இல்லை என்பது இறைவனிடத்தில் இல்லை
-----
"மேலோர் தாழ்ந்தோர் இயல்பு" குறித்து சீகாழி அருணாசலக் கவிராயர் பாடிய பாடலைக் காண்போம்.
நல்லவர்கள் வாயால் நவிலும் மொழி பொய்யாமல்,
இல்லை எனாது உள்ள மட்டும் ஈவார்கள்; --- நல்லகுணம்
அல்லவர்கள் "போ வா" என்று ஆசை சொல்லி நாள் கழித்தே
இல்லை என்பார் இப் பாரிலே
சீகாழி அருணாசலக் கவிராயர் பாடிய இப் பாடலின் பொருள்---
இவ்வுலகில் நல்லவர்கள் தமது வாயால் சொன்ன சொல் தவறாது, இல்லை என்று வந்தோர்க்கு, இல்லை என்று சொல்லாமல், தம்மிடத்தில் பொருள் இருக்கும் வரையில் கொடுத்து உதவுவார்கள். நல்லவர் அல்லாத புல்லர்கள், தம்மிடத்தில் வந்தவர்களை, "இன்று போய் நாளை வாருங்கள்" என்று ஆசை மொழிகளைச் சொல்லி, வீணே நாள்களைக் கழித்து, இறுதியில் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.
இந்தப் பாடலின் கருவாக அமைந்தது, சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடல் ஆகும். இல்லை என்று, செல்வந்தரிடம் சென்று இரப்பவரை ஆற்றுப்படுத்தும் முகமாகப் பாடிய அருமையான பாடல்.
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல, நாளையும்
"உச்சிவம்" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்,
பிச்சர், நச்சு அரவு அரைப் பெரியசோதி, பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே!
என்பது திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப் பாடல் ஆகும்.
இதன் பொருள் ---
பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து சென்று அடையக் கண்டும், அச் செல்வர், (தன்னிடத்து உள்ள பொருளை விரும்பிக் கொடுத்து உதவாமல்) "நாளை நண்பகல் போதில் வருக" எனக் கூறும் உரையைக் கேட்டு, உள்ளம் வருந்துவதன் முன்னம், நம் மேல் ஈடுபாடு உடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும், வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய சீகாழிப் பதியை அடைவீர்களாக.
திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த சீகாழிக்குப் போந்து, அங்கே திருக்கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பாடிய அருணகிரிநாதரும், இக் கருத்தையே வைத்துத் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது அறிந்து இன்புறத்தக்கது.
"செக்கர் வானப் பிறைக்கு, இக்கு மாரற்கு அலத்
தெற்கில் ஊதைக்கு, அனல் ...... தணியாத
சித்ர வீணைக்கு, அலர்ப் பெற்ற தாயர்க்கு, அவச்
சித்தம் வாடி, கனக் ...... கவிபாடி,
கைக் கபோலக் கிரி, பொன் கொள் ராசி, கொடைக்
கற்ப தாரு, செகத் ...... த்ரயபாநு,
கற்றபேர் வைப்பு என, செத்தை யோகத்தினர்க்
கைக்குள் நான் வெட்கி நிற்- ...... பது பாராய்".
என்பது அத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதி.
இதன் பொருள் ---
செவ்வானத்தில் தோன்றும் நிலவுக்கும், கரும்பு வில்லை உடைய மதவேளுக்கும், தென் திசையில் இருந்து வீசும் துன்பத்தைத் தரும் ஊதைக் காற்றுக்கும், தணியாத நெருப்பைப் போன்ற சித்திர வீணையின் இன்னிசைக்கும், வசை மொழிகளைப் பேசும் தாய்மார்க்கும் வீணாக மன வாட்டத்தினை அடைந்து, விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது பெருமை மிக்கப் பாடல்களைப் பாடி, அப் பெருமை மிக்க பாடல்களில் அவர்களைத் துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் பொருந்தும் நல்வினைப் பயன் உள்ளவர் என்றும், கற்பக மரம் போன்று கேட்டதைத் தரும் கொடையில் மிக்கவர் என்றும், மூவுலகங்களிலும் விளங்கும் கதிரவன் என்றும், கற்ற புலவர்களுக்கு சேமநிதியாக விளங்குபவர் என்றும், பொருள் உள்ளோரைப் பொய்யாகப் புகழ்ந்து பாடித் துதித்து, குப்பையாகிய செல்வம் பொருந்தி உள்ளவர்களின் கைக்குள் பட்டு நான் வெட்கித்து நிற்கின்ற நிலையைப் பார்த்து அருளுவீராக.
வறுமையில் வாடும் ஒருவன் தனது இருப்பிடத்தைத் தேடி வந்து, உயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும், உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர், தாராளமாகப் பொருளைத் தராமல், "இன்று வா, நாளை வா" என்று அலைய வைத்து, மிகச் சிறிய அளவில் பொருள் தருவர். தராமலும் விடுவர். அங்ஙனம் கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்து, அதனை அறவழியில் செலவிடாமலும், தானும் அனுபவிக்காமலும், பொதுமகளிர்க்கு வழங்கிப் புன்கண் உறுவர்.
திருத்தணிகைத் திருப்புகழிலும் இக் கருத்தையே வைத்து, அருணகிரிநாதர் பாடி உள்ள திருப்புகழ்.....
உடையவர்கள் ஏவர்? எவர்கள் என நாடி,
உளமகிழ ஆசு ...... கவிபாடி,
உமதுபுகழ் மேரு கிரி அளவும் ஆனது
என உரமுமான ...... மொழிபேசி,
நடைபழகி மீள, வறியவர்கள் நாளை
நடவும் என வாடி, ...... முகம்வேறாய்,
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு
நளின இரு பாதம் ...... அருள்வாயே.
இதன் பொருள் ---
திருத்தணிகை முருகா! செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடிக்கொண்டு போய், அவர்கள் மனம் மகிழும்படி, ஆசு கவிகள் பாடியும், உங்களது புகழ் மேருகிரிபோல் அளவில்லாதது என்று வலிமையான துதிமொழிகளைக் கூறியும், ஓயாது நடந்து நடந்து சென்றும், பழையபடியே தரித்திரர்களாகவே வரும்படி “நாளை வா, நாளை வா” என்று அத் தனவந்தர் கூற, அதனால் அகமும் முகமும் வாடி வருந்துதற்கு முன்னரேயே, சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற உமது திருவடிகளைத் தந்தருளுவீர்.
ஒரு காசும் கொடுக்க மனமில்லாத பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளி; கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையை உடையவர்; அள்ளி வழங்குகின்ற வள்ளல்; பரம தாதா; தங்களின் புகழ் மேருமலை போல் உயர்ந்தது; மேருமலை வரை பரவியுள்ளது” என்று புகழ்ந்து கூறுவார்கள். ஆனால், ஒரு காசும் ஈய மனம் வராமல், "நாளை வாருங்கள்" என்று சொன்னதுமே, நாளைக்கு வந்தால் கொடுப்பார் என்னும் ஆசையோடு, இப்படியே சென்று சென்று வந்து, அகம் வாடி, முகம் வெளுத்து வருத்தமுற்றுத் தடுமாற்றம் அடைவார்கள்.
"அறிவுஇலாப் பித்தர், உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு, கவிகளாக்கிப் புகழ்ந்து,
அவரை வாழ்த்தித் திரிந்து ...... பொருள்தேடி,
சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, பரிந்து,
தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே".
என்று காஞ்சிமா நகரில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் மீதும் ஒரு திருப்புகழ்ப் பாடலைப் பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான்.
இதன் பொருள் ---
மெய்யறிவு இல்லாத பித்துப் பிடித்தவரும், தேவரீருடைய திருவடியை வணங்காத கொடிய வஞ்சகரும், கீழ்மக்களும், பேய்த்தன்மை கொண்டு அலைபவரும், நன்றியறிவு இல்லாத பயனற்றவர்களும், ஆகியோர் மீது நல்ல சொற்களைத் தொடுத்து பாடல்களைப் புனைந்து பாடி அவர்களைப் புகழ்ந்து, அவர்களை வாழ்த்தியும், அவர்கள் இருக்கும் இடம்தொறும் திரிந்து, பொருளைத் தேடி, சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொண்டு வந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து, அப் பொதுமகளிருக்கே அந்தப் பொருளை மழைபோல் சொரிந்து, அடியேன் பயனில்லாமல் திரிகின்ற புல்லிய வழியின் இகழ்ச்சியை மாற்றி, அடியேன் மீது அன்பு வைத்து, என் அறிவு தெளிவு பெறுமாறு முத்தி இன்பத்தை எனக்கு என்றைய தினம்தான் தருவீரோ?
என்னதான் புகழ்ந்து பாடினாலும், ஒன்றும் ஈயாத ஈனர்களைப் பாடிப் புகழ்வதை விடுத்து, இல்லை என்பதையே அறியாத இறைவனிடம் சென்று பாடுங்கள். அவன் உமக்கு இம்மையிலும், மறுமையிலும் வேண்டியதைத் தருவான் என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடி வழிகாட்டுகின்றார் பாருங்கள்....
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்,
சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்!,
இம்மையே தரும் சோறும் கூறையும்,
ஏத்தல் ஆம், இடர் கெடலும்ஆம்,
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
இதன் பொருள் ---
புலவர்களே! எமது தந்தையாகிய சிவபிரான், தன்னையே பாடுவார்க்கு இம்மையில் நல்ல உணவும், ஆடையும், பிறவும் தந்து காத்து அருள்வான். அதனால் இந்தப் பிறவியில் உங்களுக்குப் புகழும் மிகும். துன்பம் கெடுதலும் உண்டாகும். இவ்வுடம்பு நீங்கிய நிலையில் சிவலோகத்தை ஆளுதலும் உண்டாகும் என்பதற்கு ஐயம் ஏதும் கொள்ளவேண்டாம்.
எனவே, தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து, தமக்கு விருப்பமானவற்றையே சொல்லி, அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நின்றாலும், அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றும் தருகின்ற குணம் இல்லாத பொய்ம்மையான மக்களைப் பாடுதலை அறவே விடுத்து, இறைவனது திருப்புகலூரைப் பாடுங்கள்.
நற்குணமும், கொடைப் பண்பும் இல்லாத மனிதர்களைப் புகழ்ந்து பொய்யாகப் பாடினதால்தான் துன்பம் தீரவில்லை என்பதாக, இரட்டைப் புலவர் பாடிய பாடல் ஒன்று....
குன்றும் குழியும் குறுகி வழி நடப்பது
என்று விடியும் எமக்கு, எம் கோவே! --- ஒன்றும்
கொடாதானைக் கோ என்றும், கா என்றும் கூறில்,
இடாதோ நமக்கு இவ் இடி.
இதன் பொருள் ---
எமது தலைவரே! மலைகளையும், தாழ்ந்த பள்ளத் தாக்குகளையும் கடந்து வழிச் செல்கின்ற துயரம் எமக்கு எப்போது நீங்கும்? (என்று ஒரு புலவர் உரைத்தார். அதற்கு விடையாக மற்றவர்) புலவர்களுக்கு ஒன்றும் தராதவனை, காமதேனுவே என்றும், கற்பகச் சோலையே என்றும் பொய்யாகப் புகழ்ந்து பேசினால், இத்தகைய துன்பம் வராமல் போகுமோ? (என்று சொன்னார்).
"இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" என்று அமரர் நாகூர் அனீபா அவர்கள் பாடியுள்ளதையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.
No comments:
Post a Comment