ஒரு நாள் தொழுதாலும் சுவர்க்கம் பெறலாம்
-----
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், மீனாட்சி அம்மையைக் குறித்துப் பாடிய பாடல்....
மைக்கார்க் குழல்பெண் வடிவாளைத்
தென்னவன் மாமகளை,
அக்காளை யோன்பங்கில் ஆத்தாளை,
மாறங்கை யானவளைத்
திக்கார் தொழும்கயற் கண்ணாளை,
ஓர்தினம் சேவைசெய்தால்,
எக்காலமும் அவர் சொர்க்காதி
போகத்து இருப்பவரே.
இதன் பொருள் ----
மேகத்தைப் போன்ற கரிய நிறம் உடையவளை, பாண்டியன் மகளாக அவதரித்தவளை, அந்தக் காளை வாகனத்தை உடைய சிவபெருமானின் திருமேனியின் ஒரு பாகத்தில் விளங்குபவளாகிய லோகநாயகியை (உலக அன்னையை), திருமாலின் தங்கையானவளை, அனைத்துத் திக்குகளிலும் உள்ளவர் தொழுகின்ற மீனாட்சியம்மையை ஒரு நாள் வணங்கினாலும், வணங்கியவர் சொர்க்கம் முதலிய போகங்களை உடைய உலகங்களில் பிறப்பவர் ஆவர்.
குறிப்பு ---
மைக் கார் --- கருநிறம் பொருந்திய மேகம். குழல் --- கூந்தல். கூந்தலும் கருநிறம் உடையது. பச்சை, நீலம், கருமை என்னும் நிறங்கள் யாவும் ஒரு பொருளைத் தருவனவே. திருமால் "நீலமேனியன்" எனப்படுவார். "பச்சை மாமலை போல் மேனி" என்றும் ஆழ்வார் பாடுவார். "கருமை நிறக் கண்ணன்" என்றும் திருமால் போற்றப்படுவார். அவரது தங்கையாக அவதரித்த, அம்மையும் கருநிறத் திருமேனியை உடையவள். ஆதலின், அவளை, "மைக் கார் குழல் பெண் வடிவாள்" என்றார்.
மலயத்துவச பாண்டியனுக்குத் திருமகளாக அவதரித்தவர். ஆதலின், "தென்னவன் மகளை" என்றார். தென்னவன் என்பது பாண்டியர்களைக் குறிக்கும்.
அந்தக் காளை என்பது, "அக் காளை" என்று வந்தது. காளையை வாகனமாக உடையவர் சிவபெருமான். அவருடைய திருமேனியில் இடப் பாகத்தை உடையவர் உமையம்மை.
ஆத்தாள் --- தாய். இங்கே உலகத் தாயாகிய பார்வதி அம்மையைக் குறித்தது. "ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை" என்பார் அபிராமி பட்டர்.
மால் + தங்கையானவள் என்பது, "மாறங்கையானவள்" என வந்தது.
No comments:
Post a Comment