உடம்பு நிலையற்றது
----
திருக்குறளில் "நிலையாமை" என்னும் ஓர் அதிகாரம்.
நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன என்பதாகும். அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "நிலையாமையை உடையது வாழ்வு என்று உணர்வாராயின், நாள் என ஒன்று வந்து விளங்குவதை, தமது உயிரை அறுக்கும் வாள் என அறிதல் வேண்டும்" என்கின்றார் நாயனார். உயிருக்கு இடமாக உள்ள உடம்பினை அறுக்கும். மேலிரண்டு பாடல்களில், செல்வத்தினது நிலையைமையைக் கூறி அருளிய நாயனார், இதில், உடம்பினது நிலையைமைக் கூறினார்.
தோன்றியது யாவுமே அழியக் கூடியது என்பதை உணர்ந்தால், தோன்றிய இந்த உடம்பும் நிலையில்லாமல் அழியக் கூடியதே என்னும் உணர்வு இருக்கும். உடம்பையே பொருளாக மதிப்பவர்க்கு இந்த உணர்வு தோன்றாது.
உயிரானது அறிவுப் பொருளாய் இருத்தலால், அது வாளால் அறுக்கப்படுவது ஆகாது. "ஆயுதங்கள் இவனை (ஆன்மாவை) வெட்டுவதில்லை. நெருப்பானது இவனைச் (ஆன்மாவை) சுடுவதில்லை. நீரானது இவனை (ஆன்மாவை) நனைப்பது இல்லை. காற்றானது இவை (ஆன்மாவை) உலர்த்துவது இல்லை" என்னும் பகவத் கீதைப் பாடல் வழி, உயிர் நிலையானது என்றும், அது அழிவு அற்றது என்றும், அதற்கு இடமாக உள்ள உடம்புதான் நிலையற்றது, அழியக் கூடியது என்றும் அறிதல் வேண்டும்.
நாம் பெரிதாக மதித்துப் போற்றி வளர்க்கின்ற இந்த உடம்பின் நிலையாமை குறித்து, "கோயில் திரு அகவல்" என்னும் பாடலில், பட்டினத்து அடிகளார் அருளி உள்ளதைக் காண்போம்..
"சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;
நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்;
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்;
மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;
ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து ஏறும் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்
பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட காட்சி"
இதன் பொருள் ---
(இந்த உடம்பானது) மலமும் சலமும் தங்கியுள்ள பெரிய பெட்டி. நல்வினை தீவினைகளைச் சேர்த்து வைத்திருக்கும் பேழை. வாத பித்த சிலேத்துமாதிகள் இருக்கும் சிறிய ஊர். அழுக்குடன் நிறைந்த தோலும், இரத்தமும் நிறைந்த கருவி. துர்நாற்றம் வீசும் பாண்டம். நான்கு முழ நீளமும், ஒன்பது துவாரங்களும் உள்ள கிழிந்த துண்டுத் துணி. உண்பதற்கு உதவாததும், குடல் முதலிய உறுப்புக்களும், இரைப்பை முதலியனவும் சுரைக் கொடி போன்று பின்னப்பட்டு உள்ள தோட்டம். பிற உயிர்களைக் கொன்று தின்பதால், சுடுகாடு போன்றது. ஆசை என்னும் கயிற்றினால் சுழலுகின்ற பம்பரம் போன்றது. என்றும் நீங்காமல் வந்துகொண்டே இருக்கின்ற நோய்களுக்கு இருப்பிடம். நீர் மேல் ஓடுகின்ற கப்பல். மாயையால் விகாரப்பட்டுக் கொண்டே இருப்பது. மரணத்தைத் தழுவப் போகின்ற கூண்டு. சோற்றை நிறைத்து வைக்கும் துருத்தி. காற்றில் தூற்றுகின்ற கருவி. காற்றில் பறக்கின்ற காற்றாடி போன்றது. இறைவன் விதித்த விதிக்கு ஏற்றவாறு, எமன் வெட்டுகின்ற கட்டை. நான்கு முகங்களை உடைய பிரமதேவனால் தைக்கப்பட்ட சட்டை. சுடுகாட்டில், பெரும் நெருப்புக்கு இரையாக இடப்படுகின்ற விருந்து. காமம் என்னும் நெருப்பினால் கருகிப் போகின்ற தழையைப் போன்றது. கிருமிகளால் கிண்டப்படுகின்ற கிழங்கு போன்றது. பிறவி என்னும் தளிர் அல்லது பாவமாகிய தளிர் ஏறிப் படருவதற்கான சிறு கிளைகளுடன் கூடிய கொம்பு போன்றது. முன்பு மணப் பருவத்தில் அழகுடன் விளங்கிச் சஞ்சரித்து இருந்து, முடிவில், அதே மணக்கோலத்துடன் கூடி, அசைவில்லாது கிடக்கின்ற பிணம். பிணமாக ஆனபின்னர், ஊரில் சிறிது பொழுதும் கிடக்கவொட்டாமல், சுடுகாட்டிற்கு அகற்றப்படுகின்ற உபாதி உடையது. காற்றின் எதிரில் வைக்கப்பட்ட பூளை மலர் போன்று சிதைந்து போவது. காலையில் எழுகின்ற சூரியனைக் கண்ட பனி போல் கணத்தில் மறைந்து போவது. ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற வானவில்லைப் போன்றது. ஒலிக்கின்ற மேகத்தினை ஒத்த உருவினை உடையது. நீரில் தோன்றுகின்ற அழகான குமிழியைப் போன்றது. கனவில் கண்ட காட்சியைப் போன்றது. அந்தக் காட்சியை விடவும் கொடிதான மாயம் பொருந்தியது.
"ஒரு நெல் வால் ஊன்ற வருந்தும் உடம்பு, இதனை
மகிழாது, அழகா! அலந்தேன், இனியான்
ஆல நிழலில் அமர்ந் தாய் அமரா
அடியேன்உய்யப் போவதுஒர் சூழல்சொல்லே".
என்பது சுந்தரர் தேவாரம்.
இதன் பொருள் ---
ஒரு நெல்லின் வால் ஊன்றினும் பொறாது வருந்துவதாகிய இந்த உடம்பினை தான் உறுதி உடையது என்று கருதி மகிழாது உறுதியை நாடி உழன்றேன். அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்வாயாக.
"நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
மகரக் குழையாய்! மணக் கோலம் அதே
பிணக்கோலம் அதுஆம் பிறவி இதுதான்,
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய்!
அடியேன்உய்யப் போவதுஒர் சூழல்சொல்லே.
இதுவும் சுந்தரர் தேவாரம். இதன் பொருள் ---
திருநெல்வாயில் அரத்துறையி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே! காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே! எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய முதல் எழுத்துப் போன்று, பொருள்களுக்கெல்லாம் முதற்பொருளாகி நிற்பவனே! இ்ந்த உடம்பானது, கொண்ட மணக்கோலமே விரைவில் பிணக்கோலமாய் மாறுகின்ற நிலையாமையை உடையது. ஆதலின், அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள்வாயாக.
மணம்என மகிழ்வர் முன்னே
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணம்எனச் சுடுவர் பேர்த்தே
பிறவியை வேண்டேன் நாயேன்
பணைஇடைச் சோலைதோறும்
பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.
இந்த சுந்தரர் தேவாரத்தின் பொருள் ---
வயல்களின் நடுவே உள்ள சோலைகளில் எல்லாம், பசிய இளமரச் சோலைகளை உடைய விளையாடுமிடங்களில், மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே! உலகில் தாய், தந்தை, சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தமது மக்கட்குத் திருமணம் என்று மகிழ்வார்கள். பின்பு அவர்களே, அவர்ளைப் "பிணம்" என்று சொல்லி ஊரினின்றும் அகற்றி, புறங்காட்டில் கொண்டுபோய் எரியில் விழுத்தி நீங்குவார்கள். ஆதலின், இத் தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன். இந்தப் பிறவியில் விழுவதற்கு அடியேன் அஞ்சுகின்றேன்.
நாள்என ஒன்று போல் காட்டி, உயிர் ஈரும்
வாள்அது, உணர்வார்ப் பெறின்.
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
பின்வரும் படால்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....
தோற்றம்சால் ஞாயிறு நாழியா, வைகலும்
கூற்றம் அளந்து, நும் நாள்உண்ணும்; --- ஆற்ற
அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் ; யாரும்
பிறந்தும் பிறவாதாரில். --- நாலடியார்.
இதன் பதவுரை ---
கூற்றம் --- இயமன், தோற்றம் சால் ஞாயிறு --காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக --- நாழி என்னும் அளவு கருவியாகக் கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் --- உமது வாழ்நாளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான்; (ஆதலால்) ஆற்ற அறம் செய்து அருள் உடையீர் ஆகுமின் --- மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து உயிர்களிடத்தில் அருள் உடையவராகுக, யாரும் --- அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும் பிறவாதாரில் --- பிறவி எடுத்தும் பிறவாதவரில் சேர்ந்தவரே ஆவர்.
அருளுடையராதலே பிறவியின் பயனாதலால், அறஞ்செய்து அருளுடையராகுக.
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கு எதிர் வந்த
தேரையை வவ்வி ஆங்கு, யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி
மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு,
அருள்நனி இன்றி ஒருவயிறு ஓம்பற்குப்
பல் உயிர் செகுத்து, வல்லிதின் அருந்தி
அயர்த்தனன், இருந்த போதும் பெயர்த்துநின்று
எண்தோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல் எயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
என்பது பட்டினத்தடிகள் அருகிய "கோயில் நான்மணி மாலை" ஆகும்.
இதன் பொருள் ---
விடத்தை உமிழ்கின்ற பிளந்த வாயினையும், கொடும் கோபத்தினையும் உடைய பெரும் பாம்பானது, தனக்கு முதலாக உள்ள உயிரைக் கெடுக்கக் காலம் பார்த்து இருக்க, நெல் பயிரின் வேரில் சுற்றி இருந்த சிறிய நீர்ப் பாம்பானது, தனது வாய்க்கு எதிர்ப்பட்ட சிறிய தவளைகளை விழுங்கியது போல, அடியேன், முன்னர் கருவில் உருவாகி, இந்த உலகத்திடைத் தோன்றிய அந்த நாள் முதலாக, குறித்த நாளின் எல்லையை மறக்காத, இயமனுடைய பிளந்த வாயில் உள்ள வேலின் உச்சியை ஒத்த பற்களின் இடையில், காலம் வரும்வரை அழியாது இருப்பதை உணர்ந்து இருந்தும், உயிர்களிடத்தல் கருணை சிறிதும் இல்லாது, எனது உடம்பினைக் காத்தல் பொருட்டு, பல உடல்களைக் கொன்று, இனிதாக சுவைகூட்டித் தின்று, சோர்ந்து இருந்தும், பழமையாகிய தில்லையம்பதியில் ஒரு திருப்பதத்தை ஊன்றியும், ஒரு திருப்பதத்தைத் தூக்கியும் திருநடம் புரியும் அம்பலக் கூத்தனை, வாயாரப் பாடியும், கையார வணங்கியும் ஒழிந்தேன் இல்லை.
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல
நோய்மை குன்றி மூப்பு எய்தி,
மாளும் நாள் அது ஆதலால்,
வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,
ஆளதாகும் நன்மை என்று
நன்கு உணர்ந்தது அன்றியும்,
மீள்வு இலாத போகம் நல்க
வேண்டும் மால பாதமே.
என்னும் பாடலில், நாள் என்பதை ஒரு வாளாகக் காட்டினார் திருமழிசை ஆழ்வார்.
இதன் பொருள் ---
எனது நெஞ்சமே! வாழ்நாளை அறுக்கும் வாள் போலவே நாள்கள் கழிய, உடலானது நோய்களால் பலம் இழந்து, கிழத் தன்மை அடைந்து, இறந்து போகும் காலமும் வந்து அடைந்தது. ஆதலால், எம்பெருமான் திருவடிகளில் வணங்கித் துதி பண்ணுவாயாக. மேலும் அந்த அடிமைச் செய்கையே புருஷார்த்தம் என்று நன்றாகப் புத்தி பண்ணி வணங்கித் துதிப்பாயாக. திரும்பி வராத கைங்கரிய போகத்தை, அப் பெருமானுடைய திருவடிகளே தரவேண்டும்.
தினங்கள்செலச் செல, ஏதோ பெற்றதுபோல்
மகிழும் நெஞ்சே! தினங்க ளோடும்
கனம் கொளும் உன் ஆயுள்நாள் கழிவது உண-
ராய், உயிர் தீர் காயம் சேரும்
வனம் கடுகி வா என்ன விளித்து உன்பால்
தினம் நெருங்கும் வன்மை உன்னி
முனங்கொள் அறியாமையை, நீ இனங்கொள்ளாது
அறஞ்செய்ய முயலுவாயே. --- நீதிநூல்
இதன் பொருள் ---
நாட்கள் கழியக் கழிய ஏதோ புதிது பெற்றதுபோல் உளம் மகிழுகின்ற எனது மனமே! நாள்கள் செல்வதுடன், அரியதாகிய உனது வாழ்நாளும் சென்றுகொண்டிருப்பதை நீ உணராது இருக்கின்றாய். உயிர் நீங்கிய உடம்பினைச் சுடப்படுங் காடு, உன்னை நாள்தோறும் நெருங்கி "விரைந்து வா" என்று அழைக்கின்றது. அதை நினைந்து, இதுவரையும் கொண்டுள்ள அறியாமையை இன்னமும் கொள்ளாது, விரைந்து புண்ணியஞ் செய்ய முற்படுவாயாக.
இன்று அருணோதயம் கண்டோம், உயர் ககன
முகட்டின்மிசை இந்தப் பானு
சென்று அடைய நாம் காண்பது ஐயம்அதைக்
காண்கினும் மேல் திசை இருக்கும்
குன்று அடையும் அளவு நாம் உயிர்வாழ்வது
அரிது, அதன்முன் குறுகும் கூற்றம்
என்று அச்சத்துடன், மனமே மறவாமல்
அறவழியின் ஏகுவாயே. --- நீதிநூல்
இதன் பொருள் ---
நெஞ்சே! இன்று கதிரவன் தோற்றம் கண்டோம். காலை கழிந்து கதிரவன் உச்சிக்கு வருவதை நாம் காண்பது உறுதி இல்லை. ஒருவேளை உச்சிப்பொழுதைக் கண்டாலும், அவன் செனறு அடையும் மாலைப்பொழுதைக் காண்பதும் உறுதியில்லை. மாலைப் பொழுதைக் கண்டாலும் அவன் மலையிலை மறைகின்ற அந் நிலையைக் காணல் முடியாது. அதற்குள்ளே கூற்றுவனும் நெருங்குவான். ஆதலால், மிக்க அச்சத்துடன் மறவாமல் புண்ணிய வழியிலே நடப்பாயாக.
No comments:
Post a Comment