அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கமலத்தே குலாவும் (வயலூர்
முருகா!
விலைமாதர் மயக்கில் இடர்ப்படாமல் அருள்.
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன
தனனத் தான தான தனதன ...... தனதான
கமலத் தேகு லாவு மரிவையை
நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
கலகக் காம நூலை முழுதுணர் ...... இளைஞோர்கள்
கலவிக் காசை கூர வளர்பரி
மளகற் பூர தூம கனதன
கலகத் தாலும் வானி னசையுமின் ...... இடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
வதனத் தாலு நாத முதலிய
விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும்
வெயிலெப் போதும் வீசு மணிவளை
அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்
விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணி
கனகத் தேர்கள் யானை யவுணர்கள்
தகரக் கூர்கொள் வேலை விடுதிறல் ...... உருவோனே
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்
புகழக் கானி லாடு பரிபுர
சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதி
மகள்மெய்த் தோயு நாத குறமகள்
அணையச் சூழ நீத கரமிசை ...... உறுவேலா
அருளிற் சீர்பொ யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கமலத்தே குலாவும் அரிவையை
நிகர், பொன் கோல மாதர், மருள்தரு
கலகக் காம நூலை முழுது உணர்...... இளைஞோர்கள்,
கலவிக்கு ஆசை கூர, வளர் பரி-
மள கற்பூர தூம கன தன
கலகத்தாலும், வானின் அசையு மின் ......இடையாலும்,
விமலச் சோதி ரூப இமகர
வதனத்தாலும், நாத முதலிய
விரவுற்று ஆறு கால்கள் சுழல்இருள் ......குழலாலும்,
வெயில் எப்போதும் வீசும் அணி வளை
அணி பொன் தோள்களாலும், வடுவகிர்
விழியில் பார்வையாலும், இனி இடர் ......படுவேனோ?
சமரில் பூதம், யாளி, பரி, பிணி
கனகத் தேர்கள், யானை, அவுணர்கள்
தகரக் கூர்கொள் வேலை விடுதிறல் ...... உருவோனே!
சமுகப் பேய்கள் வாழி என, எதிர்
புகழ, கானில் ஆடு பரிபுர
சரணத்து ஏக வீர அமை மனம் ...... மகிழ்வீரா!
அமரர்க்கு ஈசன் ஆன சசிபதி
மகள் மெய்த் தோயும் நாத! குறமகள்
அணையச் சூழ நீத! கரமிசை ...... உறுவேலா!
அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி
திரு அக்கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.
பதவுரை
சமரில் பூதம் யாளி பரி பிணி கனகத் தேர்கள் ---போர்க்களத்தில் பூதம், சிங்கம், குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்களும்,
யானை அவுணர்கள் தகர --- யானைகளும், அசுரர்களும் பொடிபட்டு அழிய,
கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே --- கூர்மையான வேலாயுதத்தை விடுத்து அருளிய வலிமை பொருந்திய திருமேனியை உடையவரே!
சமுகப் பேய்கள் வாழி என எதிர் புகழ --- பேய்க் கூட்டங்கள் எதிரில் நின்று வாழ்க வாழ் எனப் புகழ,
கானில் ஆடு --- காட்டில் (சிவபெருமானுடன்) திருநடனம் புரிகின்ற,
பரிபுர சரணத்து ஏக வீர அ(ம்)மை மனமகிழ் வீரா --- சிலம்பு அணிந்த திருவடிகளை உடைய தன்னிகர் இல்லாத ஆற்றல் மிக்கவராகிய உமையம்மை மனம் மகிழும் வீரரே!
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய்த் தோயும் நாத ---தேவர்கள் தலைவனும், இந்திராணியின் கணவனும் ஆகிய இந்திரனின் மகளான தேவயானையின் திருமேனியைத் தழுவும் தலைவரே!
குறமகள் அணையச் சூழ நீத --- குறமகளாகிய வள்ளிநாயகியை அணையும் பொருட்டுத் திருவிளையாடல்கள் புரிந்த நீதிமானே!
கர(ம்) மிசை உறு வேலா --- திருக்கரத்தில் வேலாயுதத்தைத் தாங்கியவரே!
அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின் --- திருவருள் வழங்குவதில் பொய்யாதவராகிய பொய்யாக் கணபதியும், அழகிய அக்கினீச்சுரரும் எழுந்தருளி உள்ள வயலூர் என்னும் திருத்தலத்தில்,
அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே --- அழகிய திருக்கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமையில் மிக்கவரே!
கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோலமாதர் --- தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பான அழகுடன் விளங்கும் விலைமாதர்கள் மீது,
மருள் தரு --- உண்டான மோக மயக்கத்தால்,
கலகக் காமநூலை முழுது உணர் இளைஞோர்கள் --- மனக்கலக்கத்தைத் தருகின்ற காமசாத்திரத்தை முழுதும் உணர்ந்த இளைஞர்கள்,
கலவிக்கு ஆசை கூர --- புணர்ச்சி இன்பத்தை மிகவும் விரும்பச் செய்கின்ற,
வளர் பரிமள கற்பூர தூமம் கனதன கலகத்தாலும் --- நறுமணம் மிக்க பச்சைக் கற்பூரம், நறுமணப் புகை இவற்றால் மணக்கின்ற பெருத்த முலைகளால் உண்டாகிய கலக்கத்தாலும்,
வானின் அசையும் மின் இடையாலும் --- வானத்தில் அசைந்து, கணத்தில் தோன்றி மறையும் மின்னல் போன்ற இடையாலும்,
விமலச் சோதி ரூப இமகர வதனத்தாலும் --- தூய்மையான ஒளி மிக்க பொன்னொளி வீசும் குளிர்ந்த கதிர்களை உடைய சந்திரனை ஒத்த முகத்தாலும்,
நாத முதலிய விரவுற்று --- ஓசை மிகுந்து, ரீங்காரம் செய்து
ஆறுகால்கள் சுழல் இருள் குழலாலும் --- வண்டுகள் சூழ்ந்துச் சுழலுகின்ற இருண்ட கரிய கூந்தலாலும்,
வெயில் எப்போதும் வீசு மணிவளை அணி பொன் தோள்களாலும் --- எப்போதும் ஒளி வீசுகின்ற மணிகளால் ஆன வளையங்களை அணிந்துள்ள அழகிய தோள்களாலும்,
வடு வகிர் விழியில் பார்வையாலும் --- மாவடுவினை ஒத்த கண்களின் பார்வையாலும்,
இனி இடர் படுவேனோ --- இனியும் அடியேன் இடர் படுவேனோ?
பொழிப்புரை
போர்க்களத்தில் பூதம், சிங்கம், குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்களும், யானைகளும், அசுரர்களும் பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தை விடுத்து அருளிய வலிமை பொருந்திய திருமேனியை உடையவரே!
பேய்க் கூட்டங்கள் எதிரில் நின்று வாழ்க வாழ் எனப் புகழ, காட்டில் (சிவபெருமானுடன்) திருநடனம் புரிகின்ற, சிலம்பு அணிந்த திருவடிகளை உடைய தன்னிகர் இல்லாத ஆற்றல் மிக்கவராகிய உமையம்மை மனம் மகிழும் வீரரே!
தேவர்கள் தலைவனும், இந்திராணியின் கணவனும் ஆகிய இந்திரனின் மகளான தேவயானையின் திருமேனியைத் தழுவும் தலைவரே!
குறமகளாகிய வள்ளிநாயகியை அணையும் பொருட்டுத் திருவிளையாடல்கள் புரிந்த நீதிமானே!
திருக்கரத்தில் வேலாயுதத்தைத் தாங்கியவரே!
திருவருள் வழங்குவதில் பொய்யாதவராகிய பொய்யாக் கணபதியும், அழகிய அக்கினீச்சுரரும் எழுந்தருளி உள்ள வயலூர் என்னும் திருத்தலத்தில்,அழகிய திருக்கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமையில் மிக்கவரே!
தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பான அழகுடன் விளங்கும் விலைமாதர்கள் மீது, உண்டான மோக மயக்கத்தால், மனக்கலக்கத்தைத் தருகின்ற காமசாத்திரத்தை முழுதும் உணர்ந்த இளைஞர்கள் புணர்ச்சி இன்பத்தை மிகவும் விரும்பச் செய்கின்ற, நறுமணம் மிக்க பச்சைக் கற்பூரம், நறுமணப் புகை இவற்றால் மணக்கின்ற பெருத்த முலைகளால் உண்டாகிய கலக்கத்தாலும், வானத்தில் அசைந்து, கணத்தில் தோன்றி மறையும் மின்னல் போன்ற இடையாலும், தூய்மையான ஒளி மிக்க பொன்னொளி வீசும் குளிர்ந்த கதிர்களை உடைய சந்திரனை ஒத்த முகத்தாலும், ஓசை மிகுந்து, ரீங்காரம் செய்து வண்டுகள் சூழ்ந்துச் சுழலுகின்ற இருண்ட கரிய கூந்தலாலும், எப்போதும் ஒளி வீசுகின்ற மணிகளால் ஆன வளையங்களை அணிந்துள்ள அழகிய தோள்களாலும், மாவடுவினை ஒத்த கண்களின் பார்வையாலும், இனியும் அடியேன் இடர் படுவேனோ?
விரிவுரை
ஆறுகால்கள் சுழல் இருள் குழலாலும் ---
ஆறுகால்களை உடையவை வண்டுகள்.
பெண்கள் தமது இருண்ட கிரய கூந்தலில் சூடியுள்ள மணம் மிக்க மலர்களில் உள்ள தேனை நாடி வண்டுகள் வந்து கூந்தல் ரீங்காரம் செய்துகொண்டு இருக்கும்.
வெயில் எப்போதும் வீசு மணிவளை அணி பொன் தோள்களாலும் ---
வெயில் --- ஒளி.
வடு வகிர் விழி ---
வடு --- பிஞ்சு. இங்கே மாம்பிஞ்சைக் குறித்தது. மாவின் பிஞ்சுக் காய்களைப் பிளந்தது போன்ற கண்களை உடையவர்கள் பெண்கள்.
விமலச் சோதி ரூப இமகர வதனம் ---
விமலச் சோதி --- தூய ஒளி.
இமகரம் -- குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன்.
வதனம் --- முகம்.
பெண்களின் முகம் குளிர்ந்த ஒளியினை உடைய சந்திரனைப் போன்று உள்ளது.
அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலி ---
திருவருள் வழங்குவதில் பொய்யாதவராகிய பொய்யாக் கணபதி எழுந்தருளி உள்ள திருத்தலம் வயலூர். இவர்தான் "வித்தக மருப்பு உடைய பெருமாள்" என்று அடிகளாரால் போற்றப் பெற்றவர்.
"மைக்காவில் பரிமள நா வீசு வயலி அக்கீசர் குமர!" என்று சுவாமிமலைத் திருப்புகழில் அடிகளார் போற்றி உள்ளபடி, இருண்ட சோலைகளில் வீசுகின்ற நறுமணமானது
வெகுதூரம் வரை வீசுகின்ற வயலூரில் உள்ள சிவமூர்த்தியின் திருநாமம் "அக்கினீச்சுவரர்".
வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும். முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.
வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.
கருத்துரை
முருகா! விலைமாதர் மயக்கில் இடர்ப்படாமல் அருள்.
No comments:
Post a Comment