தாய் தந்தையர்கள் யார் யார்?
-----
கண்எதிரே கண்ட கடவுள் உயர் தாய்தந்தை,
எண் எதிரே காண எதிர் உண்டோ? --- மண்எதிரே
வந்தருளி நம்மை வளர்த்து அருளும் மாமுதலை
முந்து பணிக முனைந்து.
"தருமதீபிகை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல் இது.
மாமுதல் --- உலகில் உள்ள எல்லாப் பொருள்களினும், பெருமை மிக்க பொருள் தாய்தந்தை ஆதலின், இவ்வாறு சொன்னார். மூலமுதலான மூர்த்திகள் ஆகிய தாய்தந்தையரைப் போற்றி உபசரித்து வரவேண்டும்.
முந்து பணிக --- முதலில் வணங்கி மகிழ்க.
தாயும் தந்தையும் நமது கண் எதிரில் காணும் தெய்வங்களாக உள்ளனர். இவர்களே நமது கண் கண்ட தெய்வங்கள். இவர்களைப் போற்றினால், தெய்வத்தைப் போற்றியதாகும்.
எங்கும் நீக்கம் அற நிறைந்து விளங்கும் பரம்பொருள் பொதுவான தெய்வம். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக அது விளங்குகின்றது. அதுவே உயிர்களைப் படைத்துக் காத்து, அருளுகின்றது. அதனை நம்பி பயபத்தியுடன் போற்றி வழிபாடு செய்கின்றோம். ஆனால், யாரும் நேரில் காணவில்லை. இதுதான் தாயாகியும் தந்தையாகியும் வந்து, நம்மை ஈன்று, புறம் தந்து, இனிய கல்வியினைத் தந்து சான்றோக்கி, நல்லோர் போற்றச் சபை நடுவே வீற்றிருக்கச் செய்து, நலம் பலவும் தந்து அருளுகின்றது. எனவே, "ஈன்றாளுமாய், எனக்கு எந்தையுமாய், உடன் தோன்றினராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்" என்று அருளினார் அப்பர் பெருமான். நாம் நமது கண் எதிரில் காணுகின்ற தெய்வங்கள் தாய்தந்தையர் என்பதால், "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்றார் ஔவைப் பிராட்டியார். "தாயாகி, தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்" என்றார் வள்ளல்பெருமான்.
இராமன் பரதனுக்கு அறிவுறுத்தியதாக வரும் கம்பராமாயணப் பாடல்களால் தாய்தந்தையரின் பெருமை அறியப்படும்.
பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும்,
உர வி(ல்)லோய்! தொழற்கு உரிய தேவரும்,
குரவரே எனப் பெரிது கோடியால்.
இதன் பொருள் ---
வலிமை பொருந்திய வில்லை உடையவனே! புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்; குற்றமற்ற நல்லுணர்வும்; உடன் கொள்ளத்தக்க ஒழுக்கமும்; செய்தொழிலின்
சிறப்பும்; வணங்குதற்கு உரிய தேவர்களும்; பெரியோர்களே என்று மிகவும் மனத்தில் கொள்வாய்.
கேள்வி, ஞானம், சீலம், வினை மேன்மை என்பனவற்றைக் ‘குரவர்’என்றது உபசாரவழக்கு.
அந்த நல் பெருங் குரவர் ஆர்? எனச்
சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்,
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்,
எந்தை! கூற வேறு எவரும் இல்லையால்.
இதன் பொருள் ---
என் அன்பில் சிறந்த பரதனே!; நான் கூறிய சிறந்த பெருமையுடைய குரவர்கள் யார் என்று மனத்தால் மிக ஆராய்ந்து விளக்கப் பார்த்தால், தந்தையும் தாயுமே அல்லாமல்; சிறப்பித்துக் கூற வேறு ஒருவரும் இல்லை.
தாய்க்கு நிகரான தெய்வம் வேறு இல்லை என்பதால், "தாயில் சிறந்தொரு கோயிலும் இல்லை" என்றார் ஔவைப் பிராட்டியார். தாய்க்கு நிகராக மதித்துப் போற்றுதற்கு உரிய தெய்வம் வேறு இல்லை என்பதால், "ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்" என்கின்றது "நான்மணிக்கடிகை"
ஈன்று எடுத்தவள் நல்தாய். இவள் அல்லாது மற்றவரும் தாயராக உள்ளனர். அவர்கள், பாராட்டுந் தாய், ஊட்டுந் தாய், கைத்தாய், செவிலித்தாய் எனப்படுவர்.
தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்
பன்னி, அரசன் பயில்தேவி, - தன்மனைவியைப்
பெற்றாள், இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில். --- தனிப்பாடல்.
இதன் பொருள் ---
தன்னைப் பெற்ற தாய், தமையன் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசி, தன் மாமியார் ஆகிய ஐவருமே ஒருவருக்குத் தாயர்தான்.
அதுபோலவே, தந்தையர் ஐவர் என்றும் பின்வரும் பாடல் கூறும்.
பிறப்பித்தோன், வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசம் செய்தோன், - அறப்பெரிய
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன், பயம்தீர்த்தோன்
எஞ்சாப் பிதாக்கள்என எண். --- தனிப்பாடல்.
இதன் பொருள் ---
பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "ஆசாரக்கோவை" போற்றத் தக்கவர் யார் என்று கூறுவதைக் காண்போம்...
அரசன், உவாத்தியான், தாய்தந்தை ,தம்முன்,
நிகரில் குரவர் இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
இதன் பொருள் ---
அரசனும், ஆசிரியரும், தாயும் தந்தையும், தனக்கு மூத்தோனும் என இவர்கள், தமக்கு நிகர் இல்லாக் குரவர் ஆவார். இவர்களைத் தேவரைப்போலத் தொழுது எழுக என்று சொல்லப்படுவது எல்லாரும் வரையறுத்துக் கூறிய நெறி ஆகும்.
மேற்கூறிய எல்லாவற்றுக்கும் மேலே ஒரு படி சென்று, ஒருவன் தனது தந்தையர்களாக வைத்துப் போற்றத் தக்கவர்கள் ஒன்பது பேர் என்று "குமரேச சதகம்" என்னும் நூல் அறிவிக்கும் பாடலைக் காண்போம்.
தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா,
தனை வளர்த்தவன் ஒரு பிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா,
சார்ந்த சற்குரு ஒரு பிதா,
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா, நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்று உற்ற தயர் தீர்த்துளோன் ஒரு பிதா,
அன்புஉள முனோன் ஒரு பிதா,
கவளம்இடு மனைவியைப் பெற்று உளோன் ஒருபிதா,
கலி தவிர்த்தவன் ஒரு பிதா,
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம்
கருதுவது நீதியாகும்,
மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு
மதலையென வருகுருபரா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
இதன் பொருள் ----
மவுலி தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா --- திருச்சடையில் பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்துள்ள சிவபெருமான், சூரபதுமனால் தேவர்கள் படும் துயர் தீர்வதற்காக உதவி அருளிய குழந்தைவேலனாக வந்து, தந்தைக்கு உபதேசம் செய்து அருளிய மேலான குருநாதனே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
1. தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா --- இல்லறமாகிய தவத்தினைப் புரிந்து அதன் பயனாகப் பெற்று எடுத்தவன் முதல் தந்தை ஆவான்,
2. தன்னை வளர்த்தவன் ஒரு பிதா --- தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை ஆவான்,
3. தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா --- பெரும் கருணை செய்து கல்வியைக் கற்பித்தவன் ஒரு தந்தை ஆவான்,
4. சார்ந்த சற்குரு ஒரு பிதா --- உயிர் மேலான புருஷார்த்தங்களை அடைய அருள் நூல்களை அறிவுறுத்தியவன் ஒரு தந்தை ஆவான்,
5. அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா --- துன்பம் நேராமல் காத்து அரசினை ஆளுகின்றவன் ஒரு தந்தை ஆவான்,
6. நல்ல ஆபத்து வேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா --- கொடிய ஆபத்து வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி, நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை ஆவான்,
7. அன்பு உள முனோன் ஒரு பிதா --- அன்புடைய அண்ணன் ஒரு தந்தை ஆவான்,
8. கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா --- அன்போடு உணவு ஊட்டும் மனைவியைப் பெற்றவன் ஒரு தந்தை ஆவான்,
9. கலி தவிர்த்தவன் ஒரு பிதா --- வறுமையைப் போக்கி உதவியவன் ஒரு தந்தை ஆவான்,
காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதியாகும் --- உலகத்தில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்தில் கொண்டாடுவதே அறம் ஆகும்.
No comments:
Post a Comment