அன்பின் மிகுதியால் கண்ணீரும் பாலும் வெளிப்படும்

 

 

அன்பு கண்ணீரால் வெளிப்படும், இல்லாத பாலும் சுரக்கும்

-----

        திருக்குறளில் "அன்புடைமை" என்னும் ஓர் அதிகாரம். இல்வாழ்க்கைத் துணை ஆகிய மனைவியும், இல்வாழ்க்கையின் நல்கலமான புதல்வரும் முதலாகிய சம்பந்தம் உடையவர் இடத்திலே அன்பு உடையவனாய் இருத்தல் வேண்டும் என்பது நாயனாரால் இவ்வதிகாரத்தில் காட்டப்பட்டது.

 

     இல்லற இயலில்,  "இல்வாழ்க்கை" என்னும் ஓர் அதிகாரத்தை முதலில் சொன்ன நாயனார், அடுத்த அதிகாரமாக, அந்த இல்வாழ்க்கை இனிது நடத்துவதற்கு இன்றியமையாத துணை ஆகிய மனையாளின் சிறப்பை, "வாழ்க்கைத் துணைநலம்" அதற்கடுத்த அதிகாரத்தில் சொன்ன நாயனார், மூன்றாவதாக, இல்வாழ்க்கையின் பயனாக நன்மக்களைப் பெறுதல் பற்றி, "மக்கள்பேறு" என்னும் அதிகாரத்தைச் சொன்னார். மனைவியிடத்தும், மக்களிடத்தும், இல்வாழ்வான் செலுத்த வேண்டிய அன்பின் சிறப்பை "அன்புடைமை" என்னும் அதிகாரத்தில் எடுத்துக் கூறுகின்றார்.

 

     (பேறு என்றால், "அடையத்தக்கது", "பாக்கியம்", "செல்வம்" என்று பொருள் உள்ளதால், "மக்கட்பேறு" என்பதே பொருத்தமான அதிகார் தலைப்பு ஆகும். இவ்வாறு இருக்க, சிலர் "புதல்வரைப் பெறுதல்" என்று தலைப்பிட்டிருப்பது பொருத்தமற்றதாகும்)

 

     இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆதலால், இது இல்லறத்தானுக்கு இன்றியமையாதது ஆகின்றது.

 

     வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் மேல் அன்பு இல்லாத வழி, இல்லறம் இனிது நடக்காது. அன்பினால் அருள் உண்டாகும். தொடர்பு உடையவரிடத்திலேயே அன்பு செலுத்த அறியாதவன், பின்னர் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது அரிதாகும். அரிது என்பது இன்மைப் பொருட்கண் வந்தது எனப் பரிமேலழகர் உரை கண்டுள்ளதை அறிக.

 

     மாதவியின்பால் காமம் கொண்டு, தன்னைப் பிரிந்து சென்ற தனது கணவனாகிய கோவலன் மீண்டு தன்னிடம் வந்த போது, கண்ணகி கோவலனைப் பார்த்துக் கூறி வருந்தியது இல்லற இன்பத்தைக் கணவன் இல்லாமையால் இழந்தது குறித்து அல்ல. இல்லறத்தின் இனிய பண்புகள் ஆன, அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஒம்புதல், துறவோரை எதிர்தல், தொன்மை மிகுந்த சிறப்பினை உடையதாகிய விருந்து ஓம்பல் ஆகியவற்றைக் கணவனுடன் இருந்து செய்ய முடியாமல், அவற்றை எல்லாம் இழந்ததாகக் கூறுவாள்.

 

"வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்

பொச்சாப்பு உண்டு பொருள் உரையாளர்

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி உண்டோ?

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்,

சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்,

வழு எனும் பாரேன், மாநகர் மருங்கு ஈண்டு

எழுக என எழுந்தாய், என்செய்தனை என...

 

இது கோவலன் கூற்று......

        

இதன் பொருள் ---

 

     பயனில்லாத சொற்களைச் சொல்வாரோடும், புதிய பரத்தமையை உடையாரோடும் கூடி, சிறு சொல் சொல்லும் இழிந்தோர் கூட்டத்தின்கண் மிக்க சிரிப்புக்கு உட்பட்டு, இல்வாழ்க்கையின் சிறப்பினை மறந்து, பொருள் பொதிந்த உரையினை உடைய பெரியோர் விரும்புகின்ற நல்லொழுக்கத்தினைக் கெடுத்த எனக்கு, இனித் தீக் கதியன்றி நற்கதி உண்டாமோ? தாய்தந்தையர்க்கு ஏவல் செய்தலினும் வழுவினேன். சிறு பருவத்திலேயே பெரிய அறிவினை உடையவளாகிய உனக்கும் தீமை செய்தேன். இங்ஙனம் நாம் வாழ்ந்திருந்த புகார் நகரை விட்டு இங்கு வருதல் குற்றம் என்பதனைச் சிறிதும் நோக்காதவனாய், நாம் வாழ்ந்திருந்த பெரிய நகரத்தை விட்டு, இங்குப் போகலாம் என்ற நான் கூறவும், எனது கருத்திற்கு ஒருப்பட்டு உடனே என்னோடு வந்தனை. என்ன அரிய காரியம் செய்தாய்? (என்று கோவலன் இரங்கிக் கூற)

 

     சிறிய பருவத்ததிலேயே பெரிய அறிவினை உடையவள் என்று தனது இல்லக் கிழத்தியைப் பார்த்து கோவலன், அவளது அருமையை வியந்து கூறுவது அறிந்து இன்புறத்தக்கது. இல்லாளை மதித்தல் வேண்டும் என்பது இதனால் தெளிவாக்கப்பட்டது.

 

"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்து எதிர் கோடலும் இழந்த என்னை, நும்

பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்

 

மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்

முந்தை நில்லா முனிவு இகந்தனனா,

அற்பு உளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ,

எற்பா ராட்ட யான் அகத்து ஒளித்த

நோயும் துன்பமும் நொடிவது போலும் என்

 

வாய்அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த,

போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும்

மாற்றா உள்ள வாழ்க்கையேன், தலின்

ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற.....

        

இது கண்ணகி கூற்று....

 

இதன் பொருள் ---

 

     அறநெறியில் ஒழுகுபவர்க்குக் கொடுத்தலும், அந்தணரைப் பேணுதலும், துறவிகளை எதிர்க்கொள்ளுதலும்,  மேலையோர் உயர்த்துக் கூறும் சிறப்பினை உடைய விருந்தினரை எதிர்கொள்ளுதலும் ஆகிய இவற்றை (உமது பிரிவால்) இழந்த என்னை, உமது தாயோடு, பெரிய புகழினையும் தலையாய முயற்சியினையும் உடைய மன்னரது பெருமை மிக்க சிறப்பினையும் உடைய உமது தந்தையாகிய மாசாத்துவானையும் கண்டு (அர்கள் மனம் வருந்துமே என்று எண்ணி) நீர் என்னோடு இல்லாமையால் உண்டான வருத்தம் தோன்றாத வகை நான் இருந்ததை உணர்ந்த அவர்கள் உள்ளத்தில் மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்த மொழிகளைக் கலந்து என்னைப் பாராட்டினார்கள். நான் எனது உள்ளத்தில் மறைத்த வைத்த மனக்கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற, எனது உண்மையல்லாப் புன்சிரிப்பினைக் கண்டு, அவர்கள் உள்ளம் வருந்தும் வண்ணம், நீர் பெரியோர் வெறுக்கும் தீய ஒழுக்கத்தினை விரும்பினீர். இருந்தும் உமது சொல்லைச் சிறிதும் மறுக்காமல் வாழும் வாழ்க்கையை நான் விரும்பினதால், நீர் கூறியதற்கு உடன்பட்டு, இங்கு உம்மோடு வந்தேன் (என்று கண்ணகி கூற)

 

 

குடிமுதல் சுற்றமும், குற்று இளையோரும்,

அடியோர் பாங்கும், ஆயமும் நீங்கி;

நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும்

பேணிய கற்பும், பெருந்துணை யாக,

என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!

நாணின் பாவாய்! நீணில விளக்கே!

கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!

சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு, யான்போய்

மாறி வருவன் மயங்காது ஒழிக என.....

        

இது கோவலன் கூற்று....

 

இதன் பொருள் ---

      

     குடிக்கு முதல் சுற்றமாய் விளங்கும் தாய் தந்தை முதலியோரையும், குற்றேவல் புரியும் மகளிரையும், அடியார் கூட்டத்தையும், கூடி மகிழ்ந்து குலவி இருந்த தோழிமாரையும் விட்டு விலகி, பெண்களுக்கே உரித்தான நாணம், மடம், நல்லோர்களது போற்றுதலையும் விரும்பிய கற்பு, பெருமை ஆகிய பண்புகளையே மிக்க துணையாகக் கொண்டு, இவ்விடத்து என்னோடு வந்து என் துன்பத்தினைக் கெடுத்த பொன்னே! கொடி போன்றவளே! அழகிய மலர்மாலையை ஒத்தவளே! நாணினையுடைய பாவையே! பெரிய இவ்வுலகிற்கு விளக்கமாக அமைந்தவளே! கற்புக்குக் கொழுந்தே! அழகின் செல்வியே!  

உனது சிறிய காலடிக்கு அணியாக இருந்து சிலம்புகளுள் ஒன்றினை நான் கொண்டு சென்று விற்று வருவேன். (என்று கோவலன் கூறிச் சென்றான்)

 

     இங்கு ஒன்றைச் சிந்திக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் பின்னர், ஆடவன் எந்த வித்ததிலும் அவனுக்கு உரிய முதற்குரவர்களாகிய தாய்தந்தை, மற்ற சுற்றத்தார், மற்ற மற்ற உறவினர், நண்பர்கள் என்று யாரையும் பிரியவேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்கு முன்பு வரை அவன் அனுபவித்து வந்த எல்லாம் அவனிடத்தில் நீங்காமல் உள்ளன. ஆனால், திருமணம் புரிந்துகொண்ட பெண் ஆனவள், தான் தனது தாய்தந்தையர் முதலான சுற்றத்தாரையும், உறவுகளையும், தோழிகளையும், அதுவரை தாய் வீட்டில் அனுபவித்து வந்த எல்லாவற்றையும் துறந்து, முற்றிலும் தனக்குப் பழக்கம் இல்லாத ஒரு சூழல் கொண்ட புகுந்த வீட்டிற்கு வந்து, தன்னை ஆட்படுத்திக்கொண்டு, இல்லறத்தை மேற்கொள்ளுகின்றாள். எல்லாவற்றையும் விட்டு, தன்னை வந்து சேர்ந்த இல்லாளுக்கு எல்லாமாக இருந்து, அவளிடத்தில் அன்பு காட்டுவது கணவனின் இன்றியமையாத கடமை ஆகின்றது. எனவேதான், வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் மேல் அன்பு இல்லாத வழி, இல்லறம் இனிது நடக்காது என்றார் பரிமேலழகர்.

 

     இவை எல்லாம் இல்லறத்தின் சிறப்பை இனிதே எடுத்து விளக்குவனவாக அமைந்தவை. உயிர்கள் பால் அருள் பிறப்பது அன்பின் பயன் என்பதை நாயனார், "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றும் தெளிவுபடுத்தினதும் காண்க.

 

     இனி, இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "அன்பினுக்குப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரது துன்பத்தைக் கண்ட போதே, அன்புடையார் கண்ணில் இருந்து வெளிவரும் கண்ணீர்த் துளியே அவர் உள்ளத்தில் இருக்கின்ற அன்பினை எல்லாரும் அறிய வெளிப்படுத்தும்" என்கின்றார் நாயனார்.

 

     அன்பு உள்ளது என்பதைப் பிரத்தியட்சமாக (கண்கூடாக) உணர முடியாது. அனுமானப் பிரமாணத்தால் உணர முடியும். அனுமானமாவது, இராமன் இலக்குவனிடத்தில் அன்பு உடையான் என்னும்போது, இலக்குவனது துன்பம் வந்த இடத்து, இராமனது கண்களில் நீர் வரும் என்றது போல.

 

     அன்பின் ஐந்திணை என்னும் சூத்திர உரையில், "அன்பு என்பது அருளுக்கு உருவாகி மனத்தில் நிகழும் நேயம். அஃது உடையார்க்குப் பிறன்கண் துன்பம் கண்டவழி, கண்ணீர் விழும். ஆகலின், அவ்வருளாலே அன்புடைமை என்பது விளங்கும்.  இவை எல்லாம் தத்தம் மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு" என்று நச்சினார்க்கு இனியர் கூறி இருப்பதும் காண்க.

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     திருக்குறளுக்கு விளக்கமாக இறைவன் திருவருளால் வந்த நால்களுள், கமலை வெள்ளியம்பலவாண முனிவர் இயற்றிய "முதுமொழி மேல் வைப்பு" என்பதும் ஒன்று. அதில், ஒப்பில்லாத அன்பு உடைய திருக் கண்ணப்ப நாயனாரை வைத்துப் பாடிய பாடல் ஒன்று இதோ.....

 

கண்ணுதலோன் கண்நோவு கண்டஅளவில், கண்ணப்பன்

கண்ணில் நீர் சோரக் கதறுமால், ---  உள்நெகிழும்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.                         

 

         கண்ணுதலோன் என்றது காளத்தி நாதரான சிவபெருமானை. கண்ணப்ப நாயானாரது மெய்யன்பு இத் திருக்குறளுக்கு ஏற்ற உதாரணமாகும்.

 

     செயற்கு அரும் செயலைச் செய்து இறைவன் அருளை ஆறு நாட்களிலேயே பெற்றவர் கண்ணப்ப நாயனார் என்பதால், "தொண்டு செய்து நாள் ஆறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லன்" என்றார் பட்டினத்து அடிகள். "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்" என்று நாயனாரைச் சிறப்பித்தார் மணிவாசகனார்.

 

     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்களில் மற்றொன்று, மாதவச் சிவஞான யோகிகள் அருளிய "சோமேசர் முதுமோழி வெண்பா" ஆகும். இத் திருக்குறளுக்கு விளக்கமாக இந்நூலில் அமைந்த பாடல் ஒன்று....

                                                              

 

தோன்றா வகைகரந்தும் தோன்றலைக் கண்டு உள்நெகிழ்ந்து

தோன்ற நின்றான் முன்புநளன், சோமேசா! ---தோன்றுகின்ற

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

 

இதன் பொருள் ---

 

         சோமேசா! தோன்றுகின்ற --- மனத்தில் உண்டாகின்ற, அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ --- அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கின்ற தாழக்கோல் உள்ளதாமோ?,   ஆர்வலர் --- தம்மால் அன்பு செய்யப்பட்டவரது துன்பம் கண்டவிடத்து அன்புடையார்,  புன்கணீர் பூசல் தரும் --- கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்ளத்தில் நிலைபெற்று இருக்கும் அன்பினை எல்லோரும் அறியத் தூற்றும் ஆதலான், முன்பு --- முற்காலத்தில், நளன் --- நளச்சக்கரவர்த்தி, தோன்றா வகை கரந்தும் --- தான் இன்னான் என்று பிறர்க்குத் தெரியாது இருக்கும்படி மறைந்து இருந்தும், தோன்றலைக் கண்டு --- தன் மகனைக் கண்ட அளவில்,  உள் நெகிழ்ந்து --- உள்ளம் நெக்கு உருகி,  தோன்ற நின்றான் --- தான் இன்னான் என்று பிறருக்கு விளங்கும்படி கண்ணீர் பெருக்கி நின்றான்.

 

         நிடத தேசத்தில் மாவிந்த நகரத்தில் அரசாண்ட நளச்சக்கரவர்த்தி, விதர்ப்ப தேசத்துக் குண்டினபுரத்தில் அரசு புரிந்த வீமராசனது மகளாகிய தமயந்தியை மணந்து இந்திரசேனன், இந்திரசேனை என்னும் இரண்டு மக்களைப் பெற்று இனிது வாழ்ந்திருந்த காலையில், கலிபுருஷன் பற்றப் புஷ்கரனொடு சூதாடி, யாவும் இழந்து, வனம் புகுந்து, தன் மக்களை ஓர் அந்தணனைக் கொண்டு வீமனிடம் சேர்ப்பித்து, ஒரு கடுங்காடு சென்று நள்ளிரவில் உறங்கும்போது மனைவியைத் தனிக்க விட்டு அகன்றான். வழியில் கார்க்கோடகன் என்னும் மாநாகத்தால் கடிக்கப்பட்டு உருக் குலைந்து வாகுகன் என்னும் பெயரோடு அயோத்தி புகுந்து, இருதுபர்ண ராசனுக்குத் தேர்ப்பாகனாய் அமர்ந்தான். அது நிற்க, தன்னந் தனியாய் வருந்தித் தந்தையை அடைந்த தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விட, அவன் எங்கெங்கும் தேடி அயோத்தி சேர்ந்து தேர்ப் பாகனைக் கண்டு அவன் மொழிகளால் அவன் நளன்தான் என்று அறிந்து, மீண்டு தமயந்தியினிடம் அச்செய்தி கூற, அந்தப் பாகனை வரவழைத்தற்கு ஓர் உபாயமாகத் "தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம்" என்று இருதுபர்ணனுக்குத் தெரிவிக்க, ஆசையோடு சுயம்வரத்திற்கு வந்த இருதுபர்ணனுக்குத் தேர் செலுத்திக் கொண்டு வாகுகன் குண்டினபுரம் சேர்ந்தான். அவ்வாறு சேர்ந்த பாகன் நளன்தானோ என்று துணிதற்குத் தமயந்தி தன் தோழி ஒருத்தியொடு கூட்டித் தன் மக்களை அவன் எதிரில் விளையாட விட, அம் மக்களைப் பார்த்த அளவில் வாகுகன் அன்பால் மனமுடைந்து உருகி, அடக்கமாட்டாது கண்ணீர் பெருக்க அதனால் அவனே நளன் என்று துணிந்தாள். 

 

"மக்களைமுன் காணா, மனநடுங்கா, வெய்து உயிராப்,

புக்கு எடுத்து வீரப் புயத்து அணையா, - மகக்காணீர்,

என்மக்கள் போல்கின்றீர், யார்மக்கள்? என்றுஉரைத்தான்

வன்மக் களியானை மன்", 

 

"ஆங்கவர் சொன்ன உரைகேட்டு அழிவு எய்தி,

நீங்கா உயிரோடு நின்றிட்டான் - பூங்காவில்,

வள்ளம்போல் கோங்கு மலரும் திருநாடன்

உள்ளம்போல் கண்ணீர் உகுத்து".

 

என்னும் நளவெண்பாப் பாக்கள் காண்க.

 

     உள்ளத்தில் நிகழும் உணர்ச்சிகள் உடலில் வெளிப்பட்டுத் தோன்றும். உணர்ச்சி என்பது உயிர்ப் பண்பு ஆகும். உயிருக்குச் சிறந்த பண்பு அன்பே ஆகும். எனவேதான், "அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு என்பது பண்பு. அறம் என்பது அன்பின் பயனாக விளைவது. இதில், தாயன்பே மிக உயர்ந்த அன்பாகும். அந்த அன்பின் வெளிப்பாடு முலைப்பால் சுரப்பது. குழந்தைக்குப் பசிக்குமே என்னும் உணர்வு தோன்றியவுடன் பால் சுரக்கும். பிள்ளையின் இயல்பைக் கேட்டதும் முலை சுரத்தல் தலை அன்பு. பிள்ளையைக் கண்டதும் முலை சுரத்தல் இடை அன்பு. அழுதல் கண்டு பிறர் தூண்ட முலை சுரத்தல்

கடை அன்பு. குழந்தைப் பருவத்தில் தனது மகனோ, மகளோ உள்ளபோது தாய்க்குப் பால் சுரக்கும். பின்னர் வற்றிப் போகும். இதுதான் இயல்பாகக் காணப்படுவது.

 

     ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்புக்கு ஈடு இணை சொல்ல முடியாது. அவ்வன்பு வெளிப்படாது அருவமாய் நிற்கின்றது. ஆகவே அவ்வன்பின் நிலையைப் பிறர் அறிதல் இயலாது. அவ்வன்பு பிறர் அறியுமாறு வெளிப்படுகின்ற காலம் உண்டு. அக் குழந்தை பசியால் வருந்தி அழும் காலத்தில் அத் தாய் பால் சுரந்து ஊட்டி அதன் பசியைத் தீர்க்கின்றாள்.  அந்தக் குழந்தை நோயுற்று நலிந்த காலத்தில் அவள் துன்பக் கண்ணீர் வடிக்கின்றாள். பாலும் கண்ணீரும் குழந்தையின் மீது அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடே எனலாம். அவ்வன்பு முன்பு புலப்படாததாய் நின்று, பின்பு பால், கண்ணீர் என்னும் இவற்றின் வடிவில் வெளிப்படுவதாயிற்று. அதுபோல, இறைவன் உயிரின்கண் சிறிதும் புலப்படாமல் மறைந்திருந்து பின் குரு வடிவில் வெளிப்படுகின்றான்.

 

     பெண் ஒருத்திக்குத் தன் குழந்தையிடத்துக் கொண்டுள்ள அன்பு வெளிப்படையாகத் தெரியாது. என்றாலும் அந்த அன்பின் காரணமாக அவளிடத்தில் உண்டாகும் முலைப்பாலும், கண்ணீரும் வெளிக்காட்டும். அவ்வாறு வெளிக்காட்டும் முலைப்பாலும், கண்ணீரும் குழந்தையைக் காண்பதற்கு முன் இல்லாமல், கண்டதும் உண்டாவதும் இயல்பே ஆகும்.

 

"இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்,

நல்லாய்! உளவாமால்; நீர் நிழல்போல் - இல்லா

அருவாகி நின்றானை யார் அறிவார் தானே

உருவாகித் தோன்றானேல் உற்று".

 

என்பது சிவஞானபோத எடுத்துக்காட்டு வெண்பா.

 

     மதுரையில் வாழ்ந்திருந்த மங்கையர்க்கரசியார், திருஞானசம்பந்தரின் அருமை பெருமைகளைப் பிறர் கூறக் கேட்டார். தாய்மைப் பேற்றை அடைந்திராத அந்த அம்மையாருக்கு, திருஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிக் கூறக் கேட்டபோதே பால் சுரந்தது.

 

இலைபடர்ந்த பொய்கை இடத்து அழுதல் கண்டு

முலைசுரந்த அன்னையோ முன்நின் ---  நிலைவிளம்பக்

கொங்கை சுரந்த அருள்  கோமகளோ சம்பந்தா

இங்கு உயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு.

 

     இது நால்வர் நான்மணிமாலை என்னும் நூலில் வரும் ஒரு பாடல். திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அமைந்த தாயர்கள் மூவர். பெற்றெடுத்த தாயாக விளங்கியவர் பகவதி அம்மையார். பிரமதீர்த்தக் குளக்கரையில், அழுதபோது, சிவபெருமான் பணிக்க, பால் சுரந்து அளித்தவர் உமாதேவியார். இவர்கள் இருவரும் திருஞானசம்பந்தரைக் கண்டவர்கள். ஆனால், திருஞானசம்பந்தர் எப்படி இருப்பார் என்பதைக் கண்ணால் கண்டு அறியாத நிலையில், அவரைப் பற்றிக் கேட்டபோதே திருமுலைப்பால் சுரந்தது, ஒரு குழந்தைக்கும் தாயாகாத மங்கையர்க்கரசியார்க்கு. எனவே, தலையாய அன்பின் வெளிப்பாடு பால் சுரத்தல் என்பது அறியப்படும்.

 

     ஆண்களின் பருவத்தை அவர்களின் வயதுக்கு ஏற்ப, பாலகன், விடலை, காளை, மீளி, மறவோன், திறவோன், முதுமகன் என்று ஏழாகப் பிரித்து உள்ளனர் நமது முன்னோர்.

இதில், 12 வயது முதல் 24 வயது வரை விடலைப் பருவம் ஆகும். விடலைப் பருவத்தில் ஒருமகன் இருந்தால், அவனது தாய்க்கு முலைப்பால் சுரப்பது நின்று போய் இருக்கும். அது வெளிப்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பின் மிகுதியால், ஒரு விடலைப் பருவத்தில் இருந்த வீரனின் தாய்க்கு முலைப்பால் சுரந்தது என்கின்றது "புறநானூறு".

 

"கடல்கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண்

வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்

தோடுஉகைத்து எழுதரூஉத் துரந்து ஏறி ஞாட்பின்

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி

இடைப்படை அழுவத்துச் சிதைந்துவேறு ஆகிய

சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி,

 வாடுமுலை ஊறிச் சுரந்தன

ஓடாப் பூட்கை விடலைத் தாய்க்கே".

 

என்பது புறநானூற்றுப் பாடல்.

 

     கடல் போலப் பறந்து கிடந்த பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவே, சுடும் நெருப்பில் வைத்து, உலைக்களத்தில் கொல்லும் வாய் கூர்மை செய்யப்பட்ட வேலைப் பகைவர் மேல் எய்து, பகைக்கூட்டத்தைத் தடுத்து முன்னேறிச் சென்ற வீரன் ஒருவன், பகைவரால் தாக்கப்பட்டு, உடல் சிதைந்து தரையில் வீழ்ந்தான். களத்தில் மாண்டு கிடக்கும் தனது மகனைக் கண்ட வீரத்தாயின் வற்றிய முலையில் பால் சுரந்தது. போரில் புறமுதுகு இட்டு ஓடாத வீரமகனின் பெருமை, பெற்ற தாயைப் பெருமிதம் அடையச் செய்து, அன்பு மீதூர, கண்ணில் நீரும், முலையில் பாலும் பெருகச் செய்தது.

 

     விடலைப் பருவத்தில் இருந்தவன் பரதன். அவனைப் பெறாத தாய் கோசலை. ஆனால், பரதனின் பெருமையையும் அன்பையும் அறிந்தபோது, கோசலையின் முலைகளில் பால் சுரந்தது என்கின்றது கம்பராமாயணம்.

 

     இராமன் காடு சென்றபின்னர், பரதன் அயோத்திக்கு வருகின்றான். தந்தை இறந்ததையும், இராமன் காடு சென்றதையும் கேள்வியுற்று, கோசலையைக் காண வருகின்றான். அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட கோசலை, குணங்களால் இராமனுக்கும் பரதனுக்கும் வேற்றுமை இல்லை என்பதை உணர்ந்தாள். ஆதலால், போனவன் வந்ததைப் பார்த்தாற் போன்ற மகிழ்ச்சியடைந்தாள். இராமனிடத்து வைத்த அத்தகைய அன்போடு பரதனைப் புல்லித் தழுவினாள். தழுவின உடனே அவளது முலைகள் குமுறிப் பால் சுரந்தன என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.

 

"செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்,

அம்மை தீமையும், அறிதல் தேற்றினாள்;

கொம்மை வெம் முலை குமுறு பால் உக,

விம்மி விம்மி நின்று, இவை விளம்புவாள்: --- கம்பராமாயணம், பள்ளிபடைப் படலம்.

 

இதன் பதவுரை ---

     செம்மை --- நேர்மையான; நல் மனத்து --- நல்ல மனத்தை உடைய; அண்ணல் --- பரதனது; செய்கையும் --- செயலையும்; அம்மை --- அவன் தாயாகிய கைகேயியின்; தீமையும் --- தீக்குணத்தையும் (அதனால் விளைந்த தீய செயல்களையும்); அறிதல் தேற்றினாள் --- (பரதன் சொல்லிய சூளுரையால்) அறிந்து தெளிந்த கோசலை; கொம்மை வெம்முலை --- பருத்த சூடுடைய தனங்களில் இருந்து; குமுறு பால் உக --- உள்ளே பொங்கும்பால் சிந்த; விம்மி விம்மி நின்று --- அழுது அழுது; இவை விளம்புவாள் --- இவற்றைக் கூறுலானாள்.

 

     தாய்ப் பாசம் மிக்க வழி முலைப்பால் பீறிட்டுச் சிந்துவது தாய்மைக்கு இயல்பு.

 

     எனவே, அன்பின் வெளிப்பாடாக, கண்ணீர் வெளிப்படும். பால் சுரக்கும் என்பதை அறியலாம்.

 

 

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...