செயற்கரிய செயல் எது? பெரியவர்கள் யார்?
-----
பெரியோர்கள் என்று சொன்னால், வயதில் முதிர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பெரும் பதவியில் இருப்பவர்கள் என்று தான் பொருள் கொள்ள இக்காலத்தில் முடிகின்றது.
ஆனால், திருவள்ளுவ நாயனார், "செயற்கரிய செய்தவரே பெரியார்" என்கின்றார். செயற்கு அரிய செயல் என்றால், தூக்க முடியாத கனத்தை ஒருவர் தூக்கினால் அதுவும் செயற்கரிய செயல்தானே. போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்றவர்களும் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் தானே. நமது முன்னோர் இவற்றை எல்லாம் செயற்கு அரிய செயல்கள் என்று சொல்லவில்லை. சர்க்கசில் அரிய சாகசச் செயல்களை எல்லாம் செய்கின்றனர். இவையெல்லாம் எல்லோராலும் முடியுமா என்றால், கடும் பயற்சியால், ஊக்கத்தால் முடியும் என்பதுதான் உண்மை. பந்தயங்களில் வெல்வதும் கூட, பயிற்சியால்தான் முடிகின்றது. போட்டி பந்தயங்களில் வெல்வது வீரம் தான். அது ஒரு அளவோடு, வயதோடு முடிந்து விடும். முடியாத, நிலைத்த வீரம் எது என்றால், "புலன் ஐந்தும் வென்றான் தன் வீரே வீரம்" என்று வழி காட்டுகின்றார் ஔவைப் பிராட்டியார்.
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்,
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம், ஒருசிங்க முதுகின்மேல் கொள்ளலாம்,
கட்செவி எடுத்து ஆட்டலாம்,
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்,
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்,
விண்ணவரை ஏவல்கொளலாம்,
சந்ததமும் இளமையோடு இருக்கலாம், மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்,
சலமேல் நடக்கலாம், கனல்மேல் இருக்கலாம்,
தன்னிகரில் சித்திபெறலாம்,
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம்அரிது, சத்தாகி என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தேசோ மயானந்தமே!.
"மதயானையை நம் வசமாக்கிவிடலாம்; கரடி, புலியின் வாயைக் கட்டலாம்; சிங்கத்தின் முதுகில் ஏறலாம்; பாம்பைக் கையில் பிடிக்கலாம்; மற்ற உலோகங்களைப் பொன்னாக்கலாம்; இன்னொருவருக்குத் தெரியாமல் நடமாடலாம்; தேவர்களை அடிமையாக்கலாம்; எப்போதும் இளமையோடு இருக்கலாம்; இன்னோர் உடலில் புகலாம்; நீர் மேல் நடக்கலாம்; நெருப்பின் மேல் இருக்கலாம்; இணையில்லாத சித்திகளைப் பெறலாம்; ஆனால், இத்தனையையும் செய்தாலும், சிந்தனையை அடக்கிச் ‘சும்மா’ இருப்பது சிரமம். அந்தத் திறன் எளிதில் வந்துவிடாது, அதை எனக்கு அருள்வாய்!" என்கின்றார் தாயாமான அடிகளார்.
தாயுமான அடிகளாரின் இந்தப் பாடல் மூலம் செயற்கரிய செயல் எது என்பது தெரிகின்றது. நமக்கு அன்னியமாக உள்ளதை எல்லாம், அடக்கத் தெரிந்தாலும், நம்மோடு கூடவே இருக்கின்ற மனதை அடக்குவது ஒன்றுதான் மிகவும் அரிதான செயல். பொறிகளின் வாயிலாக, அறிவைப் பெற்று, உண்மைப் பொருளைத் தெளிவதற்காகவே இந்த உடம்பையும், இதில் உள்ள கருவிகளையும் படைத்துக் கொடுத்தான் இறைவன். ஐம்பொறிகளையும் ஆட்டுவித்து, அறிவைப் பெறவேண்டிய மனமானது, பொறிகளின் வழியே சென்று, அவற்றிக்கு அடிமையாக மாறிவிடுகின்றது.
நம்மால் முடியாதவற்றைச் சாதிக்கவேண்டுமானால், சாதிக்கத் தெரிந்தவரின் துணையை நாடவேண்டும். இதுவே உலக நியதி. நமது சிந்தையை நம்மால் அடக்க முடியாதபோது, அதை அடக்கும் வல்லமை பெற்றவரிடமே செல்லவேண்டும். அதுதான் யாராலும் முடியாது என்று பெரியோர்கள் எல்லோரும் சொல்லிவிட்டனர்.
ஏன் புலன் அடக்கம் செய்தல் வேண்டும் என்பதும் நல்ல கேள்விதான். படைப்பின் உண்மை அதுவானால், பொறி புலன்களை வைத்துக்கொண்டுதான் மனிதன் வாழ வேண்டும் என்பது உண்மையானால் மெய், வாய், கண், மூக்கு, செவி இறைவனுடைய கருணையினாலே நமக்குத் தரப்பட்டிருக்குமானால், அந்த மெய், வாய், கண், மூக்கு, செவிகளினாலே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றத்தை நாம் அனுபவிக்கவேண்டும் என்பது உண்மையானால், ஏன் அவற்றை அடக்கவேண்டும்? பொறி புலன்களை ஆண்டவன் தந்திருப்பதன் நோக்கமே அவற்றை அனுபவிக்க வேண்டுமென்பதுதானே? அப்படி இருக்க அவற்றை அடக்க வேண்டுமென்று ஏன் கூறுகிறோம்?
"ஐந்தும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்,
ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை"
என்று திருமூல நாயனார் அருளியதில் இருந்து புலன்களை அடக்குவது யாருக்கும் எளிதான செயல் அல்ல. மிகவும் அரிய செயல் ஆகும் என்பதை அறிய முடிகின்றது. ஐந்து பொறி புலன்களையும் அடக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் அறிவில்லாதவர்கள் என்றும், தம்முடைய கொள்கைக்கு ஆதாரமாக ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை' என்றும் கூறிவிட்டார். அப்படியானால் எந்தவிதமான புலன் அடக்கமும் தேவையில்லையோ என்று தோன்றும்.
அடக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொஞ்சம் சிந்தித்தல் நல்லது. ஒரு பொருள் ஒன்றின் உள்ளே அடங்கி இருக்கிறது என்றால், அது இருக்கவேண்டிய எல்லையிலே இருக்கிறது, அதன் எல்லையை விட்டு வெளியே வரவில்லை என்பதுதான் பொருள். புலன் அடக்கம் என்றால் பொறி புலன்கள் தாங்கள் இருக்க வேண்டிய எல்லையைவிட்டு அப்பால் செல்லக் கூடாது என்பதுதான் கருத்து.
புலன்களை அடக்க வழி தெரியாத பொழுது, அவற்றிற்கு அடிமைப்பட்ட மனமானது கீழ்மைக் குணங்களின் வயப்பட்டு நிற்கும். "கீழ்மை" என்றாலும், "கயமை" என்றாலும் ஒன்றுதான். கயமைத் தனம் வந்துவிட்டாலும், அதை திருப்புவது மிகவும் அரிதான செயல் ஆகும் என்று "குமரேச சதகம்" கூறுகின்றது.
குணமிலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம்
கொண்டு உட்படுத்தி விடலாம்;
கொடியபல விடநோய்கள் யாவும் ஒளடதம் அது
கொடுத்துத் திருப்பிவிடலாம்;
உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை
உகந்து கூத்தாட்டி விடலாம்,
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி
உண்டாக்கலாம்,உயிர்பெறப்
பிணம் அதை எழுப்பலாம், அக்கினி சுடாமல்
பெரும்புனல் எனச் செய்யலாம்,
பிணியையும் அகற்றலாம், கால தூதுவரையும்
பின்புவருக என்றுசொலலாம்,
மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்
மட்டும் திருப்ப வசமோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் --- நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்; கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதம் அது கொடுத்துத் திருப்பி விடலாம் --- கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றி விடலாம்; உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் --- நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலேயே கூத்தாடச் செய்து, அவைகளை நீக்கிவிடலாம்; உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் --- தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம்; உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் --- பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம்; அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் --- அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம்;
பிணியையும் அகற்றலாம் --- நோயையும் அகற்றலாம்; கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் --- காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம்; மணலையும் கயிறாத் திரிக்கலாம் --- மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம்; கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ --- கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலுமோ? (இயலாது)
"நொய்ய கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப் பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கி, சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு எந்தை நீ இருக்க இட்டனன்" என வரும் திருக்கழுமல மும்மணிக் கோவை என்னும் நூலில், "அற்பமாகிய தாழ்ந்த குணங்களில் தொடக்குப்பட்டுக் கிடந்து, நல்லோரால் இகழப்பட்டுக் கிடந்த எனது சிந்தை என்னும் பாழ்பட்டுக் கிடக்கின்ற அறையை, இறைவா! நீ பள்ளி கொண்டு இருக்கக் கூடிய அறையாக மாற்றி, எனது மனமாகிய தாமரையை நீ பள்ளிகொள்ள அளித்தேன்" என்கின்றார் பட்டினத்து அடிகள். அதற்கு ஒரு வழியை அந்தப் பாடலில் அருளிச் செய்து உள்ளார். அதைப் பின்னர் காண்போம்.
ஆனால், அப்பர் பெருமான் மிகவும் எளிதானதொரு வழியை அருளிச் செய்து உள்ளார். அது என்னவென்றால், புலன்களை வென்றிருக்கும் அடியவர் திருக்கூட்டத்துள் சென்று இருக்கவேண்டும். நம்மிடத்தில் இல்லாத ஒன்றை, அதனைப் பெற்றிருப்பவர் இடத்தில் சென்றுதான் பெறவேண்டும். புலன்களை வெற்றிகொள்ளத் தெரியாதபோது, அதை அறிந்தவரிடத்தில் தானே செல்லவேண்டும்! "கலைகள் ஞானம் கற்றிலேன், கற்றவர் தங்களோடும் உற்றிலேன்" என்று அப்பர் பெருமானும், "கற்ற மேலவரொடும் கூடி நில்லேன், கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்று வள்ளல் பெருமானும் காட்டியபடி, கல்வியைக் கற்க வேண்டும் என்றால் கற்றவரோடு கூடி இருக்கவேண்டும்.
அப்பர் பெருமான் காட்டும் அருள்வழியை அறிவோம்...
வென்றிலேன் புலன்கள் ஐந்தும்,
வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன், ஆதலாலே
செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உ(ள்)ளே துளும்புகின்றேன்,
நீசனேன், ஈசனே! ஓ!
இன்று உளேன், நாளை இல்லேன்,
என்செய்வான் தோன்றினேனே.
இதன் பொருள் ---
எல்லோரையும் ஆளும் பெருமானே! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன். வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலும் சென்றேன் அல்லேன். ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய், உள்ளூர வருந்துகின்றேன். இன்று உயிருடன் இருக்கும் நான், நாளை உயிருடன் இருப்பேன் என்ற உறுதி இல்லை. அங்ஙனம் ஒரு பயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான்?
எனவே, ஒருமை மனத்தோடு இறைவனை வழிபட்டு உய்யவேண்டுமானால், புலன்களை வெல்லவேண்டும். புலன்களை வெற்றிகொள்ள வேண்டுமானால், வெற்றி கொண்டுள்ள அடியவர் திருக்கூட்டத்தில் இருக்கவேண்டும். "முயற்சி திருவினை ஆக்கும்" என்றும் "ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும், அசைவு இலா ஊக்கம் உடையான் உழை" என்றும் திருவள்ளுவ நாயனார் அருளியதை அறிதல் நலம்.
No comments:
Post a Comment