நல்வினையும் தீவினையும்

 

 

நல்வினையும், தீவினையும்

-----

 

இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது,

முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது.

இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்

அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே.

 

என்பது நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்.

 

     இறைவன் உயிர்களுக்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்த வினைகள் அறமும், பாவமும் என இரண்டாய் இருத்தல் பற்றியே ஆகும். முற்பிறப்பில் அறம் செய்தவர்கள், இப்பிறப்பில் இன்பத்தை அனுபவிப்பார்கள். தீவினை புரிந்தவர்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள். ஒருவர் இன்பமாக வாழுகின்றார் என்றால், அது அவர் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தின் பயனாகத் தான் இருக்கும். துன்பத்தை அனுபவிக்கின்றார் என்றால், அது அவர் முற்பிறவியில் செய்த பாவச் செயல்களின் பயனாகத் தான் இருக்கும். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

 

     முற்பிறவியில் தான் பெற்ற செல்வத்தைக் கொண்டு பிறர்க்குக் கொடுத்து உதவிய நல்வினையை உடையவர்கள், அதன் பயனாக, இப் பிறவியில் இன்பத்தை நுகர்தலைக் கண்டுவைத்தும், இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே ஆவர். அவர் அறம் என்பதையும் அறியார். தன்னிடத்தில் உள்ளதை அறவழியில் செலவழித்து, புண்ணியத்தைத் தேடிக் கொள்ளும் அறிவு இல்லாதவர்கள், பிறரிடம் உள்ளதையும் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்று எண்ணி பாவச் செயல்களையே புரிந்து வருவர்.

 

     அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில், இல்லறம், துறவறம் ஆகிய இரு இயல்களின் வழி, இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார், அறத்தின் வழிப் பொருள் செய்து, இன்பத்தை நுகரும் முறையினைக் கூறத் தொடங்கி, பொருள் இன்பங்களின் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை, "ஊழ்" என்னும் அதிகாரத்தில் அருளிச் செய்கின்றார்.

 

     நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை "ஊழ்" என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.

 

     இந்த ஊழ், பொருள் இன்பம் இரண்டினுக்கும் பொதுவாக நிற்பதாலும், இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும், அறத்துப்பாலின் இறுதியில் வைத்துக் கூறினார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "ஒருவனுக்குக் கைப்பொருள் ஆவதற்குக் காரணமாகிய ஆகூழ் என்னும் நல்வினையால் முயற்சியானது தோன்றும். போகூழ் என்னும் அழிதற்குக் காரணமாகிய தீவினையால் சோம்பல் உண்டாகும்" என்கின்றார் நாயனார். 

 

     அசைவு, மடி --- சோம்பல்.

 

     ஊழானது, பொருளினது ஆக்க அழிவுகளுக்குத் துணைக் காரணமாகிய முயற்சி சோம்பல்களைத் தானே தோன்றச் செய்யும் என்பதை அறிவுறுத்த,

 

 

ஆகுஊழால் தோன்றும் அசைவு இன்மை, கைப்பொருள்

போகுஊழால் தோன்றும் மடி.

 

என்று அருளிச் செய்தார் நாயனார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

 

எண்ணி ஒருகருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது

புண்ணியம் வந்து எய்து போது அல்லால், --- கண் இல்லான்

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே,

ஆங்காலம் ஆகும் அவர்க்கு.          ---  நல்வழி.

 

இதன் பதவுரை ---

 

     யார்க்கும் --- எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் --- (முன் செய்த) புண்ணியம் வந்து கூடும் பொழுது அல்லாமல், ஒரு கருமம் --- ஒரு காரியத்தை, எண்ணி --- ஆலோசித்து, செய்ய ஒண்ணாது --- செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான் --- குருடன், மாங்காய் விழ --- மாங்காயை விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் --- எறிந்த மாத்திரைக்கோலைப் போல் ஆகும்; ஆம் காலம் --- புண்ணியம் வந்து கூடும் பொழுது, அவர்க்கு ஆகும் --- அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.

 

         புண்ணியம் இல்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன். மாத்திரை - அளவு. குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பான்.

 

 

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்,

போகும் பொறியார் புரிவும் பயன் இன்றே,

ஏகல் மலைநாட! என்செய்து ஆங்கு என்பெறினும்

ஆகாதார்க்கு ஆகுவது இல்.          ---  பழமொழி நானூறு.

 

இதன் பதவுரை ---

 

     ஏகல் மலை நாட --- உயர்ச்சியை உடைய மலை நாடனே!, ஆகும் சமயத்தார்க்கு --- செல்வம் ஆக்கும் ஆகூழ் என்னும் நல்வினை அல்லது புண்ணியம் வந்து எய்தும் காலம் நெருங்கியவர்களுக்கு, ஆள்வினையும் வேண்டா --- செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை; போகும் பொறியார் --- செல்வம் போக்கும் போகூழ் என்னும் தீவினை அல்லது பாவம் வந்து எய்தும் காலம் நெருங்கியவர்களுக்கு, புரிவும் பயன் இன்று --- அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை; என் செய்து என் பெறினும் --- எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும், ஆகாதார்க்கு --- செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு, ஆகுவது இல் --- ஆவதொன்றில்லை.

 

         ஆகூழ் என்னும் நல்வினை நெருங்கியார்க்கு முயற்சி வேண்டா; போகூழ் என்னும் தீவினை நெருங்கியார்க்கு முயற்சி வேண்டா; போகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா; ஆகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா.

 

     ஊழ் நன்மை தீமைகளை ஊட்டுவது ஒவ்வொருவனது செயல் வாயிலாகவே எனினும், காலம் மிக நெருங்கிய வழி அவனது செயலை அல்லது முயற்சியை எதிர்பாராது பிறரது செயல் வாயிலாக ஊட்டும் என்பதாம். ஆகவே ஆகூழ் மிக நெருங்கப் பெற்றானுக்கு முயற்சியால் வருந் துன்பமும் இன்றி வரும் என்பார், "ஆள்வினையும் வேண்டா" என்றார். உடம்பு செய்த வினைக்குக் காரியமாயும் மேல்வரும் பிறப்புக்களுக்குரிய வினைகளை இருந்து ஆற்றுதலின் கருத்தாவுமாயும் இருத்தல்போல ஊழ், வினையது காரியமாயும், அதனை உடையானிடத்துச் செலுத்தும் தொழிலில் கருத்தாவுமாயும் இருப்பது. வினையும் ஊழும் கருத்தா காரிய சம்பந்தமுடையன.

 

 

வழங்கார், வலியிலார் வாய்ச்சொல்லும் பொல்லார்,

உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,

இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார்

பழஞ்செய்போர் பின்று விடல்.     ---  பழமொழி நானூறு.

 

இதன் பதவுரை ---

 

     வழங்கார் --- (உணவிற்கு ஒன்றும் இன்மையால் பசியால் வருந்தி இரந்தார்க்கு) அவர்க்கு வேண்டிய உணவினைக் கொடாராய், வலியில்லார் வாய்ச்சொல்லும் பொல்லார் --- கொடுக்கும் ஆற்றல் இல்லாதவராதலின் சொல்லும் சொற்களாலும் தீயவர்களாய், உழந்து --- வருந்தியாகிலும், ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார் --- ஒருவர்க்கு ஓர் இடர் வந்து உற்ற காலத்தில் உதவிசெய்து அதனை நீக்குதலும் செய்யாதவராகிய, இன்னார் --- இத்தன்மையினை உடையவர்கள், இழந்தது இல் செல்வம் பெறுதலும் --- கெடுதலில்லாத செல்வத்தைப் பெற்றிருத்தலும், பழஞ்செய் --- நெடுநாட்களாக எரு முதலிய உரம் பெற்றுவந்த வயல், இன்று --- உரம் பெறாத இப்பொழுது, போர்பு விடல் --- போர் இடுமாறு கதிர்கள் விடுதலை ஒக்கும்.

 

     கொடுக்கும் ஆற்றல் இல்லாதவர்களாதலின் அதற்கேற்றவாறு சொற்களும் கடியவாயின. இரந்தார்க்கு வழங்கலும், இனிய கூறுதலும், உற்றுழி ஒன்று உதவலும் ஒருவன் செல்வம் பெறுதற்குரிய காரணங்களாம்.

 

 

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

பொருந்துவன போமின் என்றால் போகா,-இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.         --- நல்வழி.

 

இதன் பதவுரை ---

 

     வாராத --- (ஊழால்) வரக் கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் --- பரிந்து அழைப்பினும், வாரா --- வாராவாம்; பொருந்துவன --- (ஊழால்) வரக் கூடியவை, போமின் என்றால் --- போயிடுங்கள் என வெறுப்பினும், போகா --- போகாவாம்; இருந்து ஏங்கி --- (இவ்வுண்மை அறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக --- மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து --- (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே --- மாண்டு போவதே, மாந்தர் தொழில் --- மனிதர் தொழிலாக வுள்ளது.

 

         இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கதல்ல.

 

 

ஆங்காலம் மெய்வருந்த வேண்டாம், அஃது ஏது என்னில்,

தேங்காய்க்கு இளநீர்போல் சேருமே --- போங்காலம்

காட்டு ஆனை உண்ட கனியதுபோல் ஆகுமே

தாட்டாளன் தேடும் தனம்.          --- தனிப்பாடல்.

 

இதன் பொருள் ---

 

     செல்வம் ஆகிவருகின்ற காலத்திலே உடல் வருந்தும்படி உழைக்கக் கூட வேண்டாம். அது எதனால் என்றால் தேங்காய்க்கு இளநீர் அமைவதுபோல, அதுவும் தானே வந்து சேரும். செல்வம் போகின்ற காலம் வந்தால், முயற்சியாளன் உழைத்துத் தேடிய செல்வமுங்கூடக் காட்டு யானை உண்ட விளாங்கனிப் போலப் போய்விடும்.

 

 

புண்ணிய நறு நெய்யில், பொரு இல் காலம் ஆம்

திண்ணிய திரியினில், விதி என் தீயினில்,

எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்,

அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ? ---  கம்பராமாயணம், திருவடி சூட்டு படலம்.

 

இதன் பதவுரை ---

 

     அண்ணலே! --- தலைமை பொருந்தியவனே!; புண்ணிய நறுநெய்யில் --- புண்ணியம் என்கின்ற நல்ல நெய்யில்; பொரு இல் --- ஒப்பற்ற; காலம் ஆம் திண்ணிய திரியினில் --- காலமாகிய வலிய திரியில்;  விதி என் தீயினில் --- விதி என்கின்ற நெருப்பினால்; எண்ணிய --- கருத்தோடு ஏற்றப்பெற்ற; விளக்கு --- உயிர் வாழ்க்கை என்கிற தீபம்; அவை இரண்டும் எஞ்சினால் --- (நெய்யும் திரியுமாகிய) புண்ணியமும் விதியும் ஒழிந்தால்; அவிவதற்கு --- அணைந்து போவதற்கு; ஐயம் ---சந்தேகம்; யாவதோ? --- ஏனோ? (இல்லை என்றபடி).

 

     தசரதன் இறந்த செய்தியை பரதன் சொல்லக் கேட்ட இராமபிரான் தளர்ச்சி உற்றுப் புலம்புகின்றார். வசிட்ட முனிவர், மரணத்தின் தன்மையைக் கூறி இராமபிரானைத் தேற்றுகின்றார். நல்வினையும் விதியும் முடிந்தபொழுது உயிர்வாழ்க்கை முடிந்து போகும். காலம் என்னும் திரியானது, விதி என்னும் நெருப்பில் கரைந்து எரிந்து போகும். புண்ணியம் அனுபவித்து வற்றும். உயிர் உடலைப் பிரியும்.  இது இயற்கை நியதி என்றார்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...