இல்லறமே சிறந்த தவம்

இல்லறமே சிறந்த தவம்

-----


"கற்பு உடுத்து, அன்பு முடித்து, நாண் மெய்ப்பூசி 

நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பேறு

என்பதோர் ஆக்கமும் உண்டாயின், இல்லன்றே 

கொண்டாற்குச் செய்தவம் வேறு." 

"நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் அருளிய பாடல் இது.

இதன் பதவுரை ---

கற்பு உடுத்து - கற்பினேயே  ஆடையாக உடுத்துக் கொண்டு, அன்பு முடித்து - அன்பினேயே  மலராகச் சூடிக் கொண்டு,  நாண் மெய்ப்பூசி - உடம்பில் நாணம் எனப்படும் பெண்மைப் பண்பையே கலவைச் சாந்தாகப் பூசிக் கொண்டு,  நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு - நல்ல குணங்களையும், நல்ல செயல்களையுமே ஆபரணங்களாக அணிந்த மனையாளுக்கு, மக்கட்பேறு என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் --- நன்மக்கள் பேறு என்னும் ஒப்பற்ற செல்வமும் உண்டானால், கொண்டாட்கு - அவளை மனைவியாகக் கொண்ட ஒருவனுக்கு, செய் தவம் வேறு இல் அன்றே - அவன் செய்ய வேண்டிய தவம் வேறு இல்லை. (சிறந்த இல்லறமே முடிந்த தவம் ஆகும்)

கற்புடைய மனைவியாலேயே ஒருவனுக்கு எல்லாத் தவப் பேறும் வந்து பொருந்தும் என்பது கருத்து. அவ்வாறு இல்லறத்தை நடத்துகின்ற பேறு கிடைக்குமானால், அதுவே மங்கையர்க்கும் சிறந்த தவம் ஆகும் என்பதால், 

"மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல 

மாதவம் செய்திட வேண்டும்; அம்மா! 

பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப் 

பாரில் அறங்கள் வளரும் அம்மா!"

என்று பாடினார் கவிமணி தேசிக விநாயம் பிள்ளையவர்கள்.

வீட்டில் விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்ற சொல்லைக் கொண்டே குடும்பம் சார்ந்து பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும். குடும்பத்தைத் திறம்ட நிர்வகிக்கும் பாங்கு பெண்களுக்கே உண்டு. அவர்கள்தான் அல்லும் பகலும் உழைப்பவர்கள். அன்பு ததும்பி எழுபவர்கள்.  கல்லும் கனியக் கசிந்துருகிக் கடவுளைத் தொழுபவர்கள். அத்தகு சிறப்பு வாய்ந்த மனைவியின் துணைக் கொண்டு சிறப்பான இல்லறத்தை ஒருவன் நடாத்துதல் வேண்டும் என்றார்.

"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித்து ஆயினும் இல்" --- திருக்குறள்.

இல்லறத்திற்கு உரிய நற்பண்புகள் மனைவியிடத்தினில் இல்லையானால், வாழ்க்கையானது எவ்வளவு மேன்மை உடையதாக இருந்தாலும் பயனில்லை.

"மழைதிளைக்கும் மாடமாய், மாண்பு அமைந்த காப்பாய்,

இழைவிளக்கு நின்று இமைப்பின் என்னாம்? - விழைதக்க

மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்

காண்டற்கு அரியதோர் காடு." ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

மழை திளைக்கும் மாடமாய் - மேகங்கள் தவழுகின்ற உயர்ந்த மாளிகையாய், மாண்பு அமைந்த காப்பாய் - சிறப்பான பாதுகாப்பினை அடையதாய், இழை விளக்கு நின்று இமைப்பின் என்னாம் --- அழகாக இழைக்கப்பட்டு ஒளி வீசும் விளக்குகள் அங்கங்கும் இருந்தும் என்ன பயனாகும்? விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் - மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க இல்லக் கிழத்தியை இல்லாதவனது வீடு, காண்டற்கு அரியதோர் காடு --- கண்கொண்டு பார்த்தற்கு இயலாத ஒரு கொடிய காடாகும்.

மனைவியானவள் சிறப்புக்கு உரியவளாக அமைந்து விட்டால் இல்லாததது என்ன? மனைவியானவள் நற்குண நற்செய்கைகளால் சிறப்பு அடையாதபோது உள்ளது என்ன? என்று திருவள்ளுவ நாயனார் வினவுகின்றார்.

"இல்லது என் இல்லவள் மாண்பானால், உள்ளது என்

இல்லவள் மாணாக் கடை" --- திருக்குறள்.

இத் திருக்குறள் கருத்துக்கு ஏற்ப, ஔவையார் அருளிய "மூதுரை" என்னும் நூலில் ஒரு பாடல் உண்டு.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்."

இதன் பொருள் ---

நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றும் இல்லை. மனையாள் இல்லாமல் போனாலோ,  மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.

நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும். 

திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் என்னும் நூலும் இந்த உலகியல் முறையையே காட்டி, திருவருட் சத்தியின் அருளைப் பெறுகின்ற பேற்றினைப் பற்றிப் பேசுகின்றது.

"கொண்டு அங்கு இருந்தனர், கூத்தன் ஒளியினைக்

கண்டு அங்கு இருந்தனர், காரணத்து உள்ளது,

பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால்,

இன்று என் மனத்து உள்ளே இல் அடைந்து ஆளுமே." 

இதன் பொருள் ---

சிவனது விளக்கமாக விளங்குகின்ற சத்திகளையும், அவள் வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதாரத் தாமரைகளிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்றது.

அம்பலவாணப் பெருமானின் அருள் ஒளியினைக் கொண்டு அங்கு எழுந்தருளி இருக்கும் திருவருள் அம்மையை அகத்தவம் உடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருள் அம்மையாகிய சிவகாமியாரும் கலந்த கலப்பால் உலகு உடல் பொருள்கள் எல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மையான செந்தமிழ்த் திரு நான்மறைகள் எல்லாம் அம்மையின் திருவடியையே எங்கும் தேடுகின்றன. அத்தகைய அம்மையானவள், என் உள்ளத்தைக் குடியிருப்பாகக் கொண்டு என்னை ஆண்டருளினள்.

"இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை,

இல் அடைந்தானுக்க் இரப்பது தான் இல்லை,

இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்,

இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்ஆன்ஐயே."  ---  திருமந்திரம்.

இதன் பொருள் ---

இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணைவியைப் பெற்றால், அவளுக்கே அன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. எல்லா நன்மைகளும் குறைவின்றி விளங்கும். அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராக மாட்டார்.

பராசத்தியைத் தன் உடம்பினுள் குடிகொள்ளப் பெற்றவனுக்கு, இல்லாத செல்வம் இல்லை. அவன் இறப்பது இல்லை. அவனுக்கும் தேவரும் நிகர் ஆவார். அவனிடம் சிவம் இல்லாமல் இல்லை. 

என்றும் நிலைத்த மாறாத இல்லாகிய திருவருள் அம்மையின் திருவடியைப் பெற்றவர் 'இல் அடைந்தார்' ஆவர். அத்தகைய திருவடியாகிய இல்லத்தை அடைந்தார் எங்கும் எவரிடத்தும் ஒன்றினையும் இரந்து பெறவேண்டியது இல்லை. அத்தகையோர்க்கு தேவலோகத்தில் வாழும் இமையவரும் ஒப்பாக மாட்டார். தாழ்ந்தவரே ஆவர். அவர்களுக்குக் கிடைத்தற்கு அரிய பொருள் என்று ஏதும் இல்லை. 

இல்லறத்தின் பெருமை குறித்து "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல் கூறுமாறு காண்க.

"தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உ(ள்)ள மனைவியை,

  தவறாத சுற்றத்தை, ஏவாத மக்களை,

     தனைநம்பி வருவோர் களைச்

சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களை,

     தென்புலத் தோர், வறிஞரை,

  தீது இ(ல்)லா அதிதியை, பரிவுடைய துணைவரை,

     தேனுவை, பூசுரர் தமைச்

சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

     தான் புரிந்திடல் இல்லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரி ஆயிடார்!

அந்தரி உயிர்க்கெலால் தாய்தனினும் நல்லவட்கு

     அன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"

இதன் பதவுரை ---

அந்தரி --- பார்வதி தேவியும், உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே --- எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான உமைதேவிக்குக் காதலனே! அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு - அரிய மதவேள் எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

தந்தைதாய் சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை - வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள்ள மனைவியை - நல்லொழுக்கம் உடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், த(ன்)னை நம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகல் அடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை - தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை -பசுக்களையும், பூசுரர் தமை - எவ்வுயிர்க்கும் செம்மை பூண்டு ஒழுகும் அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய் கடனை - எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, என்றும் பிழையாது - எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரி ஆயிடார் - பொருந்திய நன்மையை உடையவராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

      "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை" என்றார் திருவள்ளுவ நாயனார். பழுத்த துறவியான பட்டினத்து அடிகளாரும் இல்லறத்தைச் சிறப்பித்தே பாடி உள்ளார். துறவறத்தில் நின்றவர்களை இறையருளைப் பெறுகின்றார்களோ, இல்லையோ, சிறப்பான இல்லறத்தை முறையாக நடத்துகின்றவர்கள் பெருந்தவம் புரிபவர்கள் என்பதால் அவர்கள் இறையருளை எளிதாகப் பெறமுடியும் என்கிறார்.

"மங்கையர் இல்லா மனைக்கு எத்தனை அருஞ்செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை" என்கிறது "குமரேச சகதம்" என்னும் நூல்.


No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...