கண்ணன் பசுக்களை மேய்த்தது.


கண்ணன் பசுக்களை மேய்த்தது

-----

 

            பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்த கண்ணபிரான் நல்ல மேய்ப்பன்.

 

            கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்தவன். ஆயர்கள் என்பவர்  இறைவனை ஆய்பவர். இடையர்கள் என்றால்இறைவனாகிய கண்ணனுக்கும்அவனை அடைய விரும்பும் மனிதர்களுக்கும் இடையில் இருந்துஅவனை எப்படி அடைவது என்று காட்டும் ஞானிகள். ஆயர்கள் எப்போதும் கண்ணனையே தங்கள் மனத்தில் தரித்து, "உண்ணும் சோறும்தின்னும் வெற்றிலையும்பருகும் நீரும் கண்ணனே" என்று இருந்த ஞானிகள். அந்த ஞானிகள் இடத்தில் வளர்ந்த பசுக்கள்பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆகும்.

 

            பசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம்அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்துபருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டிதக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்துஅவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.

 

            பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டா.  நன்மையே செய்வன. அதுபோல்,கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள்ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன. "தேங்காதே புக்கு இருந்து,சீர்த்த முலை பற்றி வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.

 

            பசுக்களை மேய்ப்பது அவ்வளவு அருமையான புண்ணியமான செயல் ஆகும். அதையே கண்ணபிரான் செய்து வழிகாட்டினார். ஆண்டவன் செய்ததோடுஅடியார்களும் செய்து வந்தார்கள். பல இடங்களில் பசுமடம் நல்ல நிலையில் பராமிரக்கப்பட்டு வருகிறது. பசுக்களை மேய்ப்பதையே ஒரு திருத் தொண்டாகச்  செய்த சிவனடியார் ஒருவர் உண்டு.

 

            தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசாரசருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரேஅவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். 

 

            வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்துஅவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார். இந்த விசாரசருமர்தான்பின்னாளில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டுசண்டீச நாயனார் ஆனார்.

 

            ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்று,  மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன்அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர்மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலமாக உள்ளது. ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது"  என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி,  "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச் சிறந்த தொண்டு ஒன்று உண்டோ?  இதுவே சிவபிரானுக்குரிய  சிறந்த வழிபாடாகும்என்று உறுதிகொண்டார். ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அவ்வூர் அந்தணர்களின் சம்மதம் பெற்றுஅன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார். 

 

     இந்த அருள் நிகழ்வைத் தெய்வச் சேக்கிழார் பெருமான்பெரியபுராணத்தில் மிக அருமையாகப் பாடி உள்ளார்.

 

"பாவும் கலைகள் ஆகமநூல்

            பரப்பின் தொகுதிப் பான்மையினால்

மேவும் பெருமை அருமறைகள்

            மூலமாக விளங்கு உலகில்

யாவும் தெளிந்த பொருளின் நிலையே

            எய்த உணர்ந்த உள்ளத்தால்

ஆவின் பெருமை உள்ளபடி

            அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார்.

 

இதன் பொருள் ---

 

     பரந்த  கலைகளாலும்ஆகமநூலின் விரிந்த பாங்கினாலும்பொருந்திய பெருமையுடைய அரிய மறைகளை ஓதி உணர்ந்த வழியே உலகினில் யாவற்றையும் தெளிந்த உண்மை நிலையாலும்பசுவின் பெருமையை உள்ளபடி அறிந்த விசாரசருமர்ஆயனுக்கு அருளுவாராய் (பசுக்களின் பெருமையைத் தாம் உணர்ந்தபடி சொல்லுகின்றார்).

 

"தங்கும் அகில யோனிகட்கும்

            மேலாம் பெருமைத் தகைமையன;

பொங்கு புனித தீர்த்தங்கள்

            எல்லாம் என்றும் பொருந்துவன;

துங்க அமரர் திருமுனிவர்

            கணங்கள் சூழ்ந்து பிரியாத

அங்கம் அனைத்தும் தாம் உடைய

            அல்லவோ நல் ஆன்இனங்கள்".

 

இதன் பொருள் ---

 

     உலகில் விளங்கும் பிறப்புக்களுள் எவ்வகையினவாய உயிர்கட்கும் மேலான பெருமை உடையனஅருள் மிகுந்திடும் புனிதமான நீர் நிலைகள் எல்லாம் பொருந்தி இருக்கப் பெறுவன;உயர்ந்த தேவர்களும் திருமுனிவர்களும்சிவகணங்களும் சூழ்ந்து பிரியாது இருக்கின்ற உறுப்புக்கள் அனைத்தையும் உடையன அல்லவோ இப்பசுக்கள்!

 

            பசுக்களின் உறுப்புக்களில் தேவர்களும் முனிவர்களும் தங்கியிருப்பர் என்று கொள்ளுதல்  மரபு.

 

பசுவின் உறுப்புக்களில் தலையில் - சிவபெருமான்,

நடுநெற்றியில் - உமையம்மையார்,

கொம்பின் அடியில் - திருமாலும் பிரமனும்,

கொம்பின் நுனியில் - கோதாவரி முதலிய தீர்த்தங்கள்,

மூக்கின் நுனியில் - முருகன்,

உள்மூக்கில் - திக்குப் பாலகர்கள்,

செவிகளில் - அசுவினி தேவர்கள்,

கண்களில் - ஞாயிறும்திங்களும்,

பற்களில் - காற்றின் தலைவன்,

நாவில் - வருணன்,

இருதயத்தில் - கலைமகள்,

கபோலத்தில் - இயமனும் இயக்கர்களும்,

உதட்டில் - காலை நண்பகல் மாலை என்னும் மூன்று  காலத்திற்கும் உரிய அதிதெய்வங்கள்,

கழுத்தில் - இந்திரன்,

இடையில் - அருக்க தேவன்,

நெஞ்சில் - சாத்தியர்,

நான்கு கால்களில் - அநில வாயு,

முழங்காலில் - மருத்துக்கள்,

குளம்பில் - நாகலோகத்தர்,

குளம்பின் நடுவில் - கந்தருவர்,

மேற்குளம்பில் - தேவமாதர்,

முதுகில் - உருத்திரர்கள்,

சந்துகளில் - வசுக்கள் எண்மர்,

அரையில் - பிதிர் தேவர்கள்,

பக்கத்தில் - ஏழு கன்னியர்கள்,

குறியில் - திருமகள்,

அடிவாலில் - தேவர்கள்,

வால்மயிரில் - கதிரவனின் ஒளி,

நீரில் - வானகங்கை,

சாணத்தில் - யமுனை,

வயிற்றில் - நிலமகள்,

மடியில் - ஏழுகடல்கள்,

அடிவயிற்றில் - காருகபத்தியம்,

இதயத்தில் - ஆகவனியம்,

முகத்தில் - தென்திசைத் தீ,

எலும்பிலும் கருப்பையில் ஊறும் நீரிலும் - வேள்விகள்

அனைத்து உறுப்புக்கள் - கற்புடைய மாதர்கள்,இருப்பர்.

 

"ஆய சிறப்பினால் பெற்ற

            அன்றே மன்றுள் நடம் புரியும்

நாயனார்க்கு,வளர்மதியும்

            நதியும் நகுவெண் தலைத்தொடையும்

மேய வேணித் திருமுடிமேல்

            விரும்பி ஆடி அருளுதற்குத்

தூய திருமஞ்சனம் ஐந்தும்

            அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்."

 

இதன் பொருள் ---

 

     அத்தகைய சிறப்பினால் கன்றினை ஈன்ற அன்றேபொற்சபையில் நடனம் புரியும் பெருமானுக்குவளரும் பிறையும்,கங்கையும்,நகுவெண்தலை மாலையும் பொருந்திய சடையின் திருமுடிமேல்அவர் விரும்பித் திருமுழுக்கு ஆடி அருளுவதற்கு உரியவான தூயதான பால்தயிர்நெய்சாணம்நீர் என்னும் ஐந்தினையும் (பஞ்சகவ்வியம்) கொடுத்திடும் உரிமையுடைய பசுக்கள் அல்லவோ இவை?

 

"சீலம் உடைய கோக்குலங்கள்

            சிறக்கும் தகைமைத் தேவருடன்

காலம் முழுதும் உலகு அனைத்தும்

            காக்கும் முதல்காரணர் ஆகும்

நீல கண்டர் செய்யசடை

            நிருத்தர் சாத்தும் நீறு தரும்

மூலம் அவதாரம் செய்யும்

            மூர்த்தம் என்றால் முடிவுஎன்னோ!."

 

இதன் பொருள் ---

 

     சீலம் உடைய இந்தப் பசுக் குலங்கள்சிறப்பு மிக்க தேவர்களுடன் காலம் முழுமையும் உலகம் அனைத்தையும் காக்கின்ற முழுமுதற் காரணர் ஆகும்நீலகண்டமும்சிவந்த சடையும் உடைய கூத்தப்பெருமானார்  தம் திருமேனியில் விளங்கிடும் திருவெண்ணீறு தோன்றுவதற்கு மூலமாகிய மலம் (சாணம்)  தோன்றுவதற்கு இடமாய் இருப்பவை என்றால்இவற்றினும் சிறந்த புண்ணியப் பேறு யாது உளது?

 

"உள்ளும் தகைமை இனிப் பிற வேறு

            உளவே?உழைமான் மறிக்கன்று

துள்ளும் கரத்தார் அணிபணியின்

            சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்

தெள்ளும் சடையார் தேவர்கள்தம்

            பிராட்டியுடனே சேர மிசைக்

கொள்ளும் சினமால் விடைத்தேவர்

            குலம் அன்றோ இச் சுரபிகுலம்!."

 

இதன் பொருள் ---

 

     சிறிய பெண்மானின் கன்று துள்ளிடும் திருக் கைகளை  உடையவரும்அழகிய பாம்பின் மணிகளைக் கங்கை நீரானது எற்றிட விளங்கிடும் சடையை உடையவருமான சிவபெருமான்தேவர்களுக்குத் தலைவியாகிய உமாதேவியுடனே எழுந்தருளும் ஆன் ஏற்றின் (இடபத்தின்) குலம் அன்றோ இப்பசுக்கள் குலம்?  இவ்வகையில் எண்ணத் தக்க  சிறப்புகள் வேறு பிறவும் உளவோஇல்லை.

 

"என்றுஇன்னனவே பலவும் நினைந்து

            இதத்தின் வழியே மேய்த்து இந்தக்

கன்று பயில்ஆன் நிரை காக்கும்

            இதன் மேல் இல்லை,கடன் இதுவே

மன்றுள் ஆடுஞ் சேவடிகள்

            வழுத்தும் நெறி ஆவதும் என்று

நின்ற ஆயன் தனை நோக்கி

            நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார்."

 

இதன் பொருள் ---

 

     என்று இனைய பல தன்மைகளையும் விசாரசருமர் நினைந்தருளிஇப் பசுக்களை இவைகட்கு இன்பமான வழியில் நின்று மேய்த்துகன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டங்களைக் காத்திடும் செயலை விட மேலாக இனிச் சிறந்ததொரு கடமையும் எனக்கு இல்லை என்றும்இச்செயல்தான் தில்லையில் ஆடும் பெருமானின் சேவடிகளைப் போற்றும் திருத்தொண்டு ஆகும் என்றும் கூறிஅவ்விடம் நின்ற இடையனை நோக்கி, `இன்றுடன் நீ இப்பசுவின் நிரைகளை (பசுக் கூட்டங்களை) மேய்த்திடும் தொழிலை ஒழித்திடுவாய்`என்று கூறி.

 

"யானே இனி இந் நிரைமேய்ப்பன்

            என்றார்,அஞ்சி இடைமகனும்

தான்நேர் இறைஞ்சி விட்டு அகன்றான்,

            தாமும் மறையோர் இசைவினால்

ஆனே நெருங்கும் பேராயம்

            அளிப்பார் ஆகி,பைங்கூழ்க்கு

வானே என்ன நிரை காக்க

            வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.

 

இதன் பொருள் ---

 

     `யானே இனி இப்பசுக்களின் கூட்டத்தினை மேய்ப்பேன்எனக் கூறினார் விசாரசருமர். அது கேட்டு அஞ்சிய இடையனும் அவரை வணங்கிஅப்பசு மேய்த்தலை விட்டு நீங்கினான். இப்பால்மறைவழி நிற்கும் அச்சிறுவராய விசாரசருமர் தாமும்அங்குள்ள மறையவரின் இசைவு பெற்றுப்பசுக்கள் நெருங்க இருக்கும் அப்பெருங் கூட்டத்தினை மேய்த்திடுவார் ஆகிபசிய பயிர்களுக்கு வானின் மழைஇன்பம் பயப்பது போலஅப்பசுக்களின் நிரைகளைக் காத்திட முற்பட்டார்.

 

     எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் அற வழியில் ஒழுகவேண்டுவதே வேதம் ஓதி உணர்ந்ததன் பலன் ஆகும். வேதத்தை ஓதுபவர்கள்வேதவிதிப்படி வாழ்பவர்கள்உலக நன்மைக்காக வாழவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் இந்தப் புண்ணிய பூமியில்தான் நிகழ்ந்தது.

 

     விசாரசருமர் பசுக்களை  மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார். அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 

     பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும்வேதக்கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்புஅன்புஅன்பு.

 

     பசுக்களை நன்கு பராமரித்தல் பரமபுண்ணியம். 

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...