இன்பத்தில் மகிழாதே, துன்பத்தில் துவளாதே
-----
திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரம். அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில், இல்லறம், துறவறம் ஆகிய இரு இயல்களின் வழி, இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார், அறத்தின் வழிப் பொருள் செய்து, இன்பத்தை நுகரும் முறை கூறத் தொடங்கி, பொருள் இன்பங்களின் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை அருளிச் செய்கின்றார்.
நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை ஊழ் என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.
"ஊழ்த்தல்" என்னும் சொல்லுக்கு, பதன் அழிதல், கெடுதல், மலர்தல், விரிதல், மூடுதல், பருவம் என்று பொருள்கள் உண்டு. நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயன், இப் பிறவியில் ஊழாக வந்து மூடுகின்றது, மலர்கின்றது என்று பொருள்.
இந்த ஊழ், பொருள் இன்பம் இரண்டினுக்கும் பொதுவாக நிற்பதாலும், இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும், அறத்துப்பாலின் இறுதியில் வைத்துக் கூறினார்.
இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "நல்வினை பயன் தரும்போது, அதன் விளைவாகிய இன்பங்களை, அவை நல்லவை என்று அறிந்து அனுபவித்து விட்டு, தீவினையின் பயனாகிய துன்பங்களை அனுபவிக்கும் போது, அவற்றை நீக்கும் வழியைத் தேடி அல்லல் படுவது ஏன்" என்கின்றார் நாயனார்.
நல்வினை தீவினை என்னும் இரண்டும் தாமே முன்பு செய்துகொண்டவை. அவை அவற்றின் பயனைத் தராமல் கழியமாட்டா. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் கலந்தே அனுபவிக்கவேண்டும். இன்பத்திற்கு மகிழும்போது, துன்பத்திற்குத் துவளுதல் கூடாது. இன்பத்தை வேண்டாம் என்னாது அனுபவித்தவன், துன்பம் வந்துபோது அதையும் வேண்டாம் என்னாது அனுபவித்தல் வேண்டும் என்பதை அறிவுறுத்த,
நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர், அன்று ஆம்கால்
அல்லல் படுவது எவன்.
என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.
பின்வரும் பாடல்கள் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
‘முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய
பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,
இன்பம் வந்து உறும்எனின் இனிது; ஆயிடைத்
துன்பம் வந்து உறும்எனின், துறக்கல் ஆகுமோ?.
--- கம்பராமாயணம், தைலாமாட்டு படலம்.
இதன் பதவுரை --
பேர் அறம் --- பெருமை பொருந்திய தருமம்; முன்பு நின்று இசை நிறீஇ --- (தன்னை மேற்கொள்பவனுக்கு இவ்வுலகில்) முன்னதாகப் புகழை நிலை நிறுத்தி; முடிவு முற்றிய பின்பும் நின்று --- இந்த வாழ்வு முடிவுக்கு வந்தபிறகும் இருந்து (மறுமையில்); உறுதியைப் பயக்கும் --- நன்மைப் பயனாகிய மேல் உலகத்தைத் தரும்; இன்பம் வந்து உறும் எனின் இனிது --- (வாழ்வில்) இன்பம் வந்து நேருமாயின் இனிமையானது; ஆயிடை --- அவ்விடத்து; துன்பம் வந்து உறும் எனின் --- துன்பம் வந்து நேருமாயின்; துறக்கல் ஆகுமோ?’ --- அவ்வறத்தைக் கைவிட ஆகுமோ?
இன்ப துன்பங்கள் கலந்ததே வாழ்வு. அறவழி நடப்பார்க்கு இன்பமே வரும். ஆயினும், ஒருவேளை துன்பம் வருமாயினும் அதுபற்றி அறத்தைக் கைவிடல் ஆகாது. அறம் என்ற சொல்லின் முழுப் பொருளும் தருமம் என்பதில் அடங்காது. பொருள் விளங்க வேண்டிய அளவுக்கே அறம் என்பதற்குத் தருமம் என்று உரை காண்கிறோம்.
சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா,
உறுகாலத்து ஊற்று ஆகா, ஆம் இடத்தே ஆகும்,
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு? --- நாலடியார்.
இதன் பதவுரை ---
சிறுகாலைப் பட்ட பொறியும் --- கரு அமையும் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகளும், சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆம் இடத்தே ஆகும் --- குறையமாட்டா, மிகமாட்டா, முறைமாறிப் பொருந்தமாட்டா, உற்ற காலத்தில் உதவியாக மாட்டா, உதவியாதற்குரிய காலத்தில் உதவியாகும், அதனால் --- ஆதலால், இறுகாலத்து என்ன பரிவு --- ஊழ் வினையால் கெடுங்காலத்தில் வருந்துவது ஏன்?
ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாது இருத்தல் வேண்டும்.
பேறு, அழிவு, சாவு, பிறப்பு, இன்பத் துன்பம் என்று
ஆறு உள அந்நாள் அமைந்தன, -- தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து)
இவையிவை என்றுஉணரற் பாற்று. --- அறநெறிச்சாரம்.
இதன் பதவுரை ---
பேறு --- செல்வம், அழிவு --- வறுமையும், சாவு --- இறப்பும், பிறப்பு --- பிறப்பும், இன்பம் --- இன்பமும், துன்பம் --- துன்பமும், என்ற ஆறு --- என்று சொல்லப்படுகின்ற ஆறும், அந்நாள் அமைந்தன உள --- முன் செய்த வினைகாரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; அவையவை வந்தால் --- இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும், விம்மாது --- மகிழாமலும், அழுங்காது --- வருந்தாமலும், இவை --- நம்மை நாடி வந்த இவை, இவை என்று தேறி உணரற்பாற்று --- இன்ன வினைகளால் வந்தவை என்று ஆராய்ந்து அறிந்து அடங்குதலே செயத்தக்கது.
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை, - நினைத்தனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார். --- நாலடியார்.
இதன் பதவுரை ---
பேதை --- அறிவில்லாதவன், வினைப்பயன் வந்தக்கால் --- முன் தீவினையின் பயனாக இடர்கள் இப்போது வந்து தாக்கினால், வெய்ய உயிரா --- உடனே கடுமையாகப் பெருமூச்சு விட்டு, மனத்தின் அழியும் --- மனத்தின் வருந்தி ஊக்கங் கெடும்; நினைத்து அதனைத் தொல்லையது என்று உணர்வாரே --- ஆராய்ந்து அவ்விடரைப் பழைய வினையினால் வந்ததென்று தெரிந்து அதற்கேற்ப ஒழுகுவோரே, தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார் --- கலக்கத்தின் எல்லையைக் கடந்து அப்பால் நீங்குவர்.
துன்பம் வந்தால் அதற்கு மனமழியாமல் அது நீங்க முயலவேண்டும்.
நற்செயல்களின் இடையே இடர் வந்தால், அந் நற்செயல்களால் அது வந்தது எனக் கருதி, அவை செய்தலில் ஊக்கங் கெடாமல், தொல்லை வினையால் வந்ததெனத் தெளிந்து, அந் நல்வற்றைத் திருந்தச் செய்து நலம் பெற வேண்டும் என்பது பொருள்.
பண்டு உருத்துச் செய்தபழவினை வந்து எம்மை
இன்று ஒறுக்கின்றது என அறியார், - துன்புறுக்கும்
மேவலரை நோவது என்? மின்நேர் மருங்குலாய்!
ஏவலாள் ஊருஞ் சுடும். --- பழமொழி நானூறு.
இதன் பதவுரை ---
மின் நேர் மருங்குலாய் --- மின்னலை ஒத்த இடையை உடையவளே, ஏவலாள் --- பிறர் ஊரைக் கொளுத்தும் பொருட்டு ஒருவனால் அனுப்பப்பட்ட ஏவலாளன், ஊரும் சுடும் --- ஏவியவனது ஊரையும் கொளுத்தி விடுவான். (ஆதலால்), பண்டு உருத்து செய்த பழவினை --- முன்பிறவிகளில் மிகுதியாகத் தாம் செய்த பழைய தீவினை, இன்று வந்து எம்மை ஒறுக்கின்றது என அறியார் --- இப்பிறப்பில் வந்து எம்மைத் தண்டிக்கின்றது என்று அறியாராய். துன்புறுக்கும் மேவலரை --- ஏவலாளாக நின்று துன்புறச்செய்யும் பகைவரை, நோவது என் --- வெறுப்பது எது கருதி?
பிறர் தம்மைத் துன்புறுத்துவது தாம் செய்த பழவினைப் பயனே என்றறிந்து அவரை நோவாதொழிதல் வேண்டும்.
ஏவலாள் ஊரும் சுடும் என்றது, தன்னால் ஏவப்பட்டானே தனது ஊரைக் கொளுத்துவான் என்பது கருதி. அதுபோலத் தன்னால் செய்யப்பட்ட வினையே தன்னை ஒறுக்கும் என்பதாம்.
பந்தித்த பாவங்கள் எம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே, வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நல் நெஞ்சமே. --- அப்பர் தேவாரம்.
இதன் பொழிப்புரை : வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது, வாழ்நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?
குற்றொருவரைக் கூறைகொண்டு
கொலைகள் சூழ்ந்த களவு எலாம்
செற்று ஒருவரைச் செய்த தீமைகள்
இம்மையே வரும் திண்ணமே,
மற்று ஒருவரைப் பற்று இலேன்,
மறவாது எழு மடநெஞ்சமே
புற்று அரவு உடைப் பெற்றம் ஏறி
புறம்பயம் தொழப் போதுமே. --- சுந்தரர் தேவாரம்.
இதன் பொழிப்புரை : அறியாமையுடைய மனமே, பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியால் குத்தி, அவர் உடையைப் பறித்து, மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும், முறையில் நிற்கும் ஒருவரை முறையின்றிப் பகைத்து, அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வரும் வரையில் நீட்டியாது இப்பிறவியிலேயே வந்து வருத்தும். இது திண்ணம். ஆதலின், அவை போல்வன நிகழாதிருத்தற்கு உன்னை அன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன். புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய, இடபவாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; அவனை நினைந்து புறப்படு .
முந்திச் செய்வினை இம்மைக் கண் நலிய
மூர்க்கனாகிக் கழிந்தன காலம்
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்
சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்
அந்தி வெண்பிறை சூடும் எம்மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய்
இடைமருது உறை எந்தை பிரானே. --- சுந்தரர் தேவாரம்.
இதன் பொழிப்புரை : மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடிய வனே , திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே! என் தந்தையே! திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே! முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின; நன்மை தீமைகளைச் சிந்தித்து, உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேன் ஆயினேன்; உலகியலிலும், இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியை வழங்கியருளாய்.
No comments:
Post a Comment