அகத்து உறுப்பு அன்பு

 

 

 

அகத்து உறுப்பு அன்பு

-----

 

திருக்குறளில் "அன்புடைமை" என்னும் ஓர் அதிகாரம்.

இல்வாழ்க்கைத் துணை ஆகிய மனைவியும், இல்வாழ்க்கையின் நல்கலமான புதல்வரும் முதலாகிய சம்பந்தம் உடையவர் இடத்திலே அன்பு உடையவனாய் இருத்தல் வேண்டும் என்பது நாயனாரால் இவ்வதிகாரத்தில் காட்டப்பட்டது.

 

     இல்லற இயலில், முதல் அதிகாரமான "இல்வாழ்க்கை"யைச் சொன்ன நாயனார், அடுத்து இரண்டாவது அதிகாரமாக, அந்த இல்வாழ்க்கை இனிது நடத்துவதற்கு இன்றியமையாத துணை ஆகிய மனையாளின் சிறப்பை அடுத்த அதிகாரத்திலே "வாழ்க்கைத் துணைநலம்" எனfறு சொன்ன நாயனார், மூன்றாவது அதிகாரத்திலே, இல் வாழ்க்கையின் பயனாக நன்மக்களைப் பெறுதல் பற்றி, "மக்கள்பேறு" என்னும் அதிகாரத்தைச் சொன்ன நாயனார், மனைவியிடத்தும், மக்களிடத்தும், இல்வாழ்வான் செலுத்த வேண்டிய அன்பின் சிறப்பை இந்த அதிகாரத்தில் எடுத்துக் கூறுகின்றார்.

 

     (பேறு என்றால், "அடையத் தக்கது", "பாக்கியம்", "செல்வம்" என்று பொருள் உள்ளதால், "மக்கட்பேறு" என்பதே பொருத்தமான அதிகார் தலைப்பு ஆகும். இவ்வாறு இருக்க, சிலர் "புதல்வரைப் பெறுதல்" என்று தலைப்பிட்டிருப்பது பொருத்தமற்றதாகும்)

 

     இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆதலால், இது இல்லறத்தானுக்கு இன்றியமையாதது ஆகின்றது.

 

     வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் மேல் அன்பு இல்லாத வழி, இல்லறம் இனிது நடக்காது. அன்பினால் அருள் உண்டாகும். தொடர்பு உடையவரிடத்திலேயே அன்பு செலுத்த அறியாதவன், பின்னர் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது அரிதாகும். அரிது என்பது இன்மைப் பொருட்கண் வந்தது எனப் பரிமேலழகர் உரை கண்டுள்ளதை அறிக.

 

     மாதவியின்பால் காமம் கொண்டு, தன்னைப் பிரிந்து சென்ற தனது கணவனாகிய கோவலன் மீண்டு தன்னிடம் வந்த போது, கண்ணகி கோவலனைப் பார்த்துக் கூறி வருந்தியது இல்லற இன்பத்தைக் கணவன் இல்லாமையால் இழந்தது குறித்து அல்ல. இல்லறத்தின் இனிய பண்புகள் ஆன, அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஒம்புதல், துறவோரை எதிர்தல், தொன்மை மிகுந்த சிறப்பினை உடையதாகிய விருந்து ஓம்பல் ஆகியவற்றைக் கணவனுடன் இருந்து செய்ய முடியாமல், அவற்றை எல்லாம் இழந்ததாகக் கூறுவாள்.

 

"வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்

பொச்சாப்பு உண்டு பொருள் உரையாளர்

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி உண்டோ?

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்,

சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்,

வழு எனும் பாரேன், மாநகர் மருங்கு ஈண்டு

எழுக என எழுந்தாய், என்செய்தனை என...

 

இது கோவலன் கூற்று......

        

இதன் பதவுரை ---

 

     வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு --- பயனில்லாத சொற்களைச் சொல்வாரோடும், புதிய பரத்தமையை உடையாரோடும் கூடி, குறுமொழிக் கோட்டி நெடு நகை புக்கு --- சிறு சொல் சொல்லும் இழிந்தோர் கூட்டத்தின்கண் மிக்க சிரிப்புக்கு உட்பட்டு, பொச்சாப்பு உண்டு --- மறவியில் பொருந்தி, பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு --- பொருள் பொதிந்த உரையினை உடைய பெரியோர் விரும்புகின்ற நல்லொழுக்கத்தினைக் கெடுத்த எனக்கு, நன்னெறி உண்டோ --- இனித் தீக் கதியன்றி நற்கதி உண்டாமோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் --- தாய்தந்தையர்க்கு ஏவல் செய்தலினும் வழுவினேன், சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் --- சிறு பருவத்திலேயே பெரிய அறிவினை உடையவளாகிய உனக்கும் தீமை செய்தேன், வழு எனும் பாரேன் --- இங்ஙனம் நம் நகர் விட்டு இங்கு வருதல் குற்றமுடைத்தாம் என்பதனைச் சிறிதும் நோக்காதவனாய், மா நகர் மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் --- நமது பெரிய நகரத்திடத்தினின்றும் இவ்விடத்து எழுக என்று யான் கூற, உடனே ஒருப்பட்டு எழுந்தனை, என் செய்தனை என --- என்ன அரிய காரியம் செய்தனை என்று கோவலன் இரங்கிக் கூற;

 

     சிறிய பருவத்ததிலேயே பெரிய அறிவினை உடையவள் என்று தனது இல்லக் கிழத்தியைப் பார்த்து கோவலன், அவளது அருமையை வியந்து கூறுவது அறிந்து இன்புறத்தக்கது. இல்லாளை மதித்தல் வேண்டும் என்பது இதனால் தெளிவாக்கப்பட்டது.

 

"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்து எதிர் கோடலும் இழந்த என்னை, நும்

பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்

 

மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்

முந்தை நில்லா முனிவு இகந்தனனா,

அற்பு உளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ,

எற்பா ராட்ட யான் அகத்து ஒளித்த

நோயும் துன்பமும் நொடிவது போலும் என்

 

வாய்அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த,

போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும்

மாற்றா உள்ள வாழ்க்கையேன், தலின்

ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற.....

        

இது கண்ணகி கூற்று....

 

இதன் பதவுரை ---

 

     அறவோர்க்கு அளித்தலும் --- அறநெறியில் ஒழுகுபவர்க்குக் கொடுத்தலும், அந்தணர் ஓம்பலும் --- அந்தணரைப் பேணுதலும், துறவோர்க்கு எதிர்தலும் --- துறவிகளை எதிர்க்கொள்ளுதலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை --- மேலையோர் உயர்த்துக் கூறும் சிறப்பினை உடைய விருந்தினரை எதிர்கொள்ளுதலும் ஆகிய இவற்றை இழந்த என்னை, நும் பெருமகள் தன்னொடும் --- உமது தாயோடும், பெரும் பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் --- பெரிய புகழினையும் தலையாய முயற்சியினையும் மன்னரது பெருமை மிக்க சிறப்பினையும் உடைய மாசாத்துவான் கண்டு, முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ --- நீர் என் முன்பு நில்லாமையால் தோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக, அற்பு உளம் சிறந்து அருள்மொழி அளைஇ என் பாராட்ட --- அதனை உணர்ந்த அவர்கள் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்த மொழிகளைக் கலந்து என்னைப் பாராட்ட, யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் --- நான் என் உளத்து மறைத்த மனக்கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற, என் வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த --- எனது உண்மையல்லாப் புன்சிரிப்பிற்கு அவர்கள் உள்ளம் வருந்தும் வண்ணம், போற்றா ஒழுக்கம் புரிந்தீர் --- நீர் பெரியோர் வெறுக்கும் தீய ஒழுக்கத்தினை விரும்பினீர் ஆகவும், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் --- உம்முடைய சொல்லைச் சிறிதும் மாற்ற நினையாத உள்ளத்து வாழ்க்கையை உடையவள் நான், ஆதலால், ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற --- நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று கண்ணகி கூற;

 

 

குடிமுதல் சுற்றமும், குற்று இளையோரும்,

அடியோர் பாங்கும், ஆயமும் நீங்கி;

நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும்

பேணிய கற்பும், பெருந்துணை யாக,

என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!

 

நாணின் பாவாய்! நீணில விளக்கே!

கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!

சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு, யான்போய்

மாறி வருவன் மயங்காது ஒழிக என.....

        

இது கோவலன் கூற்று....

 

இதன் பதவுரை ---

      

     குடிமுதல் சுற்றமும் --- குடிக்கண் முதல் சுற்றமாய் விளங்கும் தாய் தந்தை முதலியோரையும், குற்றிளையோரும் --- குற்றேவல் புரியும் மகளிரையும், அடியோர் பாங்கும் --- அடியார் பகுதியையும், ஆயமும் நீங்கி --- கூடி மகிழ்ந்து குலவி இருந்த தோழிமாரையும் விட்டு விலகி, நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக --- நாணினையும், மடனையும், நல்லோர்களது போற்றுதலையும் விரும்பிய கற்பினையும் பெருமை மிக்க துணையாகக் கொண்டு, என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த --- இவ்விடத்து என்னோடு வந்து என் துன்பத்தினைக் கெடுத்த, பொன்னே கொடியே புனை பூங் கோதாய் --- பொன்னை ஒப்பாய்! கொடிபோல்வாய்! அழகிய மலர்மாலையை அனையாய்! நாணின் பாவாய் நீள் நில விளக்கே --- நாணினையுடைய பாவையை நிகர்ப்பாய்! பெரிய இவ்வுலகிற்கு விளக்கமாக அமைந்தாய்! கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி --- கற்புக்குக் கொழுந்து போல்வாய்! அழகின் செல்வியே!  சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன் மயங்காது ஒழிகென --- நின் சிறிய அடிக்கு அணியாகிய சிலம்புகளுள் ஒன்றனை யான் கொண்டு சென்று விற்று வருவேன்;

 

     இங்கு ஒன்றைச் சிந்திக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் பின்னர், ஆடவன் எந்த வித்ததிலும் அவனுக்கு உரிய தாய்தந்தை முதலிய சுற்றத்தாரையும், மற்ற மற்ற உறவினர்களையும், நண்பர்களையும் பிரியவேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்கு முன்பு வரை அவன் அனுபவித்து வந்த எல்லாம் அவனிடத்தில் உள்ளன. ஆனால், திருமணம் புரிந்துகொண்ட பெண் ஆனவள், தான் தனது தாய்தந்தையர் முதலான சுற்றத்தாரையும், உறவுகளையும், தோழிகளையும், அதுவரை தாய் வீட்டில் அனுபவித்து வந்த எல்லாவற்றையும் துறந்து, முற்றிலும் தனக்குப் பழக்கம் இல்லாத ஒரு சூழல் கொண்ட புகுந்த வீட்டிற்கு வந்து, தன்னை ஆட்படுத்திக்கொண்டு, இல்லறத்தை மேற்கொள்ளுகின்றாள். எல்லாவற்றையும் விட்டு, தன்னை வந்து சேர்ந்த இல்லாளுக்கு எல்லாமாக இருந்து, அவளிடத்தில் அன்பு காட்டுவது கணவனின் இன்றியமையாத கடமை ஆகின்றது. எனவேதான், வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் மேல் அன்பு இல்லாத வழி, இல்லறம் இனிது நடக்காது என்றார் பரிமேலழகர்.

 

     இவை எல்லாம் இல்லறத்தின் சிறப்பை இனிதே எடுத்து விளக்குவனவாக அமைந்தவை.

 

     உயிர்கள் பால் அருள் பிறப்பது அன்பின் பயன் என்பதை நாயனார், "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றும் தெளிவுபடுத்தினதும் காண்க.

 

     இந்த அதிகாரத்தில் ஒன்பதாவதாக அமைந்த இத் திருக்குறளில், "உடம்போடு பொருந்திய உயிரின் இயல்பு என்னும் உள் உறுப்பு ஆகி, இல்லற்றத்திற்கு உறுப்பாக அமைந்த அன்பு இல்லாத ஒருவருக்கு, புறத்திலே அமைந்த பிற உறுப்புக்களால் என்ன பயன்களைச் செய்ய முடியும்" என்று வினவுகின்றார் நாயனார். இந்த வினாவுக்கு விடை, புறத்து உறுப்புக்களால் பயன் இல்லை என்பதே ஆகும்.

 

     புறத்து உறுப்பு என்பது இடமும் பொருளும் ஏவலும் என்பர்.  அன்பாகிய துணையோடு கூடாத இடத்து, அந்த இடத்திலே பொருள் முதலியவற்றால் பயன் இல்லை.

 

     துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய "நன்னெறி" என்னும் நூலில் பின்வரும் பாடல் இக் கருத்தை உறுதி செய்யும். கண்ணில்லாதவனுக்கு விளக்கினால் ஒரு பயனும் இல்லை. வாய்பேச வராத ஊமைக்கு, நூல்களால் பயன் இல்லை என்பது போல, உள்ளத்தில் அன்பு இல்லாதவனுக்கு, இடம் பொருள், ஏவல் போன்ற எல்லாம் இருந்தாலும் அவற்றால் ஒருபயனும் இல்லை என்கின்றார்.

 

இல்லானுக்கு அன்பு, இங்கு இடம்பொருள் ஏவல்,மற்று

எல்லாம் இருந்தும் அவர்க்கு என்செய்யும்? - நல்லாய்

மொழி இலார்க்கு ஏது முதுநூல் தெரியும்?

விழி இலார்க்கு ஏது விளக்கு?

 

இதன் பொருள்---    

 

     நற்குணம் உடையவளே! பேச வராத ஊமைகளுக்கு பழைமையான நூல்கள் என்ன பயனைத் தரும்? பார்வை அற்றவனுக்கு விளக்கால் என்ன பயன் விளையும்? அதுபோல, இந்த உலகில் பெரிய இடமும், நிறைந்த பொருளும், எவல் தொழில் செய்பவர்களும் நிறைந்து இருந்தாலும், அன்பு இல்லாதவனுக்கு அவைகளால் ஒரு பயனும் இல்லை.

 

     வாய் பேச வராத ஊமை நூல்களைப் படிக்கலாம். உணரலாம். ஓதி, உணர்ந்தாலும், பிறர்க்கு எடுத்துச் சொல்ல முடியாது, பிறர்க்குப் பயன்படாமையால் இவ்வாறு கூறினார் சுவாமிகள் என்று கொள்ளவேண்டும்.

 

     உயிரோடு கூடிய உடம்பிற்கு உள்ளே அமைந்து இருக்க வேண்டிய உறுப்பு ஆகிய அன்பு இல்லாத போது, உடம்பிற்கு புறத்திலே அமைந்துள்ள கண் முதலாகிய உறுப்புக்களால் பயன் இல்லை என்று கூறுவாரும் உண்டு. அவ்வாறு கொண்டால், அன்பு காரணமாகத் தமது உடல் உறுப்பாகிய கண்களை இழக்கத் துணிந்த கண்ணப்ப நாயனார், ஒரு புறாவுக்காகத் தனது தசையையே அரிந்து தந்த, சோழர் குலத்தில் உதித்தவராகிய, சிபிச் சக்கரவர்த்தியையும், விருத்திராசுரனை வெல்லும்பொருட்டு தனது முதுகெலும்பை இந்திரனுக்குத் தந்து உதவிய ததீசி முனிவரையும், அந்தணர் வடிவம் கொண்டு வந்து யாசித்த இந்திரனுக்கு, தனது கவசகுண்டலங்களைக் கொடுத்த கர்ணன\னையும், தன்னை நாடி வந்து புலவருக்குத் தன்னால் ஏதும் தரமுடியாத நிலையில் இருந்தபோதும், தனது தலையைத் தரத் துணிந்த குமணவள்ளலையும் குறிக்கும்.

 

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்? யாக்கை

அகத்து உறுப்பு அன்பு இல் அவர்க்கு.         

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     திருக்குறளின் அருமையினை நன்கு ஓதி உணர்ந்ததோடு, பெரியபுராணம் என்னும் அருள் நூலினையும் நன்கு ஓதித் தெளிந்த, குராம பாரதி என்னும் பெரியார், கண்ணப்ப நாயனாரின் செய்கையினை, தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், மேற்படி திருக்குறளுக்கு ஒப்புக் காட்டிப் பாடிய பாடல்....

 

புண்ணப்பர் கண்ணில்என்று புன்கண்உறுப்பு ஈர்ந்துஅப்பி

கண்ணப்பர் அன்பு உறுப்பில் கைசெய்தார், - வண்ணப்

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும்? யாக்கை

அகத்துஉறுப்பு அன்புஇல் அவர்க்கு.                

 

         பொத்தப்பி நாட்டில் உடுப்பூரில் வேடர் குலத்தில் அவதரித்தவர் திண்ணனார். அவர் வேட்டுவ குலத் தலைவனுக்கு அருமந்த புத்திரர். அவருக்குள்ள சிவபத்தி மேலீட்டைச் சிவகோசரியார் முன்பு உலகத்தோருக்கு அறிவிக்கச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். தமது கண்ணில் குருதி சோரக் காட்டினார். திண்ணனார் மிக அஞ்சி வருந்திப் புண்ணுக்கு அப்ப நினைந்து, தன் கண்ணைப் பிடுங்கி அப்பினார். குருதி நிற்கக் கண்டு மகிழ்ந்திருக்கும்போதே மற்றொரு கண்ணிலும் குருதி பெருக, மீட்டும் திண்ணனார் தமது மற்றைக் கண்ணையும் பிடுங்கி அப்ப உறுதி கொண்டனர். அப்போது, "நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப" எனக் காளத்தியப்பர் கூறித் தமது திருக்கரத்தால் திண்ணனார் கரத்தைப் பற்றி, அவரைத் தமது பக்கத்தில் வீற்றிருக்கச் செய்தார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு. 

 

     இதனை, யாக்கை அகத்தின்கண் நின்று இல்லறத்துக்கு உறுப்பாகி.ய அன்புடையர் அல்லாதாருக்கு ஏனைப் புறத்து உறுப்புக்களாகிய இடம் பொருள் ஏவல் முதலியன,  அவ் அறம் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும் எனத் திருவள்ளுவர் கூறினர்.

 

     தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவர்  சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவர் தம் வள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும், இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர். புறாவினைப் பருந்து துரத்த, புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என் இரையைக் கொடு''  என்று பருந்து சிபியைக் கேட்க, சக்கரவர்த்தியோ, தன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்து, ஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்து, அந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தந்தால் போதும் என்றது. மகிழ்ந்த சிபி, புறாவினை ஒரு தட்டில் வைத்து, தன் உடல் தசையில் பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால், தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமன் அடையாது, புறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர், தானே தட்டில் ஏறி நின்றனன். தட்டுகள் சமநிலை உற்றன. அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய

வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு.

 

"புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க

   பெருந்தகைதன் புகழில் பூத்த

அறன் ஒன்றும் திருமனத்தான், அமரர்களுக்கு

   இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்

திறல் உண்ட வடிவேலான். ‘’தசரதன்’’ என்று.

   உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்.

விறல்கொண்ட மணி மாட அயோத்திநகர்

   அடைந்து. இவண் நீ மீள்தல்!என்றான்".

 

"இன் உயிர்க்கும் இன் உயிராய்

   இரு நிலம் காத்தார் என்று

பொன் உயிர்க்கும் கழலவரை

   யாம் போலும். புகழ்கிற்பாம்?-

மின் உயிர்க்கும் நெடு வேலாய்! -

   இவர் குலத்தோன். மென் புறவின்

மன் உயிர்க்கு. தன் உயிரை

   மாறாக வழங்கினனால்"

 

என்று கம்பநாட்டாழ்வார் போற்றி உள்ளார்.

 

"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்

தன் அகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக"

 

என்று புறநானூற்றுப் பாடலிலும் சிபியின் பெருமை போற்றப்பட்டு இருப்பது காண்க.

 

     முற்காலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. அவைகள் தாம் நினைத்த இடங்களுக்குப் பறந்து சென்று ஊர்களையும் அவைகளில் உள்ள மக்களையும், மேல் விழுந்து கொன்று பாழாக்கின. எல்லாரும் இந்திரனை வேண்டிக் கொண்டதனால், அவன் அவைகளின் சிறகுகளை வெட்டி உலகத்திற்கு உபகாரம் பண்ண எண்ணினான். தன்னுடைய வச்சிராயுதம் மழுங்கி இருந்தமையால் அங்ஙனம் செய்ய அவனால் ஆகவில்லை. உடனே, அவன் பூலோகத்தில் தவம் செய்துகொண்டிருந்த ததீசி முனிவரைக் கண்டு, "ஐயனே! அடியேனுடைய வச்சிராயுதம் மழுங்கினமையால், அதனால் மலைகளின் சிறகுகளை வெட்டி இப்பூலோகத்து உயிர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லை. தேவரீருடைய முதுகெலும்பால் வேறொரு புதிய வச்சிராயுதம் செய்துகொண்டால், அவைகளை நான் சிறகு அரிந்து அடக்கி விடுவது நிச்சயம். ஆகையால், அதை எனக்கு அருளவேண்டும்" என்று தன் குறையிரந்து வேண்டினான். அது கேட்டவர், முதல் எழு வள்ளல்களில் ஒருவராகையால், ", சுராதிப! ஜீவகாருண்யமே எமக்கு முதற்படியாய் உள்ளது. அதுவே அன்பை வெளிப்படுத்துவது. இச் சரீரம் நிலையற்றது. இது யாருக்குச் சொந்தம்?  செத்தால் நாய்க்கும் பேய்க்கும் ஈக்கும் எறும்புக்கும், காக்கைக்கும் கழுகுக்கும் சொந்தம்,  எனக்கும் சொந்தம், உணக்கும் சொந்தம். இது ஒரு சாக்குப்பை. இருகாலில் செல்லும் பேய்த்தேர், இது நீர்க்குமிழி போன்றது. இது இருக்கும் இப்பொழுதே பல்லுயிர்க்கும் உபகாரம் புரியவேண்டும். இந்தா, இதை எடுத்து உனது விருப்பம் போல் செய்துகொள்" என்றார்.  தமது ஜீவனைக் கபாலமூலமாய் வெளிப்படுத்தி விட்டுக் கட்டைப் பிணமாய் இருந்தார். அதுகண்ட இந்திரன் அவருடைய ஜீவகாருண்யத்தையும் அன்பையும் வியந்தபடியே, அந்த உடலின் முதுகெலும்பைக் கொண்டு ஒரு புதிய வச்சிராயுதம் செய்து, அதனால் மலைகளின் சிறகுகளைக் கொய்து, பல்லுயிரையும் காத்தான்.  

 

         பிறர்மேல் அன்பற்ற சுயநலப் பிரியர்கள் தமது உடல் பொருள் ஆவி முன்றும் தம்மது என்று தாம் இருப்பர். அன்பு உடையார் அங்ஙனம் இன்றித் தமது கண்ணைப் பிடுங்கி அப்பின கண்ணப்பரைப் போல், தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச் சித்தமாய் இருப்பார்கள்.

 

 

ஈரம் வெய்யோர்க்கு நசைகொடை எளிது.    ---  முதுமொழிக் காஞ்சி.

 

இதன் பதவுரை ---

 

     ஈரம் --- அன்புடைமையை, வெய்யோர்க்கு --- விரும்பி இருப்பார்க்கு, நசை கொடை --- பிறருக்கு விருப்பமாகிய பொருளைக் கொடுப்பது, எளிது --- எளிதாம்.

 

         பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை விரும்பிக் கேட்டாலும் எளிதில் கொடுப்பர்.

 

     கர்ணன் தனது கவசகுண்டலங்களைக் கொடுத்தது நாம் அறிந்ததே.

 

    தம்பியாகிய இளங்குமணன் தனது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு தன்னையும் கொல்லுதற்கு எண்ணியிருந்ததை அறிந்த குமணன், நாட்டின் நீங்கிக் காட்டை அடைந்து வாழ்ந்து வந்தான். அக்காலத்தே பெருந்தலைச் சாத்தனார் வறுமை உற்று,  அவன்பால் பரிசில் பெற முதிரத்துக்கு வந்தார். வந்தவர், நாட்டில்  நிகழ்ந்திருக்கும் செய்தி அறிந்து ஏமாற்றம் அடைந்தாராயினும், காட்டில் குமணன் இருக்குமிடத்தை அறிந்து அவன்பால் சென்று சேர்ந்தார்.  காட்டிலே மறைந்து வாழும் தன்பால் வந்து தம் வறுமைத் துன்பத்தை எடுத்தோதிப் பாடிய பெருந்தலைச் சாத்தனாரது பாட்டின் கருத்தையும் அவர் உள்ளத்து அமைதியையும் ஓர்ந்து உணர்ந்தான் குமணன். தன்பால் பொருள் இல்லை. ஆயினும், தன்னுடல் சிறந்த பொருள் ஆக இருத்தலை அறிந்து, தனது உடலில் பொருந்தி உள்ள தலை சிறந்த உறுப்பு என்பதையும், அதனைக்கொண்டு காட்டினால் தன் தம்பியாகிய இளங்குமணன், மிக்க பொருள் தருவதாய் நாட்டு மக்கட்குத் தெரிவித்திருத்தலையும் நினைந்து, தன் தலையைக் கொய்துகொண்டு சென்று, வேண்டும் பொருள் பெற்று வறுமைத் துயரைப் போக்கிக்கொள்க என்று தன் வாளை எடுத்துக் குமணன் பெருந்தலைச் சாத்தனார் கையில் தந்தான். கைந் நடுங்க, உளம் பதைக்க, அதை வாங்கிய சாத்தனார்,

காற்றினும் கடிதாய் இளங்குமணன்பால் சென்று, “நான் உனது அண்ணனைக் கண்டு பாடி நின்றேன். அவன், நான் பொருளின்றி வறிதே வாடிச் செல்வது, நாடிழந்த தனத் துயரினும் பெரிது என நினைந்து, வேறு தன்பால் சிறந்த பொருள் இல்லாமையால் தன் தலையை அரிந்து கொள்ளுமாறு தன் வாளைத் தந்துள்ளான். நானும் அவன் தந்த வாளைப் பெற்று வந்துள்ளேன். இப்படிப்பட்ட அன்புள்ளம் கொண்ட அண்ணனையா நீ வெறுத்தாய்?" என்று உரைத்து, வாளையும் நன்கு காணச் செய்து, “இவ்வுலகத்தில் நிலைபேறு  இல்லாத இந்த உலகத்தில், தமது புகழ் நிலைத்து இருக்கவேண்டும் என்னும் கருத்து உடையவர்கள், தமது புகழை நிறுத்தத் தமது உயிரையுர் விட்டு இருக்கின்றார்கள். பெரும் செல்வச் சிறப்பு உடையோர், பசி என்று யாசித்து வருபவர்களுக்குத் தந்து உதவ முடியாத காரணத்தால், புகழுக்காத் தமது உயிரையும் கொடுத்து மாய்ந்தனர் என்பதை நீ அறிவாயாக" என்று அவனைத் தெருட்டினார். இதைக் கேட்டு நல்லுணர்வு பெற்ற இளங்குமணன், தனது அண்ணனாகிய குமணவள்ளலைத் தேடிச் சென்று, தன் தவற்றுக்கு வருந்தி, அவனை நாட்டில் இருத்தி அவன்வழி நின்று ஒழுகும் நற்செயலால் இன்புற்றான்;

நாடு முற்றும் நலம் பெருகிற்று.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...