திருவொற்றியூர்

 


"ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டுக்

கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே."


பொழிப்புரை ---  அலங்காரங்கள் செய்து அமைந்த திருவொற்றியூரிலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே! நெஞ்சிலே கோழை மிகுந்து வரவும், கண்கள் பஞ்சடைந்து போகவும், அறிவும் அழிந்து கிடக்கவும்,  இதுவரை மெய் என்று நம்பியிருந்த இந்த உடம்பும் பொய்யாகிப் போகின்ற காலத்தில் அடியேன் ஒன்றை வேண்டிக் கொள்வேன். திருநீற்றை உடம்பில் தரித்து, கைகளைக் கூப்பி, உம்மைத் தொழுது, திருவைந்தெழுத்தை உச்சரிக்க எனக்குக் கற்பித்து அருள்வாயாக.


விளக்கம் ---  நமது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் முறையே 4 :2 : 1 என்னும் விகிதத்தில் இருக்கவேண்டும். இந்த அளவுகளில் ஒன்று குறைந்தாலும், அதிகமானாலும் நோய் செய்யும்.  "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று" என்றார் திருவள்ளுவ நாயனார். இந்த மூன்றின் தொகையும் 7. உடம்பின் அடுக்குகளும் 7.   வாதம் என்னும் காற்று 4/7ம், பித்தம் என்னும் நெருப்பு 2 /7 ம், ஐயம் என்னும் சிலேத்துமம் ஆகிய நீர் 1 /7 ம் இருக்கவேண்டும்.


இந்த மூன்றில் சிலேத்துமம் இறப்பை நெருங்கச் செய்வது.  இறப்பு நெருங்க நெருங்கத் தொண்டையில் கபம் கட்டும். கோழை மிகுந்து சிக்கிக் கொள்ளும். குடலில் மலச்சிக்கல், தொண்டையில் கோழைச் சிக்கல் கூடாது. இறப்புக் காலத்தில் உடலில் குளிர்ச்சி மிகும்போது தொண்டையில் ஐ என்னும் கபம் கட்டும்.


"வாதம் ஊது காமாலை சோகைநோய், பெருவயிறு வயிறுவலி படுவன்வர, இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழும் அது கொழகொழென ஒழுகிவிழ வாடி ஊனெலாம் நாடி பேதமாய்...."  என்பார் அருணகிரிநாதப் பெருமான்.


"ஐ நெரிந்து அகம் மிடற்றே அடைக்கும் போது, ஆவியார்தாம்

செய்வது ஒன்றி அறியமாட்டேன், திருப்புகலூ ரனீரே"


என்றும்,


"ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு

ஆவியார் போவதுமே அகத்தார் கூடி

மையினால் கண்எழுதி மாலை சூட்டி

மயானத்தில் இடுவதன்முன்....."


என்றும் அப்பர் தேவார வாக்குகளாலும்,


"புலன்ஐந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கி

அறிவு அழிந்திட்டு, ஐ மேல் உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று

அருள்செய்வான்....."


எனவும் வரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தாலும் அறியலாம்.


இறப்புக் காலத்தில் கண் பஞ்சடைந்து போகும் கண்மணிப் பாவையும் செருகும் ஆதலின், "விழியும் செருகி" என்றார். மெய்யுணர்வும் அழியும் ஆதலால், "அறிவு அழிந்து" என்றார்.


பொய்யான, நிலையில்லாத உடல்தான். ஆனாலும் மெய்யாகிய உயிர் அதனுள் இருப்பதால் மெய் எனப்பட்டது. நாமும் பொய்யாகிய உடலை மெய் என நம்பினோம். அது ஒரு நாள் பொய்யாகிப் போகும் என்பதால், "மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது" என்றார்.  


அப்போது ஆன்மாவானது பாம்பின் வாய்த் தேரை போல பலப்பல நினைக்கும். அப்போதுதான் இறைவனை எண்ணும். அப்போதாவது இறைவனை மனதார எண்ணி வேண்டுவது வேண்டும். அது என்ன,  முத்தி தருவதாகிய திருநீற்றை உடல் முழுது அணியவேண்டும். பெருமானை மனதார வணங்க வேண்டும். திருவைந்தெழுத்தை மானதமாக உச்சரிக்க வேண்டும். இவை யாவும் இறப்பு நெருங்குகின்ற காலத்தில் தன் முயற்சியால் தடையின்றி முடியாது என்பதால்,  "திருநீறும் இட்டுக் கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே" என்று வேண்டினார்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...