விதி என்பது என்ன?
அதை வெல்ல முடியுமா?
-----
விதி விதி என்று மக்கள் நொந்துகொள்வதை பரவலாகக் காணலாம். விதி என்பது என்ன? விதிக்கப்படுவது விதி.
அரசுப் பணியிலும், பிற பணிகளிலும் பல்வேறு விதிகளை பார்த்து உள்ளோம். அவை யாரால் விதிக்கப்பட்டன? ஆள்பவர்களால். ஏன் விதிக்கப்பட்டன? நன்மையைக் காத்து, நன்மையைப் பெருக்கி, தீயவற்றை அழித்து, அறத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு.
அறம் வேறு. நீதி வேறு.
அறம் எல்லோருக்கும் பொதுவானது.
நீதி அவரவர் தன்மையையும், செயலையும் பொறுத்தது.
ஆன்மாக்கள் செய்யும் செயல்கள் நல்வினை, தீவினை என இருவகைப்படும்.
எல்லாச் செயல்களுக்கும் பயன் உண்டு. நல்வினையானது புண்ணியமாக நின்று, நற்பயனைத் தரும். தீவினையானது, பாவமாக நின்று தீய பயனைத் தரும்.
இந்தப் பிறவியில் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு, "ஆகாமியம்" என்று பெயர். "ஏறுவினை" என்று தமிழில் இதற்குப் பெயர்.
பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை, தீவினை என்னும் இரண்டும் "இருப்புவினை" என்னும் தொகுதியில் சேரும். இதற்கு "சஞ்சிதம்" என்று பெயர்.
எடுக்கப் போகும் பிறவியில் அனுபவித்துக் கழிக்க வேண்டிய வினைகளுக்கு (நல்வினை தீவினை இரண்டும் கலந்தே வரும்) "பிராரத்தம்" என்று பெயர். "பிராப்தம்" என்றும் சொல்லப்படும். தமிழில் இது "ஏன்ற வினை" எனப்படும்.
இந்த சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்று சொல்லப்படும் மூவினைகளும், ஒன்று முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிர்களுக்கு இல்லை. காரணம், அவைகளுக்கு நன்மை தீமையைப் பகுத்து அறியக் கூடிய அறிவு இல்லை. ஆறாவது அறிவு படைக்கப்பட்ட மனிதப் பிறவிக்கே உண்டு. ஆறாவது அறிவு என்பது, "நல்லதன் நன்மையையும், தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்ந்து தெளிதல்" ஆகும். இதுவே பகுத்தறிவு எனப்படுவது. பகுத்தறிவு என்பது விதண்டா வாதம் புரிந்து, மேலோர் சொன்னதை மறுத்துக் கூறுதல் இல்லை.
நன்மை தீமையை உணர்ந்து, தனக்கும் பிறருக்கும் நன்மை பயப்பவைகளை மனதால் நினைப்பது மனதால் செய்யும் நல்வினை ஆகும். தீமை பயப்பவற்றை மனதாலும் நினைப்பதை ஒழிப்பதும் நல்வினையே ஆகும். அல்லாத நினைவுகள் யாவும் தீவினையே.
நன்மை தரும் சொற்களை வாயால் சொல்லுவதும், தீமை பயப்பவற்றை சொல்லாமல் ஒழிவதும் நல்வினை ஆகும். அல்லாத சொற்கள் யாவும் தீவினையே.
அவ்வாறே, நன்மை தரும் செயல்களைச் செய்வதும், தீய செயல்களைச் செய்யாமல் விடுப்பதும் நல்வினை ஆகும். அல்லாதவை யாவும் தீவினையே.
நல்வினை புண்ணியம் ஆக நின்று இன்ப அனுபவத்தைக் கொடுக்கும். தீவினை பாவம் ஆக நின்று துன்ப அனுபவத்தைக் கொடுக்கும்.
இவ்வாறு இன்ப, துன்ப அனுபவங்களுக்கு என, இறைவனால் வகுத்து, எடுத்து வருவதுதான் "பிராரத்த வினை" ஆகும்.
உயிர்களுக்கு அவற்றின் வினைப் போகத்திற்கு ஏற்ப, உடலைப் படைத்து அருளுகின்றது பரம்பொருள். உயிரானது உடம்பில் பொருந்துகின்ற கரு உண்டான காலத்திலேயே, அதன் சாதி, ஆயுள், போகம் ஆகியவை நிச்சயிக்கப் பெறுகின்றன. வினைநுகர்வு தீர்ந்து விட்டால், ஒரு கணம் கூட இந்த உடம்பு நில்லாது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போது அளவும் நில்லாது கண்டாய்" என்றார் பட்டினத்து அடிகள்.
உயிரை உடம்பில் இருந்து கூறு செய்து, உடம்பை விட்டு, உயிரைக் கொண்டுபோக கூற்றுவன் வருவான். அவனது ஏவலின்படிக்கு அமைந்தவன் கூற்றன். உடம்பையும் உயிரையும் கூறு செய்வதால் கூற்றன் எனப்பட்டான். அவன் எப்போது வருவான் என்பது யாராலும் அறிந்துகொள்ள முடியாதது.
"எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்;
அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான்; பொருள்தரப் போகான்;
சாற்றவும் போகான்; தமரொடும் போகான்;
நல்லார் என்னான்; நல்குரவு அறியான்;
தீயார் என்னான்; செல்வர் என்று உன்னான்;
தரியான் ஒருகணம், தறுகணாளன்;
உயிர்கொடு போவான், உடல்கொடு போகான்"
என்னும் கபிலர் அகவல் இதை உணர்த்தும்.
இதன் பொருள் ---
எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பான் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவன் ஆனவன், தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான், 'வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு' என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை அவன் நாளடைவில் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகாது, ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான், தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கவே மாட்டான், அவன் அஞ்சா செஞ்சம் படைத்தவன், உயிரைத் தன்னோடு கொண்டு போவான், உடம்பைக் கொண்டு போக மாட்டான். (அது பயன்றறது என்று தள்ளி விடுவான்)
ஒர் உயிரானது கருவில் புகும் அளவிலேயே, அது அனுபவித்துக் கழிக்கவேண்டிய பிராரத்த வினையானது இறைவனால் அளவிடப்பட்டு விதிக்கப்பட்டுவிடும். அதற்கு ஏற்ப அதன் பிறப்பும் ஆயுளும் அமையும்.
இப்படி, அனுபவித்துக் கழிப்பதற்கு என விதிக்கப்பட்டது தான் "விதி". இது "ஊழ்" எனப்படும். "தலை எழுத்து" என்று மக்கள் வழக்கில் சொல்லப்படுவதும் இதுவே. இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிது அல்ல. அதனால்தான், "ஊழின் பெருவலி யா உள" என்றார் திருவள்ளுவ நாயனார்.
தீயவற்றை மனதால் நினைவதும், வாயால் சொல்லுவதும், செயலில் காட்டுவதும் விட்டுவிட வேண்டும். புண்ணியம் மட்டும் செய்தால் போதுமா என்னும் வினா எழும். புண்ணியத்தின் பலனை அனுபவிப்பதற்கும் ஒரு பிறவி வேண்டும்.
புண்ணியத்தின் பலனை நாடி இருப்பவர்களுக்கு, ஊழ்வினையை மாற்ற வழி இல்லை.
"இருள்சேர் இருவினை" என்றார் திருவள்ளுவ நாயனார். இருவினைகளுள் ஒன்றான புண்ணியமும் பிறவிக்கு வித்தாக வருவதால், அவ்வாறு தெரிவித்தார்.
பயனைக் கருதாது, பயனை எதிர்பார்க்காது, பிற உயிர்களுக்கு நன்மையை மனத்தாலும், வாக்காலும், செயலாலும் புரிபவர்களுக்கே ஊழ்வினை இல்லையாகும். அதனை நிர்ணயம் செய்வது, வினையை நமக்கு விதித்து, பிறவியை வகுத்த இறைவனே ஆகும்.
எனவே, நிஷ்காமியாகத் தனது கடமைகளை ஒருவன் செய்துகொண்டு இருந்து,இறைவனைச் சரண் அடைந்தால், வினைகள் அற்றுப் போகும். இதுவே விதியினை மாற்றும் உபாயம் ஆகும்.
இதைத்தான், திருவள்ளுவ நாயனார், "ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர்" என்றார்.
"ஊழ் மிகவும் வலி உடையது" என்று சொன்ன திருவள்ளுவ நாயனாரே, அதனை "உப்பக்கம் காணவும் வழி உள்ளது" என்று காட்டி இருப்பதை நன்கு சிந்திக்க வேண்டும்.
ஊழின் பெருவலி யாஉள, மற்று ஒன்று
சூழினும் தான் முந்து உறும். --- திருக்குறள்.
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர். --- திருக்குறள்.
இதைத் தான் புராணங்கள் நமக்குக் கதைகளின் வாயிலாகத் தெரிவிக்கின்றன. அவற்றின் உட்பொருளை, தாத்பரியத்தை உணர்ந்து தெளியவேண்டியது நமது பொறுப்பு. வெறும் கதையாகக் கேட்டுக் காலத்தைக் கழிப்பது உதவாது.
மூன்று புராண நிகழ்வுகளைச் சிந்தித்தால் இந்த உண்மை விளங்கும்.
ஒன்று, சந்திரனைப் பற்றியது.
நான்முகனின் மகனான தக்கனுக்கு 27 நட்சத்திரங்களே இருபத்து ஏழுப் பெண்களாகப் பிறந்தனர். அவர்கள் அனைவரையும் சந்திரனுக்குத் திருமணம் செய்வித்தான். சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தான். நாட்கள் செல்ல அவனது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தமது தந்தையாகிய தக்கனிடத்தில் கூறினர்.
தக்கனும் தனது மருமகனை அழைத்து தமது அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும்படியும், அவர்களுடன் அன்புடன் இருக்கும்படியும் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தான். இருப்பினும் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.
எனவே, மறுபடியும் பெண்கள் தனது தந்தையாகிய தக்கனிடம் முறையிட்டனர். தனது பெண்களின் துன்பம் சகியாது, உபபிரமன் ஆகிய தக்கன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
தக்கனது சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து, இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகன் என்னும் பிரமனை சந்தித்து, தன் குறையைச் சொன்னான்.
நான்முகனோ தன் வேலையில், தனது மகன் ஆகிய தக்கனும், மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று உறுதிகொண்டு உள்ளதாகவும், எனவே இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியுமாதலால், அவரைச் சரணடையுமாறும் சொன்னார்.
அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய, சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் வைத்து, இனி உனது ஒரு கலைக்கு அழிவில்லை ஆனாலும், தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும், என்னிடம் உள்ளதால் தினம் ஒரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். அவ்வாறே இன்றளவும் நிகழ்வதாக அமைந்துவிட்டது.
தன்னை நம்பி மணம் முடித்து வைக்கப்பட்ட மனைவியர்பால் அன்பு வைக்காதது, சந்திரன் செய்த பாவம். அந்தப் பாவத்தின் பலனாக, அவனது கலைகள் நாளுக்கு ஒன்றாகத் தேய்ந்து அழிவது என்பது அவனுக்கு ஏற்பட்ட விதி. அது தக்கனது சாப வடிவில் வந்தது. அந்த விதியை அவனால் மாற்ற முடியவில்லை. இறைவனைச் சரண் புகுந்தான், விதிமாற்றம் உண்டானது.
இரண்டாவது, மார்க்கண்டேயர் வரலாறு.
கவுசிக முனிவரது மகனாகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர், முற்கால முனிவரது மகளாகிய மருத்துவதி என்பவளை மணந்து, நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசியை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவநாதரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தார்.
வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விமலனாகிய சிவபெருமான், விண்ணில் தோன்றி, “மாதவரே! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்றனர். முனிவர் "புத்திர வரம் வேண்டும்" என்றார்.
அதுகேட்ட சிவபெருமான் புன்னகை பூத்து, இரண்டு OPTION-களை முனிவருக்கு வைத்தார்
“தீங்குறு குணமே மிக்கு,
சிறிதும் மெய்யுணர்வு இலாமல்,
மூங்கையும் வெதிரும் ஆகி,
முடமுமாய், விழியும் இன்றி,
ஓங்கிய ஆண்டு நூறும்
உறுபிணி உழப்போன் ஆகி
ஈங்கு ஒரு புதல்வன் தன்னை
ஈதுமோ மாதவத்தோய்” --- (மார்க்கண்டேயப் படலம், கந்தபுராணம்)
இது முதல் OPTION. இதன் பொருள் ---
பெரிய தவத்தில் சிறந்தவரே! தீய குணமே மிகுந்து, சிறிது கூட மெய் அறிவு இல்லாமல் ஊமை, செவிடு, முடம், குருடு உடையவனாகி, நூறு வயதுவரை நோயில் துன்பப்படும் புதல்வன் ஒருவனைத் தரலாமா?
“கோலமெய் வனப்பு மிக்கு,
குறைவு இலா வடிவம் எய்தி,
ஏலுறு பிணிகள் இன்றி,
எமக்கும் அன்புடையோன் ஆகி,
காலம் எண்ணிரண்டே பெற்று,
கலைகளைப் பயின்றுவல்ல
பாலனைத் தருதுமோ?
நின் எண்ணம் ஏன் ? பகர்தீ” --- (மார்க்கண்டேயப் படலம், கந்தபுராணம்)
இது இரண்டாவது OPTION . இதன் பொருள் ---
நல்ல அழகுள்ள உடம்பு, உறுப்புக்களில் குறைபாடின்றி நல்ல வடிவம், நோய்கள் இல்லாத நிலை, சிவனாகிய எம்மிடத்தில் அன்பு, பதினாறே வயதும், பலகலைகளையும் பயின்ற அறிவு ஆகியவற்றையுடைய பாலனைத் தரலாமா? உன்னுடைய எண்ணம் என்ன? சொல்வாய்?’ என்று இறைவன் கேட்டான்.
முன்னதை விடவும், பின்னதே சிறந்தது என்ற உணர்ந்த மிருகண்டு முனிவர், முன் சொன்னதையே அருளுமாறு வேண்டினார்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ஆகிய பரமசிவன் அருளால், மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி கருவுற்றாள். பத்து மாதங்கள் கழிந்து, இளஞ்சூரியனைப் போல் ஒரு குழந்தை தோன்றியது.
பிரம்மதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாய் விளங்கினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும், அவ்வாண்டு முடிந்தால், மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அவர்களது வருத்தத்தின் காரணத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயர் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டு இருந்தார்.
மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, உனக்கு என்ன வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் சிவபெருமான் திருவடிமேல் வீழ்ந்து,
“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய
மெய்யனே! பரமனே! விமலனே! அழல்
கையனே! கையனேன் காலன் கைஉறாது
உய்யநேர் வந்து நீ உதவுஎன்று ஓதலும்’ ---கந்தபுராணம்.
“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நமது திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.
மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி அவரை நெருங்க முடியாதவனாய் திரும்பிப் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, அவன் சினந்தான்.
சித்திரகுத்திரர் (சித்திரகுப்தர்) “மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை. ஆனால், மார்க்கண்டேயர் புரியும் சிவபூசையின் பயன் அதிகரித்து உள்ளதால் அவர் நமது உலகினை அடைவதற்கு நியாயமில்லை. அவர் திருக் கயிலாயம் செல்லத்தக்கவர்” என்று கூறினர்.
இயமன் உடனே தமது மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றான். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் கண்டு, அவரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறினான்.
அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரன் உலகையும் விரும்பார். உமது செய்கைக்கு உட்படமாட்டேன். இங்கிருந்து போ" என்றார்.
இதனை காலன் சொல்லக் கேட்ட, இயமன் சீற்றம் மிகுந்து, மார்க்கண்டேயர் முன் தோன்றினன். அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாய் இருந்தனர்.
கூற்றுவன் “மைந்தா! நீ என்ன நினைந்தாய்? ஊழ்வினையைக் கடக்க வல்லார் யாவர்? ஈசனார் அருளிய பதினாறு ஆண்டு என்னும் வரத்தை மறந்தாயா? நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, நான் வீசும் பாசத்தை விலக்காது. கடற்கரை மணல்களை எண்ணினும் வானத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம். எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு கமலாசனுக்கும் உண்டு. எனக்கும் உண்டு. ஆகவே பிறப்பு இறப்பற்றவர் சிவபெருமான் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும் மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லாது நான் மீண்டிடேன், விரைவில் வா” என்றான்.
மார்க்கண்டேயர் “அந்தகனே! அரன் அடியார் பெருமையை நீ அறிந்திலை. அவர்களுக்கு முடிவில்லை. முடிவு நேர்ந்தாலும் சிவபதத்தை அடைவரே அல்லாமல், இயமலோகத்தை அடையமாட்டார்கள். சிவபிரானைத் தவிர வேறு சிறுதெய்வத்தைக் கனவிலும் நினையார். தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை அறியாத நீ எனது ஆவிக்குத் தீங்கு நினைத்தாய். இது உனக்கே கேடு தருவதாக அமையும். போய் விடு" என்றார்.
“தீது ஆகின்ற வாசகம் என்தன் செவி கேட்க
ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். --- கந்தபுராணம்
இதனைக் கேட்ட, இயமன் “என்னையா அச்சுறுத்துகின்றாய்? என் வலிமையைப் பார்” என்று ஆலயத்துள் சென்று பாசத்தை வீசினான். அவன் வீசிய பாசம், மார்க்கண்டேயர் தழுவி இருந்த சிவலிங்கத்தின் மேலும் விழுந்தது.
இறைவன் சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு, தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தம் இலா ஆயுளை நல்கி மறைந்தனர்.
எனவே, மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட பதினாறு ஆண்டு ஆயுட்காலம் என்பது அவருடைய தவத்தின் காரணமாக, இறைவனால் மாற்றப்பட்டது.
அடுத்து, மூன்றாவதாக அங்கவேள் ஆகிய மன்மதன் அநங்கவேள் ஆகியது.
திருக்கயிலாய மலையில் சிவபிரான் யோகநிலையில் சிறிது காலம் அமர்ந்து இருந்தார். அது மற்றவர்க்குப் பல யுகமாகத் தோன்றியது. சூரபதுமனை வதைத்து நம்மை உய்விக்க, ஒரு புத்திரனைத் தந்து அருள்வோம் என்று வரம் அளித்த பெருமான், உமாதேவியாரைக் கூடாமல், யோக நிலையில் இருந்தால், எப்படிப் புத்திரன் தோன்றுதல் கூடும் என்று சிந்தித்த திருமால் முதலாய தேவர்கள், சிவபிரானின் யோகநிலையைக் கலைத்து, அம்பிகைபால் மோகத்தைக் கொள்ளுமாறு செய்யவேண்டும் எனக் கருதி, அதற்குத் தக்கவன் மன்மதனே எனத் துணிந்தனர். பிரமதேவர், மன்மதனை அழைத்து, சிவபிரான் மீது மலர்க்கணைகளைத் தொடுக்குமாறு கூறினான். மன்மதனை மறுத்தான். பிரமன் சபிப்பேன் என்றார். பிரமனது சாபத்தால் அழிவதை விடவும், சிவபிரானது கோபத்தால் அழிவது மேன்மையைத் தரும் என்று, மன்மதன் திருக்கயிலாயம் சென்று, சிவபிரான் மீது மலர்க்கணைகளைத் தொடுக்கலானான். சினம் கொண்ட சிவபிரான், நெற்றிக் கண்ணைத் திறந்தார். மன்மதன் சாம்பல் ஆனான்.
மன்மதன் சிவபிரானால் எரித்து அழிக்கப்பட்டாலும், அவனது ஆயுள் முடிவில்லையாதலால், அவனது தேவியாகிய இரதி வந்து வேண்ட, அவனை அநங்கனாகச் செய்தார். இரதிதேவிக்கு மட்டுமே அவனது உடம்பு புலப்படும். மற்றவர் கண்களுக்குப் புலப்படாது. இது மன்மதனுக்கு விதிக்கப்பட்டது.
அநங்கன் - அங்கம் இல்லாதவன். அதாவது உடம்பு இல்லாதவன். மன்மதன் அநங்கன் என்று அழைக்கப்படுபவன். ந+அங்கன் = உடம்பு இல்லாதவன். இது சமஸ்கிருதப் புணர்ச்சி. பலமொழிகளில் 'ந' என்பதற்கு "இல்லை" என்று பொருள். இலத்தீன் மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் NON எனப்படும். ஆங்கிலத்தில் NO எனப்படும். வடமொழியிலும், இந்தியிலும் 'ந' என்றால் இல்லை என்று பொருள். வேதங்கள் "ந + இதி" என்பதை "நேதி" என்று ஓதும். சமணர்கள் இல்லை என்பதை "நாத்தி" என்பார்கள். அத்தி என்றால் உண்டு என்று பொருள். ந+அத்தி என்றால் இல்லை என்று பொருள். உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு வரும்போது, ந + அங்கன் என்னும் சொல் அநங்கன் என்று வரும்.
எல்லாம் வல்ல பரம்பொருள் ஒருவரால் மட்டுமே நமது விதியை மாற்ற முடியும் என்பதும், அதற்கு, தனது விதியை நொந்துகொள்ளாமல், அதை விதித்த பரம்பொருளையே நாடி இருத்தல் வேண்டும் என்பதும் தெளிவாகும்.
வலியது ஆயினும், விதி வெல்லக் கூடியதே. "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்ற திருக்குறள் மெய்ம்மையானதே. வெல்லக் கூடிய உபாயத்தை அறிய வேண்டும்.
சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை --- உபாயம்
இதுவே மதி ஆகும், அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
என்னும் ஔவையார் வாக்கின்படி, சிவாயநம என்ற சிந்தித்து இருந்தால் உயிருக்கு விதி இல்லை. மரணம் இல்லை. இந்த உபாயத்தைக் கைக்கொள்வது தான் அறிவு ஆகும்.
"சிவாயநம" என்று சொன்னதால், சிவனைத் தான் வழிபடவேண்டும் என்பதாகக் கொள்ளுதல் பொருத்தம் அற்றது. அவரவர், எந்த வடிவத்தில் பரம்பொருளை வழிபடுகின்றார்களோ, அந்த வடிவத்தில், உரிய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இருத்தல் வேண்டும்.
ஆக, யாருடைய விதி எப்படி முடியும் என்பது மற்ற யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. விதியை விதித்த பரம்பொருள் ஒருவருக்குத் தான் தெரியும். விதித்தவனுக்கு மாற்ற வழி தெரியவில்லை என்றால், அவன் எல்லாம் வல்ல பரம்பொருள் என்னும் தன்மை அற்றவன் ஆகிவிடுவான்.
விதியை மாற்ற நம்மால் முடியாது. ஆனால் விதியை மாற்றிக் கொள்ளும் உபாயத்தை அறிந்து நம்மால் உய்தி பெறமுடியும்.
அதற்கு ஒரே வழி பற்று அற்று, நிஷ்காமியமாகப் பணி செய்து கிடக்கவேண்டும். பலனை எதிர்பார்த்துச் செய்தவது பணி ஆகாது. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். இது சரணாகதி ஆகும். இறைவனைச் சரணாக அடைதல்.
"கர்மண்யேவ அதிகாரஸ்தே, மா பலேஷு கதாசன" --- கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே என்கிறது பகவத் கீதை.
"தன் அடைந்தார் தம் வினை, நோய், பாவம் எல்லாம் அரித்தானை, ஆல் அதன் கீழ் இருந்து நால்வருக்கு அறம், பொருள், வீடு, இன்பம், ஆறங்கம் வேதம் தெரித்தானை, திருநாகேச்சரத்து உள்ளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே" என்றார் அப்பர் பெருமான்.
இதைத் தான், "தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும்" என்றார் ஆண்டாள் பிராட்டியார்.
இதனை, "மலர்மிசை ஏகினான் மலர் அடி சேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார்" என்று காட்டினார் திருவள்ளுவர். "சேர்தல்" என்பது இடைவிடாது சிந்தித்தலைக் குறிக்கும்.
பகவத் கீதையிலும் கண்ணன் இந்த உபாயத்தையே பின்வருமாறு அருளிச் செய்தார்...
"அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே,
தேஷாம் நித்யாபியுக்தானாம், யோகக்ஷேமம் வஹாம்யஹம்".
இது கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் 22-ஆவது பாடலாக வருவது.
இதன் பொருள் ----
எனக்கு அந்நியர் அல்லாதவராய் என்னையே நினைந்து எப்போதும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுக்கான யோகக்ஷேமத்தை நானே வழங்குகின்றேன்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு தாய் அன்னியமானவள் அல்ல. குழந்தைக்கு வேண்டிய முழுதும் அதன் தாயிடம் இருந்தே கிடைக்கின்றது. பிறந்த பின்னும் கூட, தாயைச் சார்ந்து இருக்கும் வரையில் தேடி வந்து அவள் குழந்தைக்கு ஊட்டுவாள். இது போன்றதே இறைவன் கருணை. அவனை நாடி இருப்போர்க்கு எக்காலத்தும் உண்டு.
"ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம்ஏகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வபாபேப்யோ மோக்ஷயஇஷ்யாமி மாசுச:"
இது பகவத் கீதையின் 18-ஆவது அத்தியாயத்தில் உள்ள, 66-ஆவது சுலோகம்.
இதன் பொருள் ---
எல்லாத் தருமங்களையும் அறவே தியஜித்து விட்டு என்னையே சரண் அடைவாயாக. எல்லாப் பாவங்களில் இருந்தும் உன்னை நான் விடுவிப்பேன். வருந்தாதே.
இதைத் திருவாசகம் பின்வருமாறு காட்டும்...
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய்! என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ?
எண்தோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய், பிழைசெய்வாய்,
நானோ இதற்கு நாயகமே.
இதன் பொருள் ---
எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எமது தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் ஆகிய எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அப்படி இருக்க, இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் (கர்த்தா) நானோ. இல்லை. நீயே.
ஆக விதியை வெல்ல வழி உண்டு என்பது உறுதி.
இதற்கு, முதலில், தன்னை அறியும் அறிவைப் பெறவேண்டும். தன்னை அறிந்த பின், இறைவனைச் சரணடைய வேண்டும்.
தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை,
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...
என்றும்,
முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்,
தன்னை அறிவது அறிவாம், அஃது அன்றிப்
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே.
என்றும் திருமூலர் அருளி இருப்பது சிந்திக்கத் தக்கது.
இதன் பொருள் ---
முதலில் நிகழும் அறிவு பெரிய தவ அறிவாயும், பின்னர் நிகழும் அறிவு அந்தத் தவத்தால் வரும் மெய்யறிவாயும் நிகழ்தல் வேண்டும். பின்னை அறிவு மெய்யறிவாய் நிகழ்ந்தவழியே முன்னை அறிவு தவ அறிவாய் நிகழ்ந்தமை அறியப்படும், இல்லையேல், அது வெற்றறிவாக அறியப்படும். முதல் அறிவால் நிகழ்ந்த தவத்தால் பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே. தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளே ஆம்.
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்,
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்,
சென்னியில் வைத்த சிவன் அருளாலே.
இதுவும் திருமந்திரம் தான். தத்துவஞானி என்றால் பெரிதாக எண்ணவேண்டாம். தத்துவம் என்பதன் பொருள் உண்மையை அறிதல் என்பது ஆகும்.
"மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்றும், "மெய்த் தன்மை காண்பது அறிவு" என்றும் திருவள்ளுவ நாயானார் காட்டியபடி, உண்மை அறிவைப் பெற்றுவிட்டால் அவர் தத்துவ ஞானியே. (அதற்குப் பெரிதாக சடைமுடியோ, தாடியோ, காவி உடையோ அவசியம் இல்லை.) அவர்கள் இறைவன் அருளாலே, முன்னைய வினையின் முடிச்சை அவிழ்க்கவும், அதனைப் பிசைந்து இல்லை என்று ஆக்கவும் முடியும்.
No comments:
Post a Comment