருநாவுக்கரசரின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்ந்து எழுந்தார். கூத்தாடினார். சுவாமிகளின் வருகையை ஆடிப்பாடி எல்லோருக்கும் அறிவித்தார்.

 

     அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளாரின் நிலை இது. அந்த அந்தணரின் இல்லத்தில் அவர் வேண்ட, வேளாளர் குலத்தில் வந்த திருநாவுக்கரசர் அமுது செய்ய ஏற்பாடு ஆனது. தோட்டத்திற்குச் சென்று வாழை இலையை அரிந்து கொண்டு வருமாறு, தனது மகனாகிய மூத்த திருநாவுக்கரசைப் பணிக்கின்றார்கள். "நல்ல தாய் தந்தே ஏவ நான் இது செய்யப் பெற்றேன்" என்று மனம் குளிர்ந்து, தோட்டதிற்குச் சென்ற மூத்த திருநாவுக்கரசைப் பாம்பு தீண்டியது. விடம் தலைக்கு ஏறிச் சாயும் முன்னர், தாம் பறத்தி வாழை இலையைத் தாயிடம் கொண்டு வந்து சேர்த்தான். அவன் உயிர் பிரிகின்றது. மகனின் இறப்பு, அடகளார் அமுது செய்யத் தடையாக இருக்குமே என்று உணர்ந்த அப்பூதி அடிகளார், மகனின் பிணத்தைப் பாயில் மூடி மறைத்து வைத்து, அடிகளாரை அமுது செய்விக்க முற்படுகின்றார். திருநாவுக்கரசர், அமுது செய்யும் முன், திருநீறு அளிக்க, அப்பூதி அடிகளாரின் பிள்ளைகளை அழைத்துவரச் சொல்கின்றார். "மூத்த திருநாவுக்கரசு எங்கே?" என்கின்றார் அப்பர் அடிகள். "இப்போது இங்கு அவன் உதவான்" என்கின்றார் அப்பூதி அடிகளார். திருநாவுக்கரசர் திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. உண்மையை அப்பூதி அடிகள்சொல்லியாக வேண்டி வந்த்து. திருநாவுக்கரசர், பாம்பு கடித்து இறந்த அப்பூதி அடிகளாரின் புதல்வனை, "ஒன்று கொலாம்" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி உயிரோடு மீண்டு எழச் செய்தார். பிறகும், அந்தணராகிய அப்பூதியார் இல்லத்தில், வேளாளர் குலத்தில் அவரித்த திருநாவுக்கரசர் விருந்து அயர்ந்தார்.

 

     இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது, நட்பிற்கு இனம் ஒரு தடையல்ல. இது மட்டுமல்ல, சமய வாழ்வு, இறைவழிபாடு என்பது அவர்வர் இல்லத்தில் வழிபடுவது, திருக்கோயில் வழிபாடு, தல யாத்திரை, தீர்த்த யாத்திரையோடு மட்டும் முடிவதல்ல. சகல உயிர்களுக்கும் நலம் பயக்கும் அருட்பணிகளைச் செய்வதும் தான் என்பது தெளிவாகும். "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈந்தால், நடமாடக் கோயில் நம்பர்க்கு அது ஆகாது. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈந்தால், படமாடக் கோயில் பகவற்கு அது ஆகும்" என்பது திருமூலர் திருமந்திரம்.

 

     சாலைகளை அமைப்பதும், குளங்களை அமைப்பதும், சோலைகளை வளர்ப்பதும் மக்கட்பிறப்புக்கு மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் நன்மை பயப்பது. உயிரினங்களுக்கு நன்மையைச் செய்வது பூதவேள்வி எனப்படும். மக்களுக்கு நன்மை பயப்பது மானுடவேள்வி எனப்படும். எரி வளர்ப்பது மட்டுமே வேள்வி அல்ல. ஐந்து விதமான வேள்விகள் உண்டு. அவை விரிக்கில் பெருகும்.

 

அப்பூதி அடிகளார் வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்.

 

     1. கண்ணால் காணாத நிலையிலும் கூ, பெரியோர்களின் குணங்களைக் கேட்டதும் அவர்களிடம் அன்பு பூண்டு, அவர்களுக்கு அடிமை ஆதல் நமது முன்னோர் பண்பாடு.

 

       2. தம்மால் மதிக்கப்படும் பெரியோர்களது பெயரைத் தமது மக்களுக்கும் மற்றும் உடைமைகளுக்கும் இட்டு வழங்குதல், அப்பெரியோரை வழிபடும் முறையே ஆகும்.

 

        3. தங்கள் பேரை எழுதி, அறப் பணிகளைச் செய்தல் உலக வழக்கம். ஆனால் தாம் செய்யும், அறங்களைத் தன் பெயரால் செய்யாது, தம்மால் மதிக்கப்படும் பெரியவர் பெயரால் செய்தவது உயர்ந்தோர் குணம்.

 

        4. தண்ணீர்ப் பந்தர்கள் அளவில்லாத மக்கள் எப்போதும் செல்லும் வழியில், வேனில் வெப்பத்தை அகற்றுவதில், அருளுடைய பெரியோர்களது உள்ளம் போலக் குளிர்ச்சி உடையனவாய் அமைக்கப்படுதல் வேண்டும். இன்றைய காலத்தில் தண்ணைர்ப் பந்தர்கள், முதலில் அழகு மிளிர அமைப்பதும், நாளடைவில் சீர்கெட்டு இருப்பதும் காணலாம்.

 

        5. பெரியவர்களைத் தியானப் பொருளாய்க் கொண்டு பலநாள் வழிபட்டு அழைத்து வந்தால், தேடுதல் இல்லாமலேயே ஒருநாள் அவர்கள் வந்து அருளுவார்கள்.

 

        6. சிவனடியாரை "வேறொருவர்" என்று கூறுதல் சிவ நிந்தனை - சைவநிந்தனை ஆகும். அதனை யாரேனும் தம் முன் செய்தால், உண்மை அன்பு கொண்ட சிவனடியார்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார். சினம் கொள்வார். சத்தி நாயனார் சிவ நிந்தனை செய்தோரது நாவை வலித்து அரிந்து தொண்டு செய்தார். தம்மால் அவ்வாறு ஒன்றும் செய்ய இயலாத போது "சிவசிவ" என்று காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடம் விட்டு நீங்கிவிட வேண்டும் என்பதும் விதி. சிவனடியாரை நிந்தித்தவர் ஒரு சிவனடியாராக இருக்கமுடியாது என்பதால், அப்பூதி அடிகளுக்குச் சினம் வந்தது.

 

        7. தமது பெருமைகளைத் தாமே பறைசாற்றிக் கொள்வது கீழ்மக்களின் தன்மை. தம்மைச் சிறுமை உடையவராகவே அறிவித்துக் கொள்வது பெரியோர் தன்மை. "பணியுமாம் என்றும் பெருமை" என்னும் திருவள்ளுவ நாயனார் வாக்கு சிந்தனைக்கு உரியது. திருநாவுக்கரசு நாயனார், அப்பூதி அடிகளார் முன், தம்மைச் சிறுமை உடையவராகவே பணிவுடன் காட்டினார். "சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த, தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான்" என்றார் அப்பர்.

 

       8. தமது பெற்றோர் அல்லது பெரியோர் தம்மை ஒரு காரியத்தில் ஏவினால், அதனை உள்ளம் மகிழ்ந்து அன்புடன் ஏற்றுச் செய்வது நல்ல பிள்ளைகளுக்கு அடையாளம். "நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன்" என்று அப்பூதி அடிகளின் மகனாகிய மூத்த திருநாவுக்கரசு, தாய்தந்தை இட்ட பணியைத் தலைமேற்கொண்டு செய்தது சிறப்பு. அத்தகைய பிள்ளைகளைப் பெறுவது பெரும்பேறு. அத்தகைய பிள்ளைகள் உள்ள இல்லம் சிறக்கும்.

 

      9. திருநீறு சாத்த, உமது மூத்த பிள்ளையையும் காட்டும் என்று அப்பர் பெருமான் சொன்னபோது, அப்பூதியார் "இப்போது இங்கு அவன் உதவான்" என்றனர். அது கேட்டதும் அப்பரது செவ்விய திருவுள்ளத்தில் தடுமாற்றம் உண்டானது. பெரியோர்களுக்கு, திருவருள் அவரது உள்ளத்தில் இருந்து உண்மையை உணர்த்தும்.

 

        10. திருநாவுக்கரசர் சிவபெருமானைத் திருப்பதிகம் பாட, தமது மகன் விடம் நீங்கி உயிர்பெற்று எழுந்தது கண்ட அப்பூதி அடிகளார், அது கண்டு மகிழாமல், "பெரியவர் அமுது செய்வதற்குச் சிறிது இடையூறாக இவன் இருந்தான்" என்று சிந்தை நொந்தது, அப்பர் பெருமான்பால் அப்பூதி அடிகளார் கொண்டிருந்த உண்மை அன்பினைக் காட்டுகின்றது.

        11. தாம் அமுது செய்யும்போது அப்பூதியாரையும், அவரது மக்களையும் தம் உடன் இருந்து அமுது செய்யும்படி ஏவினர் திருநாவுக்கரசர். அவர்களும் அவ்வாறே செய்தனர். இது முதிர்ந்த சிவபத்தியின் காரணமா, உலகியல் உணர்வு இல்லாமல், சாதி முதலிய வேறுபாடுகள் யாவற்றையும் மறந்து, அன்பும், சிவபத்தியுமே உள்ளத்தில் கொண்டு, அப்பூதி அடிகள் விளங்கியதை அறிவுறுத்தும்.

 

     12. திருநாவுக்கரசரின் திருநாமத்தை உச்சரித்தே, அப்பூதியார் சிவப் பேற்றை அடைந்தார். இறைவன் திருநாமம் மட்டும் அல்லாது, அடியவர்களின் திருநாமமும் சிறந்த மந்திரம் ஆகும். இப்படி, அடியவர்களை வழிபட்டே பேறு பெற்றவர்கள் உள்ளனர்.

 

 

 

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...