குற்றங்கள் பற்றாமல் காத்து அருள வேண்டுதல்
-----
இன்பத்தை விரும்புதலும் துன்பத்தை வெறுத்தலும் உயிர்களுக்கு அமைந்துள்ள பொது இயல்பு. அவற்றுள் மக்கள் உயிர், இன்பம் தருவதனை விரும்பிச் செய்தலும், துன்பம் தருவதனை வெறுத்துத் தள்ளுதலும், அவ்வாறு விரும்புதலுக்கும், வெறுத்தலுக்கும் ஏற்ப, தமது நினைவைச் செலுத்தி, சொல்லையும் செயலையும் ஈடுபடுத்துவதும், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒத்த செயலாகக் காணப்படுகிறது.
இன்பத்தையே நாடும் உயிர்க்குத் துன்பம் ஏன் வருகிறது என்ற கேள்வி அருளாளர்கள் அறிவை அலைத்திருக்கிறது. கௌதம புத்தர் உடம்பொடு கூடி உலகில் பிறப்பது தான் துன்பத்துக்குக் காரணம் என்று கண்டார். "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்" என்பது மணிமேகலை. பிறப்புத் தான் துன்பத்திற்குக் காரணமாக இருக்குமானால், அப் பிறப்புக்குக் காரணமாக அமைவது எது என எண்ணிப் பார்த்தால், உயிர்களுக்குத் தமது உடம்பின் மேலும், உலகில் மேலும் உள்ளதாகிய பற்றே காரணம் என்று கண்டு, பற்றினை அறுத்து, பிறவாமைக்கு முயல்வது ஒன்றே துன்பம் இல்லாமல் போதற்குச் சிறந்த வழி எனத் தெளிந்தனர்.
பிறப்பும் உலகும் துன்பத்துக்கான காரணங்கள் அல்ல. பிறப்பிலும் உலகவாழ்விலும் இன்பமும் நுகரப்படுகிறது. இன்ப நுகர்ச்சி ஒன்றினுக்கே, பிறந்த உயிர்கள் அனைத்தும், அதற்கான நாட்டமும் முயற்சியும் கொண்டுள்ளன. உயிர்களின் பிறப்புக்கு உரிய உடம்பையும் உலகையும் படைத்த இறைவன், உயிர்கள் துன்புறவேண்டும் என்றே கருதினான் என்றால், அவனினும் கொடுமையும் கீழ்மையும் உடையவன் இல்லை என்று ஆகும். உயிர்கள் அனைத்தும் துன்பத்தை நாடாது, இன்பத்தையே விரும்புவதால், உலகில் உயிர்கள் தோன்றுவது இன்பப் பேற்றினை அடைவதற்கே என்பதும், உடம்பும், இந்த உலகும், இன்பப் பேற்றினை அடைவதற்கு உரிய காரணங்கள் தான் என்பதும் தெளிவாகும்.
அப்படியானால், இன்பத்துக்குக் காரணமாகிய உடம்பும் உலகவாழ்வும் துன்பம் தருவது ஏன்? யாருமே விரும்பாத துன்பம் எவ்வாறு உண்டாகின்றது? என்னும் வினாக்களை எழுப்பிக் கொள்ளுவோமானால், இன்பமும் துன்பமும் தாமாகத் தோன்றுவதில்லை என்பது விளங்கும்.
உயிரினுடைய அறிவுக்கும் செயலுக்கும் கருவியாக அமைந்ததே உடம்பு. உணவாய் இருந்து உடம்பை வளர்ப்பதும், அறிவு விளக்கத்துக்கு ஏதுவாகிய பொருளுண்மைகளைத் தருவதும் உலகம் ஆகும். உடம்பு, உலகம் ஆகிய இரண்டும், உயிர்போலத் தமக்கு எனத் தனி உணர்வும் செயலும் உடையவை அல்ல. இவை உயிர் விழையும் இன்ப வாழ்வுக்குக் கருவியும் இடமுமாகவே அமைந்துள்ளன. உடம்பும் உலகமும் ஆகிய கருவிகளைச் செயல்படுத்திப் பயன் கொள்ளுகின்ற உயிர்தான், இன்பத்தை நாடி முயலும்போது, துன்பத்தை எதிர் கொள்ளுகின்றது. இன்பம் துன்பம் இரண்டுக்குமே நிலைக்களமாக உள்ளது உயிர் உணர்வுதான்.
இரண்டும் ஒரிடத்தில் இருத்தல், ஒன்றினுள் ஒன்று ஒடுங்கியிருக்கும் இயைபினால் அமைகிறது. இரண்டினுள் ஒன்று மேலிடும்போது ஒன்று ஒளிக்கும். ஒன்று தடைப்படும்போது ஒன்று வெளிப்படும். இன்பம் மேலிடுவதற்கு உணர்வில் உண்டாகும் விளக்கமும் உடலின்கண் அயரா உழைப்பும் காரணங்களாகும். துன்பம் மேலிடுதற்கு உணர்வில் தெளிவின்மையும், உடம்பில் முயற்சி இன்மையாகிய சோம்பலும் காரணம் ஆகும்.
இன்ப நாட்டமே உயிரின் இயல்பாக உள்ளதால், அதற்கு மறுதலையான துன்பத்தை விளைவிக்கும் நினைவு சொல் செயல்களை எவரும் மேற்கொள்வதில்லை. துன்பம் தருவனவற்றைக் "குற்றம்" எனப் பெயரிட்டு விலக்க முயல்கின்றனர். எனவே, திருவள்ளுவ நாயனாரும் "குற்றமே காக்க பொருளா, குற்றமே அற்றம் தருஉம் பகை" என அறிவுறுத்துகின்றார்.
இக்குற்றங்களைச் செருக்கும், சினமும், சிறுமையும், இவறலும், மாண்பு இறந்த மானமும், மாணா உவகையும் என ஆறு வகையாகத் திருவள்ளுவர் தெளிவுபடுத்தி, "குற்றம் கடிதல்" என்னும் அதிகாரத்தில் காட்டி அருளினார்.
செருக்கு என்பதை, "மதம்" அல்லது "செல்வக்களிப்பு" என்றார் பரிமேலழகர். செருக்குக் கொண்டவனை "மதமதப்பு" உள்ளவன் என்பது உலகவழக்கு.
சினம் என்பது "சேர்ந்தாரைக் கொல்லி" என்றார் நாயானார். எவரும், தம்மில் சிறியரும் எளியரும் ஆகியவர், தாம் விரும்பத்தக்க வகையில் செயல்களைச் செய்யத் தவறினால் அவர்மேல் சினம் கொள்ளுகிறன்றார்கள். இச் சினமானது, குணம் என்னும் குன்றேறி நிற்கும் சான்றோரிடத்தும் உள்ளது. "குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி" என நாயனார் அருளி இருத்தல் காண்க. களங்கமில்லாத வெள்ளை உள்ளம் படைத்த சிறு பிள்ளைகளிடத்தும் சினம் காணப்படுகிறது. நம்மால் வளர்க்கப்படுகின்ற விலங்குகளிடத்தும் பறவைகளிடத்தும் கூட சினம் இருக்கிறது. ஆகவே, சினம் எனப்படும் குற்றம் உயிர்கட்கே பொதுவியல்பு ஆக அமைந்து உள்ளது.
சிறுமை என்பது அளவிறந்த காமம் என்றார் பரிமேலகழர். இது மனிதனைத் தனது நிலையினின்றும் தாழ்வு படுத்தும் சொல்லும் செயலுமாகும்.
இவறல் என்பது கடும்பற்று நிறைந்த மனம் உடைமை ஆகும். உலோபத் தனம் என்றும் கஞ்சத் தனம் என்றும் சொல்லப்படும்.
மாட்சிமை அற்ற தன்மானமாது, விதிவிலக்குகட்குப் பணியாமையாகிய உள்ளம். உவகை என்பது பிறர் துன்புறக்கண்டு மகிழ்தல். நலம் அல்லாதவற்றில் மகிழ்ச்சி கொள்ளுதல்.
இவற்றுள் முதலில் சொன்ன மூன்றும் ஒருவனுடைய உயர்ச்சிக்கும் ஆக்கத்துக்கும் தடையாக இருப்பன என்பதால், "செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து" எனத் திருவள்ளுவ நாயனார் தெருட்டினார். பின்னர் சொன்ன மூன்றும் குற்றங்கள் என்று சொல்லி, "குற்றமே காக்க பொருளா" என்று அறிவுறுத்தினார்.
உலகியல் வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது ஆகும். அதனைச் செய்வதற்கு, "நான்" என்னும் முனைப்பும், செய்த பொருளைப் போற்றிக் காப்பதற்கு "எனது" என்னும் பற்றும் வேண்டப்படுவதே. "செய்க பொருளை" என்றார் நாயனார். அவ்வாறு செய்த பொருளைத் தனக்கும் பிறர்க்கும் பயன்படச் செலவிட்டு இருமைக்கும் நலம் செய்து கொள்வதை விடுத்து, பொருள்மேல் கடும்பற்றுக் கொண்டு செலவிடாது, இறுகப் பற்றிக் காக்க முனைதல் இவறுதல் என்னும் கடும்பற்று உள்ளம் ஆகும்.
"மாண்பு உடைய மானம்" என்பது, மாட்சிமைப்பட்ட தன்மானம் ஆகும். வாழ்வில் அறிவு ஆண்மை ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்தோரிடத்தில் பணிவும் வணக்கமும் கொண்டு, அவரோடு இணங்கி ஒழுகுவது மாண்புடைய மானமாகும். பணிவும் வணக்கமுமே பெருமை தருவன என்பதால், "பணியுமாம் என்றும் பெருமை" என்றும், "எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்" என்றும் நாயனார் அருளினார். பணிய வேண்டுமிடத்தில் பணிவு கொள்ளாமல், தாழவேண்டுமிடத்துத் தாழாமல் ஒழுகுவது மாண்புக்கு மாறானது. அது குற்றமாகும். அக் குற்றத்தை "மாண்பு இறந்த மானம்" எனத் திருவள்ளுவர் விளக்குகின்றார்.
பிறர் துன்புறக் கண்டபோதும், கேட்டபோதும் அவரிடத்தில் பரிவுகாட்டி, அவர் துன்பத்தைத் துடைக்கும் நற்செயலை மேற்கொள்வதை விடுத்து, உவகையும் பெருமிதமும் கொண்டு எள்ளி நகைப்பது குற்றமாதலால், அதனை “மாணா உவகை” என்றார். "வீடு தீப்பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக் கிடைத்தது என மகிழும் இழிசெயல்" என உலகவர் கூறுவர். மேனாட்டவர், "ரோம் நகரம் தீப்பற்றி வேகும்போது நீரோ வீணை இசைத்து இன்புற்றதுபோல" என இகழ்வர்.
மேலே சொல்லப்பட்ட இந்த அறுவகையான குற்றங்களும், உயிரைப் பற்றாமல் இருத்தல் வேண்டும். உடம்பையும், உலகையுமே பொருளாக எண்ணியுள்ள அறியாமையால் விளைகின்ற குற்றங்கள் இவை. பற்றால் விளைகின்ற இக் குற்றங்களை அறுப்பதற்கு, "பற்று விடற்கு, பற்று அற்றான் பற்றினைப் பற்றுக" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். "சுற்றிய சுற்றத் தொடரவு அறுப்பான் தொல்புகழே பற்றி, இப் பாசத்தைப் பற்று அற, நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான்
திருவள்ளுவ நாயனார் காட்டிய இந்த ஆறுவகையான குற்றங்களோடு கூட்டி, பஞ்சமா பாதகங்கள் எனப்படும், ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான, "உயிர்க்கொலை" என்பதையும் ஒரு குற்றம் ஆக்கி, குற்றங்கள் ஏழு என வகைப்படுத்தினார் வள்ளல் பெருமான்.
பற்று அற்றவனாகிய இறைவனை நோக்கி, பொதுவாக உயிரைப் பற்றியுள்ள ஏழுவகையான குற்றங்களும் தன்னைப் பற்றாவண்ணம் அருள்புரிய வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றார்.
சென்னையில், கந்தகோட்டத்துள் எழுந்தருளி உள்ள ஆறுமுகப் பரம்பொருளைக் குறித்துப் பாடியருளிய பாடல் வருமாறு....
காமஉட் பகைவனும், கோபவெங் கொடியனும்,
கனலோப முழுமூடனும்,
கடுமோக வீணனும், கொடுமதம் எனும் துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்,
ஏமம்அறு மாச்சரிய விழலனும், கொலைஎன்று
இயம்பு பாதகனுமாம் இவ்
எழுவரும், இவர்க்கு உற்ற உறவான பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்!
சேமமிகு மாமறையின் "ஓம்" எனும் அருட்பதத்
திறன் அருளி, மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞானசிவ
தேசிக! சிகாரத்னமே!
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உண்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வ மணியே.
இதன் பொருள் ----
பெருநகரமாக விளங்கும் சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள கந்தக் கடவுளே! தண்ணிய ஒளி திகழும் தூய மணிகளில் செம்மைச் சைவமணியாகிய ஆறுமுகம் கொண்ட தெய்வமாகிய மணியே! நலம் மிக்க பெரிய வேதங்களின் "ஓம்" என வழங்கும் அருள் மொழியின் பொருட்கூறுகளை மலயமலைமேல் தங்கும் அகத்திய முனிவர்க்கு அருளிச் செய்து, அவர் தனது சிந்தையில் வைத்துச் செய்த வழிபாட்டுக்கு மனம் மகிழ்ந்து அருளிய மெய்ஞ்ஞான சிவாச்சாரியர்கட்கு முடிமணியாக விளங்கும் பெருமானே!
காமம் என்னும் உட்பகைவனும், கோபம் என்னும் கொடியவனும், கனத்த லோபம் என்னும் முழுமூடனும், மிக்க மோகம் எனப்படும் வீணனும், கொடிய மதம் எனப்படும் துட்டத்தனமும், குருட்டுத் தன்மையும் உடைய ஆங்கார உருவினனும், காப்பு இல்லாத மாற்சரியம் என்னும் விழலனும், கொலை எனப்படும் பாதகனுமாகிய எழுவரும் இவர்கட்கு உறவினரான பிறரும் என்னைச் சூழ்ந்து தம் கைப்பற்றிக் கொள்ளாதபடி அருள் செய்தல் வேண்டும்.
கூட இருந்தே கெடுப்பவனை, "உட்பகை" அல்லது "இதசத்துரு" என்பர். காமம் அத்தகையது என்பதால் "காம உட்பகைவன்" கோபம் கொடுமையானது என்பதால், "கோப வெம் கொடியன்" என்றார். அறிவை மறைத்து, கேட்டைத் தருவதால் உலோபத் தனத்தை, "முழுமூடன்" என்றார். அறிவு மயக்கம் கொண்டு வீணான செயல்களில் ஈடுபடுவதால், "கடுமோக வீணன்" என்றார். மதம் என்பது அகங்காரத்தை உடையது என்பதாலும், நன்மை தீமைகளைப் பகுத்துக் காணமுடியாதது என்பதாலும், "கண்கெட்ட ஆங்காரி" என்றார். தனக்கும், பிறர்க்கும் பயன் தராததால், மாச்சரியத்தை "விழலன்" என்றார். காமம் முதலாகிய ஆறுவகைக் குற்றங்களுடன், ஐம்பெரும் பாதகங்களில் ஒன்றான கொலைக் குற்றத்தையும் சேர்த்து, குற்றங்கள் ஏழு என வகுத்து, இந்த எழுவகைக் குற்றங்களும் தம்மைச் சேரவிடமால் காத்து அருள்புரிய, இறைவனை வேண்டினார் வள்ளல்பெருமான்.
மேற்குறித்த ஏழு குற்றங்களையும், மனிதர்களாக உருவகப்படுத்தி, அவர்கள் இன்னின்னார் என்று வள்ளல்பெருமான் காட்டி இருக்கும் அருமை அறிந்து இன்புறத்தக்கது.
காமம் --- உட்பகைவன்.
குரோதம் என்னும் கோபம் --- வெங்கொடியன்.
உலோபம் --- முழுமூடன்.
மோகம் --- வீணன்.
மதம் --- துட்ட, கண்கெட்ட ஆங்காரி.
மாச்சரியம் --- ஏமம் அற்ற (பாதுகாவல் அற்ற) விழலன்.
கொலை --- பாதகன்.
No comments:
Post a Comment