குருவே! உன்னை அடைவது எந்த நாள்?

 

குருவே, உனை அடைவது எந்நாள்?

----

 

     இறைவன் மந்திர உபதேசம் புரிந்த குருவா, யோக தந்திரங்களை அருளிச் செய்த குருவாக, திருமூலர் மரபில் வந்த மவுன குருவாக, அழகிய மாணிக்க மணிகள் பொருத்தப்பட்ட சிங்காதனத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.

 

     அவரைச் சூழ்ந்து இருப்பவர்கள் யார்? யார்? உலர்ந்த சருகுகளை உண்டு, நீரை மட்டுமே அருந்தி வாழ்கின்றவர்கள் ஒரு கோடிப் பேர். சந்திர மண்டலத்தில் இருந்து சொட்டுச் சொட்டாக விழுகின்ற அமுதத்தை உண்டு வாழுகின்ற நிலாமுகிழ்ப் பறவை போன்று, அகத் தவமாகிய யோகமுறையால், உயிர் மூச்சினைக் கொண்டு, மூலக் கனலை மூட்டி எழுப்பி, புருவ நடுவாகிய சந்திர மண்டலத்தில் இருந்து ஒழுகும் வெண்மையான அமுத ஒழுக்கினை உண்டு, அழியாத தன்மையராய் வாழுகின்றவர்கள் அளவற்ற கோடிக் கணக்கான பேர்கள்.

 

     இருவினைகள் என்னும் நல்வினை தீவினை ஆகிய இரண்டையும் இயற்றாமல், ஒப்பில்லாத தனிநிலையில் முதிர்ந்த ஞானத்தின் வரம்பு எனப்படும் மோனநிலையில்,  இறைவனை இடையறாது எண்ணுகின்ற பெற்றியால், இரவு பகல், இன்பதுன்பம், நினைப்பு மறப்பு என்னும் இரட்டை நிலைகளைக் கடந்து, ஏகாந்தமாக இன்ப நிட்டையில் உள்ளவர்கள் கோடிக் கணக்கானவர்கள். மணிமந்திர சித்திநிலையை எய்தியவர்கள் கோடிக் கணக்கான பேர்கள்.

 

     இவர்கள் எல்லாம் நாற்புறங்களிலும் சூழ்ந்து இருக்க, எழுந்தருளி இருக்கும் இறைவனை அடைந்து, அவனது திருவடி இணைகளை முறைப்படிக் கும்பிட்டு, அட்டாங்க பஞ்சாங்கமாக நிலத்தில் விழுந்து, அளவில்லாத முறை வணங்கி எழுந்து, தனது மனக் குறைகள் எல்லாம் தீரும்படியாக, அருச்சனை புரிய என்னை, தேவரீர் அழைத்துக் கொள்வது எந்த நாளோ? என்று தாயுமான அடிகளார் மனம் உருகிப் பாடி உள்ளார்.

 

     அந்த நிலை நமக்கும் இறையருளால் வாய்க்கவேண்டும். அதற்காக, அகத்தவ நிலையில் நின்று உழைத்து, அவனருளைப் பெற்று உய்வோமாக என்று, இந்த உழைப்பாளர் தினத்தில் வேண்டிக் கொள்வோமாக.

 

சருகுசல பட்சணிகள் ஒருகோடி அல்லால்,

                 சகோர பட்சிகள் போலவே

      தவளநிலவு ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத

                 தன்மையர் அனந்தகோடி,

இருவினைகள் அற்று இரவு பகல் என்பது அறியாத

                 ஏகாந்த மோனஞான

      இன்ப நிட்டையர்கோடி, மணிமந்த்ர சித்திநிலை

                 எய்தினர்கள் கோடி சூழக்

குருமணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை

                 கொலு வீற்றிருக்கும் நின்னைக்

      கும்பிட்டு, னந்தமுறை தெண்டன் இட்டு, ன்மனக்

                   குறை எ(ல்)லாம் தீரும்வண்ணம்

மருமலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்கிக்க, எனை

                 வா என்று அழைப்பது எந்நாள்?

      மந்த்ர குருவே! யோக தந்த்ரகுருவே! மூலன்

                மரபில்வரு மௌனகுருவே!.

 

    

     அடியார்கள் சூழ்ந்து இருக்கத் திருவிளையாடல் புரியும் இறைவன் பக்கத்தில் சென்று சே, இறைவன் தன்னை "வா" என்று அழைத்து அருள் புரியவேண்டும் என்று மணிவாசகப் பெருமான், கசிந்து உருகி வேண்டுகின்றார்.

 

இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்

     என்று என்று, ஏமாந்து இருப்பேனை,

அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய்;

     ஆள்வார் இலி மாடு ஆவேனோ?

நெருங்கும் அடியார்களும், நீயும்

     நின்று, நிலாவி, விளையாடும்

மருங்கே சார்ந்து, வர, எங்கள்

     வாழ்வே!, `வா' என்று அருளாயே!

 

இதன் பொருள் ---

 

     எங்களது வாழ்வாக உள்ள பரம்பொருளே!

அம்பலத்து ஆடல் புரிகின்ற பெருமான், நமக்கு அருள் புரிவான் என்று பலகாலும் நினைந்து,  அந்த நினைப்பிலேயே இன்புற்று இருக்கின்ற எளியவனாகிய என்னை, அருமையான உபதேசத்தை, அருள் செய்து ஆட்கொண்டு அருளினாய். (அருள் உபதேசம் புரிந்த நீ, இந்த நிலவுலகத்தில் அடியேனே விட்டுச் சென்றாய்) நான் இப்போது ஆள்வார் இல்லாத செல்வம் போலப் பயனற்று ஒழியத் தகுமா?  உன்னை நெருங்கிய பழவடியார்களுடன் கூடி நீ விளையாடல் புரிகின்ற (அருள்வெளியின்) பக்கத்தில், "நெருங்கி வருக" என்று என்னை அழைத்து அருள் புரிவாயாக.

 

    

அருளாது ஒழிந்தால், அடியேனை,

     `அஞ்சேல்' என்பார் ஆர், இங்கு?

பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட

     பொன்னே! பொன்னம்பலக் கூத்தா!

மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து,

     வருந்துவேனை, `வா' என்று, உன்

தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல்,

     செத்தே போனால், சிரியாரோ?

 

இதன் பொருள் ---

 

     என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு, வலிய வந்து ஆட்கொண்டு அருளிய பொன்னைப் போன்றவனே! பொற்சபை (என்று சொல்லப்படும் அருள்வெளியில்) ஆனந்தத் திருக்கூத்தினை இயற்றுகின்ற பெருமானே! நீ அருள் செய்யாது ஒழிந்தாயானால்,  இந்த உலகத்தில் அடியேனாகிய என்னை அஞ்சாதே என்று அருள் புரிபவர் யார் இருக்கின்றார்கள்? மயக்கம் பொருந்திய மனத்துடன், நீ எனக்கு அருள் செய்த அருமையை உணர்ந்து உன்னைத் தொடராமல், உன்னைவிட்டு விலகித் துன்பப்படுகின்ற என்னை, "வா" என்று அழைத்து, தெளிந்த நல்லறிவு வாய்க்கப் பெற்று, உன்னோடு கூடியிருக்கின்ற உனது அடியார் திருக்கூட்டத்தை அடியேனுக்குக் காட்டி அருளாத நிலையில், அடியேன் இறந்து போனால், இந்த உலகத்தவர் சிரிக்கமாட்டார்களா?

 

    

 

         

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...