உள்ளத்தின் உயர்வே வாழ்வின் உயர்வு

 


உள்ளத்தின் உயர்வே வாழ்வின் உயர்வு

-----

"உயர்வு" என்னும் சொல்லுக்கு "மேன்மை" என்றும் "பெருமை" என்றும் பொருள் உண்டு. பெருமை என்பது, பெரிய தன்மையைக் குறிக்கும். பெரிய தன்மையாவது, செய்வதற்கு எளிய செயல்களை விட்டு, அரிய செயல்களைச் செய்தல், கர்வம் இல்லாது இருத்தல், பிறருடைய குற்றங்களைச் சொல்லாது இருத்தல் போன்ற நற்குணங்களைக் குறிக்கும். தமது நிலையில் இருந்து எக்காலத்தும் தாழ்வதற்கு மனம் கொள்ளாத நிலையே ஒருவனுக்குப் பெருமை தருவது ஆகும். இதை "நிலையில் தாழாது அடங்கியான் தோற்றம், மலையினும் மாணப் பெரிது" என்றார் திருவள்ளுவ நாயானார். இந்தப் பெருமையானது ஒருவனுக்குக் குடிப் பிறப்பினால் மட்டுமே அமைவது இல்லை. அவன் செய்கின்ற செயலினால் அமையும். செயல் என்பது செய்தற்கு அரிய செயலையே குறிக்கும். "செயற்கு அரிய செய்வார் பெரியர்" என்றும் முன்னரே திருவள்ளுவ நாயனார் காட்டி அருளினார் என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம்.

"பெருமையும் சிறுமையும் தான் தர வருமே"  என்றது "வெற்றிவேற்கை" என்னும் நூல். மேன்மையும் கீழ்மையும் ஒருவனுக்குத் தான் செய்யும் செய்கையாலேயே உண்டாகும். பிறரால் உண்டாவதில்லை.  எனவே, எல்லா மக்களுக்கும் பிறப்பின் இயல்பு என்பது பொதுவாக ஒத்து இருந்தாலும், பெருமை, சிறுமை என்று சொல்லப்பட்ட சிறப்பு இயல்புகள், அவரவர் செய்கின்ற தொழில்களின் வேறுபாட்டால் ஒவ்வா என்கின்றார் நாயனார். எந்த சாதியில் பிறந்தவராக இருந்தாலும், பஞ்சபூதச் சேர்க்கையால் ஆகிய உடம்பு எல்லாருக்கும் ஒரு தன்மையதாகவே இருக்கும். அவர்களிடத்தில் உண்டாகின்ற நற்பண்புகளாலும், அவர்கள் புரியும் நற்செயல்களாலும் பெருமை சேரும், தீய பண்புகளாலும், தீய செயல்களாலும் சிறுமை சேரும்.. நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் தீய செயல்களைச் செய்வானானால், அவனுக்குப் பெருமை இல்லை. தாழ்வு வந்து சேரும்.

எடுத்துக் காட்டாக, பெரியபுராணத்துள் சொல்லப்பட்டு உள்ள சண்டீச நாயனார் அவதரித்த திருச்சேய்ஞ்ஞலூர் என்னும் திருத்தலப் பெருமையை, தெய்வச் சேக்கிழார் பெருமான், பின்வருமாறு காட்டினார்.

"செம்மை வெண்ணீற்று ஒருமையினார்,

இரண்டு பிறப்பின் சிறப்பினார்,

மும்மைத் தழல் ஓம்பிய நெறியார்,

நான்கு வேதம் முறைபயின்றார்,

தம்மை ஐந்து புலனும்பின் செல்லும்

தகையார், அறுதொழிலின்

மெய்ம்மை ஒழுக்கம் ஏழ்உலகும்

போற்றும் மறையோர் விளங்குவது."

இதன் பொருள் ---

செம்பொருளை அடைதற்குக் காரணமாகிய திருவெண்ணீற்றில் ஒன்றுபட்ட ஒழுக்கம் உடையவராய், இரு பிறப்பின் சிறப்புடையவராய், ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினியம் என்னும் மூவகைத் தீயையும் வளர்த்து வரும் நன்னெறி உடையவராய், நான்மறைகளையும் முறையாகப் பயின்றவராய், ஐம்புலன்களும் தம் வழிநிற்கும் தகுதி உடையராய்த், தாம் செய்யும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களிலும் உண்மை நிறைந்த ஒழுக்கத்தை மேற்கொண்டு ஏழுலகமும் போற்றும் சீலமுடையவராய் வாழும் அந்தணர்கள் வதியும் சிறப்புடையது அவ்வூர்.

அந்த ஊரில் அந்தணர் குலத்தில், காசிப கோத்திரத்தில் பிறந்த எச்சதத்தன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தான் என்பதையும் காட்டுகின்றார்.

"பெருமை பிறங்கும் அப்பதியின்

மறையோர் தம்முள் பெருமனைவாழ்

தருமம் நிலவு காசிபகோத்

திரத்துத் தலைமை சால்மரபில்,

அருமை மணியும் அளித்து, அதுவே

நஞ்சும் அளிக்கும் அரவுபோல்

இருமை வினைக்கும் ஒருவடிவாம்

எச்ச தத்தன் உளன் ஆனான்."

இதன் பொருள் ---

இத்தகைய பெருமை மிக்க அப்பதியில் வாழும் மறையவர்களில், சிறப்புடைய இல்லற நெறியில், அறம் நிலவிய காசிப கோத்திரத்தின் தலைமை சான்ற நன்மரபினில், அருமையான இரத்தினத்தையும் தந்து, அதுவே நஞ்சினையும் தரும் பாம்பைப் போல நல்வினை தீவினை எனும் இருவினைகளையும் செய்யும் ஒருவனாக எச்சதத்தன் என்னும் பெயருடைய ஓர் அந்தணன் வாழ்ந்து வந்தான்.

எனவே, ஒருவனுக்குப் பெருமையோ சிறுமையோ, பிறந்த குலத்தினால் உண்டாவதில்லை. அவரவர் உள்ளப் பண்புகள் காரணமாகவும், செய்யும் செயல்களின் காரணமாகவும் உண்டாவது என்பதை அறியலாம். இந்த உண்மையை,

"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு ஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்."


"மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர், கீழ் இருந்தும்

கீழ் அல்லார் கீழ் அல்லவர்."

என்னும் திருக்குறள் பாக்களால் உணர வைத்தார் திருவள்ளுவ நாயனார்.

நகுடன் என்பவன் நூறு பரிவேள்விகள் (அசுவமேத யாகம்) செய்தபடியால் தேவேந்திரன் ஆனான். விண்ணுலகம் சென்ற அவன், விரைந்து இந்திராணியிடம் செல்ல எண்ணினான். அவ்வாறு செல்ல வேண்டுமாயின் பெருமையில் சிறந்த ஏழு முனிவர்கள் தாங்கும் சிவிகையில் ஏறிச் செல்லவேண்டும்.  நகுடன் செய்த வேள்விச் சிறப்பால் முனிவர்கள் சுமக்கும் சிவிகை நகுடனுக்கு வந்தது. நகுடன் அச் சிவிகையில் ஏறிக் கொண்டு இந்திராணியை நாடிச் சென்றான். அவ்வாறு செல்லுபவனிடம் புன்மைக் குணம்தான் மிகுந்து இருந்தது. விரைவாக இந்திராணியிடம் போக எண்ணினான். சிவிகை தாங்கும் முனிவர்களுடைய பெருமையைச் சிறிதும் எண்ணிப் பாராமல், விரைவாகச் செல்லுங்கள் என்று சொல்வதற்காகச் "சர்ப்ப சர்ப்ப" என்றான். இதனைக் கேட்டதும்  அகத்திய முனிவருக்குச் சினம் உண்டாகியது. அவர் 'நீ சர்ப்பம் ஆகுக' என்று வசவுரை (சாபம்) வழங்கினார். அவ்வளவில் நகுடன் பாம்பாகி நிலத்திலே விழுந்து புரண்டான். இவ்வாறு நகுடன் இந்திர பதவியை அடைந்தும் மேன்மை இல்லாதவனாகிக் கீழ்நிலையை அடைந்துவிட்டான்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக மேற்குறித்த புராண வரலாற்றினை வைத்து, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல் வருகிறது.

"கும்பமுனியால் நகுடன் சர்ப்ப என்றே குண்டலியாய்

மொய்ம்பு இழந்து வீழ்ந்தான் முருகேசா - உம்பரினும்

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்

கீழ்அல்லார் கீழ்அல் லவர்."

இதன் பதவுரை ---

முருகேசா - முருகப் பெருமானே, நகுடன் சரிப்ப என்று - நகுடன் சர்ப்ப என்று கூறி, கும்ப முனியால் - அகத்திய முனிவரால், குண்டலியாய் மொய்ம்பு இழந்து வீழ்ந்தான் - பாம்பாகி வலிமை கெட்டு நிலத்தில் வீழ்ந்தான். உம்பரினும் - தேவர்களைப் பார்க்கினும், மேல் இருந்தும் - மேல் நிலையில் இருந்தாலும், மேல் அல்லார் மேல் அல்லர் - மேன்மைத் தன்மை இல்லாதவர்கள் மேலானவர்கள் அல்லர். கீழ் இருந்தும் - கீழான நிலையில் இருந்தாலும், கீழ் அல்லார்  கீழ் அல்லவர் - இழி குணமில்லாதவர்கள் கீழ்மக்கள் ஆகமாட்டார்கள்.

நகுடனானவன் 'சர்ப்ப' என்று கூறி அகத்திய முனிவரால் பாம்பாகி வலிமை கெட்டு நிலத்திலே வீழ்ந்தான். மேல் நிலையில் இருந்தாலும், மேன்மைத் தன்மை இல்லாதவர்கள் மேலானவர்கள் அல்லர். கீழான நிலையில் இருந்தாலும், இழிகுணம் இல்லாதவர்கள் கீழ்மக்கள் ஆகமாட்டார்கள் என்பது விளங்கும்.

ஒருவனுக்குப் பெருமை அல்லது உயர்வு என்பது அவனிடத்து உள்ள செல்வம், பதவி ஆகியவற்றால் உண்டாவது அல்ல. அவை என்றும் நிலையாமையை உடையவை. அவரவர் உள்ளத்தில் கொண்டுள்ள உயர்ந்த பண்புகளைக் கொண்டே பெருமையும், உயர்வும் கூடும். உள்ளம் எவ்வுளவுக்கு உயர்கின்றதோ, அவ்வளவுக்குப் பெருமை கூடும்.

"வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு. "

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

நீர் ஏற்றத்தின் அளவைப் பொருத்து மலர்த் தாளின் நீளம் அமையும். அதுபோல, மக்களின் மனத்தின் ஏற்றத்தின் அளவு அவர்தம் உயர்வு ஆகும்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு  பாடல்...

"நாள்களொடு கோள்இயக்கும் நற்பதவியைத் துருவன்

மூள்கருத்தால் பெற்றான், முருகேசா! --- நீள்பெருக்கின்

வெள்ளத்து அனையது மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு."

இதன் பதவுரை ---

முருகேசா - முருகப் பெருமானே,  துருவன் - துருவன் என்பவன், நாள்களொடு கோள் இயக்கும் நற்பதவியை - விண்மீன்களொடு ஒன்பது கோள்களை இயக்கும் நல்ல பதவியை, மூள் கருத்தால் பெற்றான் - தனக்கு உண்டாகிய உயர்ந்த கருத்தினாலே அடையப் பெற்றான். நீள் பெருக்கின் - நீண்ட பெருக்கினை உடையதாகிய, வெள்ளத்து அனையது மலர் நீட்டம் - நீரின் அளவா உள்ளது நீர்ப் பூக்களின் உயர்ச்சி, அதைப் போல, மாந்தர் தம் - மனிதர்களுடைய, உள்ளத்து அனையது உயர்வு - ஊக்கத்தின் அளவாகும் பெருமையும்.

துருவன் தான் கொண்டிருந்த உயர்ந்த கருத்தினாலே நாள்களையும் கோள்களையும் இயக்கும் உயர்ந்த பதவியைப் பெற்றான். மலர்களின் உயர்ச்சி நீரின் அளவினதாக இருக்கும்.  மனிதர்களுடைய பெருமை அவர்களுடைய முயற்சியின் அளவினதாக இருக்கும் என்பதாம்.

துருவன் கதை

உத்தானபாதன் என்னும் அரசனுக்குச் சுருதி சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தனர். மூத்தாள் சுருதி. இளையாள் சுநீதி. இருவருக்கும் உத்தமன் துருவன் என்னும் இரண்டு மக்கள் இருந்தனர். மூத்தாள் மகனாகிய உத்தமன் தந்தையின் மடியில் இருக்கும்போது இளையான் மகனாகிய துருவனுந் தந்தையின் மடியில் ஏறச் சென்றான். அதனைச் சுருதியாகிய மூத்தவள் தடுத்தாள். துருவன் சிறுவனாக இருந்தும் அதனைப் பொறாமல், தாயினிடத்திலே கூறி உடன்பாடு பெற்றுக்கொண்டு எழு முனிவர்களிடம் போய் அவர்களுடைய அருளுரைப்படியே தவம் புரிந்தான். இந்திரனால் ஏவப்பட்ட பூதம் முதலியவைகட்குச் சிறிதும் அஞ்சாது நின்று நாள்களையும் கோள்களையும் பிணித்த உருளையை சுழற்றி விளங்கும் பெரும் பதவியைத் திருமாலால் பெற்றான். அதனால் தன்னுடைய தாயோடு மிகுந்த சிறப்பை அடைந்தான். உள்ளத்தின் ஊக்கத்தினாலேதான் இத்தகைய சிறந்த பேற்றைப் பெற்றான்.

  செல்வத்தாலோ, வகிக்கும் பதவியாலோ ஒருவனுக்கு உயர்வு இல்லை. ஒருவேளை உண்டானாலும் அது நிலைத்து இருப்பது அல்ல. உள்ளத்தால் ஒருவன் நல்லவனாக, பண்புகள் மிக்கவனாக வாழும்போதுதான் அவனுக்குப் பெருமை உண்டாகிறது.

அருளாளர்கள் என்று போற்றப்பெறும் யாரும் செல்வ நிலையிலோ அதிகாரத்திலோ உயர்ந்தவர்களாக இல்லை. அவர்கள் உள்ளத்தால் உயர்ந்தவர்களாக விளங்கினார்கள். காந்தி அடிகள் செல்வ நிலையில் உயர்ந்து இருக்கவில்லை. ஆனால், உத்தமமான குணங்களில் மிக உயர்ந்து நின்றார். அவரை உலகம் போற்றி மகிழ்கிறது. வடலூர் இராமலிங்க சுவாமிகள் செல்வ நிலையில் உயர்ந்து இருக்கவில்லை. ஆனாலும், அவரிடத்தே விளங்கிய அருட்பண்புகளால், அவருடைய இயற்பெயர் மறைந்து, "வள்ளலார்" என்னும் திருநாமத்தோடு மக்களால் வணங்கப் பெறுகிறார்.

கம்பராமாயணத்தில் இது காணக் கிடக்கிறது. பிறப்பால் இராமனுக்குத் தம்பியானவன் பரதன். இராமனைப் பெற்றெடுத்த கோசலை தனது வாயால்,  இராமனிடமே பரதனை "நின்னினும் நல்லன்" என்று கூறுகிறாள். "மும்மையின்  நிறை குணத்தவன், நின்னினும் நல்லனால்;  குறைவு இலன்  எனக் கூறினள். நால்வர்க்கும் மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்" என்று கோசலையின் கூற்றாகக் கவிச் சக்கரவர்த்தி பாடுகிறார். இராமலக்குமண பரத சத்துருக்கனர்கள் ஆகிய நால்வரிடத்தும்  குற்றம் அற்ற அன்பு செலுத்துவதில்  வேறுபாட்டை நீக்கி ஒரே தன்மையளாய் உள்ள கோசலை, "மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன். உன்னையும் விட நல்லவன்.  கல்வி, இளமை, வீரம், குணம் முதலிய யாவற்றாலும் யாதொரு குறைவும் இல்லாதவன்"  என்று பரதனைப் புகழ்ந்து, தன் மகனான இராமனைப் பார்த்துச் சொன்னாள்.

பரதனுடைய பெருமையை அறிந்த குகப் பெருமாள், அவனைப் பார்த்து,

"தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,

தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்ற போழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!"

என்று புகழ்ந்து கூறியதாக கம்பர் பாடுகிறார்.

இதன் பொருள் --- 

புகழினை உடையவனே! உனது  தாயாகிய கைகேயியின் ‘வரம்’  என்கின்ற வார்த்தையைக் கொண்டு, உனது தந்தையாகிய தயரதன் அளித்த  கோசல நாட்டு அரசாட்சியைத் தீய வினை வந்து சேர்ந்தது போலக் கருதிக் கைவிட்டு, முகத்தில் கவலை தேங்கியவனாய்,   இராமனை அயோத்திக்கு அழைத்துப் போக, இந்தக் காட்டுக்கு வந்தாய்  என்றால்,  உனது  நல்லியல்புகளை அறியும் இடத்து  ஆராய்ந்து பார்த்தால், (ஒரு இராமன் அல்ல) ஆயிரம் இராமர்கள் இருந்தாலும் உன்  ஒருவனுக்குச் சமானம் ஆவரோ? அம்மா! (அம்மா என்பது வியப்புக் குறிப்பு)

     தந்தை மட்டுமே அளித்த அரசை வெறுத்து வந்த இராமனைக் காட்டிலும்,  தாயும்  தந்தையும் இணைந்து அளித்த அரசை வெறுத்த பரதனின் மேன்மை புலப்பட  இவ்வாறு குகப் பெருமாள் கூறினார். இராமபிரானைக் குறைத்துக் கூறவேண்டும் என்பதற்காக குகப்பெருமாள் இவ்வாறு கூறவில்லை. அரசுரிமை இல்லை என்பதை ஏற்று,  ஆணைப்படி காட்டுக்கு வந்த இராமனது மனநிலையையும், தனக்கு உரிமை இல்லாத அரசாட்சி தானாகவே தனக்கு வந்தபோதும், அது பாவத்தின் பயனானது என்று வெறுத்து ஒதுக்கிய பரதனின் மனநிலையையும வைத்து, குகப்பெருமாள் கூற்றாக, கவிச் சக்கவர்த்தி கம்பர் இவ்வாறு கூறுகிறார். குணச் சிறப்புகளால் உயர்ந்த பரதனைப் பாராட்டப்படும் பொழுது “ஆயிரம் இராமர்”  என்று குகனுக்கு இராமனே அளக்கும் பொருளாய் வந்து நிற்பது  கொண்டு பரதனின் உள்ளம் எவ்வுளவுக்கு உயர்ந்து விளங்கியது என்பதை அறியலாம். 

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்த உடனே அயோத்திக்கு வரவில்லையானால் தீயில் விழுந்து மடிவேன் என்று இராமனிடம் சூளுரைத்த பரதன்,  இராமன் அவ்வாறு குறித்த நாளில் வராமைக்கு மனம் வருந்தி உயிர் விடத் துணிகின்றான். தீ வளர்க்கப்பட்டது. தீயில் விழப் போகும் செய்தை அறிந்து, கோசலை ஓடோடி வருகின்றாள். எரியில் விழப் புகும் பரதனைப் பற்றிக் கொண்டு, முன்பு, இராமனைப் பார்த்து குகன் உன்னை விடவும் நல்லவன் என்று புகழ்ந்து கூறிய கோசலை, பின்வருமாறு கூறுகின்றாள்.

"எண் இல் கோடி இராமர்கள் என்னினும், 

அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ? 

புண்ணியம் எனும் நின் உயிர் போயினால், 

மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? "

 இதன் பொருள் ---

பெருமைக்கு உரியவனே! கணக்கற்ற  கோடி அளவான இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும்  உன் அருளுக்குச் சமானமாக அருகில்  வைத்துக் காணவும் ஒப்பாக மாட்டார்.  புண்ணிய வடிவாகிய உனது உயிர் போனால் நிலமும் ஆகாயமும் ஏனைய உயிர்களும் வாழாமல்  இறந்துபடும்.

ஆயிரம் இராமர்கள் ஈடாகமாட்டார் என்றும், எண்ணில்லாத கோடிக் கணக்கான இராமர்களும் ஒப்பாக மாட்டார் என்றும் புகழப்பட்ட பரதன், தனது உள்ளத்தினால் உயர்ந்து நின்றான்.

"மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதன் அருமை மேற்கூறியவைகளால் நன்கு அறியப்படும். உள்ளத்தின் உயர்வே உண்மையான உயர்வு.


No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...