திருவாசகத் தேன், திருப்புகழ் அமுது.

 

பேரூர் முருகா! தீராப் பிணி தீர அருள்வாய்

-----

 

     மனிதர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுபவை தேனும் அமுதமும் ஆகும். தேன், தன்னை உண்டாரையும் காக்கும். தன்னில் விழுந்த பொருளையும் கெடாமல் காக்கும். அமுது என்பது எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர் இல்லை. உண்ணுகின்ற உணவையும், பருகுகின்ற நீரையும் அமுதம் என்று சொல்லுவர். உண்டவரின் உடல் நலத்தையும், அறிவையும் விளங்கச் செய்வது அமுது.

 

     வழிபாட்டுக்கு உரிய நூல்களில் தேன் என்று திருவாசகத்தையும், அமுது என்று திருப்புகழையும் மேலோர் கூறுவர். தன்னில் திளைத்து இருப்பவரையும், அவ்வப்போது ஓதுபவரையும் காப்பது திருவாசகம் என்னும் தேன். "தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி, அல்லல் அறுத்து, ஆனந்தம் ஆக்கியது" திருவாசகம் என்பர்.

 

     திருப்புகழானது அமுதமாக இருந்து உணர்வை வளர்ப்பதோடு, உயிருக்கு உண்டாகிய நோயையும் தீர்க்க வல்லது.

 

     அருணகிரிநாதப் பெருமான் பாடி அருளிய திருப்புகழ் இன்றைய சிந்தனைக்கு.

 

தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான

ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே.

 

பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே

பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

தீராப் பிணி தீர, சீவ ஆத் ...... தும ஞான

ஊராட்சி அது ஆன ஓர்வாக்கு ...... அருள்வாயே.

 

பாரோர்க்கு இறை சேயே! பாலாக் ...... கிரி ராசே!

பேரால் பெரியோனே! பேரூர்ப் ...... பெருமாளே!

 

இதன் பதவுரை ---

 

         பாரோர்க்கு இறை சேயே --- உலகத்தில் உள்ளவர்க்கெல்லாம் தலைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! பாலா --- என்றும் இளையவரே! கிரி ராசே --- மலைகளுக்கெல்லாம் அரசரே! பேரால் பெரியோனே --- புகழினால் எவரினும் மேம்பட்ட பெரியவரே! பேரூர்ப் பெருமாளே --- பேரூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

 

         தீராப் பிணி தீர --- தீராத நோயாகிய பிறவி நோய் தீரும் பொருட்டு, சீவ ஆத்தும ஞான --- உயிரை அறிந்து கொள்வதாகிய ஞானத்தை அடையும் பொருட்டு, ஊராட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே --- உலகமெங்கும்  ஆட்சியில் இருப்பதாகிய ஒப்பற்ற உபதேச அருள் வாக்கை அருள் புரிவீர்.

 

தீராப் பிணி குறித்துச் சிந்திப்போம்

 

     உலகிலே உள்ள எல்லா உயிர்களுக்கும் எக்காலும் நீங்காது தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று உள்ளன. அவைகளால் அல்லறல் பட்டு உயிர்கள் உழல்கின்றன. இந்த மூன்று நோய்களினின்றும் தப்பி உய்ந்தவர் மிகச் சிலரே.

 

     எல்லா உயிர்கட்கும் என்றும் துன்பத்தைத் தரும் அந்த நோய்கள் பசி, காமம், பிறவி என மூன்று ஆகும். பசி உடம்பைப் பற்றியது. காமம் உள்ளத்தைப் பற்றியது. பிறவி உயிரைப் பற்றியது.

 

பசிநோய் ---

 

     பசிநோய் செய்யும் கொடுமைகள் ஏழுத ஏட்டில் அடங்கா. சொல்ல உரையில் அடங்கா. பசி நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள்தாம் உலகில் இல்லை. விரத நாளிலும் கூட அப் பசிநோயைத் தாங்காமல் உணவை, பழம் பால் போன்ற வேறு வேறு உருவில் உட்செலுத்துகின்றனர். பசி நோய் வந்தபோது, நடந்து கூட போகாமல் பத்தும் பறந்து போகுமாம். மானம், குலம், கல்வி, வண்மை, பொருளுடைமை, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, வேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது பசிப்பிணியால்.

 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்.          

 

என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

 

     பசிநோயைத் தணிக்கத் தானே உயிர்கள் ஓயாது உழைக்கின்றன?  பசிநோய் மிகுந்த போது கண்ணொளி மங்குகின்றது. கைகால்கள் நடுக்கம் அடைகின்றன. ஏனைய கருவிகரணங்கள் தத்தம் செயல்களை இழக்கின்றன. நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில் மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையைக் கூட விற்கத் துணிகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர். சிலர் செயலை மறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.

 

     பசிநோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத் தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது எனக் கருதினர் சிறுத்தொண்டர் முதலான நாயன்மார்கள். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள். அவர் திருவுள்ளம் பசி என்று சொல்லக் கேட்ட உடனே நடுங்கும்.

 

எட்டரும் பொருளே! திருச்சிற்றம்பலத்தே

         இலகிய இறைவனே! உலகில்

பட்டினி உற்றார், பசித்தனர், களையால்

         பரதவிக்கின்றனர் என்றே,

ஒட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்

         உளம் பகீர்என நடுக்குற்றேன்;

இட்ட உவ்வுலகில் பசிஎனில், எந்தாய்!

         என்உளம் நடுங்குவது இயல்பே.          ---  திருவருட்பா.

 

     பசி எல்லாவற்றையும் அழிப்பதனால் தான் திருவள்ளுவ நாயனார், அதனை "அழிபசி" என்றார். 

 

"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புஉழி".     

 

     பசியைப் பொறுத்துக் கொள்ளுவதே பெரிய ஆற்றல் ஆகும்.  ஆயினும் அந்த ஆற்றலினும் பெரியது, அப் பசியை மாற்றுவார் ஆற்றல் ஆகும்.

 

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல், அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்".            

 

என்று அழகாகக் கூறுகின்றனர் திருவள்ளுவ நாயனார்.

 

     இறைவன் திருவடியைச் சரண்புகுந்தால், பசிநோய் முதலிய துன்பங்கள் சாரமாட்டா என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

மண்புகார், வான்புகுவர்,

         மனம்இளையார், பசியாலும்

கண்புகார், பிணிஅறியார்,

         கற்றாரும் கேட்டாரும்

விண்புகார் எனவேண்டா,

         வெண்மாட நெடுவீதித்

தண்புகார்ச் சாய்க்காட்டுஎம்

         தலைவன்தாள் சார்ந்தாரே.

 

இதன் பொருள் ---

 

     வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் திருவடிகளைச் சார்ந்து அவன் புகழைக் கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார்.

 

காம நோய் ---

 

     இக் காம நோயினால் கலங்காத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள எண்பத்து நான்கு நூறாயிர யோனிபோதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. அயிராவதம் என்னும் உயர்ந்த யானை மேல் பவனிவரும் இந்திரன், இதனால் பூனையாகிப் பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான். இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும் விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான். தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர் பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக உள்ள நல் மருந்து தருமபத்தினி. அவளுடன் அமையாது, புன்மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்று, பார்த்தவர் பரிகசிக்க, பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து, சன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல் மீளா நரகத்திற்கு ஆளாகின்றனர்.

 

"உடம்பினால் ஆயபயன் எல்லாம், உடம்பினில் வாழ்

உத்தமனைக் காணும் பொருட்டு".

 

என்பதனை அறியாமல், உடம்பையும் பாழ்படுத்துகின்றனர்.

 

காமத்துள் அழுந்தி நின்று

     கண்டரால் ஒறுப்புஉண் ணாதே

சாமத்து வேதம் ஆகி

     நின்றதுஓர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடை இராவும்

     ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளியது ஆகும்

     ஒற்றியூர் உடைய கோவே.    ---  அப்பர்.

 

இதன் பொருள் ---

 

     உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் .

 

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்து

ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறிமணி

ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவதோர்

தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.  ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக் கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

 

தீமை உள்ளன யாவையும் தந்திடும், சிறப்பும்

தோம்இல் செல்வமும் கெடுக்கும், நல் உணர்வினைத் தொலைக்கும்,

ஏம நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்

காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில்.   ---  கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     ஆராய்ந்து அறிந்தால், தீமைகள் என்று எவை எவை உள்ளனவோ, அவை அனைத்தையும் தருவதும், உயிருக்கு உள்ள சிறப்பையும் கெடுப்பதும், குற்றமற்ற செல்வத்தையும் கெடுப்பதும், நல்ல உணர்வுகைள அழிப்பதும், உயிர்களை, பாதுகாவலாக உள்ள நல்ல நெறியில் செல்லவிடாமல் தடுத்து, நரகத் துன்பத்தில் செலுத்தவதும் ஆகிய காமத்தை விட வேறு ஒரு பகை இந்த உலகத்தில் உள்ளதா? இல்லை.

 

 

ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையும்

காட்டியது இனையது ஓர் காமம் ஆதலின்,

வாட்டம்இல் புந்தியால் மற்று அந் நோயினை

வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்து உளார். --- கந்தபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     உயிரானது எடுத்து வந்த பலப்பல பிறவிகளையும், அப் பிறவிகள் தோறும் ஈட்டிய வினைகளையும் தருவதற்குக் காரணமாக அமைந்தது காமமே ஆகும். ஆகையால், அதனை மாற்றி, வீட்டின்பத்தை விரும்புவோர், மெலிவில்லாத தெளிந்த தமது அறிவினால், அத் துன்பத்தை அறுத்தவர்களே.

 

 

கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,

களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார் - பழியோடு

பாவம் இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்,

காமம் கதுவப்பட்டார்.               --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலைபுரியப் பயப்படார், பொய் சொல்லக் கூசார், தம் பெருமையையும் பாதுகாவார், களவு செய்தல் ஒன்றோ! அதற்கு மேலும் மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்,  இந்தக் காமம், பழியொடு பாவமாம் என்றும் நினையார், அங்ஙனமாயின் அவர் வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.

 

            திருவிளையாடல் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலத்தில் வரும் மூன்று பாடல்களைக் காண்போம்...

 

 அணங்குநோய் எவர்க்குஞ் செய்யும்

         அனங்கனால் அலைப்புண்டு, ஆவி

உணங்கினார் உள்ளம் செல்லும்

         இடன் அறிந்து ஓடிச் செல்லா

குணம் குலன் ஒழுக்கம் குன்றல்,

         கொலைபழி பாவம் பாரா,

இணங்கும் இன்னுயிர்க்கும் ஆங்கே

         இறுதி வந்து உறுவது எண்ணா.

                 

இதன் பொருள் ---

 

     யாவர்க்கும் காமநோயைச் செய்கின்ற மாரனாலே அலைக்கப்பட்டு, உயிர் சோர்ந்தவர்களின் உள்ளங்கள், செல்லும் செல்லுதற்குரிய இடத்தினை அறிந்து சென்று சேரா. குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும், கொலையும் பழி பாவங்களும் உண்டாதலையும் பார்க்கமாட்டா. பொருந்திய தம் இனிய உயிர்க்கும் அவ்விடத்தே அழிவு வருதலையும் எண்ணமாட்டா.

 

 

கள் உண்டல் காமம் என்ப

         கருத்து அறை போக்குச் செய்வ,

எள் உண்ட காமம் போல

         எண்ணினில் காணில் கேட்கில்

தள்ளுண்ட விடத்தின் நஞ்சந்

         தலைக்கொண்டால் என்ன ஆங்கே

உள் உண்ட வுணர்வு போக்காது

         உண்டபோது அழிக்கும் கள்ளூண்.               

             

இதன் பொருள் ---

 

     கள்ளுண்ணலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன. அவற்றுள் கள்ளுணவானது, இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினும் காணினும் கேட்கினும் தவறுதலுற்ற இடத்தினும், நஞ்சு தலைக்கு ஏறியது போல, அப்பொழுதே, உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது, உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.

         

காமமே கொலை கட்கு எல்லாம்

     காரணம்; கண் ஓடாத

காமமே களவுக்கு எல்லாம்

     காரணம்; கூற்றம் அஞ்சும்

காமமே கள் உண்டற்கும்

     காரணம்; ஆதலாலே

காமமே நரக பூமி

     காணியாக் கொடுப்பது என்றான்.

                 

இதன் பொருள் ---

 

     காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாய் உள்ளது; கண்ணோட்டமில்லாத காமமே களவு அனைத்திற்கும் காரணமாகும். கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும். ஆதலினாலே, காமம் ஒன்றே அவை அனைத்தாலும் நேரும் நரக பூமியைக் காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.

 

     இக் கொடிய காம நோயை அறவே அகற்றினவர்கள், 

பீஷ்மரும், அநுமரும், குமரகுருபரரும், சிவப்பிரகாசரும், அப்பர் பெருமானும் முதலான அருளாளர்கள். இறையடியார்களுக்கு இத் துன்பம் இல்லை.

 

     முருகப் பெருமானுடைய திருவடித் தியானத்தால், தான் காம நோயைக் கடந்ததாக அருணகிரிநாதர் பாடி அருளுகின்றார்.

 

கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்

படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்

தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.   ---  கந்தர் அலங்காரம்.

 

பிறவிப் பிணி ---

 

     இந்த நோய்தான் மிகக் கொடியது. இறைவன் என்றோ அன்றே உயிர்களும் உண்டு. அன்று தொட்டு இன்று வரை பிறவிநோய் தொடர்ந்து உயிர்களை வாட்டுகின்றது. முருகப் பெருமான் திருவடியே தீராத பிணியா, பிறவிப் பிணியைத் தீர்க்கவல்லது.

 

எண்ணிலாத நெடுங்காலம்

         எண்ணிலாத பலபிறவி

எடுத்தே இளைத்து இங்கு அவைநீங்கி

         இம்மானிடத்தில் வந்து உதித்து,

 

மண்ணில் வாழ்க்கை மெய்யாக

         மயங்கி உழன்றால்அடியேன்உன்

மாறாக் கருணை தரும்பாத

         வனசத் துணைஎன்று அடைவேனோ?

 

கண்ணின் மணியே உயிர்க் கனியே

         கருணைப் பயுலே சுகக் கடலே

கச்சித் தாய் உச்சியை மோந்து

         கண்ணோடு அணைக்கும் திருத்தாளா

 

புண்ணியோர் எண்ணிய கரும்பே

         பொழிமும் மதவாரண முகத்தோன்

பொற்புஆர் துணையே அற்புதனே

         போரூர் முருகப் பெருமாளே.  ---  திருப்போரூர்ச் சந்நிதி முறை.

 

     முருகப் பெருமான் பவரோக வயித்திய நாதர் என்பதை, "பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி, படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே! பதியான திருத்தணி மேவு சிவலோகம் எனப்பரி வேறு பவரோக வயித்திய நாதப் பெருமாளே" என்று திருத்தணிகைத் திருப்புகழில் போற்றி உள்ளது அறிக.

 

     எனவே, முருகப் பெருமானின் திருநாமத்தை செபித்து, அவரை வணங்கி வழிபட்டு, உடல்பிணியாகிய பசியையும், உள்ளப் பிணியாகிய காமப் பிணியையும், உயிர்ப் பிணி ஆகிய பிறவி நோயையும் மாற்றுதல் கூடும் என அடிகளார் இத் திருப்புகழில் அறிவுறுத்துகின்றார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...