ஆத்திசூடி --- 13. அஃகம் சுருக்கேல்

 

 

13. அஃகம் சுருக்கேல்.

 

     பதவுரை --- அஃகம் --- (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் --- குறைத்து விற்காதே.

 

     மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களை, அளவு குறைத்து விற்காதே.

 

     பண்டைக் காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்தது. அவ்வாறு பண்டங்களை மாற்றும்போது, தனது ஆக்கத்தை மட்டுமே கருதி, பெறுகின்ற பண்டத்துக்கு ஏற்ற அளவு, தனது பண்டத்தை அளந்து கொடுக்காமல், அளவு குறைத்துக் கொடுப்பது புகழையோ, புண்ணியத்தையோ தராது. அச் செயல் பழிக்கு இடமாகி, பாவத்தையே பெருக்கும் என்பதால் ஔவைப் பிராட்டியார் இவ்வாறு அறிவுறுத்தினார்.

 

     இக் காலத்தில் இச் செயல் மிகவும் மலிந்து காணப்படுவது. எடைக் கருவிகளில் எப்படியெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வந்து, எடை குறைவாகப் பொருள்களைக் கொடுத்து, தாம் விரும்பிய விலையைப் பெறலாம் என்று செயல்படுபவர்கள் உண்டு. அது முறையற்றது என்பதால், அரசாங்கமே, WEIGHTS AND MEASURES    என்று ஒரு முறையை வகுத்து, அதைச் செம்மையாகச் செயல்படுத்தும் அமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளது. எல்லாவற்றையும் மீறி, எவ்விதத்திலாவது, அஃகம் சுருக்குகின்ற செயல் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.

 

     பிறர் பொருளையும், தம்முடைய பொருள் போலப் பாதுகாத்துச் செய்தால், அதுவே, வியாபாரம் செய்வாருக்கு, நல்ல வியாபாரம் சிறக்கும். இதனால் நடுநிலையோடு பொருந்தி வாணிகம் செய்தல் வேண்டும் என்பது தெளிவு. இந்த நடுவுநிலைமை என்பது அறமன்றத்தில் உள்ளோர்க்கும் பொருந்தி இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தி,

 

வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப்

பிறவும் தம போல் செயின்.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     பிறர் பொருளையும் தமது பொருள் போலப் பேணிச் செய்தால், வாணிகம் செய்வார்க்கு நடுநிலையான நல்ல வாணிகம் ஆகும். கொடுப்பது குறைவாகவும், பெறுவது மிகையாகவும் இருத்தல் கூடாது. கொடுக்கின்ற பொருளுக்கைத் தக்கதைப் பெறுதல் வேண்டும்.

 

     வாணிகத்தைத் தொழிலாக உடையவர், தமது தொழில் நன்றாக வாய்க்கப்பெற, உலகில் உள்ள பொருள்களைக் கொண்டு நீண்ட நாள் நன்றாக வாழவேண்டுமானால், தாம் பிறர் இடத்துக் கொள்ளும் பொருளுக்குச் சரியாக, குறைவு இல்லாமலும், தீய பொருள் அல்லாமலும், உள்ள பொருளையே கொடுத்தல் வேண்டும். அப்படிக்கு அல்லமால், நிரம்பப் பொருளைப் பெற்றுக்கொண்டு, குறைவாகப் பொருளை நிறுத்துத் தருதல் அடாது. பார்வைக்கு (SAMPLE) நல்ல பொருளைக் காட்டி, நம்பவைத்து, கலப்படப் பொருளைக் கொடுப்பதும் அல்லாது, எடையிலும் தவறு இழைத்தல் கூடாது. அவ்வாறு செய்தால், அவரது வாணிகம் மட்டும் அல்லாது, அவருக்கு முன்னிருந்த பொருளும் அழிந்து போகும்.

 

"நட்பிடை வஞ்சம் செய்து,

            நம்பினார்க்கு ஊன்மா றாட்டத்து

உட்படக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு

            இம்மியும் உதவார் ஆயும்,

வட்டியின் மிதப்பக் கூறி

            வாங்கியும், சிலர்போல் ஈட்டப்

பட்டதோ, அறத்தாறு ஈட்டு

            நம்பொருள் படுமோ என்னா".

 

எனத் திருவிளையாடல் புராணத்தில், மாமனாக வந்து வழக்கு உரைத்த படலத்தில் காட்டியுள்ளது உணர்க.

 

 இதன் பதவுரை ---

 

     நண்பர்களிடத்தும் கூட வஞ்சனை புரிந்தும், நம்பி ஒரு பொருளைத் தன்னிடத்தில் வைத்தவர் உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்ந்தும், இரந்தவர்க்கு இம்மியளவும் கொடுத்து உதவாமலும், வட்டியை வரம்பு இல்லாமல் சொல்லி அங்ஙனமே வாங்கியும், சிலர் தேடுதல் போலத் தேடப்பட்ட பொருள் இது அல்ல. அறநெறியில் நின்று ஈட்டிய நமது பொருள் அழியுமோ? அழியாது.

            

     நண்பர் ஆயினார் மாட்டும் வஞ்சனை புரிந்து, அவரது பொருளைக் கவர்தல் கூடாது. நம்பி ஒரு பொருளை வைத்தவர்க்கு, அவரது உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்தல் கூடாது. தம்மிடத்தில் வந்து இரந்தவர்க்கு இம்மி அளவும் கொடாதவராயும் இருத்தல் கூடாது. வட்டியில் வரம்பின்றிச் சொல்லி வாங்குதல் கூடாது. இவ்வாறு கூடாதவற்றைத் தள்ளி அறவழியில் ஈட்டிய பொருளானது அழியாது நிலைத்து இருக்கும் என்பது கருத்து.

 

            பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெரய பெற்றவர்களாக விளங்கினார்கள்; மிகச் சரியான விலைக்கே பொருள்களை விற்றார்கள்; கூடுதலான விலைக்குப் பொருள்களை விற்பது தவறான செயல் என்று கருதி வாழ்ந்தார்கள். இது, 28.05.2021 அன்று கல்வித் தொலைக்காட்சி வழி நான் அறிந்த செய்தியாகும். அவ்வாறே பட்டினப்பாலை என்னும் நூல் கூறுவது காண்க.

 

"கொடுமேழி நசை உழவர்

நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நல் நெஞ்சினோர்

வடு அஞ்சி, வாய்மொழிந்து,

தமவும் பிறவும் ஒப்ப நாடி,

கொள்வதூஉம் மிகைகொளாது,

கொடுப்பதூஉம் குறைகொடாது,

பல்பண்டம் பகர்ந்து வீசும்"     --- பட்டினப்பாலை.

 

     வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதப்பட வேண்டும். பொய்க்கும் கொள்ளைக்கும் இடந்தருதல் கூடாது. மொத்த வணிகர் (WHOLESALER), சில்லறை வணிகர் (RETAILER), கொள்வோர் (CONSUMER) ஆகிய முத்திறத்தார்க்கும் தீதும் கேடும் இல்லா நல்வாணிகம் இதுவே ஆகும்.

 

     பொருள் மீது கொண்ட பற்றுக் காரணமாக, அதைக் கவர்தல் வேண்டி, தமது உடம்பையே வாணிகம் செய்பவர்கள் விலைமாதர்கள்.  விலைமாதர்களைப் போன்று, தம்மை நாடி வருபவர்களின் பொருளைப் பறிப்பதையே தொழிலாக இருத்தல் கூடாது. அதனால், நாடி வந்தவர் முதலில் அழிந்து, அதனால் வந்த பாவத்தால் தாமும் பின்னாளில் அழிந்து போவர்.

 

            எனவே, ஒருவன் தனது ஆக்கத்தை மட்டுமே கருதி, தருகின்ற பொருளின் அளவைச் சுருக்காதே என்பதற்கு, "அஃகம் சுருக்கேல்" என்று அருளினார் ஔவைப் பிராட்டியார்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...