அறிவில்லாமையே வறுமை ஆகும்
-----
திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவனுக்கு வறுமை பலவற்றுள்ளும் மிகுந்த வறுமையாவது நல்லறிவு இல்லாமையே ஆகும். பொருள் இன்மையை உலகத்தார் வறுமையாகக் கொள்ளமாட்டார்" என்கின்றார் நாயனார்.
அறிவுடைய ஒருவன் தனக்கு வறுமை வந்து சேர்ந்த காலத்தில், வறுமை காரணமாகத் தீய வழியில் செல்லாது, இம்மையில் புகழையும், மறுமையில் போகத்தையும் அடைதல் கூடும். எனவே, உயர்ந்தோர் அவனது வறுமை நிலையை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார். ஆனால், அற்ப அறிவினர் என்னும் புல்லறிவாளர், செல்வத்தைப் பெற்ற காலத்தில், தமது அற்ப அறிவால் நன்னெறியில் செல்லாது, தீய நெறியில் ஒழுகி, இம்மையில் புகழையும், மறுமையில் போகத்தையும் ஒருங்கே இழந்து நிற்பார்கள்.
எனவே, நல்லறிவு ஒன்றே எல்லாப் பொருளும் உடைய செல்வம் உடைமை ஆகும் என்பதை உணர்த்த,
அறிவு இன்மை இன்மையுள் இன்மை, பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு.
என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறிக.
நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃது உடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்அவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ,
கண்அவாத் தக்க கலம். --- நாலடியார்.
இதன் பொருள் ---
எண்ணுங்கால் --- ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை --- ஒருவனுக்கு நுட்ப அறிவில்லாமையே வறுமையாவது; அஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் --- அந் நுட்ப அறிவினை உடையவனாய் இருத்தலே அவனுக்கு மிகப் பெருகிய பெருஞ் செல்வமாகும்; பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் --- மற்றுப் பெண்ணியல்பு மிகுந்து, ஆணியல்பு நீங்கிய பேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளுதல் உண்ணு அன்றோ!
நுண்ணுணர்வு இல்லாமை ஏனை எவை இருப்பினும் இல்லாமையையே தரும்.
அணிகலன்களை ஒரு பெண் ஆனவள் அணிந்து கொண்டாள் பார்ப்பவர் மகிழ்வர். பெண் அணிதற்குரிய அணிகலன்களைப் பெண் தன்மை மிகுந்து, ஆண் தன்மை குறைந்த பேடியும் அணிந்து வீண் மகிழ்வு கொள்ளுதல் இகழ்ச்சிக்கு உரியது. அதுபோலவே, நுண்ணுணர்வினர் அடைந்து பயன் பெறுதற்குரிய செல்வத்தை, அது இல்லாதார் பெற்று மகிழ்வது பயனற்றது.
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்,
பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணி எல்லாம் ஆடையின் பின். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
பொறியின் --- சாணையால் கழுவுதலை உடைய, மணி பொன்னும் --- இரத்தினாபரணமும் பொன்னாபரணமும், சாந்தமும் மாலையும் இன்ன அணி எல்லாம் --- சந்தனக் கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும், ஆடையின் பின் --- அழகுறச் செய்வதில் உடையின் பின்னே வைத்து எண்ணத் தக்கனவாம். ஆதலால், அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் --- அறிவினாலாகிய பெருமை ஒரு சிறிதும் பெறாத ஒருவன், பிறிதினால் மாண்டது எவனாம் --- செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமை உடையதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?
செல்வம் உடையோரினும், அறிவுடையாரே சிறந்தோர் ஆவர்.
ஆடை உடுத்தாத ஒருவனை அணிகலன்கள் மட்டுமே அழகுறச் செய்யாமை போல, அறிவில்லானைச் செல்வம் மட்டுமே பெருமை உறச் செய்யாது என்பதாம்.
பொருட்செல்வமானது அறிவில்லாத கீழ்மக்களிடத்தும் காணப்படுகின்றது. இதை, "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று அருளினார் நாயனார். எனவே, கீழ்மக்கள் வைத்து மகிழுகின்ற பொருட்செல்வத்தை, செல்வப் பெருக்கு என்று உலகம் கொள்ளாது. கீழ்மக்களிடத்து உண்டான செல்வம் நல்வழியில் பயன் தருவதில்லை. எனவே, அவர் செல்வத்தைப் படைத்து இருந்தும் வறுமையாளராகவே கருதப்படுவார். அறிவுடையாரிடத்துப் பொருந்திய செல்வமானது, அவர்க்கும் பிறர்க்கும் நற்பயனைத் தரும். அறிவுடையவர் தாம் வறுமை உற்ற காலத்தும், "ஏற்றவர்க்கு இல்லை ஏன மாட்டார் இசைந்து" என்பதால், அறிவுடையாரின் வறுமையை வறுமையாக உலகம் கொள்ளாது.
பூரியர் எனப்படும் கீழ்மக்கள் யார் என்பதை......
அறிவு இலாதவர், ஈனர், பேச்சு இரண்டு
பகரும் நாவினர், லோபர், தீக் குணங்கள்
அதிக பாதகர், மாதர்மேல் கலன்கள் ......புனை ஆதர்,
அசடர், பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியும் மானுடர், பேதைமார்க்கு இரங்கி
அழியும் மாலினர், நீதிநூல் பயன்கள் ...... தெரியாத
நெறி இலாதவர், சூதினால் கவர்ந்து
பொருள்செய் பூரியர்,.......
எனவரும் அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ் வகுத்துக் காட்டி உள்ளதை அறிக..
அறிவு இலாதவர் --- அறிவு அற்றவர்கள்,
ஈனர் --- ஈனத் தன்மை உடையவர்கள்,
பேச்சு இரண்டு பகரும் நாவினர் --- இருவிதமாகப் பேசும் நாவினை உடையவர்கள்,
லோபர் --- கஞ்சத்தனம் உடையவர்கள்,
தீக் குணங்கள் அதிக பாதகர் --- தீய குணங்களுடன், மிகுந்த பாவங்களைப் புரிபவர்கள், மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள்,
மாதர் மேல் கலன்கள் புனை ஆதர் --- பொதுமகளிருக்கு அணிகலன்களைப் புனைந்து அழகு பார்க்கும் அறிவிலிகள்,
அசடர் --- கீழ்மக்கள்,
பூமிசை வீணராய்ப் பிறந்து திரியும் மானுடர் --- பூமியில் பிறந்து பயனற்றவர்களாகத் திரிகின்ற மனிதர்கள்,
பேதைமார்க்கு இரங்கி அழியும் மாலினர் --- பெண்கள் மீது இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்,
நீதிநூல் பயன்கள் தெரியாத --- நீதி நூல்களின் பயன்களைத் தெரியாதவர்,
நெறி இலாதவர் --- நன்னெறியில் நில்லாதவர்கள்,
சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் --- சூதாட்டத்தால் பிறர் பொருளைக் கவர்ந்து பொருளைப் பெருக்கும் கீழ்மக்கள்.
No comments:
Post a Comment