முத்திக்கு வழிகாட்டும் பத்திநெறி

 முத்திக்கு வழிகாட்டும் பத்திநெறி

-----

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு கூடாமல், பத்திநெறியில் வாழுகின்ற வாழ்க்கை எளிமையான ஒன்று அல்ல. பத்திநெறியில், அதற்குரிய வேடத்தைப் புனைந்து கொண்டு, பாடல்களைப் பாடிக்கொண்டு மேற்கொண்டு ஒழுகுவோர் பலராக இருக்கலாம். ஆனாலும், அவர்களில் பத்திமைப் பண்பு என்னும் அருள்நீரில் தோய்ந்து எழுந்தவர்கள் எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அருள்நீரில் தோய்கின்ற தகுதியைப் பெறாதவர்களை எண்ணிவிட முடியாது. சமயச் சின்னங்களும், சடங்குகளும் சமயநெறியில் பழகுவதற்கான கருவிகளே. சின்னங்களைத் தரித்துக் கொள்வதாலோ, சடங்குகளை இயற்றுவதாலோ இறைவன் திருவருளைப் பெற்றுவிட முடியாது. அது ஞானமார்க்கமும் ஆகாது. மணிவாசகப் பெருமான் அருளியது போல, "சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவு இன்றி, அறிவு இன்றி, தோலின் பாவைக் கூத்தாட்டுப் போலச் சுழன்றும், விழுந்தும் கிடக்கின்ற வாழ்க்கைதான் அது.

பாடுவதும் ஆடுவதும் ஒருபுறம் இருக்க, பத்திநெறியில் பழகுவோர் புலன்களை வென்றாக வேண்டும். வென்றவர்கள் திருக்கூட்டத்தில் இருந்தாக வேண்டும். "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து, நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்" என்று மணிவாசகப் பெருமான் அருளியது போல, அடியார் போல நாடகமாடிக் கொண்டு திரிவதால் பயனில்லை.  நம்முடைய உடல் வாழ்க்கை மிகவும் விந்தையானது. உடலில் புறத்தே பொருந்தி உள்ள பொறிகளும், அகத்தே உள்ள புலன்களும், ஒன்றுக்கு ஒன்று வேற்றுமை இயல்பை உடையன. ஆனால், நோக்கத்தால் ஒற்றுமை இயல்பை உடையன. கண் ஒன்றைக் காணும். காது ஒன்றைக் கேட்கும், வாய் ஒன்றைப் பேசும், மூக்கு ஒன்றை முகரும், கை ஒன்றைச் செய்யும். இந்த நிலையில் செய்யும் இறை வழிபாடு பொய்யாகத்தான் இருக்கும். அதனை இறைவன் ஏற்றுக் கொள்வது இல்லை.

"கை ஒன்று செய்ய, விழி ஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய் ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவி ஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே."

என்கிறார் பட்டினத்து அடிகளார்.

இந்தப் புலன்களை வாழ்வியல் பழக்கத்தால் பண்படுத்தி, ஒருமைப்படுத்த வேண்டும். அதுவே உத்தமமான வாழ்க்கை ஆகும். அதுவே பத்திநெறியும் ஆகும். "ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்" என்பார் வள்ளல்பெருமான்

உலகியலில் இன்று எங்கும் எதிலும் புலன்களுக்ளான சுவை ஊற்றுக்கள் மலிந்து காணப்படுகின்றன. அச் சுவையினை மோப்பம் பிடித்துப் புலன்கள் செல்கின்றன. தமக்கு உரிய தலைவனையும் அவை இழுத்துச் சென்று இழுக்கைக் கொடுத்து நிற்கின்றன. புலன்கள் இழுக்கும் பொழுது,  அவற்றின் வழிச் செல்லாமல், செல்லும் நெறி தேர்ந்து அவ்வழியில் மட்டும் புலன்களைச் செலுத்தி, தாமும் செல்ல வேண்டியது மனித வாழ்க்கையின் கடமை. வேளாண்மைக்குக் களையானது கேடு தரும் பகை ஆகும். நல்ல பத்திமை வாழ்க்கைக்கு உயிர்ப் பகையாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளையும் வெற்றி பெறுதல் வேண்டும். 

அடுத்து,  இறவாத இன்ப அன்பை அடையத் தடையாக இருப்பவை குணங்கள். அரச குணம் என்று சொல்லக்கூடிய உயர்ந்த குணம், அறிவு விருப்பம் உடையது.  ஆள்வினை ஆற்றல் உடையது.  விரைந்து தொழிற்படும் இயல்பினை உடையது. ஆயினும் இக் குணம்,  உலகியல் இன்பத்திற்கு ஏற்புடையதே. நிறை இன்பமான இறை இன்பத்திற்குத் தடையாகவே அமையும்.. வானில் இருந்து விழும் துளிகள் ஒன்று சேர்ந்தால் பயன் உண்டு. பலப்பலவாகச் சிதறிப் போனால் உரிய பயனை அவை தரமாட்டா. அந்த நீர்த்துளிகள் ஒன்று கூடிச் சென்று ஒரு வாய்க்காலாக, ஓர் ஆறாக, ஓர் ஏரியாக உருமாறும் பொழுதே உண்மையில் அவை பயன்படுகின்றன. அதுபோலவே, சிந்திக்கும் திறனுடைய நமது சித்தமானது, சிந்தனையை ஒரு நெறியில் செலுத்தத் தவறினால் சிந்தனைத் திறன் பயனற்றுப் போய்விடும். அதனால்தான்,  “ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன்” என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். “ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை” என்றார் அப்பர் பெருமான். “ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்றார் வள்ளல்பெருமான். எனவே,  நுண்ணுடலின் செயல் உறுப்புக்கள் என்றும் அந்தக் கரணங்கள் என்றும் சொல்லப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கருவிகளையும் ஒருநெறிப்படுத்த வேண்டும். 

பத்திநெறி என்பது உழவுத் தொழிலைப் போன்றது. மனம் என்னும் வயலைப் பாழ்நிலமாக ஆக்கிவிடாமல்,  இதயத்தின் ஆழத்தில் பத்தி என்னும் விதையை விதைக்க வேண்டும். "பத்தித் தனி வித்து" என்பார் பட்டினத்து அடிகளார். விதைத்த பிறகு ஆர்வும் என்னும் நல்ல நீரைப் பாய்ச்ச வேண்டும். "ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி" என்பார் பட்டினத்து அடிகளார். 

"மெய்ம்மையாம் உழவைச் செய்து, விருப்பு என்னும் வித்தை வித்தி,

பொய்ம்மையாம் களையை வாங்கி, பொறை என்னும் நீரைப் பாய்ச்சி,

தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு என்னும் வேலி இட்டு,

செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே."

என்றார் அப்பர் பெருமான்.

பொய்யான வாழ்க்கையால், ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனம் பாழ்பட்டுக் கிடக்கின்றது. மெய்ம்மையான உழவைச் செய்து, நல்ல எண்ணங்கள் ஆகிய பயிரை வளர்க்கவேண்டும் என்று மேலும் விரிவாகச் சொல்கிறார் பட்டினத்து அடிகளார்.

"நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை

வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,

அன்பு என் பாத்தி கோலி, முன்புற

மெய் எ(ன்)னும் எருவை விரித்து, ஆங்கு, ஐயமில்

பத்தித் தனி வித்து இட்டு, நித்தலும்

ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று

தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்

பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்,

ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,

கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்

காமக் குரோதக் களை அறக் களைந்து

சேமப் படுத்துழி, செம்மையின் ஓங்கி

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு, அம் எனக்

கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்ந்து, புண்ணிய

அஞ்செழுத்து அருங்காய் தோன்றி; நஞ்சுபொதி

காள கண்டமும், கண் ஒரு மூன்றும்,

தோள் இரு நான்கும், சுடர்முகம் ஐந்தும்,

பவளநிறம் பெற்று, தவளநீறு பூசி,

அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்

காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி

பையப் பையப் பழுத்துக் கைவர,

எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்

செம்மாந்து இருப்ப; சிலர்இதின் வாராது,

மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்

காமக் காடு மூடி, தீமைசெய்

ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,

இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,

கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர,

இச்சை வித்து உகுத்துழி, யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,

பொய் என் கவடுகள் போக்கி, செய்யும்

பாவப் பல்தழை பரப்பி, பூ எனக்

கொடுமை அரும்பி, கடுமை மலர்ந்து,

துன்பப் பல்காய் தூக்கி, பின்பு

மரணம் பழுத்து, நரகிடை வீழ்ந்து,

தமக்கும் பிறர்க்கும் உதவாது,

இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே".

எனவரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை" என்னும் அருள் நூலில், மெய்ம்மையான உழவு குறித்தும், அது அல்லாதது குறித்தும் பட்டினத்தடிகள் பாடி உள்ளது காண்க.

இதன் பதவுரை ---

     நெஞ்சப் புனத்து - மனமாகிய கொல்லைப் புறத்தில், வஞ்சக் கட்டையை வேர் அற அகழ்ந்து போக்கி - (அநாதியே முளைத்து வேர் விட்டு இருந்த) வஞ்சகம் என்னும் மரத்தினை வேரோடு அற்றுப் போகுமாறு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி, தூர்வை செய்து - நல்ல முளை முளைப்பதற்கு உரியவாறு பதப்படுத்தி, அன்பு என் பாத்தி கோலி - அன்பு என்னும் பாத்தியைச் செய்து, முன்புற மெய் எ(ன்)னும் எருவை விரித்து - முதலில் வாய்மை என்கின்ற எருவை இட்டு, ஆங்கு - அந்தக் கொல்லையில், ஐயம் இல் பத்தித் தனிவித்து இட்டு - பழுது முதலியவற்றால் முளைக்காது என்னும் சந்தேகம் சிறிதும் இல்லாத, பத்தி எனப்படுகின்ற விதையை விதைத்து,  நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி - நாள்தோறும் ஆர்வம் என்கின்ற தெளிந்த நீரைப் பாய்ச்சி, நேர் நின்று - எதிரில் நின்று, தடுக்குநர்க்கு அடங்காது - உள்ளே புகாதவாறு தடுப்பவர்க்கு அடங்காது, இடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக்கு அஞ்சி - துன்பத்தைச் செய்கின்ற ஐந்து பட்டிமாடுகளுக்குப் (புலன்களுக்குப்) பயந்து, உள் சென்று - அவைகளைத் தடுப்பதற்கு, கொல்லையின் உள்ளே சென்று, சாந்த வேலி கோலி - சாந்தம் என்னும் வேலியினை அமைத்து, வாய்ந்த பின் - (இவை அனைத்தும்) முடிந்த பின்னர், ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து - ஞானம் என்னும் பெரிய முளையானது கெடாது முளைத்து, கருணை இளந்தளிர் காட்ட - அது வளர்ந்து, கருணை என்கின்ற பசுமையான தளிர்கள் தழைத்து வளர்ந்து, அருகா - எடுக்கும் தோறும் கெடாது வளர்கின்ற, காமக் குரோதக் களை அறக் களைந்து - காமம் குரோதம் என்னும் களைப் பூண்டுகளை வேரோடு பறித்து எறிந்து, சேமப் படுத்துழி - அந்தக் கொல்லையைச் செம்மையாக்கிய பின்னர், செம்மையின் ஓங்கி - செம்மையாக வளர்ந்து, மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு - உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் உண்டாகும் புளகாங்கிதம் என்னும் அரும்பு உண்டாகி, அம் எனக் கண்ணீர் அரும்பி - அந்தப் புளகாங்கிதத்தால் உண்டான ஆனந்தக் கண்ணீர் என்னும் அரும்பை விட்டு, கடிமலர் மலர்ந்து - ஞானமணம் உள்ள மலர் மலர்ந்து,  புண்ணிய அஞ்செழுத்து அருங்காய் தோன்றி - புண்ணியத்தின் வடிவான திருவைந்தெழுத்து என்னும் கிடைத்தற்கு அரிய காய் உண்டாகி, நஞ்சு பொதி காள கண்டமும் - ஆலகால விடம் பொருந்திய நீலகண்டமும், கண் ஒரு மூன்றும் - ஒப்பற்ற மூன்று திருக்கண்களும், தோள் இரு நான்கும் - எட்டுத் திருத்தோள்களும், சுடர்முகம் ஐந்தும் - அருள் ஒளி வீசும் ஐந்து திருமுகங்களும், பவளநிறம் பெற்று - பவள நிறத்தோடு விளங்கி, தவள நீறு பூசி - வெண்மையான திருநீற்றினைப் பூசி, அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய் - கைப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என்னும் ஆறுவகையான சுவையிலும் மிக்க இனிமையான சுவையினை உடையதாய், காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் - கண்ணால் கண்டாலும், காதால் கேட்டாலும், மனத்தால் கருதினாலும் ஆனந்தத்தை தருகின்ற, சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி - மிக உயர்ந்த மருத மாணிக்கம் என்னும் இனிய கனியானது, பையப் பையப் பழுத்துக் கைவர - மெல்ல மெல்ல முதிர்ந்து கையில் எளிதாகக் கிடைக்க, எம்மனோர்கள் இனிது இனிது அருந்திச் செம்மாந்து இருப்ப - எம்மைப் போன்றவர்கள் (அந்தச் சிவஞானக் கனியை) இன்புற உண்டு மகிழ்ந்து இருக்க,

     சிலர் இதின் வாராது - இதன் அருமையை உணர்ந்து தெளியாத சிலர், இந்த உழைப்பினை முயலாது, மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி - மனமாகிய கொல்லைப் புறத்தை பயனற்ற பாழ் நிலமாக இருக்கவிட்டு, காமக் காடு மூடி - காமம் என்னும் காடு மூடிக் கிடந்ததால், தீமை செய் ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக - தீமைகளைப் புரிகின்ற ஐம்புலன்களாகிய வேடர்கள் வழிப்பறி செய்து இழுக்க, இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட - சிற்றின்பம் ஆகிய கானல் நீரானது கைக்கு எட்டாது ஓட,  கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர - கல்வி அறிவு இல்லாத உணர்வு என்கின்ற மான் ஆனது இங்கும் அங்குமாக ஓடித் திரியும்படி, இச்சை வித்து உகுத்துழி - ஆசை என்னும் வித்தை (அந்தப் பாழ் நிலத்தில்) உதிர்த்த காலத்தில், யான் எனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்து - நான் என்னும் ஆங்காரம் ஆகிய பெரிய நச்சுமரமானது மிகவும் முளைத்து, பொய் என் கவடுகள் போக்கி - பொய்ம்மையாகிய கிளைகளைப் பரப்பி, செய்யும் பாவப் பல்தழை பரப்பி - செய்யப்பட்டு வருகின்ற பாவம் ஆகிய பல தழைகளை விரித்து, பூ எனக் கொடுமை அரும்பி - கொடுமை என்னும் அரும்புகளை விட்டு, கடுமை மலர்ந்து - தீமையே மலர்ந்து, துன்பப் பல்காய் தூக்கி - துன்பம் என்னும் பல காய்களைத் தாங்கிக் கொண்டு, பின்பு - அதன் பின்பு, மரணம் பழுத்து - மரணம் என்கின்ற பழமானது பழுத்து, நரகிடை வீழ்ந்து - நரகத்தில் விழுந்து, தமக்கும் பிறர்க்கும் உதவாது - தமக்கும், மற்றவர்க்கும் பயன்படாது, இமைப்பில் கழியும் - இமைக்கின்ற நேரத்தில் அழிந்து கெடுகின்ற, இயற்கையோர் உடைத்தே - குணம் உடையவர்களை இந்த உலகம் பெற்று இருக்கின்றது.

இப்படி மெய்ம்மையான உழவினைச் செய்வதன் மூலம், மெய்ப்பொருளை நிலையான உணர்வில் நினைவு கூர்தல் வேண்டும். தனக்கு உவமையில்லாத் தலைவனாக, சிவன் என்னும் நாமம் தனக்கே உடைய செம்மனி அம்மானாக விளங்கும் சிவபரம்பொருளை நீள நினைந்தும், நினையாமல் நினைந்தும் வாழ்த்தி வணங்குதல் வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக் கொண்டால் இறைவன் வாழ்க்கையை மட்டும் அளிப்பதில்லை. சிவபெருமான் தனக்கு உரியனவாகப் பெற்றிருக்கும் நலன்களை எல்லாம் உயிர்க்கு வழங்கி வாழ்வித்து அருளுவான். 

இந்த இனிய பேற்றினை அடைய, பொறிகள் வழி செல்லக் கூடாது. மனம் போன போக்கில் போதல் கூடாது என்கிறார் அப்பர் பெருமான்.  

"பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை

நெறிப் படுத்து நினைந்தவர் சிந்தையுள்

அறிப்பு உறும் அமுது ஆயவன் ஏகம்பம்

குறிப்பினால் சென்று கூடித் தொழுதுமே."    --- அப்பர்.

இதன் பொருள் ---

பொறிகளைப், புலன்களின் வழிப் போதலைத் தவிர்த்து, உள்ளத்தை ஒருமை நெறியில் நிற்கச் செய்து, தன்னை நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறும் அமுது ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினால் சென்று கூடித் தொழுவோமாக. (அறிப்பு - உணர்தல். அறிப்பு உறும் அமுது - உணர்வால் பருகக் கூடிய அமுது)

மனத்தை ஒருநெறிப்படுத்தி, இறைபணியில் நின்றால், மாளாத துன்பத்தைப் போக்கி நம்மைத் திருவடி இன்பத்தில் ஆழ்த்துவான் இறைவன் என்பதை உணர்ந்து, சித்தத்தை சிவன்பால் வைத்து பத்தி நெறியில் நின்று ஒழுகவேண்டும். பின்வரும் பாடலில் திருஞானசம்பந்தப் பெருமான் அழகாக வைத்துக் காட்டுகிறார்.

"பத்திப்பேர் வித்து இட்டே, பரந்த ஐம்புலன்கள் வாய்ப்

பாலே போகாமே காவா, பகைஅறும் வகைநினையா,

முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்

மூடா ஊடா நால்அந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்

சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்

சேர்வார் தாமே தான்ஆகச் செயும் அவன் உறையும்இடம்

கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள்

காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே."

இதன் பதவுரை ---

பத்திப் பேர் வித்து இட்டே - அன்பாகிய விதையை ஊன்றி, பரந்த ஐம்புலன்கள் வாய் போகாமே காவா - பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது  தம்மைக் காத்து, பகை அறும் வகை நினையா - காமம் முதலிய பகைகளை அறுக்கும் வகையில் இறைவனை நினைந்து,  முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக் கரணமும் ஒரு நெறியாய் - முத்திக்கு இடையூறாக உள்ள முக்குணங்களின் வழி ஒழுகாது, அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்தி, சித்திக்கே உய்த்திட்டு - சிந்தனையில் செலுத்தி, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே - மெய்ப்பரம்பொருள் ஆகிய தன்னையே எண்ணுபவர்களை,  தானாக செய்யும் அவன் உறையும் இடம் - தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம்,  ஒர் சட்டங்கம் கத்திட்டோர் கலந்து இலங்கும் நற்பொருள் - ஆறு அங்கங்களையும் கற்று உணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின், காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே - திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் அடியார்கள் வாழுகின்ற கழுமலம் (சீகாழி) என்னும் வளம் பொருந்திய நகரம் ஆகும்.

மனம் என்னும் நிலத்தில், அன்பாகிய விதையை இட்டு, புலன்வழி பொருந்தாது, காமம் முதலாகிய பகைகள் ஆறையும் கடிந்து, முத்திக்கு இடையூறாகிய சத்துவ, இராஜச, தாமசங்கள் ஆகிய மூன்று குணங்கள் மூடாதபடி, அந்தக்கரணங்கள் ஒரு நெறிப்பட சிந்திக்க, மெய்ப்பொருளையே தியானிக்கின்ற சிவஞானிகளைச் சிவமாகவே செய்யும் சிவன் உறையும் இடம் கழுமல வளநகர் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

அருளாளர்கள் பாடி அருளிய பாடல்கள்,  பாடுவதற்கும், ஆடுவதற்குமே உரியவை அல்ல. பாடல்களின் ஊடே உணர்த்தப்பட்டு உள்ள பொருளை நன்கு உணர்ந்து, பத்திநெறியில் நின்று மன ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ளும் வழியில் ஒழுக வேண்டும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்றதை அறிதல் வேண்டும். முத்திநெறியினை அறியாதவர்களை மூர்க்கர் என்கிறார் மணிவாசகப் பெருமான். எனவே, முத்திநெறி அறியாத மூர்க்கர் கூட்டத்தில் கூடி இருத்தல் கூடாது.

நான் அறிந்த பாடல்களைக் காட்டி இருப்பதால், இது சிவன் அடியார்களுக்கே உரியது என்றோ, சைவத்தைப் பரப்புவதாகவோ கருத வேண்டாம். ஒரு வடிவமும், ஒரு நாமமும் இல்லாத பரப்பொருளை, அவரவர் தாம்தாம் கருதிய வடிவத்தில் நினைந்து, அவரவர் கொண்ட சமயநெறியில் நின்று வழிபடுகின்றார்கள். ஆறுகள் பலவாக இருந்தாலும், அவை எல்லாம் இறுதியில் சென்று கலப்பது கடலில்தான். அதுபோலவே, சமயநெறிகள் பலவாக இருந்தாலும், அவை எல்லாம் காட்டுவது ஒன்று எனப்படும் பரம்பொருளையே. இதைத் திருமூல நாயனார் காட்டுகிறார்.

"ஒன்றுஅது பேரூர்; வழிஆறு அதற்குஉள;

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது, தீதுஇது என்று உரை யாளர்கள்,

குன்று குரைத்துஎழு நாயை ஒத்தார்களே." --- திருமந்திரம்.

ஓர் ஊருக்குப் போவதற்கு ஆறு வழிகள் உள்ளன. எந்த வழியில் போனாலும் அந்த ஊரை அடையலாம். யார் யாருக்கு எந்தெந்த வழி வசதியான வழியோ, அந்த வழியாக ஊரை அடையலாம் ‘எனக்குத் தெரிந்த வழி இந்த வழி ஒன்றுதான்; ஆகவே, இந்த வழியாகத்தான் அந்த ஊரை நீங்கள் அடைந்தாக வேண்டும். வேறு வழிகளில் போகக் கூடாது' என்று அடம் பிடிக்கிறவர்கள் மூடர்கள். எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முயலாமல், இந்த மதம் நல்லது, அந்த மதம் தீயது என்று கிறுக்குத்தனமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசுகிறவர்களைக் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயோடு ஒப்பிடுகின்றார் திருமூல நாயனார். சைவம்தான் உயர்ந்தது என்று குரைப்பவர்களும் நாய்தான்.

திருமூல நாயனார் காட்டிய கருத்தை அப்படியே வழிமொழிகிறது சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'சிவஞான சித்தியார்.'

"சுத்தவடிவு இயல்பாக உடைய சோதி

         சொல்லிய ஆகமங்கள் எலாம் சூழப் போயும்,

ஒத்து முடியும் கூட ஓர் இடத்தே,

         ஒருபதிக்குப் பலநெறிகள் உள ஆனால் போல்,

பித்தர் குணம் அதுபோல ஒருகால் உண்டாய்ப்

         பின்ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில் பட்டோர்

         கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்."    --- சிவஞான சித்தியார் - பரபக்கம்.          

      ஞானமே தனக்குச் சுதந்திர வடிவாக உடையவன் இறைவன். சமய பேதங்கள்தோறும் அவன் அருளிச் செய்த ஆகமங்கள் எல்லாம் பலபேதங்களை உடையன. ஆயினும், ஞானபாதம் எல்லா ஆகமங்களிலும் தம்முள் ஒத்துச் சென்று ஒரு பொருளையே நோக்கி முடியும். அது எதைப் போல என்றால், ஓர் ஊருக்கு உண்டாகிய வழிகள் எல்லாம் பலவகைப் பட்டாலும், அவைகள் எல்லாம் அந்த ஊரைச் சென்று சேர்வதற்கே உள்ளதைப் போல என்று அறிதல் வேண்டும்.  எல்லா ஆகமங்களிலும் ஞானபாதம் ஒன்றாகவே அமைந்திருக்கும் என்ற உண்மையைத் தெளிந்து அறிந்து இருப்பவர் முத்தி அடைவர். அல்லாமல் பித்து ஏறினவர் போல, தெளிந்த அறிவு இல்லாமல், முத்திநெறியை அறியாமலேயே, அதனை அறிந்தவர் போலக் கூவித் திரிகின்ற அறிவிலிகள் பேச்சில் கட்டுப்பட்டவர்கள் மகாமேருவைக் குறித்துப் போக மனம் கொண்டு,  அவ்வழியைச் சென்று அடையும் அறிவைப் பெறாமல், தான் அறிந்ததாகக் கொண்டு, மற்றொரு திசையில் போய் கடலில் விழுந்ததைப் போல் ஆகும். 

ஓர் ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். எந்த வழியில் போனாலும் ஊரை அடைவதுதான் நோக்கம் என்பது விளங்காத பேதைகள், ‘ஊருக்குப் போகின்ற வழி என்ன தெரியுமா? அந்த வழியில் எப்படிப் போக வேண்டும் தெரியுமா?’ என்று எல்லாம் தெரிந்ததுபோல முழங்குவார்கள். இந்த அறிவிலிகளின் பேச்சில் மயங்கியவர்கள் அவர்கள் பின்னால் போவார்கள். பொன்மலைக்குப் போகவேண்டும் என்று கிளம்பி, அதற்கான வழி தெரியாமல், கண்ட வழியில் சென்று, கடைசியில் கடலில் போய் விழுவார்கள்.


No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...