இறந்தும் இறவாதவர், இருந்தும் இறந்தவர்
-----
பெறுதற்கு அரிய மானிடப் பிறவியை எடுத்ததன் பயனாக, பெறுதற்கு அரிய பேற்றைப் பெறுதல் வேண்டும்.
வாழ்வதற்கு வேண்டிய பொருளை நல்ல நெறியில் ஈட்டுதல் வேண்டும். ஈட்டிய பொருளைக் கொண்டு, தாம் துய்ப்பதோடு அறநெறியில் செலவிட்டு, அதனால் வந்த இன்பத்தைத் துய்த்து, அருளைத் தேடிக் கொள்ளவேண்டும்.
இந்த உடலை விட்டுப் போகும்போது, நாம் ஈட்டிச் சேர்த்து வைத்த பொருள் நம்மோடு வருவதில்லை. ஈட்டிய செல்வத்தைக் கொண்டு செய்த நல்வினைப் பயனே தொடர்ந்து வரும்.
அவ்வாறு வாழாதவர்கள் பிறந்து உயிரோடு வாழ்ந்து கொண்டு இருந்தாலும், பிறவாதவராகவே கருதப்படுவார் என்கின்றது, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான "திரிகடுகம்" என்னும் நூல்.
நெல்லோடு பிறந்தும் பயன்படாத பதரைப் போன்று, மக்களுள் ஒருவராகப் பிறந்து இருந்தும் பயனற்றவர்கள் இன்னின்னார் என அறிவுறுத்தும் பாடல்களைப் பார்ப்போம்...
அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், இம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார். --- திரிகடுகம்.
இதன் பதவுரை ---
அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும் --- பிற உயிர்க்கு அருளை மனத்தில் நிறைத்து வையாதவனும்; பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும் --- செல்வத்தைத் தானும் நுகராது, பிறர்க்கும் கொடுத்து உதவாமல் பூமியில் புதைத்து வைக்கின்றவனும், இறந்து இன்னா சொல்லகிற்பானும் --- தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பம் தரும் சொற்களை சொல்லுகின்றவனும்; இ மூவர் பிறந்தும் பிறந்து இலதார் --- ஆகிய இம் மூவரும் மக்கள் பிறப்பில் பிறந்திருந்தும் பிறவாதவர் ஆவர்.
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், --- என்றும்
இறந்து உரை காமுறுவானும், இம் மூவர்
பிறந்தும் பிறவா தவர். --- திரிகடுகம்.
இதன் பதவுரை ---
விழுத் திணை தோன்றாதவனும் --- மேலான அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய சிறந்த குலத்தில் பிறவாதவனும்; எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும் --- அறிவு நூல்களை எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத பேதையும்; என்றும் இறந்து உரை காமுறுவானும் --- எப்பொழுதும் முறை தப்பிய சொற்களைப் பேச விரும்புகின்றவனும்; இ மூவர் பிறந்தும் பிறவாதவர் --- ஆகிய இம் மூவரும் மக்கள் பிறப்பில் பிறந்தும், பிறப்பின் பயனை அடையாமையால் பிறவாதவர் ஆவார்.
இறந்தும் இறவாதவர், இருந்தும் இறந்தவர் யார் என்பதைக் "குமரேச சதகம்" என்னும் நூல் அடையாளம் காட்டுவதைப் பார்ப்போம்...
இறந்தும் இறவாதவர்
அனைவர்க்கும் உபகாரம் ஆம்வாவி கூபம்உண்
டாக்கினோர்; நீதிமன்னர்;
அழியாத தேவா லயங்கட்டி வைத்துளோர்;
அகரங்கள் செய்த பெரியோர்;
தனையொப்பி லாப்புதல்வ னைப்பெற்ற பேர்; பொருது
சமர்வென்ற சுத்தவீரர்;
தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
தருமங்கள் செய்தபேர்கள்;
கனவித்தை கொண்டவர்கள்; ஓயாத கொடையாளர்;
காவியம் செய்த கவிஞர்;
கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
கடிமணம் செய்தோர்கள்; இம்
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
மனிதர் இவர் ஆகும் அன்றோ!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் --- எல்லோருக்கும் பயன்படுமாறு குளங்களையும் கிணறுகளையும் வெட்டி வைத்தவர்கள்; நீதி மன்னர் --- நீதி நெறி தவறாத அரசர்கள்; அழியாத தேவ ஆலயம் கட்டி வைத்து உளோர் --- அழியாத திருக்கோயில்களைக் கட்டி வைத்தவர்களும்; அகரங்கள் செய்த பெரியோர் --- மறையவர் வாழிடங்களை உண்டாக்கிய பெரியோர்களும்; தனை ஒப்பிலாப் புதல்வனைப் பெற்ற பேர் --- தனக்கு உவமையற்ற ஒரு மகனைப் பெற்றவர்களும்; பொருது சமர் வென்ற சுத்த வீரர் --- போரிலே சண்டையிட்டு வென்ற தூய வீரர்களும்; தரணி தனில் நிலை நிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் --- உலகிலே எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய மாறாத அறச்செயல்களைச் செய்த சான்றோர்களும்; கன வித்தை கொண்டவர்கள் --- பெருமைக்கு உரிய கலைகளை, அறிவு நூல்களைப் பயின்றவர்களும்; ஓயாத கொடையாளர் --- இல்லை என்று வந்தவருக்கு எப்போதும் கொடுத்து உதவியவர்களும்; காவியம் செய்த கவிஞர் --- காவியங்களை எழுதிய கவிஞர்களும்; கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையைக் கடிமணம் செய்தோர்கள் --- கற்பிலே சிறந்தவளும், கொண்டானைக் கொண்டு ஒழுகுபவளும் ஆகிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர்களும்; இம் மனிதர்கள் --- ஆகிய இந்த மனிதர்கள் யாவரும், சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ --- பூத உடல் அழிந்தாலும், அழியாத புகழுடலைப் பெற்றவர்கள் ஆவார்கள் அல்லவா?
அகரம் என்பது ஊரின் பெயரே, அந்தணர் குடியிருப்பு அல்ல என்பாரும் உளர். ஆயினும்,
அகரம் ஆயிரம் ஆரியர்க்கு ஈயில் என்?
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்?
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகர்இலை என்பது நிச்சயம் தானே.
என்னும் திருமூலர் திருவாக்கால் அகரம் என்பது அந்தணர் குடியிருப்பு என்பது தெளிவாகும். மேலும், அந்தணர்களுக்கு இறையிலியாக நிலங்களும், திருக்கோயிலுக்கு அருகிலேயே வீடுகளும், முற்காலத்தில் அரசாண்ட மன்னர்களால் விடப்பட்டதும் வரலாற்றுக் குறிப்புக்களால் அறியலாம். வாவி - குளம். கூபம் - கிணறு. கூவம் என்றும் சொல்லப்படும். "கூவல் ஆமையைக் குரை கடல் ஆமை" என்னும் அப்பர் தேவார வாசகத்தைக் காண்க.
இருந்தும் இறந்தோர்
மாறாத வறுமையோர்; தீராத பிணியாளர்;
வருவேட் டகத்தில் உண்போர்;
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்;
மன்னுமொரு ராசசபையில்
தூறாக நிந்தைசெய்து உய்குவோர்; சிவிகைகள்
சுமந்தே பிழைக்கின்றபேர்;
தொலையா விசாரத்து அழுந்துவோர்; வார்த்தையில்
சோர்வுபடல் உற்றபெரியோர்;
வீறாக மனையாள் தனக்கு அஞ்சி வந்திடு
விருந்தினை ஒழித்துவிடுவோர்;
வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
மிக்கசபை ஏறும்அசடர்;
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்தசவம்
ஆகி, ஒளி மாய்வர் கண்டாய்,
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
மாறாத வறுமையோர் --- என்றும் நீங்காத வறுமையில் உள்ளோர்; தீராத பிணியாளர் --- தீராத நோயால் பீடிக்கப்பட்டோர்; வரு வேட்டகத்தில் உண்போர் --- மாமனார் வீட்டில் நீண்ட நாள் உண்டு வாழ்பவர்; மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் --- மனைவியைத் தீய ஒழுக்கத்திலே ஈடுபடுத்தி அதனால் வரும் பொருளால் வாழ்க்கை நடத்துவோர்; மன்னும் ஒரு ராச சபையில் தூறாக நிந்தை செய்து உய்குவோர் --- அரச சபையிலே பிறர்மீது வீணான பழியைத் தூற்றிக் கூறி, அதனால் தனது சீவனத்தை நடத்துவோர்; சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் --- மனிதர்கள் அமர்ந்து செல்லும் பல்லக்கைச் சுமந்து வயிறு வளர்ப்போர்; தொலையாத விசாரத்து அழுந்துவோர் --- நீங்காத கவலையிலே முழுகியவர்கள்; வார்த்தையினில் சோர்வுபடல் உற்ற பெரியோர் --- சொன்ன சொல்லில் இருந்து மாறுபாடு கொண்ட பெரியோர்கள்; வீறாக மனையாள் தனக்கு அஞ்சி, வந்திடும் விருந்தினை ஒழித்து விடுவோர் --- மனைவிக்குப் பயந்து, வந்த விருந்தினரை விலக்கி விடுவோர்; செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை வீம்புடன் ஏறும் அசடர் --- செல்லுபடி ஆகாத வழக்கை நீதிமன்றங்களிலே பிடிவாதமாகச் சொல்லும் அசடர்கள்; இவர் எலாம் --- ஆகிய இவர்கள் எல்லாரும், மாறாக --- முந்தைய பாடலிலே சொல்லப்பட்டவருக்கு மாறாக, உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் --- உயிரோடு இருந்தாலும், இறந்த பிணமாகக் கருதப்பட்டு புகழ் குன்றுவர்.
வேட்டகம் - மாமனார் வீடு. வேட்ட அகம் - விரும்பிய வீடு. விருந்து - புதுமை. விருந்தினர் - புதியவர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. சமைத்து உண்ண வழி இல்லாதவரை விருந்தினர் என்று கொள்ள வேண்டும் என்று "அறநெறிச்சாரம்" கூறும். விருந்தினரை, அதிதி என்பது வடபுலத்தார் கூற்று. அதிதிகளையும் போற்றுதல் வேண்டும் என்பதால், "அதிதி தேவோ பவ" என்று சொல்லப்பட்டது.
இருந்து முகம்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப, – வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடினான் தான்.
ஔவையை விருந்தாளியாக அழைத்துச் சென்ற ஒருவன் ஔவையை வெளிப்புறம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று தன் மனைவி பக்கத்தில் அமர்ந்து அவன் முகத்தை உருவி முத்தமிட்டான். அவன் தலையைப் பேன் பார்த்து விட்டான். இப்படியெல்லாம் அன்பைக் காட்டிவிட்டு ‘விருந்து வந்திருக்கிறது’என்றான். உடனே அவள் கொடைத் தன்மை இல்லாத தனது பிறவிக் குணத்தைக் காட்டலானாள். ஆட்ட பாட்டத்தோடு கணவனை ஓட ஓட முறத்தால் அடித்தாள். கொடை என்பது பிறவிக்குணம் என்றார் ஔவைப் பிராட்டியார்.
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்தது ஒரு கல்வி மனப்பழக்கம், - நித்தம்
நடையும் நடைப்பழக்கம், நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
சித்திரம் தீட்டுதல் கைப்பழக்கத்தால் கைகூடும். நாப் பழக்கத்தால் தமிழைக் கற்கலாம். கல்வி அறிவும் பாராயணம், எழுத்துப் பயிற்சி ஆகியவற்றால் கூடும். நடைப் பழக்கத்தால் நடை வரும். ஆனால், நட்பு உள்ளம், தயவு உள்ளம், கொடைப் பண்பு ஆகியவை உயிர்க்குணங்கள் என்பதால், அவைகள் ஒருவனுக்குப் பிறவிக் குணமாகவே பொருந்தி இருக்கவேண்டும்.
இங்குக் கூறப்பட்டவர்கள் எல்லாம் தமக்கும் பிறருக்கும் பயன் தராதவர்கள் என்பதால், இவர்கள் உயிரோடு இருந்தும் பயனில்லை. எனவே, இருந்தும் இறந்தவர்களாகவே கருதப்படுவர்.
ஒளி --- புகழ். "தோன்றின் புகழொடு தோன்றுக, அஃது இலார், தோன்றலின் தோன்றாமை நன்று" என்னும் நாயானார் அருள் வாக்கை எண்ணுக.
No comments:
Post a Comment