பொய்யர்களில் உயர்ந்தவர் யார்?

 

 

 

 

பொய்யர்களில் உயர்ந்தவர் யார்?

பொய் சொல்லி வாழ்ந்தது உண்டா?

-----

 

     "பொய்" என்னும் சொல்லுக்கு, மாயை, போலியானது, உண்மை அல்லாதது, நிலையாமை, உள்துளை, மரப்பொந்து, செயற்கையானது என்று பொருள் உண்டு.

 

     "நிலையாமை" என்று சொல்லவே, பொய்யானது நிலைத்து இருக்காது என்பது தெளிவாகும்; என்றாவது ஒரு நாள் வெளுத்துப் போகும் என்று அறியலாம்.

 

     போலியானது என்று சொல்லவே, உண்மையைப் போன்று புனைந்து சொல்லப்படுவது பொய் என்பதும், அது உள்ளத்தில் உள்ள வஞ்சகத்தின் விளைவாக உண்டானது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

 

     சொல்வன்மையினால் பொய்யை உண்மை போலக் காட்டலாம் என்பதைக் காட்டுகின்றது,  "வெற்றிவேற்கை" என்னும் "நறுந்தொகை".

 

"பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய் போலும்மே; மெய் போலும்மே".

"மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய் போலும்மே; பொய் போலும்மே".

 

     பொய்யைச் சொல்லுகின்ற ஒருவன், சொல்வன்மை உடையவனாக இருந்தால், அவன் தனது சொல்வன்மையால், பொய்யையும் மெய்யாகக் காட்டி விடுவான்.

 

     சொல்ல விரும்பும் கருத்துகளை ஒருவனால் சரியாக எடுத்துச்சொல்ல முடியவில்லையானால், அவனால் எந்தக் கருத்தையும் நிலை நாட்ட இயலாது. அவன் உண்மையைச் சொன்னாலும் பொய்யாகவே கருதப்படும்.

 

     பொருளிலே உலகம் உள்ளது என்பதை, வள்ளல் பெருமான் ஒரு பாடலில் காட்டி உள்ளார்.

 

பொருளிலே உலகம் இருப்பது, ஆலினால்,

     புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்

மருவினால், பொருளின் இச்சையால் பலகால்

     மருவுகின்றான் எனக் கருதி

வெருவுவர் என நான் அஞ்சி, எவ்விடத்தும்

     மேவிலேன், எந்தை! நீ அறிவாய்,

ஒருவும் அப் பொருளை நினைத்தபோது எல்லாம்

     உவட்டினேன் இதுவும் நீ அறிவாய்.

 

     எனவே, பொருள் கருதியே உலகில் பொய்யர்கள் இயங்குகின்றனர் என்பதைப் பின்வரும் பாடலால் அறிந்துகொள்ள முடிகின்றது.

 

பூசாரி பொய்யும், புலவோர் உரைத்த பொய்யும்,

காசுஆசை வேசியர்கள் கற்ற பொய்யும் --- கூசாமல்

தட்டார் உரைத்த பொய்யும், சவளிக்கடைப் பொய்க்குக்

கட்டாவே கால்வாசி காண்.

 

என்று விவேகசிந்தாமணி கூறும்.

 

     பக்தர்களிடம் இருந்து கூட்டாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஒரே அர்ச்சனையில் பணியை முடித்து விட்டதாகக் கோயில் பூசாரிகள் கூறுகின்ற பொய், கல்வி அறிவால் நிரம்பாமல், கற்றவர் போல் நடித்துத் திரியும் போலிக் கவிஞர்களின் பொய், தங்கள் நடிப்புத் தொழிலுக்கு ஏற்பப் பலரிடமும் பணத்தைப் பறிப்பதற்குப் பசப்புச் சொற்களையும், பொய்யான சொற்களையும் வீசிச் சிக்கவைக்கும் வேசியர்களின் பொய், பொன் செய் கொல்லர்கள், தங்களிடம் கொடுக்கும் பொன்னில் சிறிதேனும் எடுத்துக் கொண்டு, செம்பு சேர்த்து, சேதாரம், செய்கூலி என்று கூசாமல் சொல்லுகின்ற பொய், ஆகிய இந்தப் பொய்கள் யாவும், சவுளிக் கடைக்காரர்கள் சாயம் போகும் துணிகளைக் கெட்டிச் சாயம் உள்ளது என்றும், அழுத்தம் அற்ற துணியை அழுத்தம் உள்ள துணி என்றும். இன்னும் பற்பல விதமாகக் கூறுகின்ற பொய்களுக்குக் கால் பங்கும் இணை ஆகா.

 

     கோயில் பூசாரிகள், போலிக் கவிஞர்கள், பொன்செய் கொல்லர்கள் கூறுகின்ற பொய்யால் பொருள் நட்டம் மட்டுமே உண்டாகும். ஆனால், சவுளிக்கடைக்காரர் கூறுகின்ற பொய்யால் பொருள் இழப்போடு, அவமானமும் உண்டாகும். எனவே, இவர்கள் கூறுகின்ற முழுப் பொய்க்கு, முன்னர் கூறியவர்கள் பொய்யானது கால்பங்கே ஆகும்.

 

     பொருள் கருதிக் கூறுகின்ற இவ்விதமான பொய்கள் எல்லாம் துன்பத்தில் கொண்டு விடும் என்று அறிவுறுத்துகின்றார் பட்டினத்தடிகள்.

 

நாப்பிளக்கப் பொய்யுரைத்து, நவநிதியம் தேடி,

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடி,

பூப்பிளக்கப் பொய்யுரைத்து, புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்!

காப்பதற்கும் வழி அறியீர்! கைவிடவும் மாட்டீர்!

கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே,

ஆப்பு அதனை அசைத்துவிட்ட குரங்கு அதனைப் போல

அகப்பட்டீர், கிடந்து உழல அகப்பட்டீரே.

 

இதன் பொருள் ---

 

     நாக்கு வெடிக்கும்படியாகப் பொய்களைப் பேசி, நவநிதியை ஒப்ப ஏராளமாகப் பொருள்களைச் சம்பாதித்து, நன்மை என்பது ஒன்றையும் அறியாத பெண்களைச் சேர்ந்து இன்புற்று இருந்து, பூமியானது பிளவுபடும்படி வெளிப்படுகின்ற புற்றில் இருந்து புறப்படுகின்ற ஈசல்களைப் போலப் புலபுல எனவும், கலகல எனவும் பிள்ளைகளைப் பெற்று விடுகின்றீர்கள். அவைகளைக் காப்பாற்றும் வித்தை அறிந்துகொள்ள மாட்டீர்கள். கைவிடவும் மாட்டீர்கள். இரண்டாகப் பிளந்துள்ள மரத்துளையில் காலை நுழைத்துக் கொண்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆப்பினை அசைத்து, அசைத்துப் பிடுங்கிவிட்டுத் துன்புறுகின்ற குரங்கினைப் போல இவ்வுலகத்தில் அகப்பட்டுக் கொண்டீர்கள். துன்பத்தில் உழன்றுகொண்டு இருக்கின்றீர்கள்.

 

     பொருளாசை கொண்டு இப்படிப் பொய்யைச் சொல்லி வாழ்வதால், பொருள் நில்லாமல் நீங்குவது மட்டும் அல்லாமல், உண்பதற்கு உணவும் இல்லாமல் போய்விடும் என்பதை உணர்த்த, "பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிட்டாது" என்னும் பழமொழி உண்டாயிற்று. இந்தப் பழமொழிக்கு விளக்கமாக, "பழமொழி விளக்கம்" என்று வழங்கப்படுகின்ற "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..

 

கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுஉரியார்

     தண்டலையைக் காணார் போலப்

பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்

     கிடையாது! பொருள் நில்லாது!

மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்

     பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

     வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!

 

இதன் பொருள் ---

 

     சொல்லும் பனைகாட்டும் கைக் களிற்று  உரியார் தண்டலையைக் காணார் போல --- கூறப்படும் பனையைப் போலும் துதிக்கையினை உடைய யானையின் தோலைப் போர்த்தவரான சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைக் கண்டு வழிபடாதவருக்கு, உணவு கிடைக்காததைப் போல,

பொய் சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது--- பொய் கூறும் வாயார்க்கு உணவும் கிடைக்காது, பொருள்  நில்லாது --- அவரிடத்திலே உள்ள பொருளும் அழியும், பொருள் அவரிடத்தில் வந்து சேராது, மை சொல்லும் கார் அளி சூழ் தாழை மலர் பொய் சொல்லி வாழ்ந்தது உண்டோ --- மேகம் சூழ்ந்ததைப் போலக் கரிய வண்டினத்தால் சூழப்பட்ட தாழைமலர் பொய் சொல்லி வாழ்வு பெற்றதா?  (இல்லை. ஆகையால்) மெய் சொல்லி வாழாதான் பொய் சொல்லி வாழ்வது  இல்லை --- உண்மையைப் பேசி வாழாதவன் பொய் சொல்லி வாழப் போவது இல்லை, மெய்ம்மை தான் --- இது உண்மையே ஆகும்.

 

     திருமாலும் பிரமனும் தம்முள் பிணங்கித் தாமே பரம்பொருள் என்று செருக்குக் கொண்டபோது, சிவபெருமான் கொண்டருளிய ஒளிமலை வடிவத்தின் அடியைத் திருமாலும் முடியை நான்முகனும் காணச் சென்றனர். தான் கொண்ட அன்னப் பறவை வடிவத்தைக் கொண்டு மேலும் பறந்து செல்ல முடியாமல் சோர்வுற்று நின்ற பிரமன், சிவபிரான் முடியினின்றும் விழுகின்ற தாழை மலரைக் கண்டான். அது  சிவபிரான் முடியைப் பிரமன் கண்டதாக அவன் வேண்டுகோளின்படி சிவபிரானிடம் பொய்ச் சான்று கூறியது.

பொய் சென்னதால், மணம் நிறைந்த தாழம்பூவானது சிவபெருமானுக்கு ஏற்புடையதாகக் கொள்ளப்படவில்லை. தாழம் பூவானது பொய் சொல்லி, வாழ்வு இழந்தது.

 

     பிரமன் பொய்யைச் சொன்னான் என்பதை, நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் கூறுமாறு காண்க...

 

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே.    

 

     மனிதனுக்கு வாய் வாய்த்தது இறைவனை வாழ்த்தவும், உண்மையே பேசவுமே. "வாயே வாழ்த்து கண்டாய், மதயானை உரி போர்த்துப் பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். "எந்தை நினை வாழ்த்தத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்" என்றும் "ஐய! நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள்ளமுது உண்டு உவந்த திருவாய்" என்றும் அருளினார் வள்ளல் பெருமான்.

 

அரியானை, அந்தணர்தம் சிந்தையானை,

     அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்

தெரியாத தத்துவனை, தேனை, பாலை,

     திகழ் ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக்

கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,

     கனைகடலை, குலவரையைக் கலந்து நின்ற

பெரியானை, பெரும்பற்றப் புலியூ ரானைப்

     பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.     ---  அப்பர்.

 

மாறாத வெம்கூற்றை மாற்றி, மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்,

ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நாஎல்லாம் கூறாத நாக்களே.     --- திருஞானசம்பந்தர்.

 

     எனவே, பொருள் கருதி, உள்ளத்தில் வஞ்சத்தை வைத்து, பொய் சொல்லி வாழ்வதால் நன்மை ஏதும் விளைவதில்லை. மாறாக, உண்மையே சொல்லி வாழ்ந்தால், நன்மகள் பலவும் விளைந்திடும், மனிதரில் தேவனாகவும் மதிக்கப்படுவர் என்கின்றது, "விவேக சிந்தாமணி".

 

மெய்அதைச் சொல்வார் ஆகில்

     விளங்கிடும் மேலாம் நன்மை,

வையகம் அதனைக் கொள்ளும்,

     மனிதரில் தேவர் ஆவார்,

பொய்அதைச் சொல்வார் ஆகில்,

     போசனம் அற்பம் ஆகும்,

நொய்யவர் இவர்கள் என்று

     நோக்கிடார் அறிவு உள்ளோரே.

 

நொய்யர் --- அற்பர். நோக்கிடார் --- கண்ணாலும் பார்க்கமாட்டார்கள்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...