பெறுதற்கு அரியது மானிடப் பிறவி
-----
"மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே" என்பது தொல்காப்பியம். "அரிது அரிது மானிடராயப் பிறத்தல் அரிது" என்றார் ஔவைப் பிராட்டியார். "பெறுதற்கு அரிய பிறவி" மானிடப் பிறவி என்றார் அருணகிரிநாதர்.
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்,
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்;
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறு இழந்தாரே.
என்கின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.
பெறுதற்கு அரிய பிறவியாகிய மானிடப் பிறவியைப் பெற்றதன் பயனாக, நன்மை தீமைகளைப் பகுத்து அறிகின்ற, ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு விளங்கப் பெறவேண்டும். பிறவி என்பது அவரவர் முற்பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகளின் பயனாக அமைவதால், இன்பமும் துன்பமும் விரவியே இருக்கும். ஆனால், மக்கள் இன்பத்தையே பெரிதும் எப்போதும் விரும்பி, துன்பம் ஒருக்கால் வந்தபோதும் துடித்து அயர்ந்து போகின்றனர். துன்பத்திற்குக் காரணம் முன்வினைப் பயன் என்பதை எண்ணுவதில்லை. யாராலோ உண்டாக்கப்பட்டதாக எண்ணி, பிறருக்குத் துன்பத்தையும் செய்கின்றனர். இப் பிறவியில் அனுபவிக்கின்ற துன்பமானது, முன்வினைப் பயன் என்று தெளிந்தவர், இனிவரும் பிறவியிலாவது துன்பம் தம்மைத் தாக்காது இருத்தல் வேண்டும் என்பதற்காக, இந்தப் பிறவியில் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கும் நல்லறிவைப் பெற்றுத் திகழ்வர்.
"நோய் எல்லாம் நோய் செய்தார் மேல ஆம், நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர்"
என்று அருளி, மனிதகுலத்தைத் தெருட்டினார் திருவள்ளுவ நாயனார்.
பெறுதற்கு அருமையான மனிதப் பிறவியை அடைந்தும், அதை அடைந்த பேற்றினை, அது கிடைத்தன் அருமையைச் சிறிதும் மதித்துப் போற்றாமல், செம்மை நெறியை மறந்து, வெம்மை நெறியில் உழன்று, இறுதியில் நன்மை என்பது ஏதும் விளையாமல் துன்பத்திலேயே உழலுகின்றவர்களைப் பார்த்து, அவர்களை மனிதர்கள் என்று சொல்ல மனம் வரவில்லை திருமூல நாயனாருக்கு. அவர்களை மனித வடிவில் இருக்கும் பிராணிகள் என்னும் கருத்தில் "பெறுதற்கு அரிய பிராணிகள்" என்றார். பிராணன் மட்டும் இருப்பவை பிராணிகள். அவற்றிற்கு நன்மை தீமை என்பதைப் பகுத்து அறியும் அறிவு இல்லை. அப்படி ஒரு பிராணியை மனித வடிவில் பார்ப்பது என்றால், அது "பெறுதற்கு அரிய பிராணி" என்பதில் ஐயம் ஏதும் இருப்பதற்கு இல்லை.
மக்கள் உடம்பு பெறுவது மட்டும் அரியது இல்லை. அது பெற்றபின், மக்களுக்கு உரிய அறிவைப் பெறுவதும் அரிதானதுதான். அவ்வாறு அரிய அறிவைப் பெற்றவர்கள், அறநெறியில் இருந்து பிறழமாட்டார்கள். அந்த உயர் நெறிக்கு ஏற்பவே நின்று ஒழுகுவார்கள் என்கின்றது "அறநெறிச்சாரம்" என்னும் நூல்.
மக்கள் உடம்பு பெறற்கு அரிது, பெற்றபின்
மக்கள் அறிவும் அறிவு அரிது, --- மக்கள்
அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்;
நெறிதலை நின்று ஒழுகுவார்.
இதன் பொருள் ---
மக்கட் பிறப்பினை அடைவது என்பது மிகவும் அருமையானது ஆகும். அந்த அரிய பிறவி கிடைத்தாலும், மக்கள் உணர்வு ஆகிய அறிவை அடைதல் என்பது, மக்கள் பிறப்பினை அடைவதைக் காட்டிலும் மிக அருமையானது ஆகும். ஆறறிவோடு தோன்றி, அறிய வேண்டுவனவற்றை அறிந்தவர்கள், அறநெறியில் இருந்து ணிறிதும் தவறாதவராய், அறநெறியினை மேற்கொண்டு, அதற்கு ஏற்ப நடப்பர்.
நன்கு வளர்க்கப்படுகின்ற பயிரின் ஊடு, களையானது தோன்றுவதைப் போல, உயிரில் குற்றங்கள் உண்டாவது இயல்பு. அதற்குக் காரணம் உயிரினிடத்துப் பொருந்தி உள்ள மலம். மலம் என்றாலே நீக்கக் கூடியது, களையக் கூடியது என்று தெரியும். உயிரில் படிந்துள்ள அழுக்கை, அன்பு, தொண்டு என்னும் நீரால் கழுவித் தூய்மை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் பழி, பாவம் நிற்காது. பழி, பாவம் இல்லையானால், துன்பமும் இல்லை.
பயிரில் களைகளைந்து பண்பு ஆற்றி நிற்கும்
செயிர் இல் உழவன் எனச் சேர்ந்த --- உயிரில்
பழிபாவம் யாதும் படியாமல் காத்தான்,
அழியா வாழ்வு உற்றான் அமர்ந்து. --- தருமதீபிகை.
உழவன் களைகளைக் களைந்து நீக்கிப், பயிர்களை வளர்ப்பது போல, பழிபாவங்களை ஒழித்து ஒதுக்கித் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்பவன் என்றும் அழியாத இன்ப வாழ்வை அடைவான்.
பயிரோடு சேர்ந்து வளரும் களைகள் பயிரைக் கெடுப்பதுபோல், உயிரோடு சேர்ந்து வளரும் காமாதி குற்றங்கள் உயிரைக் கெடுக்கும். ஆதலால், அவை அணுகாதபடிக்கு, மனமானது மாசுபடாமல் ஒழுகி உயர்வு அடைதல் வேண்டும்.
உள்ளம் புனிதம் உடையான் உயர்ந்து, இனிய
தெள்ளமிர்தம் என்னத் திகழுவான் --- உள்அமைந்த
உள்ளத்தே நல்லியல்பு இல்லான், உலகிற்கு ஓர்
கொள்ளித் தேள் என்றே குறி. --- தருமதீபிகை.
தூய்மையான மனத்தை உடையவன் சொல்லும் செயலும் புனிதமாய் விளங்கி, எல்லார்க்கும் இனிமையாய் இன்பத்தைத் தந்து நிற்பதால், அவன் தெளிந்த அமிரதம் போன்றவன் ஆவான். உள்ளம் தீயதாக இருக்குமாயின், அவன் கொடுமை மண்டி இருக்கும் தீயவனாய் இருந்து, கொள்ளித் தேள் போல எல்லார்க்கும் தீமையே புரிபவனாக இருப்பான். கொள்ளித் தேள் என்பது தேள்களுக்கு உள்ளே கொடிய விடத்தை உடையது என்பதால், தீயவர்களில் சிறந்து நிற்போனை, "கொள்ளித்தேள்" என்றார்.
உருவத்தால் மனிதனாக இருந்தாலும், உள்ளத்தே நல்ல இயல்பு இல்லையானால், அவன் பொல்லாத ஒரு கொள்ளித் தேள் என்றே உலகத்தாரால் கருதப்படுவான்.
நல்ல இயல்பு இல்லையானால், அந்த மனிதன் நச்சுப் புழுவைப் போலத் தொல்லையே செய்வான் (WITHOUT GOOD NATURE, MAN IS BUT A BETTER KIND OF VERMIN) என்றார் BACON என்னும் மேலைநாட்டு அறிஞரும்.
எனவே, அரிதான மக்கள் பிறப்பை அடைந்தால் மட்டும் போதாது. மக்கட்பிறப்புக்கு உரிய அறிவு விளங்கவேண்டும்.
அறிவு என்றதுமே, பல நூல்களைப் படித்து, பல விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பது அறிவு என்று பலரும் எண்ணுகின்றனர். அவையெல்லாம் உலக நூல்கள். அவைகளால் பிழைப்புதான் நடக்குமே ஒழிய, உயிருக்கு ஆதாயம் ஏதும் இல்லை. உலக நூல்களை ஓதுவதை விடுத்து, அறிவு நூல்களை ஓதுதல் வேண்டும் என்கின்றது நாலடியார். கல்வி என்னும் கருவியைக் கொண்டு, மெய்யுணர்வு பெறுதல் வேண்டும். மெய்யுணர்வு என்றாலும் நுண்ணுணர்வு என்றாலும் ஒன்றே. நூல் உணர்வு நுண்ணுணர்வு ஆகாது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்னும் முதுமொழியைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல். --- நாலடியார்.
இதன் பொருள் ---
அறிவினால் சொல்லப்பட்ட அளவு அமைந்த கருவியாகிய கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரிய வாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல என்று (நான் படித்துள்ளேன், எனக்கு இது தெரியும் என்று எல்லாம்) கூச்சல் இடும் அவ்வளவே ஆகும். அல்லாமல், அவ் உலக நூல்களைக் கற்றதைக் கொண்டு பெற்ற அறிவினைக் கொண்டு, பிறவித் துன்பங்களால் வருகின்ற தடுமாற்றத்தை நீக்கிக் கொள்ளும் முறையை அறிந்தவர் இல்லை.
அறிவு நூல்களைக் கற்பது இயலாதபோது, கற்றவர்களையாவது சேர்ந்து அவரோடு பழகி வந்தால் நல்லறிவு விளங்கும் என்கின்றது நாலடியார்.
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு.
இதன் பொருள் ---
அறிவு நூல்களைக் கற்காதவர்கள் என்றாலும், கற்றறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து நாளும் பழகி வந்தால், பெரோயிர்களது சேர்க்கையால், கொஞ்சம் கொஞ்சமாக நல்லறிவானது வாய்க்கப் பெறும். எப்படி என்றால், சிறந்த அழகும் மணமும் நிறைந்த பாதிரிப் பூவை வைத்திருந்த மண்பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் அதன் மணம் கிடைப்பது போல.
சரி, கற்றவர்கள் எந்த இனத்தில் உள்ளார்கள். உயர்ந்த இனத்தில் தானே என்று எண்ணத் தோன்றும். இதற்கு விடை பகருகின்றது பின்வரும் புறநானூற்றுப் பாடல்..
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவு உடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.
இதன் பொருள் ---
கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும் போது வேண்டிய உதவிகள் செய்தும், வேண்டும் பொருள்களைத் தந்தும் (கற்றுச் சிறந்து ஓங்கி வாழும்) பின்னாளில் இப்படி இருந்த நிலைமைகளை எண்ணி வருந்தாமலும், வெறுப்பு அடையாமலும் கற்பது நல்லது ஆகும்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல பிள்ளைகளுள், கல்விச் சிறப்பால் உயர்ந்தவனையே தாய் மனம் விரும்பும். கல்லாத பிள்ளையை எண்ணி, தாயின் மனம் வேறுபடுதல் கூடும். வீட்டில் மட்டும் அல்லாது, ஒஎளியிடங்கிளல் கூட, ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் மூத்த பிள்ளையை வருக என்று அழைத்துச் சிறப்புச் செய்யாமல், அந்தக் குடும்பத்தில் உள்ள கற்றறிந்த பிள்ளையையே அரசனும் கூட விரும்புவான். அந்தப் பிள்ளை சொல்வதையே அரசனும் கேட்பான்.
வேறு வேறு வகையாகச் சொல்லப்பட்ட நான்கு குல மக்களில், கீழ்ச் சாதிக்காரன் ஒருவன் கற்றவனாய் இருந்தால், மேல் சாதியான் அவனிடம் சென்று பணிந்து கற்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாவான். எனவே, இப்படிப்பட்ட சிறப்பினை உடைய கல்வியை ஒருவன் எப்படியேனும் கற்றுத் தெளிதல் வேண்டும்.
இதையே நாலடியார் வலியுறுத்தி இருப்பதையும் காணலாம். கல்வியின் முன் குலத் தாழ்வு உயர்வு செல்லாது.
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணில் கடைப்பட்டான் என்று இகழார் - காணாய்,
அவன்துணையா ஆறுபோய் அற்றே, நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்.
இதன் பொருள் ---
படகு செலுத்துபவன் தாழ்ந்த குலத்தவனாக இருக்கின்றானே என்று எண்ணி, யாரும் ஆற்றைக் கடக்க எண்ணாமல், கரையிலேயே இருந்து விடமாட்டார்கள். அவன் உதவியால் படகில் ஏறி, அக்கரை போய்ச் சேருவார்கள். அதுபோலவே, கல்வியில் சிறந்தவர்கள் எந்தக் குலத்தவர் ஆனாலும், அவரைத் துணையாகக் கொண்டே நூல்களைக் கற்று,
மெய்ப்பொருள்களை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
பின்வரும் வெற்றிவேற்கைப் பாடல்களை அறிந்து தெளிக.
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே.
கல்லாதவன் தன் குலத்தின் மேன்மையைப் பாராட்டும் வார்த்தை பதர் போலப் பயனற்றதாகும்.
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே.
நான்கு என்று வகுக்கப்பட்ட குலங்களில், உயர் குலத்தில் பிறந்தவன் கல்லாதவன் ஆயின், அவன் தாழ்ந்த இடத்தில் இருக்கத் தக்கவனே.
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.
எக்குலத்தில் பிறந்து இருந்தாலும், யாராக இருந்தாலும் கற்றோரை மேலிடத்தில் வருக என்று உபசரித்து அழைப்பார். தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், வயதில் இளைஞனாக இருந்தாலும், கற்றோரையே மேலிடத்தில் வருக என்பர்.
No comments:
Post a Comment