நச்சுப் பகைமை

நச்சுப் பகைமை

---

நட்புக்கு இலக்கணம் வகுத்து அருளிய திருவள்ளுவ நாயனார்,  தீமை தரும் நட்பு கூடாது என்பதை அறிவுறுத்த "தீநட்பு" என்னும் ஓர் அதிகாரத்தையும் வகுத்து அருளினார். தீமை தரும் நட்பைத் "தீ நட்பு" என்றும், உள்ளத்தால் பொருந்தாத நட்பைக் "கூடா நட்பு" என்றும் வகைப்படுத்தினார் நாயனார்.

பொறுக்க முடியாத குற்றத்தினைச் செய்கின்றவரது நட்பை நீக்குதல் வேண்டும் என்று நட்பு, நட்பு ஆராய்தல் என்னும் இரண்டு அதிகாரங்களில் சுருங்கச் சொன்னார் நாயனார். சொல்லிய அதனுள் அடங்காத போது, நீக்கிவிட வேண்டிய நட்பினை இரண்டு அதிகாரங்களால் தெளிவுபடுத்த வேண்டி, முதலில், தீ நட்பு பற்றிக் கூறி அருளினார். தீ நட்பாவது, தீய குணம் உடையாரோடு செய்துகொண்ட நட்பு. அதனை விலக்கவேண்டும் என்று இந்த அதிகாரத்தில் கூறுகின்றார்.

தீய குணம் உடையவரும் தோற்றத்தில் மனிதரைப் போலத் தான் இருப்பார். தீய குணம் உடைய ஒருவரிடத்து எவ்வளவு அன்பு உடையவராக ஒருவர் இருப்பினும், தன்னுடைய தீய குணத்தினால், பெரியதொரு கேட்டினைத் தனக்குத் தானே செய்து கொள்வதுடன், தனது நண்பருக்கும் அதனைத் தந்து விடுவதோடு, இம்மையில் வரும் பழியையும், மறுமையில் உண்டாகும் பாவத்தையும் கொண்டு வந்துவிடுவார். எனவே, ஆராய்ந்து அறியாது நட்புக் கொண்டாலும், பின்னர் அறிந்து கொண்டால், அவருடைய அன்புடைமையைச் சிறிதும் நோக்காமல், அவரது தீய குணத்தையே நோக்கி, அவரை விட்டு ஒழிதல் வேண்டும்.

"தீநட்பு" என்னும் அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தமக்குப் பயன் உள்ளபோது நட்புக் கொண்டு இருந்து, பயன் இல்லாதபோது விட்டு நீங்குகின்ற, ஒப்பு இல்லாதவரது நட்பைப் பெற்றால் என்ன பயன்? இழந்தால் என்ன கேடு?" என்கின்றார் நாயனார்.

"உறின் நட்டு, அறின் ஒரூஉம், ஒப்பு இலார் கேண்மை,

பெறினும் இழப்பினும் என்?" --- திருக்குறள்.

இது குறித்து நாலடியார் என்னும் நூலில் கூறப்படுவதைக் காணலாம்.

"கால் ஆடு போழ்தில் கழிகிளைஞர், வானத்து

மேலாடு மீனின் பலர் ஆவர் - ஏலா

இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!

தொடர்பு உடையேம் என்பார் சிலர்." --- நாலடியார்.

இதன் பொருள் ---

ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளை உடைய நாட்டினுக்குத் தலைவனே!  கால் ஆடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - ஒருவன் வளமாக வாழ்கின்ற காலத்தில், மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப் போல நெருங்கிய உறவினர் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர் பலரராக இருப்பர்.  ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஒவ்வாத வறுமைத் துன்பத்தை ஒருவர் அடைவராயின், தொடர்பு உடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில், நட்பு உடையவர்கள் என்று உரிமை பாராட்டுவோர் சிலர் ஆவர்.

சாய்கால் உள்ளபோது பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தபோது அவர் பிரிந்துபோவது உலகியற்கை.

இதனையே "மூதுரை" என்னும் நூலில் ஔவைப் பிராட்டியாரும் அறிவுறுத்துகின்றார்.

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர், --- அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு." --- மூதுரை.

இதன் பொருள் ---

அற்ற குளத்தின் அறு நீர்ப் பறவை போல் - நீர் வற்றிய குளத்தினை விட்டு நீங்குகின்ற நீர்வாழ் பறவைகள்போல, உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - வறுமை வந்தபொழுது (அல்லது வேறு துன்பம் வந்த பொழுது)  நீங்குவோர் உறவினர் ஆகார்; அக் குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல - (நீர் வற்றிப் போன பிறகும்) அந்தக் குளத்தில் உள்ள  கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, ஒட்டி உறுவார் உறவு - நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே  உறவினர் ஆவர்.

நஞ்சு என்பது குளிர்ந்து கொல்லும் தன்மை உடையது. "சிங்கி குளிர்ந்து கொல்லும்" என்பார் குமரகுருபர அடிகளார். துன்பம் வந்தபோது நீங்கிப் போகின்றவர்கள், ஒருகால் வாழ்வு வந்தபோது மீண்டும் வந்து தலைப்படுவார்கள். முன்னர் நிகழ்ந்தது ஏதும் அறியாதவர் போல இனிமையாகவே பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களை நச்சுப் பகைமை என்கிறார் குமரகுருபர அடிகளார். உடலிலே உண்டான புண்ணை வெளிக் காட்டாது மறைத்து வைக்காமல், அறுத்து எறிந்து ஆற்றுதல் வேண்டும். அதுபோல நச்சுப் பகைமை என்று அறிய வந்தவுடன் கொஞ்சமும் தயவு தாட்சிண்ணியம் வைக்காமல், அவரைத் தமது தொடர்பில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

"புறம் நட்டு, அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை 

வெளியிட்டு வேறு ஆதல் வேண்டும், கழிபெரும் 

கண்ணோட்டம் செய்யேல், கருவி இட்டு ஆற்றுவார் 

புண் வைத்து மூடார் பொதிந்து." 

என்பது "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் பாடிய பாடல்.

இதன் பொருள் ---

புறம் நட்டு, அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை - வெளித் தோற்றத்திற்கு நட்பு உள்ளவர் போலக் காட்டிக் கொண்டு, மனத்திலே கோபத்தை வைத்துக் கொண்டு பொய்யாக நட்புச் செய்து, மனம் புழுங்குவோருடைய  நஞ்சைப் போலும்  பகைமைத் தன்மையை, வெளி இட்டு வேறு ஆதல் வேண்டும் - அவரும் பிறரும் அறியும்படி வெளிப்படுத்தி, அவரிடத்தில் இருந்து வேறுபட்டுப் பிரிதலே  விரும்பத் தக்கது ஆகும்.  கழிபெரும் கண்ணோட்டம் செய்யேல் - (அவ்வாறு அல்லாமல்) மிகுந்த தாட்சிண்ணியம்  காட்ட வேண்டாம். கருவி இட்டு ஆற்றுவார் - கருவியினால் அறுத்து  ஆறச் செய்வார்களே அல்லாமல், புண் மூடார் பொதிந்து - உடலில் உண்டான புண்ணை யாரும் வெளிக் காட்டாது மறைத்து வைக்க மாட்டார்கள். 

"பாடப் பாட இராகம். மூட மூட ரோகம்" என்பது பழமொழி. நோயை மறைத்து வைத்தால், அது மேலும் வளரும். உட்பகை உண்டாகுமானால் அதை உடனே களைந்துவிட வேண்டும். உதட்டில் அன்பு வைத்து, உள்ளத்தில் பகைமை வைத்து, மனம் புழுங்குகின்றவர்களிடத்தில் இருந்து ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"உட்பகை அஞ்சித் தற் காக்க, உலைவு இடத்து 

மட்பகையின் மாணத் தெறும்."

என்பது  நாயனார் அருளிய திருக்குறள். சுற்றத்தவர் போல், நண்பர் போல் இருந்து, உள்ளத்தில் பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டு, காலம் பார்த்துத் தன்னைக் கெடுக்க முயற்சிக்கும் பகைவரிடம் இருந்து தன்னை ஒருவன் காத்துக் கொள்ளுதல் வேண்டும். குயவன் மண் பாண்டத்தைச் செய்கின்ற காலத்தில், அதைச் செய்து முடிக்கும் அளவும் காத்திருந்து, அறுக்க வேண்டிய பக்குவம் வந்த பின்னர் அதை அறுப்பதற்குத் தன்னிடம் உள்ள மரத்தால் ஆகிய ஒரு சிறு பலகை போன்ற ஒரு கருவியை வைத்து அடியில் அறுத்து எடுத்து விடுதலைக் காணலாம். உட்பகையாக உள்ளவரும் ஒருவரும் அறியாதபடிக்கு உடன் இருந்துகொண்டே காலம் வந்தபோது அழித்துவிடுவர்.

இந்த உட்பகையானது புறப்பகைக்கு இடமாக்கிக் கொடுத்து,  நண்பர்போல் அடுத்து இருந்து, மறைவில் பகையாய்க் கெடுக்க முற்படுகின்ற உடன் நிற்கும் பகைக்கு இடம் கொடாது இருத்தல் கூறினார் நாயனார். இந்த உட்பகையானது, புறப்பகையை வெல்லுதற்கு முன் களைந்து விட வேண்டியது.

இப்படிப்பட்டவர்கள் முகம் மலரச் சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். தமது உள்ளத்தில் உள்ள பகைமை உணர்வை வெளிக் காட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்களின் செயலை வைத்தே அறிந்து கொள்ள முடியும். இவர்களைப் பார்த்து அச்சம் கொள்ளுதல் வேண்டு்ம் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"முகத்தின் இனிய நகாஅ, அகத்து இன்னா 

வஞ்சரை அஞ்சப் படும்."        -- திருக்குறள்.

மனத்தில் இனிமை கொள்ளுவதால் மலரவேண்டிய முகம். மனத்தால் இனியவர் போல, முகமலர்ச்சி காட்டி நடிப்பவரைப் பார்த்து, 'இவர் நமக்கு இனியவர்' என்று எண்ணி, அவரிடத்தில் நட்புக் கொள்ளுதல் கூடாது. இந்த வஞ்சகர் தமது முகத்தில் பகைமையைக் காட்டாது வஞ்சித்து, முகத்தில் மட்டும் இனிமையைக் காட்டிப் பழகி, பின் தமது பகைமையை முடித்துக் கொள்ளுகின்ற காலம் வரும்போது, நண்பராகப் பழகியவரைத் துன்புறுத்துவார்கள் என்பதால் அச்சம் கொள்ளவேண்டும் என்றார்.

உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு, புறத்தில் ஒன்றைப் பேசுகின்ற நல்லவர்களுக்கு அஞ்சியே தேவர்கள் தமது விழித்த கண்ணை இமைக்காது இருக்கின்றார்கள் என்று நைச்சியமாகக் கூறுகின்றது பின்வரும் பாடல்.

"முன்னின்று ஒருவன் முகத்தினும் வாயினும்

கல் நின்று உருகக் கலந்து உரைத்துப்-பின்னின்று

இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்

விழித்து இமையார் நின்ற நிலை."      --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

தேவர் விழித்து இமையார் நின்ற நிலை - தேவர்கள் விழித்த கண் மூடாமல் நிற்பதற்குக் காரணம், ஒருவன் முன்னின்று - ஒருவன் எதிரில் நின்று, கல் நின்று உருக - கல்லும் உருகுமாறு முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து - முகமலர்ந்து வாயால் இனிமையான சொற்கைக் கூறி அவனைப் புகழ்ந்து, பின் நின்று - அவன் அகன்ற பின்னர், இழித்து உரைக்கும் - (முன்னர் புகழ்ந்து கூறிய) அவனையே இகழ்ந்து கூறுகின்ற, சான்றோரை அஞ்சியே -கயவர்களைக் கண்டு கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே ஆகும். 

கயவர்களைச் சான்றோர் என்றது இழிவு பற்றி.  நெல்லைப் போலவே இருந்தாலும், உள்ளீடாக இருக்கவேண்டிய அரிசி இல்லாதவற்றைப் பதர் என்று நீக்குகின்றோம். அதுபோல, மக்களாகப் பிறந்தும், மக்கள் பண்பு இல்லாதவர்கள் மக்கள் ஆகமாட்டார்கள். அத்தகையவரைக் கயவர் என்பார்கள். உருவம், உறுப்புகள், நடை, உடை, பேச்சு முதலியவற்றால், கயவர்கள் மக்களைப் போலவே காணப்படுவார்கள். "மக்களே போல்வர் கயவர்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

எனவே, தீயவர் தொடர்பு என்று தோன்றினால், அதனை உடனே நீக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நன்மையைத் தரும். "உள் ஒன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்றார் வள்ளல்பெருமான்.


No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...