மற்றவர் சிந்தனைக்கும் மதிப்புத் தருக!

 

மற்றவர் சிந்தனைக்கும் மதிப்புத் தருக!

-----

'நடுவு நிலைமை' என்பது ஒரு வாழ்வியல் அறம். நண்பர், பகைவர், அயலார் என்னும் ஒவ்வொரு பிரிவிலும் முறை தவறாமல் நின்று, ஒருதலைப் பட்சமாக இல்லாமல் வாழ்ந்து வருவதே 'நடுவுநிலைமை' என்னும் அறம் ஆகும். அது ஒன்றுதான் நன்மை தரவல்லது. நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டும் கெட்டான் நிலை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருதலைப் பட்சமான சார்பு நிலை, நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது, உள்ளத்தில் விருப்பையோ வெறுப்பையோ அடிப்படையாக வைத்து, ஒரு முடிவை எடுத்துக் கொண்டு, அதையே செயல்படுத்த முனைந்து, அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வதும்  மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வதும் தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டும் ஆய்வு செய்தல், அணுகுதல் இருபாலும் நன்மையைத் தராது.

ஒரு பொருளை ஆராயும்போது, விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நிலையில் இருந்து ஆராய்தல் வேண்டும்.

"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்

ஆய்தல் அறிவுடையார் கண்ணதே, - காய்வதன்கண்

உற்ற குணம் தோன்றாது ஆகும், உவப்பதன்கண்

குற்றமும் தோன்றாக் கெடும்."

என்கிறது "அறநெறிச்சாரம்" என்னும் நீதிநூல்.

இதன் பொருள் ---

காய்வதன்கண் உற்ற  குணம் தோன்றாது ஆகும் - ஒரு பொருளின் மீது வெறுப்புக் கொண்டால், அப் பொருளில் உள்ள நன்மையான குணம் ஆராய்பவனுக்குத் தோன்றாது. உவப்பதன்கண்  குற்றமும் தோன்றாக் கெடும் - அதுபோல, ஒரு பொருளின் மீது விருப்பம் வைத்தால், அப் பொருளில் உள்ள குற்றமானது ஆராய்பவனுக்குத் தோன்றாமல் மறையும். காய்தல் உவத்தல் அகற்றி - (எனவே) வெறுப்பு விருப்பு இல்லாமல், ஒரு பொருட்கண் ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணம் குற்றங்களை ஆராய்ந்து அறிதல், அறிவுடையார் கண்ணதே - அறிவுடையார் செயல் ஆகும்.

மனிதன் எந்த வகையிலும் சுதந்திரம் உடையவன்தான்.. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவனே. ஆனால், விருப்பு வெறுப்போடு எதையும் சிந்திக்கும்போது, அவனுக்கு உண்மைப் பொருள் விளங்காமல் போகிறது. எனவே, அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டும்.  சிந்திக்கிற பழக்கத்தையே வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பைத் தனது விருப்பு வெறுப்பின் காரணமாகவோ,  அல்லது வேறுசில காரணங்களின் அடிப்படையிலோ குறைவாக எண்ணுதலும் கூடாது. சமநிலையோடு இருந்து, அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து, அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப் போக்கு வேண்டும்.

மற்றவர் சிந்தனையையும் மதிக்கும் நிலை உண்டானால்தான், அறிவு வளரும். முதலில் விருப்பு வெறுப்பு அற்ற சமநிலையில் மனதை வைத்துக் கொண்டு, மதிப்புணர்வுடன் எண்ணி ஆய்வுசெய்து ஒப்புநோக்கி, நல்லதைத் துணிந்து முடிவு செய்ய வேண்டும். ஆய்வு செய்த பிறகு தமது கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்ய வேண்டும். இதற்குப் பிறகுதான், எது சரியானது, எது சரியில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும். 

வேண்டியவர் என்றால் அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், வேண்டாதவர் என்று வந்துவிட்டால், அவர் சொல்கிற எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் எண்ணுகின்ற மனப்பாங்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதானல் எத்தனையோ தீங்குகள் நிகழ்கின்றன. நல்லவர் தீயவர் என்று இகழப்படுவதும், தீயவர் நல்லவர் என்று போற்றப்படுவதும், சமநோக்கு இல்லாமையால் உண்டாகும் தீமை ஆகும். 

"இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே,

இருவரும் பொருந்த உரையார் ஆயின்,

மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்

மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்

முறையுறத் தேவர் மூவர் காக்கினும்

வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே."

என்கிறது "வெற்றிவேற்கை" என்னும் "நறுந்தொகை"

இதன் பதவுரை ---

இருவர் தம் சொல்லையும் - (வாதி எதிர்வாதி என்னும்) இருவருடைய சொற்களையும்; எழு தரம் கேட்டு - ஏழு முறை கேட்டு (உண்மை உணர்ந்து), மனுமுறை நெறியின் - மனு நீதி வழியால், இருவரும் பொருந்த உரையார் ஆயின் -  இருவரும் ஒத்துக்கொள்ளும்படியாக முடிவு சொல்லாரானால், வழக்கு இழந்தவர் தாம் - நீதியின்றி வழக்கினை இழந்தவர், மனம் உற மறுகி நின்று - மனமானது  மிகவும் கலங்கி நின்று, அழுத கண் நீர் - அழுத கண்ணீரானது, முறை உற தேவர் மூவர் காக்கினும் - முறையாக மூன்று தேவர்களும் காத்தாலும், வழி வழி ஈர்வது ஓர் வாள் ஆகும் - (அவர்) சந்ததி முழுதையும் அறுப்பதாகிய ஒரு வாளைப் போன்றது ஆகும்.

இரு திறத்தினர் சொல்லையும் ஏழு முறைகேட்டு ஆராய்ந்து உண்மை உணர்ந்து நீதி வழுவாது இருவரும் மனம் பொருந்தும்படி முடிவு சொல்லாராயின், அநீதியாக வழக்கிலே தோல்வியுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்தியும் முறையாகப் பாதுகாத்தாலும், அநீதியானது, முடிவு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும்.

"பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய் போலும்மே, மெய் போலும்மே"

"மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய் போலும்மே, பொய்போலும்மே."   --- நறுந்தொகை.

பொய்ம்மையை உடைய ஒருவன்,  தனக்கு உள்ள வாக்கு வன்மையால் கூறும் பொய்யானது உண்மையைப் போலவே தோன்றக் கூடும். சொல் சாதுரியத்தைக் கொண்டு ஒருவன் கூறும் பொய்யை மெய் என்று நம்பக் கூடாது. மெய்ம்மை உடைய ஒருவன் திறம்படச் சொல்ல மாட்டாமையால், அவன் கூறும் மெய்யானது பொய்யே போலத் தோன்றும். சொல்வன்மையாலும் சொல்ல மாட்டாமையாலும் பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் தோன்றக்கூடுமாகலின், 'எழுதரம் கேட்டு' என்றார்.

கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில், அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறும் தராசைச் சரிபார்த்து, அதன்பிறகு பொருள்களை நிறுத்துப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதுமே முறை. அதுபோலவே தனது மனநிலையை விருப்பு வெறுப்பு இல்லாமல், சமநிலையில் வைத்துக் கொண்டு பிறகுதான் மற்றவர் கருத்தை மதித்து ஆராய்ந்து அறிய வேண்டும்.

"சமன்செய்து சீர்துரக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி."

என்னும் திருக்குறளின் மூலம் நம்மை நெறிப்படுத்துகின்றார் நாயனார்.

"முன்னர் தான் சமனாக நின்று, பின்னர் தன்னிடத்தில் வைத்த பாரத்தை அளவு செய்யும் துலாக்கோல் போல், இலக்கணங்களால் நிறைந்து, ஒரு பக்கம் சாயாமல் இருத்தல் அறிவால் நிறைந்த சான்றோருக்கு அழகு ஆகும்" என்கின்றார் நாயனார்.

"இலக்கணம்" என்னும் சொல் வடமொழியில், "இலக்ஷணம்" எனப்படும்.

"துலாக்கோல் இயல்பே தூக்கும் காலை

மிகினும் குறையினும் நில்லாது ஆகலும்,

ஐயம் தீர்த்தலும், நடுவு நிலைமையோடு

எய்தக் கூறுப இயல்பு உணர்ந்தோரே."  --- தொல்காப்பியம்.


"ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்

மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே." --- நன்னூல்.


"ஆவலித்து அழுத கள்வர் 

வஞ்சரை வெகுண்டு நோக்கிக்

காவலன் செங்கோல் நுண்ணூல் 

கட்டிய தருமத் தட்டில்

நாஎனும் துலைநா இட்டு, எம் 

வழக்கையும், நமராய் வந்த

மேவலர் வழக்கும் தூக்கித் 

தெரிக என விதந்து சொன்னார்."     --- தி.வி.புராணம்.

இதன் பதவுரை ---

ஆவலித்து அழுத கள்வர் - அவலம் கொட்டி அழுத பொய் வேடமுடைய இறைவர், வஞ்சரை வெகுண்டு நோக்கி - கொடியராகிய ஞாதிகளைச் (சுற்றத்தினரை) சினந்து பார்த்து(ப் பின்), காவலன் செங்கோல் நுண்நூல் கட்டிய தருமத் தட்டில் - புரவலனது செங்கோலாகிய நுண்ணிய நூலினால் கட்டப்பட்ட அறமாகிய தட்டிலே,  நா எனும் துலைநா இட்டு - உங்கள் நாவாகிய துலைக்கோலை இட்டு, எம் வழக்கையும் - எமது வழக்கையும்,  நமராய் வந்த மேவலர் வழக்கும் - எமது பங்காளிகளாய் வந்த இப்பகைவர்களின் வழக்கையும், தூக்கித் தெரிக என - தூக்கி அறிவீர் என்று, விதந்து சொன்னார் - (நூலோரை நோக்கித்) தெளிவுபடக் கூறியருளினார்.

     ஆவலித்தல் --- வாய் புடைத்து ஆர்த்தல். அரசன் செங்கோலுக்கும் அறத்திற்கும் பழுது உண்டாகாமல் நடுவு நிலையுடன் ஆராய்ந்து கூறு வேண்டியதை துலாக் கோலைக் காட்டி இவ்வாறு உருவகப்படுத்தினார். 

"தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல;

செத்துக, சாந்து படுக்க, மனன் - ஒத்துச்

சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே

நுகத்துப் பகலாணி போன்று." ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

தத்தமக்குக் கொண்ட குறி தவம் அல்ல - தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவம் ஆகா; செத்துக - தன்னை ஒருவன் வாளால் செத்தினாலும், சாந்து படுக்க - அன்றி மற்றொருவன் குளிர்ந்த சந்தனத்தைப் பூசினாலும், மனன் ஒத்து - மனம் பொருந்தி, நுகத்துப் பகல் ஆணி போன்று - நுகத்தின்கண் நடுவு நிற்கும் நுகத்து ஆணியை ஒப்ப, சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பே தவம் - ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

தவம் என்று சொல்லப்படுவது, அவரவர் கொண்டுள்ள புற வேடங்களைப் பொறுத்தது அல்ல. தன்னை ஒருவன் சிதைத்துத் துன்புறுத்தினாலும், மற்றொருவன் சந்தனம் பூசி மகிழ்வித்தாலும், அந்த இருவரிடத்தும் ஒத்த மனம் உடையவனாக, மாடுகளைப் பூட்டுகின்ற நுகத்தடியின் நடுவிலை நிற்கும் பகலாணியைப் போல, இரு திறத்தார்க்கும் நடுநிலையில் நின்று ஒழுகும் சான்றாண்மையே சிறந்த தவம் ஆகும்.

"முறைதெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்

இறைதிரியான், நேர் ஒக்க வேண்டும், - முறைதிரிந்து

நேர் ஒழுகான் ஆயின் அதுவாம் ஒருபக்கம்

நீர் ஒழுகிப் பால்ஒழுகு மாறு." ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

முறை தெரிந்து - கூறும் முறைமையை ஆராய்ந்து அறிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் - செல்வத்தை உடையவர்க்கும் வறுமையை உடையவர்க்கும், இறை திரியான் - அரசன்,  செல்வம் வறுமை நோக்கி நடுநிலையினின்றும் திரியாதவனாய், நேர் ஒக்க வேண்டும் - இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூற வேண்டும், முறை திரிந்து - கூறும் முறையினின்றும் வழுவி, நேர் ஒழுகானாயின் - நடுவுநிலையாக ஒழுகாது ஒழிவானாயின், அது - அங்ஙனம் ஒழுகாத தன்மை, ஒரு பக்கம் நீரொழுகி - தாயின் முலையிலே வாய்வைத்து உண்ணும் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நீர் ஒழுகி; பால் ஒழுகும் ஆறு - மற்றொரு பக்கம் பாலும் ஒழுகுவதை ஒக்கும்.

ஒரு தாய் தன் குழந்தைகளுக்குள், நல்ல குழந்தை இது, தீய குழந்தை இது என்று அறிந்து பாலும் நீரும் அளித்தல் இல்லாமைபோல் அரசனும் செல்வம், வறுமை நோக்கி ஒருவற்கு நன்மையும் மற்றவற்குத் தீமையும் வர நீதி கூறலாகாது. வழக்கு இட்ட இருவருள் வென்றவர் மகிழ்தல் இயல்பே. தோற்றார் வருந்துதல் இயல்பே. தீர்ப்புக் கூறுகின்றவர் தனது மனத்தில் 'அச்சமும், அவலமும், ஆர்வமும் நீக்கி' கூறுதல் வேண்டும். அப்படிப்பட்ட சான்றோர்கள் மதுரையில் இருந்தார்கள் என்று "மதுரைக் காஞ்சி" என்னும் நூல் கூறு்ம்.

"அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி

சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்"              

நடுவு நிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறமாட்டாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவர்க்குத் தோல்வியால் நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி, ஓரிடத்தில் வெறுப்புக் கொள்ளாமல், ஓரிடத்தில் விருப்புக் கொள்ளாமல், தமது நெஞ்சினைப் பாதுகாத்து,  துலாக்கோலைப் போல நடுவு நிலைமை உடையவராய் இக்குணங்களால் சிறந்த விரதங்களை உடைய அறநூலைச் சொல்லும் சான்றோர்களும் – மதுரை நகரில் வாழ்ந்தனர்.

மற்றவர் கருத்துக்கு மதிப்புத் தராத ஒருவனுக்கு, அதே நிலை பின்னாளில் வாய்க்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்தானே. முதலை தான் கொண்டதை விடாது. முட்டாளும் தான் கொண்டதை விடமாட்டான். தான் கொண்டதுதான் சரி என்று எண்ணாமல், மற்றவர் சொல்லுக்கும் மதிப்புத் தருகின்ற மனநிலை ஒருவனுக்கு அமைதல் வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் சமநிலையில் மனதை வைத்துக் கொண்டு எதையும் ஆராய்கின்றவர்கள் சான்றோர். அல்லாதவர்கள் அல்லாதவர்களே.

திருவாவடுதுறை என்னும் திருத்தலத்தில், தனது தந்தையார் செய்யப் போகும் வேள்விக்குப் பொருள் வேண்டி, சிவபரம்பொருளைப் பாடினார் திருஞானசம்பந்தர். அவருக்கு இறைவன் ஆயிரம் பொன்னைத் தந்து அருளினார். அதே திருஞானசம்பந்தர் அப்பர் பெருமானோடு திருவீழிமிழலையில் எழுந்தருளி இருந்தபோது, அவருக்கு வாசி உள்ள காசினையும், அப்பருக்கு வாசியில்லாக் காசினையும் தந்து அருளினார். அப்பர் பெருமான் கைத்தொண்டு புரிந்தவர். ஆதலினால், அவருக்கு வாசியில்லாக் காசு தந்து அருளினார். இது இறைவரின் நடுவுநிலையைக் குறிக்கும்.

தரும்புர ஆதீன கர்த்தராக விளங்கிய கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் மேற்குறித்த திருக்குறளையும், மேற்குறித்த வரலாற்றையும் வைத்து ஒரு பாடல் பாடி உள்ளார். .

"பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால், அப்பருக்கு

நல்ல படிக்காசு நல்குமால், --- எல்லாம்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், அமைந்து ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி."

திருஞானசம்பந்தப் பெருமானை, பிள்ளையார் என்றும் ஆளுடைய பிள்ளையார் என்றும் வழங்குவது சைவமரபு. கைத்தொண்டு - கையினால் செய்யும் உழவாரப்பணி. அப்பர் பெருமான் உழவாரப் படை கொண்டு திருத்தொண்டு புரிந்தார். 

திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு பெருமானும் திருவீழிமிழலையில் இருந்த பொழுது, பஞ்ச காலம் வர, இருபெருமக்களும் சிவபிரானிடம் பொற்காசு பெற்று அடியார்களை உண்பிக்கும் தொண்டினை மேற்கொண்டார்கள். அப்போது, சிலநாள் திருஞானசம்பந்தப் பெருமானார் மாற்றுக் குறைந்த காசு பெற்று வந்தார். அதனால் அதனை மாற்றி உணவுப் பொருள்களை வாங்குவதில் நேரம் வீணாயிற்று. அதற்குள் அடியவர்கள் அப்பர் பெருமானாரின் திருமடத்திலேயே உணவு அருந்திச் சென்றனர். "வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே" என்று இறைவரைத் திருப்பதிகம் பாடி, திருஞானசம்பந்தப் பெருமானார் வாசியில்லாக் காசு பெற்றார். திருஞானசம்பந்தப் பெருமானைத் தம் புதல்வர் என்று எண்ணி, சிவபெருமான் நடுவுநிலை பிறழாமை இங்கே கருதத் தக்கது.




No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...