வயலூர் --- 0913. கடல்போல் கணைவிழி

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கடல்போல் கணைவிழி (வயலூர்)

 

முருகா!

மாதர் மயலால் உண்டாகும் துன்பம் தவிர அருள்.

 

 

தனனாத் தனதன தனனாத் தனதன

     தனனாத் தனதன ...... தனதான

 

 

கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்

     கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும்

 

கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை

     கடிபோற் பணியரை ...... யெனவாகும்

 

உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ

     ளுடையாற் கெறுவித ...... நடையாலும்

 

ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்

     ஒழியாத் துயரது ...... தவிரேனோ

 

குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி

     கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள்

 

கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்

     குடியேற் றியகுக ...... வுயர்தாழை

 

மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி

     வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே

 

மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை

     மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

கடல்போல் கணைவிழி, சிலைபோல் பிறைநுதல்,

     கனிபோல் துகிர் இதழ், ...... எழில் ஆகும்

 

கரிபோல் கிரிமுலை, கொடிபோல் துடிஇடை,

     கடிபோல் பணி அரை ...... என ஆகும்

 

உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம், இவள்

     உடையால், கெறுவித ...... நடையாலும்,

 

ஒருநாள் பிரிவதும் அரிதாய்ச் சுழல்படும்

     ஒழியாத் துயர் அது ...... தவிரேனோ?

 

குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள், நரி,

     கொளிவாய், பல அல ...... கைகள், பேய்கள்,

 

கொலை போர்க்களம் மிசை தினம் ஏற்று, மரர்கள்

     குடி ஏற்றிய குக! ...... உயர்தாழை

 

மடல் கீற்றினில் எழு விரை பூப் பொழில் செறி,

     வயலூர்ப் பதிதனில் ...... உறைவோனே!

 

மலைமேல் குடி உறை கொடு வேட்டுவர் உடை

     மகள் மேல் ப்ரியம் உள ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

      குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் --- போர்க்களத்தில் மடிந்துள்ள அரக்கர்களின் உடல்களில் இருந்து குடலை இழுத்து,

 

     காக்கைகள் நரி --- காக்கைகளும், நரிகளும்,

 

     கொளிவாய்ப் பல அலகைகள் --- கொள்ளிவாய்ப் பிசாசுகளும்,

 

     பேய்கள் --- பேய்களும்,

 

     கொலை போரக்களம் மிசை தினம் ஏற்று --- கொல்லுதலை உடைய போர்க்களத்தில் நாள்தோறும் ஏற்று உண்ண,

        

     அமரர்கள் குடி ஏற்றிய குக --- தேவர்களை அவர்களது பொன் நாட்டில் மீண்டும் குடிபுகும்படியாக அருள் புரிந்த குகப் பெருமானே!

 

     உயர்தாழை மடல் கீற்றினில் எழு விரை பூப்பொழில் செறி வயலூர்ப் பதி தனில் உறைவோனே --- உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற நறுமணமானது நிறைந்துள்ள பூஞ்சோலைகள் மிகுந்த வயலூரில் வாழ்பவரே!

 

      மலை மேல் குடி உறை --- வள்ளிமலையின் மேல் வாழ்ந்துகொண்டு இருந்,

 

     கொடு வேட்டுவருடை மகள் மேல் --- கொடிய வேடர்களின் மகளாக வளர்ந்து இருந்த வள்ளிநாயகியின் மீது,

 

     ப்ரியம் உ(ள்)ள பெருமாளே --- அன்பு கொண்ட பெருமையில் மிக்கவரே!

 

      கடல்போல் கணைவிழி --- கடல் போன்று ஆழம் மிக்கதாகவும், அம்பைப் போலக் கூர்மை உடையதாகவும் உள்ள கண்கள்;

 

     சிலைபோல் பிறைநுதல் --- வில்லைப் போன்றும், பிறைச் சந்திரனைப் போன்றும் வளைந்துள்ள நெற்றி;

 

      கனிபோல் துகிர் இதழ் --- கொவ்வைக் கனி போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ்;

 

     எழில் ஆகும் கரிபோல் கிரி முலை --- அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் பருத்து உள்ள முலைகள்,

 

      கொடிபோல் துடி இடை --- கொடியைப் போன்றும், உடுக்கையைப் போன்றும் உள்ள இடுப்பு;

 

     கடிபோல் பணி அரை என ஆகும் --- காவலாகவும், பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க,

 

      உடல் காட்டு இனிமையில் --- இனிமையாக உடலைக் காட்டுகின்,

 

     எழில் பாத்திரம் இவள் --- அழகுக்குக் கொள்கலமாக உள்ளவள் இவள் என்று கூறும்படி,

 

     உடையால் --- உடையாலும்,

 

     கெறுவித நடையாலும் --- செருக்கான நடையாலும், (மயக்கம் கொண்டு)

 

     ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் --- (இவளை விட்டு) ஒரு நாள் கூடப் பிரிந்து இருப்பது அரிது என்னும்படியாக மனம் சுழன்று,

 

     ஒழியாத் துயர் அது தவிரேனோ --- படுகின்ற நீங்காத துன்பத்தை அடியேன் தவிரமாட்டேனோ?

 

பொழிப்புரை

 

     போர்க்களத்தில் மடிந்துள்ள அரக்கர்களின் உடல்களில் இருந்து குடலை இழுத்து காக்கைகளும், நரிகளும், கொள்ளிவாய்ப் பிசாசுகளும், பேய்களும், கொல்லுதலை உடைய போர்க்களத்தில் நாள்தோறும் ஏற்று உண்ண, தேவர்களை அவர்களது பொன் நாட்டில் மீண்டும் குடிபுகும்படியாக அருள் புரிந்த குகப் பெருமானே!

 

     உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற நறுமணமானது நிறைந்துள்ள பூஞ்சோலைகள் மிகுந்த வயலூரில் வாழ்பவரே!

 

         வள்ளிமலையின் மேல் வாழ்ந்துகொண்டு இருந், கொடிய வேடர்களின் மகளாக வளர்ந்து இருந்த வள்ளிநாயகியின் மீது அன்பு கொண்ட பெருமையில் மிக்கவரே!

 

         கடல் போன்று ஆழம் மிக்கதாகவும், அம்பைப் போலக் கூர்மை உடையதாகவும் உள்ள கண்கள்; வில்லைப் போன்றும், பிறைச் சந்திரனைப் போன்றும் வளைந்துள்ள நெற்றி; கொவ்வைக் கனி போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ்; அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் பருத்து உள்ள முலைகள்; கொடியைப் போன்றும், உடுக்கையைப் போன்றும் உள்ள இடுப்பு; காவலாகவும், பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க, இனிமையாக உடலைக் காட்டுகின், அழகுக்குக் கொள்கலமாக உள்ளவள் இவள் என்று கூறும்படி, அவளது உடையாலும், செருக்கான நடையாலும், அறிவு மயக்கம் கொண்டு, இவளை விட்டு ஒரு நாள் கூடப் பிரிந்து இருப்பது அரிது என்னும்படியாக மனம் சுழன்று, அதனால் படுகின்ற நீங்காத துன்பத்தை அடியேன் தவிரமாட்டேனோ?

 

 

விரிவுரை

 

கடல்போல் கணைவிழி ---

 

கடலின் ஆழத்தைக் கண்டு அறியமுடியாது என்கின்றபடி, மாதரின் உள்ளக் கிடக்கையையும் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. உள்ளத்தில் உள்ளதைக் காட்டுவது கண். "அடுத்தது காட்டு பளிங்கு போல், நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

அத்தியின் மலரும், வெள்ளை

     யாக்கைகொள் காக்கைதானும்,

பித்தர்தம் மனமும், நீரில்

     பிறந்த மீன் பாதம் தானும்,

அத்தன் மால் பிரம தேவ

     னால் அளவிடப் பட்டாலும்,

சித்திர விழியார் நெஞ்சம்

     தெரிந்தவர் இல்லை கண்டீர்.

 

என்பது விவேக சிந்தாமணி.

 

     அத்தி மரத்தினுடைய மலர், வெண்ணிறம் பொருந்திய காக்கை, பித்துப் பிடித்தவனின் மனக்கருத்து, நீரில் பிறந்த மீனின் பாதம் ஆகிய இவைகளை எமது அத்தனாகிய சிவபெருமான், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளாலும் ஒருக்கால் அளவிடப்பட்டாலும், சித்திரப் பாவையைப் போலும் கண்களை உடைய பெண்களின் மனக்கருத்தை அறிந்து சொல்ல அந்த மும்மூர்த்திகளுள்ளும் யாரும் இல்லை. பெண்களின் நெஞ்ச ஆழத்தை யாராலும் அளவிட்டு அறிய முடியாது.

 

சிலைபோல் பிறைநுதல் ---

 

சிலை --- வில்.  

 

கனிபோல் துகிர் இதழ் ---

 

துகிர் - பவளம்.

 

கடிபோல் பணி அரை ---

 

கடி --- காவல்.

 

பணி --- பாம்பு.

 

அரை என்பது இடுப்பு. இங்கே மறைவாகவும், பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறியைக் குறித்தது.

 

உயர்தாழை மடல் கீற்றினில் எழு விரை பூப்பொழில் செறி வயலூர்ப் பதி தனில் உறைவோனே ---

 

வயலூர் என்னும் திருத்தலத்தின் இயற்கை எழிலை அடிகளார் காட்டினார்.

 

வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும் சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.

 

கருத்துரை

 

முருகா! மாதர் மயலால் உண்டாகும் துன்பம் தவிர அருள்.

 


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...