பேதையின் செல்வம் பிறருக்கே உதவும்

 

பேதையின் செல்வம் பிறருக்கே உதவும்

-----

 

     திருக்குறளில் "பேதைமை" என்னும் ஓர் அதிகாரம். பேதைமை என்பது அறிய வேண்டுவது ஏதும் அறியாமை ஆகும். முட்டாள்தனம்.

 

     நட்பு என்பது காமத்தால் உண்டாவது. பகை என்பது கோபத்தால் உண்டாவது. காமம், கோபம் என்னும் இவ்விரண்டு குற்றங்களையும் முழுதும் நீக்குவது அரிது. கோபத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களாலும், காமத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களால் கூறினார். கோபத்திற்கும் காமத்திற்கும் அடிப்படையாக உள்ள மயக்க அறிவினை இரண்டு விதமாக்கி, ஒன்றைப் பேதைமை என்றும், மற்றொன்றைப் புல்லறிவாண்மை என்றும் கூறினார்.

 

     இந்தப் பேதைமை என்னும் அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "அறிவில்லாத ஒருவனுக்குத் தனது முயற்சி இல்லாமல், பெரும் செல்வமானது தானே வந்து பொருந்திய காலத்தில், அவனுக்கு அயலாக உள்ளோர் அதனை நிறைய அனுபவிக்க, தான் மேற்கொள்ளும் செயலில் துணைபுரியும் உறவினர் பசித்து இருப்பர்" என்கின்றார் நாயானார்.

 

     தான் அடைந்த பெரிய செல்வத்தால், தனக்கும் தனக்குத் துணையாக இருக்கும் சுற்றத்தவர்க்கும் எல்லா வித நன்மைகளையும் செய்துகொள்வதற்கு அறியாமல், பெற்ற செல்வத்தைப் பெருக்கவும், காக்கவும் வல்லமை இல்லாமையால், தன்னோடு சம்பந்தம் இல்லாத அயலவர் அதனால் உண்டான பயன்களை நிறைய அனுபவித்து இருக்க, சுற்றத்தார் பசி நோயால் வருந்துவர். அறிவில்லாதவன் பெற்ற செல்வமானது உதவ வேண்டியவர்க்கு உதவாமல், அயலவர் அனுபவிப்பதற்கு உரியது ஆகும்.

 

ஏதிலார் ஆர, தமர் பசிப்பர், பேதை

பெரும்செல்வம் உற்றக் கடை.                

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராநர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

 

மாதா பிதாவை மதியாமலே சிறையில்

ஏது ஆக வைத்தான்? இரங்கேசா --- மேதினியில்

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.                

 

இதன் பொருள் ---

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! மாதா பிதாவை --- (கஞ்சன்) தனது தாய் தந்தையரை, மதியாமல் --- (கொஞ்சமேனும் தன்னைப் பெற்றவர்களென்று) எண்ணாமல், சிறையில் --- சிறையறையில், ஏது ஆக வைத்தான் --- தான் என்ன கேடு கெடுவதற்காகப் பூட்டி வைத்தான், (ஆகையால், இது) மேதினியில் --- பூமியில், பேதை --- அறிவில்லாதவன், பெரும் செல்வம் உற்ற கடை --- பெரிய செல்வத்தை உரிமையால் அடைந்தவிடத்து, ஏதிலார் ஆர --- அன்னியர் அதை அனுபவிக்க, தமர் பசிப்பர் --- அவனுக்குச் சம்பந்தமுள்ள பெற்றார் பிறந்தார் முதலியோர் பசியால் வருந்துவார்கள் (என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை --- பேதையின் செல்வம் உற்றோர்க்கு உதவாமல், மற்றோர்க்கு உதவும்.

 

         விளக்கவுரை --- உக்கிரசேனனுக்குக் கஞ்சன் பிறந்தபோது, மாதா பிதாவைப் பீடிப்பான் என்று இருந்தமையால், அவனை அவர்கள் பெட்டியில் வைத்து மூடி, ஆற்றில் மிதக்க விட்டார்கள்.  அந்தப் பெட்டி வேற்றரசன் கையில் சிக்கினதால், சிசு பிழைத்து வளர்ந்தது. பிறகு அது வாலிபன் ஆனபோது வசுதேவரிடத்தில் வில்வித்தை முதலியவற்றைக் கற்றுத் தேறிற்று. அப்படித் தேறியிருந்த இளைஞனாகிய கஞ்சன், சிங்கவாகனனை வென்று, சராசந்தன் மகளையும் மணம் செய்துகொண்டு, தன் பூர்வோத்தரம் உணர்ந்து, வடமதுரையில் வந்து முடி சூடி அரசாளுகையில், தன் மாதாபிதாக்களை மறவாமல் சிறையில் அடைத்து வைத்தான். ஆகையால், பேதையாகிய கஞ்சன் பெரும்செல்வம் உற்ற இடமாகிய வடமதுரையில், ஏதிலாராகிய மற்றவர்கள் எல்லாம் அவனோடிருந்து அவன் செல்வத்தை ஆர்ந்து அனுபவிக்க, அவனைப் பெற்றவர்களாகிய தமர் பசித்துச் சிறைச்சாலையில் அடைபட்டிருந்தமை காண்க.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறிக.

 

விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்

வருந்தும் பசிகளையார், வம்பர்க்கு உதவல்,

இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக்

கரும்பனை அன்னது உடைத்து.      --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     இரும் பணை வில் வென்ற புருவத்தாய் --- பெரிய மூங்கிலாலாகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினை உடையவளே!  விரும்பி அடைந்தார்க்கும் - உணவிற்கு ஒன்றும் இன்மையால் வருந்தி, அறிமுகம் உள்ளதால் தன்னை விரும்பி வந்து அடைந்தவர்களுக்கும், சுற்றத்தவர்க்கும் --- தம் உறவினர்க்கும், வருந்தும் பசி களையார் --- அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காராகி, வம்பர்க்கு உதவல் --- புதிய அயலார்க்கு உதவி செய்தல், ஆற்ற கரும்பனை அன்னது உடைத்து --- மிகவும் (தன்னைப் பாதுகாத்து ஓம்பினார்க்குப் பயன்படாது நெடுங்காலம் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனைபோலும் தன்மையை உடையது.

 

        

பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட,

மின்னொளிர் வானம் கடல் உள்ளும் கான்று உகுக்கும்;

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்

வண்மையும் அன்ன தகைத்து.       --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பொன் நிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் --- பொன்னின் நிறத்தை உடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிர் மேல் மூடிய தாளுடன் உள்ளிருக்குங் கருவும் வாட, மின்னல் மிளிரும் மேகம் கடலுள்ளும் நீர் சொரிந்து பெய்யும்; வெண்மையுடையார் விழுச்செல்வம் எய்தியக் கால் வண்மைவும் அன்ன தகைத்து --- அறியாமையுடைய புன்மக்கள் சிறந்த செல்வத்தை அடைந்தால் அவர் கொடைத் திறமும் அதுபோன்ற இயல்பினதே ஆகும்.

 

         புன்மக்கள் செல்வம் தேவையற்றோர்க்கு எல்லாம் கொடுக்கும்படி நேர்ந்து வீணாகச் செலவழியும்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...