உடம்பு உள்ளபோதே அறம் செய்க

 

உடம்பு உள்ளபோதே அறம் செய்க

-----

 

     திருக்குறளில், "நிலையாமை" என்னும் ஓர் அதிகாரம். நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு (தாம்புக் கயிறு) போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "வாய் பேசமுடியாதபடி  நாக்கை அடக்கி, விக்கல் மேலெழுவதற்கு முன்னே, வீடுபேற்றிற்கு ஏதுவாகிய அறச் செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்" என அறிவுறித்தினார் நாயனார்.

 

     உடம்பானது எந்த நேரத்திலும் இறந்து படுதல் கூடும்,  அது எப்போது எவ்விதம் இறக்கும் என்பது அறிவதற்கு இல்லை. அவ்விதம் இறக்க நேரும் காலத்தில், நாவானது பேசுதற்கு இயலாமல் போய்விடும், அத்துடன் விடாது வருகின்ற விக்கலானது வந்து சேரும். அக்காலத்தில் அறத்தைச் செய்யவேண்டும் என்று எண்ணி இருந்தாலும், அதை வெளிப்படுத்தவோ, செய்யவோ இயலாது என்பதால், அந்த நிலை வரும் முன்னதாகவே அறத்தைச் செய்யவேண்டும்.

 

     நமது கண் முன்னரேயே, வயதில் மூத்தோரும் இளையோரும் கூட மாண்டு போவதைக் கண்டு இருந்தும், நாமும் ஒரு நாள் இப்படித் தான் போவோம் என்று எண்ண மாட்டோம். நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் உண்மையை அறிந்திருந்தும், மரணமானது ஒருவனுக்கு எப்போது வேண்டுமானாலும், எப்படியும் வரும் என்பதை உணர்ந்து கொள்ளாமல், நீண்ட நாள் வாழ்ந்திருப்போம் என்று எண்ணி வாழ்நாளைக் களிப்பில் கழிக்கின்றோம். இதோ வந்தேன் என்று வாழ்நாளின் இறுதி நாளும், சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிடுகின்றது. இறுதிக் காலத்தில் கோழை மிகுதிப்பட்டு, தொண்டை அடைத்து, கை கால் இழுத்து அறிவிழந்து அல்லல் படுவது நிச்சயம். அப்பொழுது, இதுவரை செய்யாத அறத்தைச் செய்யவேண்டும் என்னும் எண்ணம் எழலாம். ஆனால், அதைத் தானாகச் செய்யவும் முடியாது. செய்யவேண்டும் என்று பிறருக்குச் சொல்லவோ, நாக்கு எழாது. பசிக்கு வேண்டிய உணவுக்கு நெல்லைக் காலத்தே பயிரிட்டு வைத்துக் கொள்ளாமல், ஒருவன் பசி மிகுந்தபின், உண்பதற்காக நெல்லை விதைப்பதும், வீடு தீப்பற்றிக்கொண்டு அழியும்போது தீயை அணைக்க ஆறு வெட்டுவதும், போர் நடக்கும்போது படைநூல் கற்பதும் போன்று அறிவற்றது மட்டுமல்லாமல், இயலாததும் ஆகும்.

 

பசிமிகுந்த பின்நெல்லை விதைப்பதுபோல்,

    வீட்டில்தீ பற்றிக் கொண்டு

நசியும்போது அதை அவிக்க ஆறுவெட்டல்

    போலும்,போர் நடக்குங் காலை

விசிகநூல் கற்கமுயல்வது போலும்,

    கபம் மிஞ்சி விக்கிச் சிக்கி

இசிவுகொண்டு சாங்காலத்து எப்படி நீ

    அறம்புரிவாய் இதயப் பேயே.         ---  நீதிநூல்.

 

"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன், நல்வினை

மேல்சென்று செய்யப் படும்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

 

பவனமாய்ச் சோடையாய் நா எழாப்

     பஞ்சுதோய்ச்சு அட்ட உண்டு,

சிவனதாள் சிந்தியாப் பேதைமார்

     போல நீ வெள்கினாயே,

கவனமாய்ப் பாய்வதோர் ஏறு உகந்து

     ஏறிய காள கண்டன்,

அவனது ஆரூர் தொழுது உய்யலாம்,

     மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.    ---  திருஞானசம்பந்தர்.

 

இதன் பொருள் ---

 

     பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சிநிலை எய்தி, நாக்கு எழாது உலர்ந்து, பிறர் பஞ்சில் தேய்த்துப் பால் முதலியவற்றைப் பிழிய உண்டு, மரணம் உறும் காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல, நமக்கும் இந்நிலை வருமா என, நெஞ்சே! நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். அறிவு மயக்கம் கொண்டு அஞ்சாதே!

 

     பவனம் - காற்று. இறக்குங்கால், பிராண வாயு உடலின் நீங்கும் பொருட்டுப் பெருகும். அது மேல்மூச்சு வாங்குகின்றது என்ற வழக்கினாலும் அறியப்படும்.

 

கனைகொள்இருமல் சூலைநோய்

         கம்பதாளி குன்மமும்

இனையபலவும் மூப்பினோடு

         எய்திவந்து நலியாமுன்

பனைகள்உலவு பைம்பொழில்

         பழனஞ்சூழ்ந்த கோவலூர்

வினையைவென்ற வேடத்தான்

         வீரட்டானம் சேர்துமே.      ---  திருஞானசம்பந்தர்.

 

இதன் பொருள் ---

 

     மூப்புக் காலத்தில் கனைத்தலைக் கொண்ட இருமல் , சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே, பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த திருக் கோவலூரில், இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக.

 

     உடம்பு நிலைத்திராது என்பதை உணர்ந்து, பொருளை ஈட்டிப் பலர்க்கும் உதவி வாழ்ந்து, இறைவன் திருநாமத்தைச் சொல்ல வாழுகின்ற அடியவர்கள் உள்ளத்தில் இறைவனைக் காணலம் என்கின்றார் அப்பர் பெருமான்.

 

பொசியினால் மிடைந்து, புழுப் பொதிந்த போர்வைப்  

     பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று

பசியினால் மீதூரப் பட்டே ஈட்டிப்   

     பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்

வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,  

     வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்

கசிவினால் தொழுமடியார் நெஞ்சின் உள்ளே

     கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.  --- அப்பர்.

    

இதன் பொருள்---

 

     செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணி, பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு, பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலை விடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

 

ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு  

     ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,

மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, 

     மயானத்தில் இடுவதன்முன், மதியஞ் சூடும்

ஐயனார்க்கு ஆளாகி, அன்பு மிக்கு, 

     அகங்குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்

கையினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே 

     கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. ---  அப்பர்.

    

இதன் பொருள் ---

 

     கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

 

புறம் திரைந்து, நரம்பு எழுந்து,

         நரைத்து, நீ உரையால் தளர்ந்து

அறம் புரிந்து நினைப்பது ஆண்மை

         அரிது காண், இஃது அறிதியேல்,

திறம்பியாது எழு நெஞ்சமே! சிறு

         காலை நாம்உறு வாணியம்,

புறம் பயத்து உறை பூதநாதன்

         புறம்பயம் தொழப் போதுமே.   ---  சுந்தரர்.

 

இதன் பொழிப்புரை ---

 

     மனமே!  தோல் திரைந்து , நரம்புகள் வெளித் தோன்றி , வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய நினைப்பது பயனில்லாதது ஆகும். இதனை நீ அறிவாய் என்றால், நாம் இளமையிலே செய்து ஊதியம் பெறுதற்குரிய வாணிகம் இதுவேயாக, புறத்திலே அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; என்னைப் பிறழ்வியாது, விரையப் புறப்படு .

 

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்று எண்ணி

இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே

நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்

சென்றான் எனப்படுத லால்.         ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பனிக் காலத்தில், புல்லின் நுனி மேல் முத்து முத்தாகப் பனிநீர் தங்கி இருக்கும். அந்தப் பனித் துளியானது, வெயில் வரவர ஆவியாகி மறைந்து விடும். அது போலவே, இந்த உடம்பும் ஒரு நாள் மறைந்து விடும். எனவே, இந்த உடம்பு இருக்கும்போதே நல்லறத்தைச் செய்வாயாக. இல்லை என்றால், நன்றாகத் தான் இங்கே இருந்தான்; நோய் என்று படுத்தான்; தனது சுற்றத்தார் கதறி அழும்படியாக இறந்துபட்டான் என்று சொல்லும் நிலை உனக்கும் வந்துவிடும்.

  

மூப்புமேல் வாராமை முன்னே, அறவினையை

ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்

புறத்து இரு போக என்னும் இன்னாச்சொல் இல்லுள்

தொழுத்தையால் கூறப் படும்.       ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கிழத்தனம் வந்து, உடம்பு தளர்ந்து போவதன் முன்பாகவே, நற்பணிகளை விடாது முயன்று, விரைந்து செய்து முடித்து விடுதல் வேண்டும். இல்லையென்றால், "நீ வீட்டில் இருந்து என்ன பயன்? போ வெளியே" என்று, வீட்டில் உள்ளவர்களால் அல்ல, வீட்டில் உள்ள வேலைக்காரர்களாலேயே விரட்டித் துரத்தப்படும் இழிநிலை வந்துவிடும்.

 

     புல்லறிவாளர் நல்லது செய்ய அறியாதவர்களாய், பிறரால் இகழவும் படுவர்.

 

காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைப்பிடித்துச்

சாலச் செய்வாரே தலைப்படுவார், -- மாலைக்

கிடந்தான் எழுதல் அரிதால்மற்று என்கொல்

அறங்காலைச் செய்யாத வாறு.      ---  அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     அறச் செயல்களை இளம் பருவத்திலேயே செய்வோம் என்று எண்ணி, உறுதியாகச் செய்பவர்களே உயர்ந்தவர் ஆவார். இரவில் படுத்த ஒருவன், மறுநாள் காலையில் எழுந்திருப்பது உலகத்தில் அருமையாகவே காணப்படுகின்றது. இதனை அறிந்திருந்தும், இளமைப் பருவத்திலேயே அறத்தினைச் செய்யாது இருப்பது அறியாமையே ஆகும்.

 

 

மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து

கூற்ற அரசன் குறும்பு எறியும், --- ஆற்ற

அற அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால்

பிற அரணம் இல்லை உயிர்க்கு.    ---   அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     எமனாகிய அரசன், முதுமை, கொடிய நோய்கள் என்னும் படைகளை முன்னே அனுப்பிவிடுவான்.அந்தப் படைகள் வந்து நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.  பின்னர் தான் வந்து, நமது உடம்பாகிய கோட்டையைத் தகர்த்து விடுவான். எனவே, பலவற்றாலும் நன்கு ஆராய்ந்து, மிகச் சிறந்து அறமாகிய பாதுகாப்பான கோட்டையை அடைந்துவிட வேண்டும். உயிருக்குச் சிறந்து பாதுகாப்பான இடம் அது அல்லாமல் வேறு இல்லை.   

 

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்

ஆற்றும் துணையும் அறஞ்செய்க, --- மாற்று இன்றி

அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற்று உடன் இயைந்து

துஞ்சு வருமே துயக்கு.      ---  பழமொழி நானூறு.

 

இதன் பதவுரை ---

 

     அச்சத்தைத் தருகின்ற நோய்களும், முதுமையும் வந்தபோது, உடனே கூற்றுவனும் வந்து சேர்வான். இந்த உடம்பினை விட்டு உயிரானது நீங்கிப் போகும். அறிவு மயக்கத்தை விடுத்து இதனை உணர்தல் வேண்டும். அரிதினும் அரிதாய இந்த மக்கள் பிறவியைப் பெற்றதன் பயனாக, உடம்பு உள்ளபோதே, இயன்ற வகைகளில் எல்லாம் அறச் செயல்களைச் செய்து வருதல் வேண்டும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...