9. ஐயம் இட்டு உண்.
பதவுரை ---
ஐயம் --- பசித்தவர்க்கு, இட்டு --- கொடுத்து, உண் --- (பின்பு) நீ உண்ணுவாயாக.
"ஏற்பது இகழ்ச்சி" என்று அறிவுறுத்திய பாட்டியிடம், புகழ்ச்சிக்கு உரியது என்ன என்று கேட்டால், விடையாக வருவது, "ஐயம் இட்டு உண்" என்பதாகும். "உண்" என்று தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளதால், "ஐயம்" என்பது பசிக்கு உணவு இடுதலையே குறிக்கும் என்பது தெளிவாகும்.
பொதுவாக ஐயம் என்றாலே "பிச்சை" என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றும். ஆனால், ஐயம் வேறு, பிச்சை வேறு என்பதை அறிதல் வேண்டும். "ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி" என்று ஆண்டாள் நாச்சியார் அருளி உள்ளார். நம்மை விட அறிவிலும் ஒழுக்க நிலையிலும் உயர்ந்தவர்களான துறவு நிலையில் உள்ளோர்க்கும், சான்றோர்க்கும், ஆசாரியருக்கும் தருவது "ஐயம்" ஆகும். அவர்கள் கேட்டாலும் கேட்கலாம். கேட்காமலும் இருக்கலாம்.
"இருக்கும் இடம் தேடி என் பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன், --- பெருக்க
அழைத்தாலும் போகேன், அரனே! என் தேகம்
இளைத்தாலும் போகேன் இனி."
என்னும் பட்டினத்தடிகள் பாடலால் இது விளங்கும்.
இதுவே பிறவிப் பயன் என்பதால், "மண்ணினில் பிறந்தார் பெரும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்" என்று காட்டி அருளினார் திருஞானசம்பந்தப் பெருமான். இது செய்யாமல், உலகில் வாழ்வது பயனற்றது என்கின்றார் பட்டினத்து அடிகள் பின்வரும் பாடலில்...
விருந்தாக வந்தவர் தங்களுக்கு அன்னம் மிகக் கொடுக்கப்
பொருந்தார், வளம்பெற வாழ்வார், நின் நாமத்தைப் போற்றி, நித்தம்
அருந்தா முலைப்பங்கர் என்னாத பாதகர், அம்புவியில்
இருந்து ஆவது ஏது கண்டாய், இறைவா! கச்சி ஏகம்பனே!
"பிச்சை" ஏற்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பட்டினத்தடிகள் பின்வரும் பாடல் வழிக் காட்டுகின்றார்....
ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பலவாணர் தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,
சோற்று ஆவி அற்று, சுகம் அற்று, சுற்றத் துணியும் அற்றே,
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே.
எனவே, பிச்சை எடுப்பவர்கள் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் என்று அறிதல் வேண்டும். பிச்சை எடுப்பது உணவாகவும், பொருளாகவும் இருக்கும். இன்றைய காலத்தில், உணவை விட, பொருளையே பிச்சையாகப் பெறுபவர்கள் அதிகம் உண்டு.
"பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பதும் ஔவையார் அருள்வாக்கு. பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது இதற்குப் பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும். எனவே, பிச்சை என்பது, உயர்ந்தோரிடம் தாழ்ந்தோர் பெறுவது என்பது தெளிவாகும்.
உயிர்கட்கு, பசிநோய், காமநோய், பிறவிநோய் என்று மூன்று விதமான நோய்கள் இருக்கின்றன.
1. உடம்புக்கு இடையறாது வருகின்ற நோய் பசி.
2. உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற நோய் காமம்.
3. உயிருக்கு என்றும் அகலாது வருகின்ற நோய் பிறவி.
இவற்றுள் பசி அரசனுக்கும் உண்டு; ஆண்டிக்கும் உண்டு. தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள் போராடுவார்கள். பசி நோயுடன் சில மணித்துளிகள் கூடப் போராட முடியாது.
பசி வந்தவுடன் மானம், குலம், கல்வி, வண்மை, பெருமிதம்,தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காமம், என்ற பத்துக் குணங்களும் பறந்து போய்விடும்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம். ---ஔவையார்.
பசி வந்தவுடன் நாடி, ஊன், உள்ளம், உணர்வு முதலிய கருவி கரணங்கள் தன்னிலை அழிந்து சோர்ந்து விடுகின்றன. ஆகவே பசித்தோர்க்கு உணவு தருவதே மேலான அறமாகும்.
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்,
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை,
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே --- மணிமேகலை
நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயம் என்றே எண்ணி,
பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்,
போர்க்குள் எமதூதன் பிடித்து இழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே. --- பட்டினத்தார்.
யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை,
யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாய் உறை,
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி,
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன் உரை தானே. --- திருமூலர்.
பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச் சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு,பிடி சோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே. --- கந்தர் அலங்காரம்.
பசித்தவர்க்கு அன்னம் அமைதியாகக் கொடுக்க வேண்டும். அன்புடன் தரவேண்டும். இன்னுரை கூறி, அகமும் முகமும் மலர்ந்து தரவேண்டும். பசித்தவனுக்கு அன்னம் தந்தால், உண்டவனுக்கு ஊன் குளிரும். உள்ளம் குளிரும். உணர்வு குளிரும். உயிரும் குளிரும். உயிருக்கு உயிரான சிவமும் குளிரும்.
"ஐயம் இட்டு உண்" என்றதால், பசியோடு வந்தவர்க்கு, திருமூல நாயனார் அறிவுறுத்தியபடி, "ஒரு கைப்பிடி" உணவைத் தந்து, அருணகிரிநாதப் பெருமான் அருளியபடி, "பிடி சோறு கொண்டு இட்டு" பின் உண்ணுதலைக் குளிக்கும். பெரியபுராணத்தில், சிறுத்தொண்ட நாயனார், அடியார்க்கு அமுது படைத்த பின்னரே தான் உணவு கொள்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் என்பதை அறியலாம்.
மேலும், ஐயம் என்பது பகுத்து உண்ணுதலைக் குறிக்கும். "தர்மச்சோறு" என்றும் "அறச்சோறு" என்றும் நமது பெருமக்கள் வழங்கி வந்ததை, அறிந்தோர் மூலமாக இன்றும் கேட்டு அறியலாம்.
நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்;
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனி அரன் ஊர்;
மஞ்சுஆரும் மாட மனைதோறும் ஐயம்
உளது என்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர்சோறு அளிக்கொள்
திருமுல்லை வாயில் இதுவே.
என்னும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப் பாடலைக் காண இது விளங்கும்.
இதன் பொருள் ---
மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கி அருள்பவன்; ஆன் ஐந்து ஆடுபவன்; அரவு ஆடும் திருக்கையன்; அனல் போன்ற மேனியன் ஆகிய சிவபரம்பொருளினது ஊர் என்பது, மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சை ஏற்க யார் வந்தாலும் செந்நெல் சோறு அளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லைவாயில் ஆகிய இத் திருத்தலமே ஆகும்.
"பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" எனவும், "பாத்தூண் மரீஇயவனைப் பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது" என்றும் திருவள்ளுவ நாயனார் அருளியபடி, பசித்து வந்தோர்க்கு அன்னம் அளித்து, பின்னர் உண்பவன், எப்போதும் பசி இன்றி வாழ்வான் என்பதால், "ஐயம் இட்டு உண்" என்றார் ஔவைப் பிராட்டியார் என்பதை அறிதல் வேண்டும். அவ்வாறு இட்டு உண்பவன், இம்மையில் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து, மறுமையில் இந்திரபதம் பெற்று வாழ்வான் என்பதை,
"ஈத்து உண்பான் இசை நடுவான், மற்ற அவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்"
என வரும் நான்மணிக் கடிகைப் பாடல் வரிகளால் அறியலாம்.
பிறருக்குக் கொடுத்து உண்பவன் புகழை உடையவன். பிறருக்குக் கொடுத்து உண்பவனது கைப் பொருளையே பறித்து உண்பவன் பேராசை மிக்கவன் என்கின்றது "நான்மணிக் கடிகை".
பசி என்று வந்தவருக்குக் கொடுத்து உண்பவன் தேவாதி தேவனாக எண்ணப்படுவான் என்பதை "ஈத்து உண்பான் தேவாதி தேவனாத் தேறு" என்று கூறுகின்றது "ஏலாதி" என்னும் நூல்.
எனவே, ஐயம் வேறு, பிச்சை வேறு என்பதை அறிந்து, பசித்து வந்தோர் யாவர் ஆயினும், அவர்க்கு இட்டு உண்ணுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்தவே, "ஐயம் இட்டு உண்" என்று நமது பெரியபாட்டி அறிவுறுத்தினார் என்பதை அறிதல் வேண்டும்.
No comments:
Post a Comment