நிலையற்ற செல்வத்தைப் பெற்றால், நிலையான
அறம் செய்க
-----
திருக்குறளில் "நிலையாமை" என்னும் ஓர் அதிகாரம்.
நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "நிலைபேறு இல்லாத செல்வத்தை ஒருவன் பெற்றால், அதைக் கொண்டு, நிலையான அறங்களை உடனே செய்திடல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.
நல்வினைப் பயன் உள்ளபோதே ஒருவனுக்கு செல்வம் வந்து சேரும். அது இல்லாத இடத்து, நில்லாது நீங்கும்.
செல்வத்தினால் செய்யப்படும் அறங்களாவன -- பயனை நோக்காது செய்யும் கடவுள் பூசையும், தண்ணீர்ப் பந்தர் வைத்தல், பெரியோர் தங்க மடம் அமைத்தல், உயிர்களைக் காத்தல், கல்விச் சாலைகளை உருவாக்கல், நிழல் மரங்களை வளர்த்தல், அன்ன சத்திரம் வைத்தல் முதலாயின எனப்பட்டது.
அற்கா இயல்பிற்று செல்வம், அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
என்பது நாயானர் அருளிய திருக்குறள்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க....
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால், தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க ;
அகடுஉற யார்மாட்டும் நில்லாது, செல்வம்
சகடக்கால் போல வரும். --- நாலடியார்.
இதன் பதவுரை ---
துகள் தீர் பெரு செல்வம் --- குற்றமற்ற சிறந்த செல்வமானது, தோன்றியக்கால் --- ஒருவனுக்கு உண்டானால், தொட்டு --- அது தொடங்கி, பகடு நடந்த கூழ் --- ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க --- விருந்தினர் முதலிய பலரோடும் கூடி உண்ணுக, ஏனென்றால்; செல்வம் --- பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது --- உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்து இராமல், சகடக்கால் போல வரும் --- வண்டிச் சக்கரம் சுழலுவது போல மாறிப் புரளும்.
செல்வம் யாரிடத்திலும் நிலைத்து இராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்ஆனும் ஒன்றுதம் கைஉறப் பெற்றக்கால்,
பின்ஆவது என்று பிடித்துஇரா, - முன்னே
கொடுத்தார் உயப்போவர், கோடுஇல்தீக் கூற்றம்
தொடுத்துஆறு செல்லும் சுரம். --- நாலடியார்.
இதன் பதவுரை ---
என் ஆனும் ஒன்று --- யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் --- தமது கையில் கிடைக்கும்படி பெறுவாரானால்,, பின் ஆவது என்று --- தனது மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா --- இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் --- இளமையிலேயே அறத்தைச் செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் --- நடுவுநிலைமை உள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு --- கயிற்றால் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் --- தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.
இளமையிலேயே அறம் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.
சிறிது கிடைத்தாலும் அறம் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாய் இருத்தலின், கிடைத்த உடனே அறத்தில் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கம் செய்து (உலோபம்) கொண்டிருத்தல். அறம் ய்வார் கூற்றுவன் உலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணிய உலகுக்குப் போவர்.
யானை எருத்தம் பொலிய, குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும், - ஏனை
வினைஉலப்ப, வேறுஆகி வீழ்வர்,தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள. --- நாலடியார்.
இதன் பதவுரை ---
யானை எருத்தம் பொலிய --- யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் --- குடை நிழலில் சேனைத் தலைவராய் --- பல சேனைகட்குத் தலைவராக, சென்றோரும் --- ஆரவாரமாய் உலாச் சென்ற அரசர்களும், ஏனை வினை உலப்ப --- மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள --- தாம் திருமணஞ் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் --- முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலை குலைவர்.
யானை எருத்தத்தில் சென்றோரும் இங்ஙனம் நிலைகுலைவர் என்றமையால், ஏனையோர் நிலைகுலைதல் சொல்லாமலே பெறப்படும். தம் மனையாளைப் பிறர் கவர்ந்து கொள்ளுதலைவிட இழிவானதொன்று வேறு இல்லாமையால், அடியோடு ஆற்றலைக் கெடுத்துவிட்ட வறுமையின் பெருங் கொடுமைக்கு அதனை எடுத்துக்காட்டினர்.
அரையது துகிலே, மார்பினது ஆரம்,
முடியது முருகுநாறும் தொடையல், புடையன
பால்வெண் கவரியின் கற்றை, மேலது
மாலை தாழ்ந்த மணிக்கால் தனிக்குடை,
முன்னது முரசுமுழங்கு தானை, இந்நிலை
இனைய செல்வத்து ஈங்கு இவர் யாரே
தேவர் அல்லர் இமைப்பதுஞ் செய்தனர்,
மாந்தரே என மயக்கம் நீங்கக்
களிற்றுமிசை வந்தனர் நெருநல், இன்று இவர்
பசிப்பிணி காய்தலின் உணங்கித் துணி உடுத்து
மாசுமீப் போர்த்த யாக்கையொடு
தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே. --- ஆசிரியமாலை.
இதன் பொருள் ---
அரையில் நல்ல ஆடையை உடுத்தி உள்ளார். மார்பில் முத்து மாலை அசைகின்றது. தலையிலே மணம் நிறைந்த மலர்களால் ஆன சரத்தை அணிந்து உள்ளார். பக்கத்திலே பசுமையான வெண் கவரி வீசப்படுகின்றது. மேலே மாலைகளைச் சூடி உள்ள, இரத்தினக் கால்களை உடைய ஒப்பற்ற குடை நிழற்றுகின்றது. அவர் முன்னர் சேனைகள் செல்ல, முரசு முழங்குகின்றது. இப்படிப்பட்ட பெரும் செல்வத்துள் செல்பவர் யார்? தேவராக இருப்பாரோ? இல்லை, இல்லை அவருடைய கண் இமைக்கின்றது. மயக்கம் தீர உணர்ந்தால், ஆம், இப் பெரும் செல்வர் மனிதரே ஆவார் என்று எல்லோரும் வியக்கும்படி, யானை மீது ஏறி நேற்று வந்தவர். இன்று இவர் செல்வமெல்லாம் சுருங்கி, வறியவர் ஆகி, பசி நோயானது வருத்த உள்ளமும், உடலும் வாடி, துணி ஒன்றை இடுப்பிலே கட்டி, அழக்கு மூடிய உடம்போடு தனியாக ஓரிடத்தல் இருந்தார்.
இன்றுளார் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே பிறருடைமை யாயிருக்கும்--நின்ற
கருமத்த ரல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
தருமம் தலைநிற்றல் நன்று. --- அறநெறிச்சாரம்.
இதன் பதவுரை ---
இன்று உளார் இன்றேயும் மாய்வர் --- இன்றைக்கு இருப்பவர் இன்றைக்கே கூட இறக்க நேரிடலாம். அவர் உடைமை அன்றே பிறர் உடைமை ஆய் இருக்கும் --- அவர் செல்வம் அவர் இறந்த அப்பொழுதே அயலாருடைய செல்வமாகும், (ஆதலால்) அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார் --- கொடிய எமனது ஆணையின்கீழ் வாழும் மக்கள் எல்லாரும், நின்ற கருமத்தர் --- நிலைபெற்ற செயலை உடையராய், தருமம் தலைநிற்றல் நன்று --- அறத்தினை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.
தக்கம் இல் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
மிக்க வகையால் அறஞ்செய் கெனவெகுடல
அக்காரம் பால்செருக்கு மாறு. --- பழமொழி நானூறு.
இதன் பதவுரை ---
தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் --- மாறுபாடில்லாத செயல்களை உடைய செல்வத்தை ஒருவன் பெற்றால், அப்பொருள் தொக்க வகையும் முதலும் அது ஆனால் --- அச் செல்வம் திரண்டு வந்த திறனும் அதற்குக் காரணமாயிருப்பதும் அறமே என்று அறியப்படுமானால், மிக்க வகையால் அறம் செய்க என --- பலதிறப்பட்ட நெறியால் அறம் செய் என்று ஒருவன் சொல்ல, வெகுடல் --- அவனைச் சினத்தல், அக்காரம் பால்செருக்கு மாறு --- சர்க்கரை கலந்த பாலை உட்கொள்ளாது குமட்டித் துப்புதலை ஒக்கும்.
அறத்தால் பொருள் பெறலாம் என்று அறிபவன் பலதிறப்பட்ட நெறியால் அறம் இயற்ற வேண்டும். அறம் செய்க என்று அறிவுறுத்துபவனைக் கோபித்தல், சருக்கரை பாலைக் குடித்து மகிழாது, துப்பவது போன்றது ஆகும்.
அருமை. அருமை. இந்த அற்புதமான பணிக்கு மிக்க நன்றி ஐயா. தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. நன்றி ஐயா.
ReplyDelete