திரு நாட்டியத்தான்குடி
சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
இறைவர் : மாணிக்கவண்ணர், இரத்னபுரீசுவரர், நாட்டியத்து நம்பி.
இறைவியார் : மங்களாம்பிகை.
தல மரம் : மாவிலங்கை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், கரி தீர்த்தம்.
வழிபட்டோர் : யானை, கோட்புலி நாயனார், சுந்தரர்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - பூணாண் ஆவதோர்
திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில்
திருநாட்டியாத்தான்குடி
திருநாட்டியாத்தான்குடி அஞ்சல்
வழி மாவூர் S.O.
திருவாரூர் மாவட்டம்
PIN - 610202
காலை 9 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தலச் சிறப்பு: நாயன்மார்களில் ஒருவரான கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம் என்ற பெருமையை உடையது இத்தலம். கோட்புலி நாயனார் சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்கான நெல்லைத் தனியாகவும் சேகரித்து வைத்திருந்து உபயோகப்படுத்துவதில் மிகவும கட்டுப்பாடுடன் இருந்தார். ஒருமுறை யுத்தம் வந்தபோது அவரும் போருக்குச் சென்றிருந்தார்.அவர் போயிருந்தபோது கடும் பஞ்சம் வந்தது. வீட்டுக்காக வைத்திருந்த நெல் பூராவும் செலவழிந்துவிட்டது. மறுபடியும் நெல் விளைந்தவுடன் கோவிலுக்குத் திருப்பித்தந்து விடலாம் என்று எண்ணிய கோட்புலி நாயனாரின் குடும்பத்தினர், சிவாலயத்தின் நெல்லை எடுத்துச் செலவழிக்க ஆரம்பித்தனர். போர் முனையிலிருந்து திரும்பிய நாயனார், இதைக் கேள்விப்பட்டவுடன் கோபம் கொண்டு, அவர்களை சிவ துரோகிகள் எனக்கருதி தனது வாளால் ஒவ்வொருவரையும் வெட்டினார். கடைசியாக இருந்த குழந்தையையும், சுவாமியின் நெல்லை சாப்பிட்ட தாயின் பாலைக் குடித்த பாவம் செய்ததாகக் கருதி உடை வாளால் வெட்டினார். அப்போது ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு சிவபெருமான் காட்சி கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் ஆட்கொண்டார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு வருகை தந்த போது கோட்புலி நாயனாரின் வீட்டில் தங்கி இருந்தார். அச்சமயம் இறைவனை வழிபட இருவரும் ஆலயத்திற்குச் சென்றனர். ஆலயத்தில் இறைவனையும் இறைவியையும் காணாது சுந்தரர் திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். (கிழக்கு கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது) அவ்வழியே சுந்தரர் சென்று பார்த்த போது, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் உழவன், உழத்தியாக நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதைக் கண்டு சுந்தரர்,
"நட்ட நடாக்குறை நாளைநடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டதுபோதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி"
என்று பாடி, நடவு நட்டது போதும் வாரும் அழைக்க, சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் சென்றனர். சுந்தரர் அவர்களைப் பின் தொடர்ந்து கோயிலுக்குள் செல்லும் போது, ஒரு பாம்பு வாயிலில் தடுக்க அப்போது பூணாண் ஆவதோர் அரவங்கண்டு அஞ்சேன் என்று தொடங்கிப் பாடித் தரிசித்தார் என்று தலவரலாறு சொல்லப்படுகிறது. மேலும் கோட்புலி நாயனார் அவருடைய இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை ஆகியோரை சுந்தருக்கு பணிப்பெண்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, சுந்தரர் அந்த இருவரையும் தம் புதல்வியர்களாக ஏற்றருளிய பதி இதுவாகும்.
இரத்தினேந்திர சோழனும், அவனது தம்பியும் தம் தந்தையார் அவர்களுக்கு விட்டுச் சென்ற இரத்தினங்களை மதிப்பீடு செய்து தமக்குள் பிரித்துக் கொள்வதற்கு இரத்தின வியாபாரி ஒருவரை அழைத்தனர். இருவரும் இரத்தின வியாபாரி செய்த மதிப்பீடு சரியில்லை என்று எண்ணி இறைவனிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன் தானே ரத்தின வியாபாரியாக வந்து ரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்துக் கொடுத்ததால் இரத்தினபுரீசுவரர் என்று பெயர் பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. மேலும் யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தம் ஒன்று உருவாக்கி அதில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது. யானை உண்டாக்கிய தீர்த்தம் கரி தீர்த்தம் எனப்படுகிறது. கரிக்கு (யானைக்கு) அருள் செய்ததால் இறைவனுக்கு கரிநாதேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இத்தலத்தின் மற்றொரு தீர்த்தம் சூரிய தீர்த்தம்.
கோட்புலி நாயனார் வரலாறு
பெரியபுராணத்தில் காணுகின்றபடி, கோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் மரபில் தோன்றியவர். இந்நாயனார் நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டி, அவர் இசைந்து வர, எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையில் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்ப்பணித்தார். அவர் தம் அர்ப்பணம் நம்பியாரூரரை அம்மகளரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் அளவிற்கு நம்பியாரூரரை இரங்கச் செய்தது.
சோழ சேனாதிபதியாக அதிகாரம் புரிந்த இவர் பகை நாடுகளைப் போரில் வென்று புகழுடன் விளங்கினார். அரசனிடம் பெற்ற சிறப்பின் வளங்களை எல்லாம் சிவன் கோயிலில் திருவமுதுபடி பெருகச் செய்யும் திருப்பணிக்காக்கி அதனையே பன்னெடுநாள் செய்தனர். அந்நாளில் அவர் அரசனது போரினை மேற்கொண்டு பகைவர் மேற் செல்ல நேர்ந்தது. அப்பொழுது தாம் திரும்பி வரும் வரையில் சிவனுக்கு அமுது படிக்காகும் நெல்லினைக் கூடுகட்டி வைத்துத், தம் சுற்றத்தாரை நோக்கி ‘இறைவர்க்கு அமுது படிவைத்துள்ள இந்நெல்லை எடுத்தல் கூடாது. திருவிரையாக்கலி என்னும் ஆணை’ எனத் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சென்றார். சில நாளிலே நாட்டில் கடும் பஞ்சம் வந்தது. பசியால் வருந்திய சுற்றத்தார்கள் ‘நாம் உணவின்றி இறப்பதைவிட இறைவர்க்கு வைத்த நெல்லைக் கொண்டாகிலும் பிழைத்து உயிர் தாங்கியிருந்து பின்னர் குற்றந்தீரக் கொடுத்துவிடும் என்று நெற்கூட்டைத் திறந்து நெல்லைச் செலவழித்தனர். அரசருடைய பகைவரைப் போர் முனையில் வென்று அரசனிடம் நிதிக்குவை பெற்று மீண்ட கோட்புலியார், தம் சுற்றத்தார் செய்த தீமையை உணர்ந்து அவர்கள் அறியாத வகையில் அவர்களைத் தண்டிக்க நினைத்தார். தம் மாளிகையை அடைந்து. ‘தம் சுற்றத்தார்க்கு எல்லாம் ஆடையணிகலன்கள் கொடுக்க அவர்களை அழைத்து வாருங்கள்’ என்று அவர்களை அழைத்து அவர்கள் எவரும் ஓடிவிடாதபடி வாயிலிற் காவலனை நிறுத்தி வைத்தார். ‘சிவ ஆணையை மறுத்து அமுது படியை அழித்த மறக்கிளையை கொல்லாது விடுவேனோ? என்று கனன்று, வாளினை எடுத்துக் கொள்வாராயினர். தந்தையார், தாயார், உடன் பிறந்தவர், சுற்றத்தவர், பதியடியார்’ மற்றும் அமுது படியுண்ண இசைந்தார், இவர்களையெல்லாம் அவர்களது தீயவினைப் பாவத்தினைத் துணிப்பாராய்த் துண்டம் செய்தார். அங்கு ஒரு பசுங்குழந்தை தப்பியது. காவலாளன் ‘இக்குழவி (இக்குழந்தை) அமுதுபடி அன்னம் உண்டிலது, ஒரு குடிக்கு ஒருமகன்; அருள் செய்யவேண்டும்’ என்று இறைஞ்சினார். அவ்வண்ணம் உண்டாளது முலைப்பாலினை உண்டது” என்று கூறி அதனை எடுத்து எடுத்து எறிந்து வாளினை வீசி இரு துணியாக விழ எற்றினார்.
அப்போது இறைவர் வெளிப்பட்டார். உன் கைவாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர் தேவருலகம் முதலிய போக பூமிகளிற் புகுந்து பின்னர் நம்முலகமடைய, நீ இந்நிலையிலேயே நம்முடன் அணைக என்று அருளி மறைந்தார்.
சுந்தரர் திருப்பதிக வரலாறு:
திருநாட்டியத்தான் குடியிலே அவதரித்த கோட்புலி நாயனார், திருவாரூர் வந்து நம்பியாரூரைத் தொழுது, தமது ஊருக்கு வருமாறு வேண்டினார். நம்பியாரூரரும் இசைவு தந்தார். மகிழ்ச்சியுடன் கோட்புலியார் தமது ஊர் திரும்பினார். பின்னர் நம்பியாரூரர் திருநாட்டித்தான் குடிக்கு எழுந்தருளிய போது அவரை முறைப்படி வரவேற்று, தமது இல்லத்தில் இருத்தி வழிபட்டார் கோட்புலியார். கோட்புலியார் தமது புதல்விகளான சிங்கடி, வனப்பகை அழைத்தார். அவர்கள் வந்து நம்பியாரூரரைப் பணிந்து நின்றனர். அப்போது கோட்புலியார் நாவலர் பெருந்தகையைப் பார்த்து, "அடியேன் பெற்ற மக்கள் இருவரையும் அடிமைகளாகக் கொண்டு அருள வேண்டும்" என்றார். அதற்குப் பரவையார் கணவர், "இவ் இருவரும் எனக்கு மகள்கள்" என்று கூறி, அவர்கள் இருவரையும் தமது மடிமீது இருத்தி, உச்சி மோந்து மகிழ்ந்தார். திருக்கோயிலுக்குச் சென்று இறைவரைப் பாடினார். அன்றுமுதல் பெருமானார் தமது திருப்பதிகங்களில் தம்மை, "சிங்கடியப்பன்", "வனப்பகையப்பன்" என்று வைத்துப் பாடலானார்.
பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
பாடல் எண் : 33
மாலும் அயனும் உணர்வு அரியார்
மகிழும் பதிகள் பலவணங்கி,
ஞால நிகழ்கோட் புலியார்தம்
நாட்டி யத்தான் குடிநண்ண,
ஏலும் வகையால் அலங்கரித்து,அங்கு
அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி,
கோல மணிமா ளிகையின்கண்
ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.
பொழிப்புரை : திருமாலும் அயனும் உணர்வரிய சிவபெருமான் இனிதுறையும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் பின், இந்நிலவுலகில் சிறப்புற்றிலங்கும் கோட்புலி நாயனாரது நாட்டியத்தான்குடி என்னும் நற்பதியை நண்ணுதலும், அவர் வருகை உணர்ந்த கோட்புலியார் தமது நகரைப் பொருந்தும் வகையால் அழகுபடுத்தி, நகர் வாயிலில் வந்து நம்பியாரூரரை எதிர்கொண்டு, இனிது வணங்கித் தமது அழகு மிக்க மணி மாளிகையினிடத்து அழைத்துக் கொண்டு சென்றார்.
பாடல் எண் : 34
தூய மணிப்பொன் தவிசில்எழுந்து
அருளி இருக்க, தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கி,
தெளித்துக் கொண்டு,அச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகை எங்கும்
விளங்க வீசி, உளம்களிப்ப,
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
பொழிப்புரை : மாளிகையை அடைந்தபின், தூய முத்துக்களால் ஆன அரியணையில் அவர் இருந்திடக் கோட்புலியார், செம்மை பொருந்திய நம்பி ஆரூரரின் மலரணைய திருவடிகளை நீரால் விளக்கி, அந்நீரைத் தம்மீதும் அழகின் ஒளிவீசும் மாளிகையிடத்தும் எங்கும் விளங்கிடத் தெளித்துத் தம் உள்ளம் களிப்புற, நன்மை பொருந்திய சிறப்பினால் போற்றியுரைகள் பலவற்றையும் இயல்பான முறையினால் புரிவாராய்,
பாடல் எண் : 35
பூந்தண் பனிநீர் கொடுசமைத்த
பொருஇல் விரைச்சந் தனக்கலவை,
வாய்ந்த அகிலின் நறும்சாந்து,
வாச நிறைமான் மதச்சேறு,
தோய்ந்த புகைநா வியின்நறுநெய்,
தூய பசுங்கர்ப் பூரமுதல்
ஏய்ந்த அடைக்காய் அமுது,இனைய
எண்ணில் மணிப்பா சனத்துஏந்தி.
பொழிப்புரை : அழகிய மலர்களினின்றும் எடுத்த பன்னீரால் அமைந்த நறுமணம் மிக்க சந்தனக் கலவையையும், பொருந்திய அகிலின் கட்டையைத் தேய்த்தலால் வந்த சாந்தினையும், மணம் நிறைந்த மானின் கத்தூரிக் குழம்பினையும், மணம் மிக்க நறும் புகையையும், வாசனை உடைய புனுகு, பசுங்கற்பூரம் முதலாகிய இவற்றுடன் நன்மை தரும் பாக்கு, வெற்றிலைத் திருவமுது ஆகிய இவற்றையும் எண்ணற்ற பொற்கலங்களில் எடுத்து ஏந்தி வந்து,
பாடல் எண் : 36
வேறு வேறு திருப்பள்ளித்
தாமப் பணிகள் மிகஎடுத்து,
மாறுஇ லாத மணித்திரு
ஆபரண வருக்கம் பலதாங்கி,
ஈறில் விதத்துப் பரிவட்டம்
ஊழின் நிரைத்தே, எதிர்இறைஞ்சி,
ஆறு புனைந்தார் அடித்தொண்டர்
அளவில் பூசை கொள அளித்தார்.
பொழிப்புரை : வேறு வேறு வகையாக அணிந்திடக் கொள்ளும் மலர் மாலைகளை மிகச் சிறப்பாக அமைவதாக, ஒப்பற்ற அணி வகைகளையும், ஒப்பற்ற அழகான ஆடைகளையும் முறையாக வைத்து வணங்கி, கங்கையாறு அணிந்த பெருமானின் திருவடித் தொண்டராய ஆரூரருக்கு, அளவற்ற இப்பூசைகளைக் கொள்ளுமாறு செய்து அருளினார் கோட்புலி நாயனார்.
பாடல் எண் : 37
செங்கோல் அரசன் அருள்உரிமைச்
சேனா பதியாம் கோட்புலியார்,
நம்கோ மானை, நாவலூர்
நகரார் வேந்தை, நண்பினால்
தம்கோ மனையில் திருஅமுது
செய்வித்து, இறைஞ்சி, தலைசிறந்த
பொங்கு ஓதம்போல் பெருங்காதல்
புரிந்தார், பின்னும் போற்றுவார்.
பொழிப்புரை : செவ்விதாக ஆட்சிபுரியும் சோழ அரசனின் அருளிற்கு உரிமையுடைய தானைத் தலைவராய கோட்புலி நாயனார், நம் தலைவரும் திருநாவலூரின் அரசருமான நம்பியாரூரரை நட்பு முறையால், தமது தலைமைப்பாடான திருவுடைய மனையில் திருவமுது செய்வித்து, வணங்கித் தலைசிறந்த பொங்கும் கடல்போல் உளம்பெருகும் காதல் கொண்டு, மேலும் போற்றுவாராய்,
பாடல் எண் : 38
ஆனா விருப்பின் மற்றுஅவர்தாம்
அருமை யால்முன் பெற்றுஎடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார்
தமையும், அவர்பின் கருவுயிர்த்த
மான்ஆர் நோக்கின் வனப்பகையார்
தமையும் கொணர்ந்து, வன்தொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்து,
தாமும் தொழுது சொல்லுவார்.
பொழிப்புரை : குறைவு படாத நல்ல விருப்பத்தால், தாம் முன்னர்ப் பெற்றெடுத்த தேன் சொரியும் மலர்சூடிய கூந்தலையுடைய சிங்கடியார் என்னும் மகளாரையும், அவளுக்குப் பின் பெற்றெடுத்த மான்போலும் பார்வையால் சிறந்த வனப்பகையார் என்னும் மகளாரையும் நம்பியாரூரரின் திருமுன்பு கொணர்ந்து, அவருடைய தூய அன்றலர்ந்த மலர்போலும் திருவடிகளைப் பணியச் செய்து, தாமும் அவரைத் தொழுது சொல்வாராகி,
பாடல் எண் : 39
"அடியேன் பெற்ற மக்கள்இவர்,
அடிமை யாகக் கொண்டுஅருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுஉய்யக்
கருணை அளிக்க வேண்டும்"எனக்
"தொடிசேர் தளிர்க்கை இவர்எனக்குத்
தூய மக்கள்" எனக்கொண்டுஅப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தம் கொழுநனார்.
பொழிப்புரை : `பெருமானே! அடியேன் பெற்ற மக்களிவர்கள். உமக்குப் பணிவிடை செய்யும் உரிமைப் பொருளாகக் கொண்டருளி, தங்களின் நறுமணம் மிக்க மலர்த் தாள்களைத் தொழுது உய்ந்திடக் கருணை செய்திடல் வேண்டும்\' என்றலும், அதுகேட்ட பரவையாரின் கணவரான சுந்தரரும், வளையல் அணிந்த தளிர்போலும் மென்மையான கைகளுடைய இம்மகளிர் தாமும், எனக்குத் தூய மக்களாவர் என மொழிந்து, அவர்களைத் தமது மக்களாக ஏற்றார்.
பாடல் எண் : 40
கோதை சூழ்ந்த குழலாரைக்
குறங்கின் வைத்துக் கொண்டுஇருந்து,
காதல் நிறைந்த புதல்வியராம்
கருத்துள் கசிவால் அணைத்து, உச்சி
மீது கண்ணீர் விழமோந்து,
வேண்டு வனவும் கொடுத்துஅருளி,
நாதர் கோயில் சென்று அடைந்தார்
நம்பிதம்பி ரான்தோழர்.
பொழிப்புரை : மலர்சூடிய கூந்தலையுடைய அம்மக்களைத் தம்மடி மீது வைத்து, அவர்களைத் தம் காதல் நிறைந்த மக்களாய்க் கருத்துட் கொண்டு, கசிவால் அணைத்து, உச்சியின் மீது கண்ணீர் விழ மோந்து அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தருளிய பின்னர்த் தம் தலைவராய சிவபெருமானின் திருக்கோயிலைச் சென்றடைந்தார்.
பாடல் எண் : 41
வென்றி வெள்ஏறு உயர்த்து அருளும்
விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி,
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால்
உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்கு, பணிந்து, திருப்
பதிகம் "பூண்நாண்" என்றுஎடுத்து,
கொன்றை முடியார் அருள்உரிமை
சிறப்பித் தார்கோட் புலியாரை.
பொழிப்புரை : வெற்றியைத் தரும் வெண்மையான ஆனேற்றுக் கொடியை உயர்த்தி அருளும் பெருமானாரின் திருக்கோயிலின் அழகிய கோபுரத்தை வணங்கி, ஒருமைப்பட்ட உள்ளத்தோடும் அன்பினால் உச்சியில் சூடிய திருக்கரத்தோடும், கோயிலினுள் சென்று, பெருமானைப் பணிந்து, அங்குப் `பூணாண்\' எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடியருளிக் கொன்றை மலரை முடிமேலுடைய பெருமானின் அருளுக்கு உரிமையால் கோட்புலியாரை அப்பதிகத்துள் சிறப்பித்தருளினார்.
குறிப்புரை : : `பூணாண்' எனத் தொடக்கமுடைய பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும். (தி.7 ப.15).
பாடல் எண் : 42
சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு
அதனின் இடை, சிங் கடியாரைப்
பிறப்பித்து எடுத்த பிதாவாகத்
தம்மை நினைந்த பெற்றியினால்
மறப்பில் வகைச்சிங் கடி அப்பன்
என்றே தம்மை வைத்து அருளி,
நிறப்பொற்பு உடைய இசைபாடி,
நிறைந்த அருள்பெற்று, இறைஞ்சுவார்.
பொழிப்புரை : அவ்வாறு கோட்புலி நாயனாரைச் சிறப்பித் தருளும் திருப்பதிகத் திருக்கடைக்காப்பில், சிங்கடியாரைப் பெற்று எடுத்த தந்தையாராகத் தம்மை நினைந்த அத்தன்மையினால், அப் பதிகத்தில் மறவாது `சிங்கடி அப்பன்' என்றே தம்மை வைத்தருளி, பலவகையானும் நிறைவுடைய பண் இசை பாடிப் பெருமானின் நிறைந்த அருளைப் பெற்று வணங்குவாராய்,
குறிப்புரை :
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்கழல் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம் பற்றறுமே.
என்பது இப்பதிகத்து வரும் பத்தாவது பாடலாகும். இதன்கண் கோட்புலியாரைச் சிறப்பித்திருப்பதுடன், அவர்தம் மகளாருக்குத் தந்தை என்ற முறையில் ஆரூரர், தம்மைச் சிங்கடியப்பன் என்று குறித்து இருப்பதும் காண்க.
சுந்தரர் திருப்பதிகம்
7. 015 திருநாட்டியத்தான்குடி பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பூண்நாண் ஆவதொர் அரவங்கண்டு அஞ்சேன்,
புறங்காட்டு ஆடல்கண்டு இகழேன்,
பேணாய் ஆகிலும் பெருமையை உணர்வேன்,
பிறவேன் ஆகிலும் மறவேன்,
காணாய் ஆகிலும் காண்பன்என் மனத்தால்,
கருதாய் ஆகிலுங் கருதி
நானேல் உன்அடி பாடுதல் ஒழியேன்,
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே. உனக்கு அணிகலமும் , அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன் ; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன் ; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும் , யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன் ; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும் , உன்னை மறவேன் ; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும் , உன்னை கண்ணாரக் காண்பேன் ; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும் , நானோ , என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன் , இஃது என் அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 2
கச்சுஏர் பாம்புஒன்று கட்டிநின்று இடுகாட்டு
எல்லியில் ஆடலைக் கவர்வன்,
துச்சேன் என்மனம் புகுந்துஇருக் கின்றமை,
சொல்லாய் திப்பிய மூர்த்தீ,
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல
மணியே, மாணிக்க வண்ணா,
நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால்,
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே , துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர் வுடையவனே , மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே , திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன் ; உயரஎழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன் ; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய் !
பாடல் எண் : 3
அஞ்சா தேஉனக்கு ஆட்செய வல்லேன்,
யாதினுக்கு ஆசைப் படுகேன்,
பஞ்சுஏர் மெல்அடி மாமலை மங்கை
பங்கா, எம்பர மேட்டீ,
மஞ்சுஏர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே, மாணிக்க வண்ணா,
நஞ்சுஏர் கண்டா, வெண்தலை ஏந்தீ,
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களை யுடைய , பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே , மேலான இடத்தில் உள்ள , எங்கள் பெருமானே , மேகங்களின்மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே , நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே , வெள்ளிய தலையை ஏந்தியவனே , திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன்; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன் ? ஒன்றிற்கும் ஆசைப்படேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 4
கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை,
கல்லா தேபல கற்றேன்,
நில்லேன் அல்லேன், நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன், பொன்அடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய,
நல்லேன் அல்லேன் நான்உனக்கு அல்லால்,
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன் ; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லா வற்றையும் கற்றேன் ; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன் ; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன் ; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவு மிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன் ; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 5
மட்டுஆர் பூங்குழல் மலைமகள் கணவனைக்
கருதா தார்தமைக் கருதேன்,
ஒட்டாய் ஆகிலும் ஒட்டுவன் அடியேன்,
உன்அடி அடைந்தவர்க்கு அடிமைப்
பட்டேன் ஆகிலும் பாடுதல் ஒழியேன்,
பாடியும் நாடியும் அறிய
நட்டேன், ஆதலால் நான்மறக் கில்லேன்,
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியே , தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலை மகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன் ; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும் , நான் உனக்கு அடியவனாய் , உன்னொடு ஒட்டியே நிற்பேன் ; உன் திரு வடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும் , உன்னைப் பாடுதலை விடமாட்டேன் ; உன் புகழைப் பாடியும் , உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் , உன்னை நான் மறக்கமாட்டேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 6
படப்பால் தன்மையில் நான்பட்டது எல்லாம்
படுத்தாய் என்றுஅல்லல் பறையேன்,
குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே,
கோனே, கூற்றுஉதைத் தானே,
மடப்பால் தயிரொடு நெய்மகிழ்ந் தாடு
மறைஓதீ, மங்கை பங்கா,
நடப்பாய் ஆகிலும் நடப்பன்உன் னடிக்கே
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் , நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே , யாவர்க்கும் , தலைவனே , இயமனை உதைத்தவனே , அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற , வேதத்தை ஓதுபவனே , உமையை ஒரு பாகத்தில் உடையவனே , திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால் , நான் பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன் . நீ என்னை விட்டு நீங்குவாயாயினும், நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 7
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா, அமரர்கள் தலைவா,
எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளம்உள் ளளவும்,
உய்வான் எண்ணிவந்து உன்அடி அடைந்தேன்,
உகவாய் ஆகிலும் உகப்பன்,
நைவான் அன்றுஉனக்கு ஆட்பட்டது அடியேன்,
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : ஐந்து தலைப் பாம்பினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே , தேவர்கட்குத் தலைவனே , திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் அன்று உனக்கு ஆட்பட்டது , துன்பத்தால் வருந்துதற்கு அன்று ; துன்பத்தினின்றும் உய்ந்து , இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன் ; அதனால் , நீ என்னை விரும்பாதொழியினும் , நான் உன்னை விரும்பியே நிற்பேன் ; ஆதலின் , நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன் ; இஃது என்அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 8
கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்
கருதிடில் கண்கள்நீர் மல்கும்,
பலிதேர்ந்து உண்பதொர் பண்புகண்டு இகழேன்,
பசுவே ஏறினும் பழியேன்,
வலியே ஆகிலும் வணங்குதல் ஒழியேன்,
மாட்டேன் மறுமையை நினைய,
நலியேன் ஒருவரை நான்உனை யல்லால்,
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , யான் இம்மானுட வாழ்க்கையை ஒருபொருளாக நினைத்துச் செருக்கேன் ; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால் , கண்களில் நீர் பெருகும் . ஆதலின் , பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும் , அதுபற்றி உன்னை இகழேன் ; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன் ; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும் , உன்னை வணங்குதலைத் தவிரேன் ; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன் ; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 9
குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டார் ஆகிலும், கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்,எருது ஏறும்
கண்ணா, நின்அலது அறியேன்,
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக,
நண்டுஆ டும்வயல் தண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ.
பொழிப்புரை : எருதினை ஏறுகின்ற , எனக்குக் கண்போலச் சிறந்தவனே , நண்டுகள் விளையாடும் வயல்களையும் , சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே , சமணரும் , சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும் , அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன் ; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன் ; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு , அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன் . இஃது என் அன்பிருந்தவாறு .
பாடல் எண் : 10
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழல் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீர் ஆகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற் றறுமே.
பொழிப்புரை : அடியவர்களே , பிற பாடல்களை நீர் பாட மறந்தாலும் , பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும் , சோழனது நாட்டில் உள்ளதும் , பழமையான புகழையுடையதும் , ஆகிய திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை , அவனை ஒரு நாளும் மறவாத, திரட்சியமைந்த, பூவையணிந்த கூந்தலையுடைய, `சிங்கடி ` என்பவளுக்குத் தந்தையாகிய , திருவுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள் . பாடினால் , உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment