திரு நெல்லிக்கா

 

 

திரு நெல்லிக்கா

 

இறைவர்         : நெல்லிவன நாதர், நெல்லிநாதேசுவரர்ஆமலகவனேசுவரர்.

 

இறைவியார்    : மங்களநாயகி, ஆமலகேசுவரி

 

தல மரம்     : நெல்லி மரம்

 

தீர்த்தம்      : பிரமதீர்த்தம் - கோயில் எதிரில் - படித்துறை விநாயகர் உள்ளார்.

                              வடக்கே ரோகநிவாரண தீர்த்தம் என்னும்  சூரிய தீர்த்தம்.

 

தேவாரப் பாடல் -     திருஞானசம்பந்தர் -  அறத்தால் உயிர்காவல்

 

 

     சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

    

      திருவாரூரில் இருந்து தெற்கே 13 கி.மீ. தொலைவு. அருகில் உள்ள திருநெல்லிக்காவல் இரயில் நிலையம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இரயில் தடத்தில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து இத்திருத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் திருதெங்கூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இருக்கிறது.

 

ஆலய முகவரி  

அருள்மிகு நெல்லிவன நாதேசுவரர் திருக்கோயில்

திருநெல்லிக்காவல்

திருவாரூர் மாவட்டம்

PIN - 610205

 

         காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

         தலப் பெருமை: தேவலோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண்டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. அதன் காரணமாக ஒருமுறை தேவலோகம் வந்த துர்வாசரை மதிக்காததால் அவர் கோபம் கொண்டு " நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள்" என்று சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் நெல்லிவனநாதர் என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய இத்தலமும் திருநெல்லிக்கா என அழைக்கப்பட்டது.

 

         மேற்கு நோக்கிய திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதில்கள் சூழ காட்சி அளிக்கிறது. ஐந்து நிலை கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் பணிந்து, நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். திருச்சுற்றில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. திருச்சுற்று வலம் முடித்துப் படிகளேறி முன் மண்டபத்தை அடைந்தால் இடதுபறம் சோமாஸ்கந்தர் தரிசனம். நேரே நடராஜ சபை உள்ளது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி முதல் ஏழுநாளும், .மாசி மாதம் 18-ம் தேதி முதல் ஓரு வார காலத்திற்கும் மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரியபூசை நடக்கும். பரிவார மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. தெற்கிலுள்ள கோபுர வாயில் வழியே அம்பாள் சந்நிதியை சென்று அடையலாம். தெற்கு வாயிலுக்கு வேளியே எதிரில் ஆலயத்தின் தீர்த்தக்குளம் உள்ளது.

 

         இத்தலம் சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. பஞ்சகூடபுரம் என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் திருநெல்லிக்காவல் தலமும் ஒன்று. மற்ற பஞ்சகூடபுர தலங்கள்: (1) நாட்டியத்தான்குடி, (2) திருக்காறாயில், (3) திருத்தெங்கூர், மற்றும் (4) நமசிவாயபுரம் என்பன. கந்தர்வன் ஒருவனின் குஷ்ட நோய் இத்தலத்தில் நீங்கியது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தம் உள்ளது.

 

 

 

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

 

பெரிய புராணப் பாடல் எண் : 574

நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,

         நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,

பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,

         பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,

உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்,

         ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,

செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி,

         திருமலிவெண் துறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

 

         பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.

 

         குறிப்புரை : இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

 

திருக்காறாயில் -      நீரானே (தி.2 ப.15) - இந்தளம்.

 

திருத்தேவூர் -         1. பண்ணிலாவிய (தி.2 ப.82) - காந்தாரம். -

                                             2. காடுபயில் (தி.3 ப.74) - சாதாரி.

  

திருநெல்லிக்கா -      அறத்தாலுயிர் (தி.2 ப.19) - இந்தளம்.

 

திருக்கைச்சினம் -       தையலோர் (தி.2 ப.45) - சீகாமரம்.

 

திருத்தெங்கூர் -        புரைசெய் (தி.2 ப.93) - பியந்தைக்காந்தாரம்.

 

திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3 ப.16) - காந்தாரபஞ்சமம்.

 

திருக்கோட்டூர் -       நீலமார்தரு (தி.2 ப.109) - நட்டராகம்.

 

 

 

2.019 திருநெல்லிக்கா                பண் - இந்தளம்

                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

அறத்தால் உயிர்கா வல்அமர்ந்து அருளி,

மறத்தால் மதின்மூன் றுஉடன்மாண்பு அழித்த

திறத்தால், தெரிவுஎய் தியதீ வெண்திங்கள்

நிறத்தான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்ததிறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன்.

 

 

பாடல் எண் : 2

பதிதான் இடுகாடு பைங்கொன் றைதொங்கல்

மதிதான் அதுசூ டியமைந் தனுந்தான்,

விதிதான், வினைதான், விழுப்பம் பயக்கும்

நெதிதான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன். விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.

 

 

பாடல் எண் : 3

நலந்தான் அவன்,நான் முகன்தன் தலையைக்

கலம்தான் அதுகொண் டகபா லியம்தான்,

புலம்தான், புகழால் எரிவிண் புகழும்

நிலம்தான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப்பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன்.

 

 

பாடல் எண் : 4

தலைதான் அதுஏந் தியதம் மடிகள்

கலைதான் திரிகாடு இடம்நாடு இடமா,

மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய

நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன்.

 

 

பாடல் எண் : 5

தவம்தான், கதிதான், மதிவார் சடைமேல்

உவந்தான், சுறவேந் தன்உருவு அழியச்

சிவந்தான், செயச்செய் துசெறுத்து உலகில்

நிவந்தான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறைமதியை உவந்து சூடியவன். மீனக் கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன்.

 

 

பாடல் எண் : 6

வெறிஆர் மலர்க்கொன் றைஅம்தார் விரும்பி

மறிஆர் மலைமங் கைமகிழ்ந் தவன்தான்,

குறியால் குறிகொண் டவர்போய்க் குறுகும்

நெறியான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன்.

 

 

பாடல் எண் : 7

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்,

இறைதான் இறவாக் கயிலைம் மலையான்,

மறைதான், புனல்ஒண் மதிமல் குசென்னி

நிறைதான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம்பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன்.

 

 

பாடல் எண் : 8

மறைத்தான் பிணிமாது ஒருபா கந்தன்னை,

மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையைக்

குறைத்தான், சடைமேல் குளிர்கோல் வளையை

நிறைத்தான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன்.

 

  

பாடல் எண் : 9

தழல்தா மரையான், வையம்தா யவனும்,

கழல்தான் முடிகா ணியநாண் ஒளிரும்

அழல்தான், அடியார்க்கு அருளாய்ப் பயக்கும்

நிழல்தான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் மேல் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி ஆகியவற்றைக் காண முயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளிவடிவினன்.

 

 

பாடல் எண் : 10

கனத்துஆர் திரைமாண்டு அழல்கான் றநஞ்சை

என்அத்தா என, வாங்கி அதுஉண் டகண்டன்,

மனத்தால் சமண்சாக் கியர்மாண்பு அழிய

நினைத்தான், நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

         பொழிப்புரை :நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் `என் அத்தனே காப்பாற்று` என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன்.

 

 

பாடல் எண் : 11

புகர் எதும்இலாது புத்தேள் உலகில்

நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை,

நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன

பகர்வார் அவர்பா வம்இலா தவரே.

 

         பொழிப்புரை :குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர்.

 

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...