உயிருக்கு உரிய உணவு

உயிருக்கு உரிய உணவு

-----

மனித உடம்பானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டு, ஆக்கப்பட்டது என்பதால் யாக்கை என்று சொல்லப்பட்டது. இந்த யாக்கை ஏன் வந்தது? இதனுள் புகுந்து இருக்கும் உயிரானது, நல் ஊக்கமும், நல் உணர்ச்சியும் கொண்டு வாழ்ந்து, ஊன உடம்பை, ஒளி உடம்பாக மாற்றி, "ஆக்கம்" என்று சொல்லப்படும், உலகியல் பொருளையும், அருளியல் பொருளையும் ஒருசேரப் பெற்று, வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்நாள் இறுதியில், அருளியல் ஆக்கம் ஆகிய வீடுபேற்றினைப் பெறுவதற்கு உபாயமாக வந்ததால், இந்த உடலுக்கு "ஆக்கை" என்றும் பொருள்  உண்டு.

ஏழாவது தாதுவான மூளை ஒழுங்காக இயங்க வேண்டியது அவசியம். அதற்கு, முதல் ஆறு தாதுக்களும் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. சுவை என்றால், இனிப்பு என்று மட்டுமே கொள்ளக் கூடாது. ஆறு சுவைகளுமே சுவைகள்தான். ஒவ்வொன்றும் பயன் விளைப்பனவே. 

இனிப்புச் சுவையானது, தசையை வளர்க்கின்றது. புளிப்புச் சுவையானது. உடலுக்குக் தேவையான கொழுப்பினை உண்டாக்குகின்றது. கார்ப்புச் சுவையானது, எலும்புகளை வளர்க்கின்றது உவர்ப்புச் சுவையானது, உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது துவர்ப்புச் சுவையானது குருதியைப் பெருக்குகின்றது. கசப்புச் சுவையானது நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

உடலுக்குத் தேவையானதை அறிந்து, கூட்டியோ குறைத்தோ மேற்குறித்த சுவைப் பொருள்களை உண்ணுதல், உடல் நலத்திற்குத் துணை புரிவதோடு, உயிர் நலமும் சிறக்கத் துணை புரியும். உடல் நலம், உயிர் நலம் ஆகிய இரண்டையும் கருதியே உண்ணுதல் வேண்டும். நாவின் சுவைக்கு அடிமையாதல் கூடாது. ஐம்புலன்களையும் அவித்து ஒழுகுதல் குறித்துக் கூறவந்த திருவள்ளுவ நாயனார், முதலில் சுவை உணர்வைக் குறித்துத் தான், "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு" என்று, சுவையை முதலில் வைத்துக் கூறினார். சுவைக்கு அடிமைப்பட்டு உடம்பைக் கெடுப்பதோடு அல்லாமல், உயிர் உணர்வையும் மங்கச் செய்தல் கூடாது என்னும் அருள் உள்ளம் நாயனாருக்கு இயல்பாகவே அமைந்து இருந்ததால், அந்த அருள் உள்ளத்தோடு மக்கட்கு அறிவுறுத்தினார். 

மேற்குறித்த ஆறுசுவைகளுள்,  இனிப்புச் சுவை மனிதர்களால் அதிகம் விரும்பப்படுவது. மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவை இதுவே ஆகும். எனவேதான், விருந்துணவில் இனிப்பு முதலிடம் பெறுகின்றது. மனத்திற்கு இன்பமான நிகழ்வுகளைக் கொண்டாட முதலில் இனிப்பு வழங்கப்படுவதும் இதனால்தான். செயற்கையாக உள்ளத்தில் இனிப்பை உண்டு பண்ணும். 

உப்புச் சுவையானது, உணவில் தவிர்க்க இயலாதது. ஆனால் அளவோடு இருக்கவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு ஆகும். உடலில் அதிகமாகச் சேர்ந்த உப்புத் தன்மையைக் குறைக்க வேண்டுமானால்,  தண்ணீரை அதிகமாகக் குடிக்கவேண்டும். "உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும்" என்னும் சொலவடை இதனால் வந்தது.

உண்ணப்படுவது ஊண். உண்பதும் ஒரு பணியே ஆகும். அது பயன் கருதிச் செய்ய வேண்டிய பணி. பயன் அடையத்தக்க வகையில் செய்ய வேண்டிய பணி. உணவு பலவகை ஆகும். வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் உணவு தேவை. உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவையே உணவு என்று பலர் கருதுகிறார்கள். மற்ற உணவுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அது மட்டுமல்ல. உண்ணுகின்ற உணவையும் கூடப் பலரும் அது உடலின் செம்மையான இயக்கத்திற்குத் தேவையானது என்று கருதி உண்பதில்லை. சுவைத்து உண்பது நல்லதுதான். ஆனாலும் சுவைக்காக உண்ணக்கூடாது. "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்பது புறநானூறு. "உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். ஏன் உடம்பினை ஓம்பவேண்டும்? என்றால், உடம்பிலே உத்தமன் ஆகிய இறைவன் கோயில் கொண்டு இருக்கின்றான் என்கிறார். "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" என்றும் கூறுகிறார். உயிரானது உடம்பினுள் பொருந்தி இருக்கிறது. அந்த உயிர் வளர வேண்டும். உயிர் அறிவு வடிவமனாது. அறிவு வடிவமானது என்றாலும், அதற்கு உள்ள அறிவு சிற்றறிவுதான். அந்த அறிவு விளக்கம் பெற்றுப் பேரறிவாகத் திகழவேண்டும். அதுவே உயிரின் வளர்ச்சி ஆகும். உயிர் அறிவினை, அறியாமை என்னும் இருள் மூடிக் கிடக்கின்றது. அறிவு விளக்கம் என்னும் ஒளி உதயம் ஆக ஆக, அறியாமை நீங்கும். அதுதான் உயிரின் வளர்ச்சி. அதற்கு உயிரின் இடமாக உள்ள உடம்பை செம்மையாக இருக்கவேண்டும். ஏனவே, உயிரை வளர்க்கும் முகமாக உடம்பை வளர்த்தேன் என்கிறார் திருமூல நாயனார். 

உடல் இயக்கத்திற்கும், பணிக்கும் தேவைப்படும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு உணவு முறை அமையவேண்டும். உண்ணும் உணவு, உடலுக்கு அது இயங்கும் ஆற்றலை வழங்குவதாக இருக்க வேண்டும். உடல் இயக்கத்திற்காகவே உண்கின்றோம். உண்பதற்காக அல்ல. உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவைப் போலவே அறிவு இயக்கத்திற்கு உண்ணவேண்டிய உணவும் உண்டு. அதனைத் திருவள்ளுவ நாயனார், ‘செவியுணவு’ என்கிறார். வாய் உணவில் சுவை காண்பது போலவே செவியாலும் சுவை கண்டு உண்ணவேண்டும். அறிவுடைய வாழ்க்கை வாழ வேண்டும். செவிச் சுவை உணராதவர்கள்,  வாய்ச்சுவை உணவு உண்பது பயனற்றுப் போகிறது.

"செவியில் சுவை உணரா, வாய் உணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?"

என்பார் திருவள்ளுவ நாயனார்.  செவியால் சுவைத்து வாழாத வாழ்க்கை அறியாமையின் காரணமாக அவலத்தில் ஆழ்ந்து அழியும்.

கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், இது பெரும் செல்வம் ஆயிற்று. பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன. மேன்மக்கள் போல், காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மை? இறந்தால் என்ன தீமை? இரண்டும் ஒன்றே ஆகும். "மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம். வயிற்றுக்கு ஈயப்படும் உணவால் விளைந்த வாயுணர்வும், உயிர் நிலைக்க, உடல் வளம்பெற்றுத் திகழ்ந்து, நூற்பொருள்களைக் கேட்டுத் தெளிந்த அறிவினைப் பெறுவதற்கே. எனவே, அப்பயனை இழந்த மாக்கள் மடிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்றார் நாயனார்.

உயிரியல் வாழ்க்கைக்கு உடல் கருவியே ஆகும். உடல் கருவி இல்லாத உயிர் வாழ்க்கை பயன்படுதல் இல்லை.  பயன் கொள்ளுதலும் இல்லை. வளமான உயிர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே உடலியல் வாழ்க்கை அமைகிறது. உடல் செழித்து வளர செழிப்பான உணவு தேவைப்படுவதுபோல, உயிர் செழித்து வளரவும் உணவு தேவைப்படுகிறது.  உடல் வளர்ச்சிக்குரிய உணவை ஒருபொழுது மட்டும் உண்டால் போதாது. உடலின் உழைப்புக்கு ஏற்ப வேளா வேளைக்கு உண்ணவேண்டும். பசி தோன்றிக் கொண்டே இருக்கும். பசிக்கும்போது எல்லாம் உணவு கொள்ள வேண்டும். இல்லையேல் உடல் சோர்வு உண்டாகும். பசித்து உண்பவர்க்கு மீண்டும் பசி வரும். பசிக்காமலேயே வாய்ச் சுவையை மட்டுமே கருதி, கிடைக்கும்போதெல்லாம் கண்டதையும் உண்ணுகின்றவர்க்குப் பசி எடுக்காமலேயே உயிர் விட நேரும். உடல் இயக்கத்திற்குப் பயன்படும் உணவு, சிற்றுணவு என்று சொல்லப்படும். "கழிபேர் இரையான் கண் நோய் மிகும்" என்றார் திருவள்ளுவ நாயனார். எனவே, தேவையான அளவுக்கே உண்ணுதல் வேண்டும். இந்த சுவை உணவுக்குப் பசியை ஆற்றுகின்ற ஆற்றல் உண்டு. பசி உண்டாகாமல் செய்கின்ற ஆற்றல் இல்லை. 

"செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்றார் நாயனார். எனவே, செவிக்கும் உணவு தேவைப்படுகிறது. செவி வழியாக உண்ணப்படும் உணவும் நல்ல உணவாக இருக்கவேண்டும். அது எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செவிச் சுவை முற்றுப் பெறுவது இல்லை. உணவை உண்டால் வாய் வலிக்கலாம். எனவே, அது ஓர் அளவொடு முற்றுப் பெறும். ஆனால், செவியால் எவ்வளவு நுகர்ந்தாலும் வலிப்பது இல்லை. 

"கழிபேர் இரையான்கண் நோய்மிகும்" என்று திருவள்ளுவ நாயனார் கூறினார். மிகப் பெரிய அளவில் உண்பதை 'இரை' என்றார். எனவே, உணவைத் தேவையறிந்து சிறிய அளவிலையே கொள்ளுதல் வேண்டும் என்பது தெளிவாகும். பெரிய அளவு உணவை, 'மொத்துணா' என்கிறார் குமரகுருபர அடிகளார்.

"துயில்சுவையும், தூநல்லார் தோள்சுவையும், எல்லாம்

அயில்சுவையின் ஆகுவஎன்று எண்ணி - அயில்சுவையும்

பித்துஉணாக் கொள்பபோல்கொள்ப, பிறர்சிலர்போல்

மொத்துணா மொய்ம்பின் அவர்."  --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

பிறர் சிலர் போல் - வேறு சிலர் போல, மொத்துணா மொய்ம்பினவர் - ஐம்புல இன்பங்களால் அடிபடாத தவவலிமை உடையோர், துயில் சுவையும் - தூக்கத்தின் இன்பமும், தூ நல்லார் தோள்சுவையும் - அழகிய பெண்களது தோளைத் தழுவும் இன்பமும்,  எல்லாம் - மற்றுமுள்ள எல்லா இன்பங்களும், அயில்சுவை இன் - உணவினால் உண்டாகும் இன்பத்தால், ஆகுவ என்று எண்ணி - வருவன என்று நினைத்து, அயில் சுவையும் - உணவு கொள்ளுதலையும், பித்து உணா கொள்வ போல கொள்ப - மிகச் சிறுகவே உண்பார்கள்.

வாயுணவும் செவியுணவும் உடல் வாயில்களான வாய் வழியாகவும், செவி வழியாகவும் உண்ணப்பெறுவன.  இரண்டுமே உயிரானது  நிறைவை நோக்கி நடத்தும் பயணத்திற்குத் துணை செய்வன. ஆனால் உயிருக்கு நேரடியான உணவாகா இவை. செவியுணவு இறைவன் திருவருளைப் பெறுதற்குத் துணை புரியும். எனவே, உயிருக்கு உணவு திருவருளே ஆகும். உயிருக்கு உற்ற குறையை நீக்கி, நிறைநலம் வழங்கத் திருவருளாகிய உணவாலேயே இயலும். குறைவில்லாத நிறைவான வாழ்க்கைக்கு, துன்பத் தொடர்பு இல்லாத நிறை இன்ப வாழ்க்கைக்கு நேரடியாகத் துணை புரியும் ஆற்றல் வாயுணவுக்கும் செவியுணவுக்கும் இல்லை. ஆயினும், இவை இரண்டும் இன்றி உயிர் நலம் பெறமுடியாது. 

இறைவன் திருவருளை நினைந்து வழிபட்டு வாழ்தலே உயிர் உண்ணுதற்கு உரிய சிறந்த உணவாகும். இறைவனை நினைப்பதன் மூலம் உண்ணும் உணவு,  உயிர் உண்ணத்தக்க உணவாகும். இந்த உணவு குறைந்தாலும், மிகுதியானாலும் துன்பம் வரவே வராது. உடலுக்கு இடுகின்ற உணவை உடல் ஏற்று, முறையாகச் செரித்து, உணவின் பயன்கொள்ளும்பொழுது, உடல் நலம் பெறுகிறது. உயிரானது, இறைவன் திருவருளை நினைந்து வழிபடுவதன்மூலம், தவவாழ்க்கையை மேற்கொண்டு பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறுகிறது.  உடல் வாழ்க்கையின் முடிந்த பயன் இதுவே ஆகும்.

உண்ணவேண்டும் என்பதற்காக யாரும் உண்ணுதல் கூடாது. உணவினால் உடலே பயன்பெறுகிறது.  உணவிற்கு யாதொரு பயனும் இல்லை. அதுபோலத் திருவருளால் உயிரே வளம் பெறுகிறது.  உயிருக்கே ஆக்கம் உண்டாகிறது. எனவே, உயிருக்கு உயிருக்கு நிறைவைத் தரும் வகையில் இறைநெறியில் நின்று வழிபாடு இயற்றுதல் வேண்டும். இதனைத் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வரும் தேவாரப் பாடலின் வழி நமக்கு அறிவுறுத்துகின்றார். 

"இறை ஊண் துகளோடு இடுக்கண்எய்தி,

இழிப்புஆய வாழ்க்கை ஒழியத், தவம்

நிறைஊண் நெறிகருதி நின்றீர் எல்லாம்

நீள்கழ லேநாளும் நினைமின், சென்னிப்

பிறைசூழ் அலங்கல் இலங்குகொன்றை

பிணையும் பெருமான் பிரியாத நீர்த்

துறைசூழ் கடந்தைத் தடம்கோயில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே."

இதன் பொருள் ---

குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழி யாது என மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும், முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த் துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.

இறை ஊண் - சிற்றுணவு. துகள் - தூளி. இடுக்கண் - துன்பம். தவம் நிறை ஊண் நெறி - தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் மார்க்கம். அலங்கல் - மாலை. பிணையும் - விரும்பும்.

உடலுக்குப் பசி உண்டாக உண்டாகச் சிறிதளவு உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். அது 'இறை ஊண்' எனப்படும். 'பித்து உணா' என்றும் சொல்லப்படும். பித்தர்கள், சுவை கருதி உணவை மிகுதியாக உண்ணமாட்டார்கள். செவி உணவை சலிக்காமல் கொள்ள வேண்டும். அதுவும் நல்ல உணவாக இருக்கவேண்டும். அதுவே உயிருக்கு உரிய உணவு.  "எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்" நல்லவை கேட்டால் பெருமை உண்டாகும். தீயவை கேட்டால் சிறுமை உண்டாகும். நல்லவற்றைச் சலிக்காமல் கேட்டு, நல்வழியில் நின்று, இறையருளைப் பெற்று உய்வோமாக.






No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...