"நல்லவர் துன்புறுவதும், தீயவர் இன்புறுவதும்"
-----
திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "ஊழினால் ஆகிய உலக இயற்கையானது இரண்டு கூறுகளாய் இருக்கின்றது. ஆதலால், ஒருவர் செல்வம் உடையர் ஆதலும், அறிவு உடையர் ஆதலும் வேறு" என்பதை அறிவுறுத்த,
"இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு,
தெள்ளியர் ஆதலும் வேறு"
என நாயனார் அருளிய திருக்குறளின் கருத்தை, "இருவேறு உலகத்து இயற்கை" என்னும் தலைப்பில் கண்டோம்.
அறிவு உடையவர்க்கு, செல்வத்தை உண்டாக்குதலும், உண்டாக்கிய செல்வத்தைக் காத்தலும், காத்த செல்வத்தால் பயன் கொள்ளுதலும் எளிமையாக இருந்தும், அவ்வாறு செல்வத்தை அடையாது ஏழைகளாய் இருப்பதும், அறிவே இல்லாதவர் எல்லாச் செல்வங்களையும் பெற்று இருப்பதும் காணப்படுவது உலக இயற்கை. எல்லாம் அவரவர் வினைப்படியே நிகழும் என்பதால், செல்வத்தைத் தேடுதற்கும், அறிவைத் தேடுதற்கும் அவரவர்க்கு உள்ள ஊழே முதற்காரணம் என்றார்.
"பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என நாயனார் முன்னர் அறிவுறுத்தியது கொண்டு, இறையருளால் மெய்யறிவு என்னும் ஞானத்தைப் பெற்றவர், பொருட்செல்வத்தை ஒரு பொருட்டாக மதியார் என்பதும், பொருட்செல்வம் அவரிடத்து இருப்பினும், நிலையற்றதாகிய அதனை ஒரு பொருட்டாக மதியாமல், பிறர்க்கு வழங்கி வாழ்வர் என்பதால், அறிவு உள்ளோரிடத்துப் பொருள் தங்குவதில்லை. கீழோர் பொருளையே பொருளாக மதிப்பதால், தானும் துய்க்காது, பிறர்க்கும் வழங்கி மகிழாது வைத்து இழப்பர் என்பதும் பெறப்படும்.
நல்வினையால் நல்வாழ்வு அமையும், பாவத்தால் அமையாது என்பதை, "நீதிவெண்பா" என்னும் நூல் கூறுமாறு காண்க...
புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தால் அன்றியே,
மத்தம் மிகு பாவத்தால் வாழ்வு ஆமோ? --- வித்துபயிர்
தாயாகியே வளர்க்கும் தண்புனலால் அல்லாது,
தீயால் வளருமோ செப்பு.
இதன் பொருள் ---
விதைத்து உண்டாகும் நெற்பயிரானது, தாயைப் போலவே இருந்து தன்னை வளர்க்கும் குளிர்ந்த நீரால் விளையும். அல்லாமல் நெருப்பினால் வளருமோ? வளராது. அதுபோலவே, அறிவையும், வீடுபேற்றையும் கொடுக்கும் நல்வினை என்னும் புண்ணியத்தால் மட்டுமே ஒருவருக்கு நல்வாழ்வு உண்டாகும். அறியாமை மிகுகின்ற தீவினையால் நல்வாழ்வு உண்டாகாது.
(முத்தி --- வீடுபேறு. மத்தம் --- அறியாமை)
அது குறித்து "அறப்பளீசுர சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்...
பூததயை இல்லாத லோபியர் இடத்திலே
பொருளை அருளிச் செய்தனை!
புண்ணியம் செய்கின்ற சற்சனர் இடத்திலே
பொல்லாத மிடி வைத்தனை!
நீதிஅகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க
நெறி மாதரைத் தந்தனை!
நிதானம்உள உத்தமர்க்கு இங்கிதம் இலாதகொடு
நீலியைச் சேர்வித்தனை!
சாதியில் உயர்ந்தபேர் ஈனர் பின்னே சென்று
தாழ்ந்து, பரவச் செய்தனை!
தமிழ்அருமை அறியாத புல்லர்மேல் கவிவாணர்
தாம் பாடவே செய்தனை!
ஆதரவு இ(ல்)லாமல் இப்படி செய்தது என் சொலாய்?
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அமல --- இயல்பாகவே மலம் அற்றவனே! எமது அருமை மதவேள் - எம் அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
பூத தயை இல்லாத லோபியர் இடத்திலே பொருளை அருளிச் செய்தனை --- உயிர்களிடம் இரக்கம் காட்டாத கஞ்சத் தனம் மிகுந்தவர் இடத்திலே செல்வத்தைக் கொடுத்து அருள் செய்கின்றாய்,
புண்ணியம் செய்கின்ற சற்சனர் இடத்திலே பொல்லாத மிடி வைத்தனை --- புண்ணியச் செயல்களையே புரிகின்ற நல்லவர்களிடத்திலே கொடிய வறுமையை வைக்கின்றாய்,
நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத் தக்க நெறி மாதரைத் தந்தனை --- அறநெறியில் இருந்து நீங்கிய அறிவிலிகளிடம் அருந்ததி போன்ற கற்பு நெறியிலே நிற்கும் பெண்ணை மனைவியாகத் தந்தாய்.
நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை --- அமைதியே வடிவான உத்தம குணம் பொருந்திய நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத, தீமையே புரிகின்ற நீலி போன்றவளைக் கூட்டி வைத்தாய்.
சாதியில் உயர்ந்த பேர், ஈனர் பின்னே சென்று தாழ்ந்து, பரவச் செய்தனை --- உயர்குடியிலே தோன்றியவர்களை, இழிந்த குலத்திலே பிறந்தவர் பின்னே போய், வணங்கிப் போற்றுமாறு வைத்தாய்.
தமிழ் அருமை அறியாத புல்லர் மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை --- தமிழின் இனிமையைக் அறியாத புன்மைக் குணம் உடையவர்களை, நல்ல கவிஞர்கள் புகழ்ந்து பாடுமாறு செய்தாய்.
இப்படி ஆதரவு இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! --- இவ்வாறு ஒருவர்க்கொருவர் ஆதரவாக இல்லாமல் பண்ணினது ஏன்? கூறுவாயாக.
"இருவேறு உலகத்து இயற்கை" எனத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்ததை வைத்து, இப் பாடலின் கருத்துத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். இப் பாடலில் சொன்னவை எல்லாம் இறைவன் விரும்பித் தந்தது அல்ல. அவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவரவர் வினைப்படி, இறைவன் ஆணை தந்தது என்று கொள்ளவேண்டும்.
பூதம் என்பது உயிர்களைக் குறித்தது.
இங்கிதம் --- குறிப்பு அறிந்து நடத்தல், கருத்து அறிந்து நடத்தல், இனிமையாக இருத்தல், சமய உசிதமாக நடத்தல்.
நீலி --- வஞ்சகம், கொடியவள், ஒரு பெண்பேய். பொய்யானவள். பாசாங்கு செய்பவள். செருக்கு மிக்கவள்.
அருந்ததி --- வசிட்டரின் மனைவி. கற்புக்கு இலக்கணமாக அருந்ததியைக் கூறுவர். திருமணத்தின்போது, அம்மி மிதித்து, அருந்ததியைக் காட்டும் சடங்கு உண்டு.
இன்னொரு செய்தி. இவையெல்லாம் ஆண்மக்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டவை என்று கொள்ளுதல் கூடாது. இவையெல்லாம் பெண்களுக்கும் பொருந்தும். அன்பும், பண்பும் மிகுந்துள்ள சில பெண்டிருக்கு, அன்பும் பண்பும் சிறிதும் இல்லாத மூடத்தனமும், வஞ்சகமுமே வடிவான ஒருவன் கணவனாக அமைவதும் உண்டு.
இற்றைக்குச் சற்று ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது பிறந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்வை இங்குச் சுட்டிக் காட்டுதல் தெளிவைத் தரும் என்று எண்ணுகின்றேன்.
மிகவும் ஏழ்மையில் உள்ளவர்க்கு இலக்கணமாக, உடம்பும் ஆடையும் கொண்ட ஒரு பெரியவர், தெருக்கோடியில் உள்ள கோயிலில் இருந்துகொண்டு, தன் முன்னர் இருந்து நான்கு பெரியவர்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டு இருப்பதைக் கண்டேன். என்னதான் நடக்கின்றது என்பதை அறிய ஆவல் கொண்டு, சற்றுத் தொலைவில் அமர்ந்து கேட்டேன். வேதாந்தச் செய்திகளை அந்தப் பெரியவர் மிக அருமையாகச் சொல்லிக் கொண்டு இருந்தார். கேட்கக் கேட்க எனக்கு ஆவலும், வியப்பும் அதிகரித்தது. அவரது தோற்றத்திற்கும், சொற்களுக்கும் சிறிதும் பொருத்தம் இல்லை. வகுப்பு முடிந்த போது, இவருக்கு குரு யாராக இருக்க முடியும் என்பதை அறிய ஆவல் கொண்டு, "ஐயா! தங்களுக்கு குரு யார்?" என்று கேட்டேன். "யார் இந்தப் பையன்?" என்று தன் எதிரில் இருந்தவர்களைக் கேட்டார். "என் மகன்" என்று எதிரில் இருந்த எனது தந்தையார் கூறினார். "ஏம்பா! என் குருவைப் பற்றி அறிய அவ்வளவு ஆசையா உனக்கு?" என்று என்னைக் கேட்டார். தவறு செய்து விட்டேனோ என்னும் அச்சத்தில், "தவறு என்றால் மன்னிக்க வேண்டும், ஐயா" என்றேன். "இதில் என்ன தவறு? என் மனைவிதான் எனது குரு" என்றார். அதைக் கேட்டதுமே, அடுத்த முறை ஊருக்கு வந்தால், சோளிங்கபுரத்துக்கு அருகில் உள்ள "கொடைக்கல்" என்னும் அவரது ஊருக்குச் சென்று, அவரது துணைவியாரைத் தரிசித்து வணங்கி வரவேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அடுத்த கணத்தில் அவர் சொன்னார், "அவள் மட்டும் கொஞ்சம் என்னிடத்தில் அன்போடு இருந்திருந்தால், நான் அவளது புடவைத் தலைப்பிலேயே இருந்திருப்பேன். இங்கே வந்திருக்க மாட்டேன்" என்றாரே. எனது குறிப்பை அறிந்த அந்தப் பெரியவர், மேலும் "எல்லாம் விதிப்படியே நடக்கின்றது. செய்வதைச் செய்துவிட்டு, வந்த பின் வருந்தலாமா? விதைத்தது தானே முளைக்கும்" என்று சொன்னார். நான் உடனே அவரது திருவடியில் விழுந்து வணங்கினேன். எவ்வளவு நல்ல உள்ளம்! பின்னர் பல ஆண்டுகள் அப் பெருமானாரை, சமயம் வாய்க்கும்போதெல்லாம், கண்டு வணங்கி மகிழும் பேறு பெற்றிருந்தேன். வீட்டில் கோபித்துக் கொண்டு, சாராயக் கடைக்குச் சென்று, தீய சகவாசத்தை உண்டாக்கிக் கொண்டு அழிந்து போகின்றவர்களும் உண்டு என்பதை நாம் அறிவோம்.
இருவேறு உலகத்து இயற்கை என்று திருவள்ளுவ நாயனார் அருளியதை மேலும் சிந்திக்கலாம்.
No comments:
Post a Comment