சலியாத கற்பக மரம்

 

சலியாத கற்பக மரம்

----

இந்திர லோகத்தில் சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம், பாரிசாதம் என ஐந்து மரங்கள் உள்ளதாகப் புராணங்கள் கூறும். இவை பஞ்ச தருக்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. இவற்றில் கற்பக மரம் என்பது அரசமரமே என்றும் கூறுவார்கள். மரங்களில் தான் அரசமரமாக உள்ளதாகக் கண்ணன் பகவத் கீதையில் கூறினார். பூலோகக் கற்பக மரம் என்று பனை மரத்தையும் கூறுவர். தேவலோகத்தில் உள்ள கற்பக மரத்தின் அடியில் இருந்து கொண்டு என்ன வேண்டும் என்று யார் எப்போது நினைத்தாலும் கிடைக்கும் என்றும் கூறுவார்கள். கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பெரியவர்கள் எப்போதும் சலியாமல் வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்குகின்ற கற்பக மரத்தைப் போன்றவர்கள் என்று குமரகுருபர அடிகளார் கூறுகின்றார்.

"கண்நோக்கு அரும்பா, நகைமுகமே நாள்மலரா,

இன்மொழியின் வாய்மையே தீங்காயா, - வண்மை 

பலமா, நலம் கனிந்த பண்புடையார் அன்றே 

சலியாத கற்ப தரு." --- நீதிநெறி விளக்கம். 

இதன் பதவுரை --- 

கண் நோக்கு அரும்பா - கண்ணினது குளிர்ந்த பார்வையே, முகையாகவும், (அரும்பு = முகை)  நகை முகமே நாள் மலரா - மலர்க்க முகமே அன்று அலர்ந்த புதுப் பூவாகவும், இன்மொழியின் வாய்மையே தீம் காயா - இனிய சொல்லால் ஆன உண்மையே இனிய காயாகவும்,  வண்மை பலமா - வள்ளன்மை ஆகிய பெருங்கொடையே பழம் ஆகவும், நலம் கனிந்த பண்பு உடையார் அன்றே - இத்தகைய நன்மைகள் மிகுந்த பண்பினை உடையார் அல்லவா; சலியாத கற்ப தரு - குறிப்பறிந்து கொடுத்தலில் தளர்வு இல்லாத  கற்பக மரத்தை ஒப்பவர்.

கற்பக மரத்தைக் 'கல்ப தரு' என்று வடமொழியில் கூறுவார்கள். தரு என்றால் மரம் என்று பொருள்.

வருந்தித் தம்மிடத்து வருபவரைத் தூரத்தில் காணும்போதே குளிர்ந்த பார்வை வேண்டுமாதலால், "கண் நோக்கு அரும்பா" என்றார். அவர் அண்மையில் வந்தபோது, இனிய முகம் காட்ட வேண்டும் என்பதால், "நகை முகமே நாள்மலரா" என்றார். வந்தவரது குறையை, அவர் படும் துன்பத்தை அறிந்து இனிய சொல்லைச் சொல்லுதல் வேண்டும், உண்மையாகவே பேச வேண்டும். உள்ளத்தில் பொய்யை வைத்துக் கொண்டு, வெளியில் உண்மை போல் காட்டிக் கொள்ளுதல் கூடாது என்பதால், "இன்மொழியின் வாய்மையே தீம் காயா" என்றார். தம்மால் இயன்றவற்றைக் கொடுத்து உதவுதல் பயன் என்பதால், "பலமா" என்றார். பலம் என்றால் பழம் என்று பொருள். 

"மெல்லிய அனிச்ச மலரானது, மோந்து பார்த்த அளவில் வாடும்; விருந்தினர், முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடி விடுவர்" என்பதை அறிவுறுத்த, "மோப்பக் குழையும் அனிச்சம், முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என நாயனார் அருளிய திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

அறத்திற்கு விளக்கமாகத் திருவள்ளுவ நாயனார் வலியுறுத்திக் கூறியவைகளுள், முகமலர்ச்சியோடு இனிய சொற்களைக் கூறுதலும் ஒன்று ஆகும். "முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி, அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

அறத்தைப் பயிராகச் சொல்லி, அதை எப்படிச் செய்வது என்பதைப் பின்வரும் பாடல் கூறுகிறது.

"இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக,

வன்சொற் களைகட்டு, வாய்மை எரு அட்டி,

அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றது ஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.  ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

இன்சொல் விளை நிலமா - இனிய சொல்லே  விளைநிலம் ஆகவும், ஈதலே வித்தாக - ஈகையே விதையாகவும்,  வன் சொல் களை கட்டு - கடும் சொல்லாகிய  களையைப் பிடுங்கி, வாய்மை எரு அட்டி - உண்மையாகிய  எருவினை இட்டு, அன்பு நீர் பாய்ச்சி - அன்பாகிய  நீரைப் பாய்ச்சி, அறக் கதிர் - அறம் ஆகிய கதிரை, ஈன்றது - ஈனுவதாகிய,  ஓர் - ஒப்பற்ற, பைங்கூழ் - பசிய பயிரை, சிறு காலை - இளம் பருவத்திலேயே, செய் - செய்வாயாக.

ததீசி என்பவர் புகழ்பெற்ற முனிவர்களில் ஒருவர். இவர் இறைவனை நோக்கித் தவம் செய்தலை மேற்கொண்டிருந்தார்.  இந்திரன் ஒரு காரணத்தை முன்னிட்டு விருத்திராசுரன் என்பவனோடு போர் புரியத் தொடங்கினான். இந்திரனுடைய வச்சிரப்படை பழையதாகையால் கெட்டுப் போயிற்று. புதிய வச்சிரப் படையை எவ்வாறு செய்யலாம் என்று திருமாலிடம் அறிவுரை கேட்டான். அம் மாயவன், ததீசி முனிவருடைய முதுகெலும்பைக் கொண்டு அப்படையைச் செய்துகொள். பல படைக்கலங்களின் திரட்சியே முனிவரின் முதுகுத் தண்டாக விளங்குகிறது என்று சொன்னார். 

இந்திரன் தேவர்களோடும் ததீசி முனிவரிடம் சென்று அவரது முதுகெலும்பைத் தருமாறு வேண்டினான். வருந்தி வந்த தேவர்களை நோக்கித் ததீசி முனிவர் கூறிய அரிய செய்தியைத் திருவிளையாடல் புராணம் பின்வரும் பாடலால் நமக்கு அறிவுறுத்துகிறது. இதன் மூலம் வருந்தி வந்தவர்க்கு இன்முகம் காட்டி உதவி புரியவேண்டும் என்பது புலனாகும்.

"அகம் மலர்ந்து அருந்தவன் அமரர்க்கு அன்புகூர்

முகம் மலர்ந்து, இன்னுரை முகமன் கூறி, நீர்

மிகமெலிந்து எய்தினீர், விளைந்தது யாது, அது

தகமொழிந் திடல் என, வலாரி சாற்றுவான்."  --- தி.வி.புராணம், இந்திரன் சாபம். தீர்த்த படலம்.

இதன் பதவுரை ---

அகம் மலர்ந்து அருந்தவன் - மன மகிழ்ந்து அரிய தவத்தினையுடைய ததீசி முனிவன், அமரர்க்கு அன்பு கூர் முகம் மலர்ந்து - தேவர்களை நோக்கி அன்பு மிகுந்த இன்முகம் செய்து, முகமன் இன் உரை கூறி - உபசாரமாக இனிய சொற்களைக் கூறி, நீர் மிக மெலிந்து எய்தினீர் - நீங்கள் மிகவும் வருந்தி வந்தீர்கள்; விளைந்தது யாது - நடந்தது என்ன, அது தக மொழிந்திடல் என - அதைப் பொருந்தச் சொல்லுக என்று கேட்க, வலாரி சாற்றுவான் - இந்திரன் கூறுவான்.

     விருந்தோம்புவார்க்கு அகமகிழ்ச்சி, முகமலர்ச்சி, இன்னுரை என்னும் மூன்றும் வேண்டும் என்பதனை இதனாலும், திருவள்ளுவ நாயனார் அருள்வாக்காலும் அறியலாம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பரும் இக் கருத்தினை வலியுறுத்தி உருவகமாகப் பாடிய பாடல் வருமாறு..

"களிக்கும் மஞ்ஞையை, கண்ணுளர்இனம்

      எனக் கண்ணுற்று,

அளிக்கும் மன்னரின், பொன்

      மழை வழங்கின அருவி;

வெளிக்கண் வந்த கார் விருந்து

      என, விருந்து கண்டு உள்ளம்

களிக்கும் மங்கையர் முகம்

      என, பொலிந்தன, கமலம்."  ---  கம்பராமாயணம், கார்காலப் படலம்.

இதன் பதவுரை ---

களிக்கும் மஞ்ஞையை - (கார்காலத்தில்) களித்து ஆடும் மயில் இனங்களை; கண்ணுளர் இனம் என - கூத்தர்களின் இனமான விறலியர் என்று கருதி; கண்ணுற்று - (அவை ஆடும் கூத்தைப்) பார்த்து; அளிக்கும் மன்னரின் - (பொன்னைப் பரிசாக) வழங்கும் அரசர்களைப் போல; அருவி - மலையருவிகள்; பொன் மழை வழங்கின - பொன்னை மிகுதியாகச்  சொரிந்தன. வெளிக்கண் வந்த கார் - விண்வெளியில் வந்த மேகங்களை; விருந்து என - விருந்தாளிகள் எனக் கருதி; விருந்து கண்டு - விருந்தினரைக் கண்டு; களிக்கும் மங்கையர் முகம் என - மனம் மகிழும்  மகளிரின் முகம் போல; கமலம் பொலிந்தன - தாமரை மலர்கள் நீர்நிலைகளில் மலர்ச்சி பெற்றன.

"யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே" என்று அறத்தினைப் புரிவதற்கு எளிமையானதொரு வழியைக் காட்டி அருளினார் திருமூல நாயனார். கொடும் சொற்களைப் பேசி மற்றவர் மனதைப் புண்படுத்தாமல், இனிமையான வார்த்தைகளை பேசினாலே போதும் அதுவே இறைவன் திருவருளுக்குப் பாத்திரமாகும் வழி என்றும் சொல்லுகின்றார் திருமூல நாயனார்.

உடல்களால் வேறுபாடுகள் காணப்பட்டாலும் உயிர்கள் என்ற நிலையில் எந்த வேறுபாடும் இல்லை. உயிர்களுக்கு உடம்பினைப் படைத்து அருளுபவன் இறைவன். ஒரு தாயின் வயிற்றில் வந்தவர்கள் எல்லோரும் உடன்பிறப்புகள் ஆவதுபோல, இறைவன் திருவருள் வழியாக உடம்பினை எடுத்து வந்தவர்களும் உடன்பிறப்புகள்தாம்.  ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் அனைவரும் ஒரே மாதிரியான உரிமை உடையவர்கள்தாம். அதுபோலவே தான் இறைவன் படைப்பும். உடன்பிறப்புகளில் ஒருவர் துன்பமடையும்போது மற்றவர் அதற்காக வருந்துவது இயற்கை. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும். அதுபோல, ஓர் உயிர் துன்பத்தை அடைகிறபோது, மற்றோர் உயிர் அதற்காக உருகுவதும் இயற்கையாக நிகழ வேண்டும். சிலர் அப்படி உருகுவது இல்லை. அதற்குக் காரணம் அவர்கள்மேல் அறியாமையின் அழுக்குப் படிந்திருக்கிறது. அதன் காரணமாக அவர்களது அறிவு, உணர்ச்சி இல்லாமல் தடித்துப் போயிருக்கிறது. அழுக்குப் படிந்த கண்ணாடி உருவம் காட்டுவதில்லை.

எனவேதான், "அறிவினால் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். பிற உயிர் படும் துன்பத்தைத் தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் விளையும்?

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பது இல்லை. எளிமையாகப் பச்சிலையை இட்டு வணங்கினாலே போதும். கோ பூசை செய்ய வேண்டும் என்பதில்லை.  பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பது இல்லை. உண்ணுகிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை.  யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறையை அருளிச் செய்கிறார் திருமூல நாயனார். 

பொன்னையும் பொருளையும் கொடுப்பது பெரிது அல்ல. முகம் மலர்ந்து இனிய சொல் கூறி உபசாரம் செய்வது நல்லது. அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிவது போல ஆகும் என்கிறது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்.

"பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்

     கொடுப்பது என்ன பொருளோ? என்றும்

நற்கமல முகம் மலர்ந்தே உபசாரம்

     மிக்க இன்சொல் நடத்தல் நன்றே;

கற்கரையும் மொழிபாகர் தண்டலையார்

     வளநாட்டில் கரும்பின் வேய்ந்த

சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி

     பொழிந்துவிடும் தன்மை தானே!

இதன் பதவுரை ---

கல் கரையும் மொழி பாகர் தண்டலையார் வளநாட்டில் - கல்லும் கரையும் இனிய மொழியை உடைய உமாதேவியாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டு உள்ளவரும்,  திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில், "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவருமான சிவபரம்பொருளின் வளம்பொருந்திய நாட்டிலே, பொன் குடையும் பொன் துகிலும் பொன் பணியும் கொடுப்பது என்ன  பொருளோ - பொன்னாலான குடையும் ஆடையும் அணிகலன்களும் கொடுப்பது என்ன சிறப்பு உடையதோ?, என்று - (அல்ல) என்று அறிந்து,  நல் கமலம் முகம் மலர்ந்தே உபசாரம் மிக்க இன்சொல் நடத்தல் நன்றே - அழகிய தாமரை மலர் போலும் முகத்திலே மலர்ச்சியுடன் ஆதரித்து மிகுந்த இனிய மொழி கூறுதலே நல்லது, (அவ்வாறு  செய்வது) கரும்பின் வேய்ந்த  சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை - கரும்பினால் ஆக்கப்பட்ட சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பொழிந்துவிடுவது போல ஆகும்.

இறைவன் எல்லா உயிர்களிலும் அந்தரியாமியாகப் பொருந்தி உள்ளான். அவன் இல்லாத இடம் இல்லை. பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்து உள்ள பரிபூரண ஆனந்தப் பொருள் அவன். எனவே, உயிர்களிடத்து அன்பு செய்தால், அது இறைவனுக்கு அன்பு செய்ததாக அமையும். அதுவே அருளைப் பெறும் வழி. அல்லாத வழி இறைவனுக்கு அன்பு உடையவர் போல் ஒருவன் ஒழுகுவது நாடகமாகத்தான் இருக்கும். அவர்களை அறிவில்லாத பிணங்கள் என்கிறது மெய்கண்ட சாத்திரம். "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து" என்கிறார் மணிவாசகப் பெருமான்.

"ஈசனுக்கு அன்புஇல்லார், அடியவர்க்கு அன்பு இல்லார்,

எவ்வுயிர்க்கும் அன்பிலார், தமக்கும் அன்பு இல்லார்

பேசுவதுஎன்? அறிவில்லாப் பிணங்களை நாம் இணங்கில்

பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடு நீ."     --- சிவஞானசித்தியார்.

எனவே, வெறும் மரமாக இல்லாமல், வேண்டியதைத் தரும் கற்பக மரமாக இருத்தல் வேண்டும். மனிதனாக இல்லாமல், வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடுகின்ற வள்ளலாக இருக்கவேண்டும். அதுவே அறம், இறையருளை எளிதில் பெறும் வழி என்பது தெளிவாகும்.


No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...