திரு வலிவலம்
சோழ நாட்டுத் தென்கரைத் திருத்தலம்.
இறைவர் : இருதய கமலநாதேசுவரர், மனத்துணைநாதர்
இறைவியார் : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி
தல மரம் : புன்னை.
தீர்த்தம் : சங்கர தீர்த்தம்.
தேவாரப் பாடல்கள்:
1. திருஞானசம்பந்தர் -- 1. ஒல்லையாறி, 2.பூவியல் புரிகுழல்
2. அப்பர் - நல்லான்காண் நான்மறைகள்.
3. சுந்தரர் - ஊனங் கைத்துயிர்ப்பாய்.
எப்படிப் போவது
திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்திருத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள்.
ஆலய முகவரி
அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோயில்
வலிவலம்
வலிவலம் அஞ்சல்
திருக்குவளை வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN 610207
காலை 6மணி முதல் 12மணி வரையிலும், மாலை 4மணி முதல் இரவு 8-30மணி வரையிலும் திறந்திருக்கும்.
கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில் மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. அதன் பின் உள்ள 3நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுள்ள கட்டுமலை அமைந்துள்ளது. படிகளேறி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தைச் சுற்றி 4புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் "பொழில் சூழ்ந்த வலிவலம்" என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரயைக்கப்படுகிறது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும்
பிடியதனுரு உமை கொள மிகுகரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினான் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.
என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முன்பு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு என்று ஒன்று உருவாக்கிவிடப்பட்டது.. அதன்படி கணபதி வர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள்.
சுந்தரர் தனது பதிகத்தில் 5-வது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
பெரிய புராணப் பாடல் எண் : 514
புற்று இடங்கொளும் புனிதரைப் போற்றி, இசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்து, இசைப் பதிகங்கள் பாடி,
நல் தவத்திருத் தொண்டர்களொடு நலம் சிறப்ப
மற்றுஅவ் வண்பதி தன்இடை வைகும்அந் நாளில்.
பொழிப்புரை : புற்றிடங்கொண்டருளும் தூயவரான இறைவரைப் பணிந்து போற்றி இசைபெருகுமாறு பற்றும் அன்புடனே வணங்கி, இனிய இசையால் திருப்பதிகங்களைப் பாடி நல்ல தவத்தினை மேற்கொண்ட தொண்டர்களுடன்,நன்மை சிறந்து ஓங்குமாறு, அவ்வளமுடைய பதியில் தங்கியிருக்கும் நாள்களில்,
பெ. பு. பாடல் எண் : 515
மல்லல் நீடிய வலிவலம், கோளிலி, முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர்தம் பதிபல தொழுதே,
எல்லை இல்திருப் பதிகங்க ளால்பணிந்து, ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர்தொழ அணைந்தார்.
பொழிப்புரை : உலகின் துன்பங்களைத் தீர்க்க வந்த பிள்ளை யார், திருவருள் செழிப்பால் சிறந்த `திருவலிவலம்\', `திருக்கோளிலி\' முதலாக உள்ள நான்மறைகளின் முதல்வரான இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் தொழுது, அளவில்லாத திருப்பதிகங்ளைப் பாடி, மீண்டும் திருவாரூரின்கண் தொழுவதன் பொருட்டாக வந்தார்.
குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:
திருவலிவலம்:
1.பூவியல் புரிகுழல் (தி.1ப.123) - வியாழக்குறிஞ்சி
2.ஒல்லையாறி (தி.1ப.50) - பழந்தக்கராகம்.
திருக்கோளிலி:
1.நாளாயபோகாமே (தி.1ப.62) - பழந்தக்கராகம்.
இவை முதலான பல பதிகள் என்பன திருஏமப்பேறூர், திருச்சாட்டியக்குடி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. `தொழெுதே' என்பது `தொழல்' என்றும் பாடம்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்
1.050 திருவலிவலம் பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஒல்லைஆறி, உள்ளம்ஒன்றி, கள்ளம்ஒழிந்து, வெய்ய
சொல்லைஆறி, தூய்மைசெய்து, காமவினை அகற்றி,
நல்லவாறே உன்தன்நாமம் நாவில்நவின்று ஏத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம் மேயவனே.
பொழிப்புரை :திருவலிவலம் மேவிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாம மாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.
பாடல் எண் : 2
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநல் தேவர்எல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்,
தயங்குசோதீ, சாமவேதா, காமனைக்காய்ந் தவனே,
மயங்குகின்றேன், வந்துநல்காய், வலிவலமே யவனே.
பொழிப்புரை :வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தெளியாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தெளிவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.
பாடல் எண் : 3
பெண்டிர்மக்கள் சுற்றம்என்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன், வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே, உன்தன்நாமம் காதலிக்கின்றது உள்ளம்,
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.
பொழிப்புரை :வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக.
பாடல் எண் : 4
மெய்யர்ஆகி, பொய்யைநீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர்ஆனார் சிந்தையானே, தேவர்குலக் கொழுந்தே,
நைவன்நாயேன், உன்தன்நாமம் நாளும்நவிற் றுகின்றேன்,
வையமுன்னே வந்துநல்காய் வலிவலமே யவனே.
பொழிப்புரை :பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காணவந்து அருள்புரிவாயாக.
பாடல் எண் : 5
துஞ்சும்போதும், துற்றும்போதும் சொல்லுவன் உன்திறமே,
தஞ்சம்இல்லாத் தேவர்வந்துஉன் தாள்இணைக்கீழ்ப் பணிய
நஞ்சைஉண்டாய்க்கு என்செய்கேனோ, நாளும் நினைந்து அடியேன்
வஞ்சம்உண்டுஎன்று அஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.
பொழிப்புரை :திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும் போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர் கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.
பாடல் எண் : 6
புரிசடையாய், புண்ணியனே, நண்ணலார்மூ எயிலும்
எரியஎய்தாய், எம்பெருமான், என்றுஇமையோர் பரவும்
கரிஉரியாய், காலகாலா, நீலமணி மிடற்று
வரிஅரவா, வந்துநல்காய், வலிவலமே யவனே.
பொழிப்புரை :திருவலிவலம் மேவிய இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.
பாடல் எண் : 7
தாயும்நீயே, தந்தைநீயே, சங்கரனே அடியேன்
ஆயும்நின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின் றதுஉள்ளம்
ஆயமாய காயம்தன்உள் ஐவர்நின்றுஒன் றல்ஒட்டார்
மாயமேஎன்று அஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.
பொழிப்புரை :திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப்பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.
பாடல் எண் : 8
நீர்ஒடுங்கும் செஞ்சடையாய், நின்னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந்து ஏந்தல்உற்ற வேந்தன்இரா வணனைத்
தேரொடும்போய் வீழ்ந்துஅலறத் திருவிரலால் அடர்த்த
வார்ஒடுங்கும் கொங்கைபங்கா, வலிவலமே யவனே.
பொழிப்புரை :திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத் தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன்கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்ததனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.
பாடல் எண் : 9
ஆதியாய நான்முகனும் மாலும்அறி வரிய
சோதியானே, நீதிஇல்லேன், சொல்லுவன்நின் திறமே
ஓதிநாளும் உன்னைஏத்தும் என்னை,வினை அவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனே.
பொழிப்புரை :திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன்புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.
பாடல் எண் : 10
பொதியிலானே, பூவணத்தாய், பொன்திகழுங் கயிலைப்
பதியிலானே, பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே,
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியர்என்று இவர்கள்
மதியிலாதார், என்செய்வாரோ, வலிவலமே யவனே.
பொழிப்புரை :திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.
பாடல் எண் : 11
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னிஇருப் பாரே.
பொழிப்புரை :வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகிய வற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சீகாழிப்பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தன் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலைபெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
1.123 திருவலிவலம் பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பூஇயல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏஇயல் கணை,பிணை எதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு உடையவன், விரைமலர்
மாஇயல் பொழில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :மணம் கமழும் மலர்களையும், அவற்றில் தேனுண் ணும் வண்டுகளையும், உடைய பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மலர்கள் அணிந்த சுருண்ட கூந்தலையும், வரிந்து கட் டப்பெற்ற வில்போன்ற நுதலையும், செலுத்துதற்கு உரிய கணை, மான் ஆகியன போன்ற கண்களையும் பெற்றுடைய உமையம்மையோடு கூடிய திருமேனியை உடையவன்.
பாடல் எண் : 2
இட்டம் அதுஅமர்பொடி இசைதலின் நசைபெறு
பட்டுஅவிர் பவளநன் மணிஎன அணிபெறு
விட்டுஒளிர் திருவுரு உடையவன் விரைமலர்
மட்டுஅமர் பொழில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :மணம் கமழ்கின்ற மலர்கள் தேனோடு விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், விருப்பத்தோடு அணியப் பெற்ற திருநீறு பொருந்தி இருத்தலின் பட்டோடு விளங்கும் பவளமணி போல் ஒளிவிடுகின்ற அழகிய ஒளி வீசும் திருமேனியை உடையவனாகத் தோன்றுகின்றான்.
பாடல் எண் : 3
உருமலி கடல்கடை வுழி, உலகு அமர்உயிர்
வெருவுறு வகைஎழு விடம்,வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருவலி பொழில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :மிகுதியான மணம் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், தேவர்கள் அஞ்சத்தக்க கடலைக் கடைந்தபோது உலகில் உள்ள அனைத்துயிர்களும் அஞ்சத்தக்க வகையில் எழுந்த விடத்தை உண்டு, திருநீறு சண்ணித்த திருமேனி வெள்ளி மலைபோல விளங்க அதனிடை நீலமணி பதித்தாற்போல் கரியகண்டம் உடையவனாய் விளங்குபவன் ஆவான்.
பாடல் எண் : 4
அனல்நிகர் சடைஅழல் அவியுற எனவரு
புனல்நிகழ் வது,மதி, நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரும் இதுமெல முடிமிசை
மனம்உடை யவர்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :வலிவலம் உறை இறைவன், அனல் போன்ற சடை யழலை அவிப்பதற்கென வருவது போன்ற கங்கையையும், பிறையையும், பூ மொட்டுப் போன்ற படப்புள்ளிகளை உடைய பாம்பையும் முடிமிசை உடையவன் என்னும் நினைவோடு வரும் மனமுடைய அடியவர் வாழும் சிறப்பினை உடையது வலிவலமாகும்.
பாடல் எண் : 5
பிடிஅதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதுஅடி வழிபடும் அவர்இடர்
கடிகண பதிவர அருளினன், மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத் தரும் என நினையும் வள்ளற் பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன், உமையம்மை பெண்யானை வடிவுகொள்ள, தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடிய வர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.
பாடல் எண் : 6
தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழல்உமை யொடுவிரவு அதுசெய்து
நரைதிரை கெடுதகை அதுஅரு ளினன்எழில்
வரைதிகழ் மதில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலி வலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்ககூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித்தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள்புரிபவனாவான்.
பாடல் எண் : 7
நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை அதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :அழகுமிக்கக் கவின் கலை முதலான தொழில்கள் வளரும் வலிமை மிக்க மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மண்ணை மிதிப்பதற்கே அஞ்சும் மென்மையான பாதங்களையும்,அசையும் இடையினையும் உடைய அழகிய தாருகாவன மகளிர் உறையும் மனைகள் தோறும் சென்று புகுந்து பலி ஏற்கப் பிட்சாடனனாய் வருபவன்.
பாடல் எண் : 8
இரவணன் இருபது கரம்எழில் மலைதனில்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளினன் அகநெதி
இரவண நிகர்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :தன்னை வழிபட்டு இரக்கும் தன்மையாளர்களாகிய அடியவர்கட்குத் தன் மனத்தில் தோன்றும் கருணையாகிய நிதியை வழங்கும் வலிவலத்தில் உறையும் இறைவன், இராவணனின் இருபது கரங்களையும் அவனுடைய பத்துத் தலைகளையும் அழகிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்திப் பொடி செய்து பின் அவன் இரந்து வேண்டி நினைத்த அளவில் அவனுக்கு வேண்டுவன அளித்து இரா வணன் என்ற பெயரையும் அருளியவன்.
பாடல் எண் : 9
தேன்அமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம் அதாய்நிலம் அகழ்அரி அடிமுடி
தான்அணை யாஉரு உடையவன், மிடைகொடி
வான்அணை மதில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :வானத்தைச் சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காணமுடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.
பாடல் எண் : 10
இலைமலி தரமிகு துவர்உடை யவர்களும்
நிலைமையில் உணல்உடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை உருவினன்
மலைமலி மதில்வலி வலம்உறை இறையே.
பொழிப்புரை :மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும் நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்துப் பொருட்டன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவினை உடையவனாய் உள்ளான்.
பாடல் எண் : 11
மன்னிய வலிவல நகர்உறை இறைவனை
இன்இயல் கழுமல நகர்இறை எழின்மறை
தன்இயல் கலைவல தமிழ்விர கனதுஉரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.
பொழிப்புரை :நிலைபேறுடைய வலிவல நகரில் உறையும் இறைவன்மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணிஉரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்.
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு
பெரிய புராணப் பாடல் எண் : 228
நீர்ஆரும் சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து சென்று,
வார்ஆரும் முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து மகிழ்ந்து பாடி,
கார்ஆரும் கறைக்கண்டர் கீழ்வேளூர்,
கன்றாப்பூர் கலந்து பாடி,
ஆராத காதலினால் திருவாரூர்
தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.
பொழிப்புரை : கங்கையாறு தங்கிய சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்று, கச்சை அணிந்த மார்பகத்தையுடைய மங்கையான உமையை ஒருகூற்றில் கொண்டவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ந்து பாடித், திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலிய பதிகளுக்கும் சென்று, மனம் கலந்த ஒருமைப்பாட்டுடன் பாடி, நிறைவுறாத ஆசை மிகுதியால் திருவாரூருக்குத் திரும்பவும் வந்தார்.
குறிப்புரை : இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:
3. திருக்கன்றாப்பூர்: `மாதினையோர்` (தி.6ப.61) - திருத்தாண்டகம்.
இத்திருப்பதிகளோடு, பின்வரும் திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து திருவாரூருக்குச் சென்றிருக்கவேண்டும் என இதுபொழுது இருக்கும் திருப்பதிகங்கள் கொண்டு அறிய முடிகின்றது.
அவை 1. திருக்கோளிலி: (அ). `மைக்கொள்` (தி.5ப.56) - திருக்குறுந்தொகை. (ஆ) `முன்னமே` (தி.5ப.57) - திருக்குறுந்தொகை. 2. திருப்பேரெயில்: `மறையும்` (தி.5ப.16) - திருக்குறுந்தொகை. மீண்டும் திருவாரூரை அணைந்து, ஐம்பொறிகளோடு வாழ இயலாமையை நினைந்து அருளிய திருப்பதிகம். `படுகுழிப் பவ்வத்தன்ன` (தி.4ப.52) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம்.
திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகம்
6. 048 திருவலிவலம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நல்லான்காண், நான்மறைகள் ஆயி னான்காண்,
நம்பன்காண், நணுகாதார் புரமூன்று எய்த
வில்லான்காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான்காண்,
மெல்லியலாள் பாகன்காண், வேத வேள்விச்
சொல்லான்காண், சுடர்மூன்றும் ஆயி னான்காண்,
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண்,அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :பெரியவனாய் , நான்கு வேத சொரூபனாய் நம்மால் விரும்பப்படுபவனாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் எய்தவில்லை உடையவனாய்த் தேவர்களுக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய் , மந்திர வடிவினனாய்ச் சந்திரன் சூரியன் தீ என்ற மூஒளிகளின் உருவனாய்த் தொண்டராகி வழிபடுபவர்களுக்கு வீட்டுலகை ஈய வல்லவனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தை உகந்தருளியிருக்கும் பெருமான் என் உள்ளத்தில் உள்ளான் .
பாடல் எண் : 2
ஊன்அவன்காண், உடல்தனக்குஓர் உயிர் ஆனான்காண்,
உள்ளவன்காண், இல்லவன்காண், உமையாட்குஎன்றும்
தேன்அவன்காண், திருஅவன்காண், திசைஆ னான்காண்,
தீர்த்தன்காண், பார்த்தன்தன் பணியைக் கண்ட
கானவன்காண், கடலவன்காண், மலையா னான்காண்,
களியானை ஈர்உரிவை கதறப் போர்த்த
வானவன்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண்,அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :வலிவலத்துப் பெருமான் எல்லோருக்கும் உடம்பாய் , உயிராய் , அருளாளர்களுக்கு அநுபவப் பொருளாய் , உலகியலில் திளைப்பார்க்கு அநுபவம் ஆகாதவனாய்ப் பார்வதிக்குத் தேன் போன்று இனியனாய்ச் செல்வமாய்த் திசைகளாய்த் தூயவனாய் , அருச்சுனனுடைய போர்த்தொழிலை அநுபவித்த வேடனாய் ,கடலாய், மலையாய் , மதயானையைக் கொன்று அதன் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்திய தேவனாய் ,தேவர்களும் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான் .
பாடல் எண் : 3
ஏயவன்காண், எல்லார்க்கும் இயல்பு ஆனான்காண்,
இன்பன்காண், துன்பங்கள் இல்லா தான்காண்,
தாயவன்காண் உலகுக்கு,ஓர் தன்ஒப்பு இல்லாத்
தத்துவன்காண், உத்தமன்காண், தானே எங்கும்
ஆயவன்காண், அண்டத்துக்கு அப்பா லான்காண்,
அகம்குழைந்து மெய்அரும்பி அழுவார் தங்கள்
வாயவன்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண், அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :எப்பொருளையும் நடத்துபவனாய் , எல்லாருக்கும் இயக்கத்தை வழங்குபவனாய்த் துன்பக்கலப்பற்ற இன்பம் உடையவனாய்த் தாயாய் , உலகில் தன்னை ஒப்பார் இல்லாத மெய்ப் பொருளாய் , உத்தமனாய்த்தானே எங்கும் பரவியவனாய் , அண்டங் களுக்கும் அப்பாற்பட்டவனாய் , மனம் உருகி மெய் மயிர் பொடித்து அழும் அடியவர்களுக்குத் தன்னை அழைக்கும் அவர்கள் வாயிலுள்ள வனாய்த் தேவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்தில் உறைபவன் என் உள்ளத்தில் உள்ளான் .
பாடல் எண் : 4
உய்த்தவன்காண், உடல்தனக்குஓர் உயிர்ஆனான்காண்,
ஓங்காரத்து ஒருவன்காண், உலகுக்கு எல்லாம்
வித்துஅவன்காண், விண்பொழியும் மழை ஆனான்காண்,
விளைவுஅவன்காண், விரும்பாதார் நெஞ்சத்துஎன்றும்
பொய்த்தவன்காண், பொழில்ஏழும் தாங்கி னான்காண்,
புனலோடு வளர்மதியும் பாம்பும் சென்னி
வைத்தவன்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண், அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :வலிவலத்துப் பெருமான் உடலுக்கு உயிராய் அதனைச் செலுத்துபவனாய் , ஓங்காரத்தால் குறிப்பிடப்படும் எப் பொருட்கும் தலைவனாய் , உலகுக்கெல்லாம் காரணனாய் , வானத்து மழையாய் , மழையின் விளைவாய்த் தன்னை விரும்பாதார் மனத்துத் தோன்றாதவனாய் , ஏழுலகையும் தாங்குபவனாய்த் தலையில் கங்கை பிறை பாம்பு இவற்றை அணிந்தவனாய் ; வானவர்கள் வணங்கித் துதிக்கப்படுபவனாய் என் உள்ளத்தில் உள்ளான் .
பாடல் எண் : 5
கூற்றுஅவன்காண், குணம்அவன்காண், குறிஆ னான்காண்,
குற்றங்கள் அனைத்துங்காண், கோலம் ஆய
நீற்றவன்காண், நிழல்அவன்காண், நெருப்பு ஆனான்காண்,
நிமிர்புன் சடைமுடிமேல் நீர்ஆர் கங்கை
ஏற்றவன்காண், ஏழ்உலகும் ஆயி னான்காண்,
இமைப்புஅளவில் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண், அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் சொற்களாகவும் , சொற்பொருளின் பொதுத் தன்மையாகவும் , சிறப்புத் தன்மையாகவும் , எல்லாக் குற்றங்களாகவும் , நீறணிந் தவனாகவும் , நிழலாகவும் , வெப்பமாகவும் , மேல்நோக்கிய சிவந்த சடையின் மேல் கங்கை நீரை ஏற்றவனாகவும் , ஏழுலகும் ஆகியவனாய் இமை நேரத்தில் மன்மதனைச் சாம்பலாக்கியவனாய் , என் உள்ளத்து உள்ளான் .
பாடல் எண் : 6
நிலைஅவன்காண், தோற்றவன்காண், நிறை ஆனான்காண்,
நீர்அவன்காண், பார்அவன்காண், ஊர்மூன்று எய்த
சிலையவன்காண், செய்யவாய்க் கரிய கூந்தல்
தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தி னான்காண்,
கலைஅவன்காண், காற்றுஅவன்காண், காலன் வீழக்
கறுத்தவன்காண், கயிலாயம் என்னும் தெய்வ
மலைஅவன்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண், அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் தோற்றம் நிலை இறுதியாய் நீராய் நிலனாய்த் திரிபுரம் எரித்த வில்லேந்தியவனாய்ச் செவ்வாயினையும் கரிய கூந்தலையும் உடைய பார்வதி பாகனாய்க் கலைகளாய்க் காற்றாய்க் கூற்றுவன் கீழே விழுமாறு அவனை வெகுண்டவனாய்க் கயிலாய மலையினனாய் என் உள்ளத்து உள்ளான் .
பாடல் எண் : 7
பெண்அவன்காண், ஆண்அவன்காண், பெரியோர்க்கு என்றும்
பெரியவன்காண், அரிஅவன்காண், அயன் ஆனான்காண்,
எண்அவன்காண், எழுத்துஅவன்காண், இன்பக் கேள்வி
இசைஅவன்காண், இயல்அவன்காண், எல்லாம் காணும்
கண்அவன்காண், கருத்துஅவன்காண், கழிந்தோர் செல்லும்
கதிஅவன்காண், மதிஅவன்காண், கடலேழ் சூழ்ந்த
மண்அவன்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண், அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :தேவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் பெண்ணாய் , ஆணாய் , அரியாய்ப் பிரமனாய்ப் பெரியோரில் பெரியோனாய், எண்ணாய் , எழுத்தாய் , இயலாய்ச் செவிக்கு இன்பம் தரும் இசையாய்க் கண்ணாய்க் கருத்தாய் ,இறந்தோர் செல்லும் வழியாய் , ஞானமாய் , ஏழ்கடல் சூழ்ந்த நிலமாய் என் உள்ளத்து உள்ளான் .
பாடல் எண் : 8
முன்னவன்காண், பின்னவன்காண், மூவா மேனி
முதல்அவன்காண், முடிவுஅவன்காண், மூன்று சோதி
அன்னவன்காண், அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
அணியவன்காண், சேயவன்காண், அளவில் சோதி
மின்அவன்காண், உரும்அவன்காண், திருமால் பாகம்
வேண்டினன்காண், ஈண்டுபுனல் கங்கைக்கு என்றும்
மன்னவன்காண், வானவர்கள் வணங்கி எத்தும்
வலிவலத்தான் காண்,அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :வானவர்கள் வணங்கித் துதிக்கும் வலிவலத்துப் பெருமான் முன்னவனாய்ப் பின்னவனாய் , என்றும் ஒரே நிலையிலிருக்கும் முதலும் முடிவுமாய் இருப்பவனாய்த் திங்கள் ஞாயிறு தீ என்ற மூவொளியாய் , அடியார்க்கு அணியனாய் , உலகியலில் மூழ்கியவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , எல்லையற்ற ஒளியை உடைய மின்னலாய் , இடியாய்த் திருமாலை உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாய்க் கங்கையைச் சடையில் நிலைபெறச் செய்தவனாய் என் உள்ளத்து உள்ளான் .
பாடல் எண் : 9
நெதிஅவன்காண், யாவர்க்கும் நினைய ஒண்ணா
நீதியன்காண், வேதியன்காண், நினைவார்க்கு என்றும்
கதிஅவன்காண், கார்அவன்காண், கனல் ஆனான்காண்,
காலங்கள் ஊழியாய்க் கலந்து நின்ற
பதிஅவன்காண், பழம்அவன்காண், இரதம் தான்காண்,
பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன்காண், வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண், அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :வானவர்கள் வணங்கித்துதிக்கும் வலிவலத்துப் பெருமான் செல்வமாய் , யாரும் மனத்தால் அணுக இயலாத நீதியனாய் வேதியனாய்த் தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் சென்று சேரும் கதியாய், நீராய்த் தீயாய்ப் பல ஊழிக்காலங்களாய், எல்லாருக்கும் தலைவனாய்ப் பழமாய்ப் பழத்தின் சாறாய்ப் பாம்பையும் பிறையையும் பழகுமாறு அருகில் வைத்த ஞானமுடையவனாய் என் உள்ளத்து உள்ளான்.
பாடல் எண் : 10
பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி
உலகளந்த படியானும் பரவிக் காணாது,
அங்கைவைத்த சென்னியராய் அளக்க மாட்டா
அனல்அவன்காண், அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
கொங்குஅலர்த்த முடிநெரிய விரலால் ஊன்றும்
குழகன்காண், அழகன்காண், கோலம் ஆய
மங்கையர்க்குஓர் கூறன்காண், வானோர் ஏத்தும்
வலிவலத்தான் காண், அவன்என் மனத்து உளானே.
பொழிப்புரை :தேவர் வழிபடும் வலிவலத்தான் தாமரையில் உறையும் பிரமனும் வாமனனாய் உலகை அளந்த திருமாலும் கைகளைத் தலைமிசைக் குவித்து முன்னின்று துதித்து முடியையும் அடிகளையும் எளிமையில் காணமாட்டாது , தம் முயற்சியால் காண முற்பட்டமையின் காணமுடியாத தீப்பிழம்பாக நின்றவனாய் இராவணனுடைய பூக்களைச் சூடிய தலைகள் நெரியுமாறு விரலால் அவனை அழுத்திய இளையனாய் , அழகனாய் , அழகிய பார்வதி பாகனாய் என் உள்ளத்தில் உள்ளான் .
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர் திருப்பதிக வரலாறு:
சுந்தரர், திருநாட்டியத்தான்குடி இறைவரைத் தொழுது பின்பு திருவலிவலம் சென்று வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம் (தி. 12பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 44) இதில், 'சம்பந்தர், நாவுக்கரசர் பாடல்களை உகந்த பெருமானே' என்று சிறப்பித்திருத்தல் குறிப்பிடத்தக்கது.
பெரிய புராணப் பாடல் எண் : 43
அங்கு நின்றும் எழுந்துஅருளி
அளவில் அன்பில் உள்மகிழச்
செங்கண் நுதலார் மேவுதிரு
வலிவ லத்தைச் சேர்ந்துஇறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம்
"வலிவ லத்துக் கண்டேன்"என்று
எங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை
எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.
பொழிப்புரை : அவ்விடத்தினின்றும் (திருநாட்டியத்தான்குடி) எழுந்தருளி, அளவற்ற அன்பினால் உள்ளம் மகிழ்ந்திட, சிவந்த நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் மேவியிருக்கும் திருவலிவலம் என்னும் திருப்பதியினைச் சேர்ந்து, வணங்கி, உமையொரு கூறனாய பெருமானை `வலிவலத்துக் கண்டேன்\' என்று எங்கும் பெருமை பொருந்த விளங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையை எடுத்துத் தொடுத்துப் பாடி மகிழ்வார்.
குறிப்புரை : இந்நிறைவுடைய பாடல், `ஊன் அங்கத்து\' (தி.7ப.67) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகப் பாடல் முழுதினும் `வலிவலந்தனில் வந்து கண்டேனே' என்னும் தொடர் அமைந்திருத்தலின் அதனை ஆசிரியர் எடுத்து மொழிந்தார்.
பெ. பு. பாடல் எண் : 44
"நன்று மகிழும் சம்பந்தர்
நாவுக் கரசர் பாட்டு உகந்தீர்",
என்று சிறப்பித்து, இறைஞ்சி,மகிழ்ந்து,
ஏத்தி, அருள்பெற்று எழுந்து அருளி,
மன்றின் இடையே நடம்புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயில்
பெருமான் செம்பொன் கழல்பணிந்து.
பொழிப்புரை : அத்திருப்பதிகத்தில் பெரிதும் உம்மைப் பரவி மகிழும் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் விண்ணப்பிக்கும் பாடல்களைக் கேட்டு உகந்தீர் என்று மொழிந்து, வணங்கி, அருள்பெற்று, எழுந்தருளி மேற்சென்று, திருவம்பலத்தினிடமாகக் கூத்தியற்றும் பெருமான் வீற்றிருக்கும் பெருமையுடைய திருவாரூருக்குச் சென்று அணைந்து, அங்குப் பூங்கோயிலின்கண் அமர்ந்த பெருமானின் செம்பொன்னின் சிலம்பணிந்த சேவடிகளைப் பணிந்து,
குறிப்புரை : `நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை' (தி.7ப.67பா.5) என வரும் அருள்மொழியை நினைவு கூர்ந்து, இப்பாடலில் அருளுகின்றார் ஆசிரியர். இவ்விரு பெருமக்களும் அருளிய பதிகங்களையே தொடர்ந்து கூறினும், பெருமானார் கூறியதையே கூறுகின்றார் எனும் உவர்ப்பின்றி அருள்செய்வான் என்பதால், நம் அருளாளர் பெருமக்கள் அருளியனவற்றையே நாம் கூறி உய்யலாம் என்பது தெளிவாகின்றது. காரணம் அவர்கள் அனைவரும் அருளாளர்கள். இறைவனை உயிரினும் மேலாக உணர்ந்து போற்றிவந்த தன்மையால் அப்பெருமானைத் தம்மகத்துக் கொண்டவர்கள். ஆதலின் அவர்கள் திருவாக்கைச் சலிப்பின்றி ஏற்கின்றான் இறைவன்.
சுந்தரர் அருளிய திருப்பதிகம்
7. 067 திருவலிவலம் பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஊன்அங் கத்துஉயிர்ப் பாய்உலகு எல்லாம்
ஓங்கா ரத்துஉரு ஆகிநின் றானை,
வானம் கைத்தவர்க் கும்அளப் பரிய
வள்ள லை,அடி யார்கள்தம் உள்ளத்
தேன்அம் கைத்துஅமு தாகிஉள் ஊறுந்
தேச னை, திளைத் தற்குஇனி யானை,
மான்அங் கைத்தலத்து ஏந்தவல் லானை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பன வாகிய உயிர்களாய் நின்று அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும் , விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்வார் கட்கும் அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும் , தன் அடியவர்களது உள்ளத்தினுள்ளே , தேனும் கைப்ப , அமுதம் ஊற்றெழுவதுபோல எழுகின்ற ஒளிவடிவினனும் , அழுந்துந்தோறும் இனிமை பயக்கின்ற வனும் , மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெரு மானை ,அடியேன், ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனம் காண்பேன் !
பாடல் எண் : 2
பல்அடி யார்பணிக் குப்பரி வானை,
பாடிஆ டும்பத்தர்க்கு அன்புஉடை யானை,
செல்அடி யேநெருங் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை,
நல்அடி யார்மனத்து எய்ப்பினில் வைப்பை,
நான்உறு குறைஅறிந்து அருள்புரி வானை,
வல்அடி யார்மனத்து இச்சை உளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : பலதிறப்பட்ட அடியவரது தொண்டுகட்கும் இரங்கு பவனும் , இசையோடு பாடி , அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்ற வனும் , தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும் , நல்ல அடியார்களது மனத்தில் , எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவுபோல நின்று அமைதியைத் தருபவனும் , நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து , அவற்றைக் களைந்தும் , வாராது தடுத்தும் அருள்புரிபவனும் , கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடைய வனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 3
ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை,
ஆதிஅந் தம்பணி வார்க்குஅணி யானை,
கூழையர் ஆகிப்பொய் யேகுடி யோம்பிக்
குழைந்து மெய்அடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபிறப்பு என்னை மாசுஅறுத் தானை,
மாழைஒண் கண்உமை யைமகிழ்ந் தானை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : ஆழ்ந்தவனாகியும் , அகன்றவனாகியும் , உயர்ந்தவனாகியும் உள்ளவனும் , பிறந்தது முதற் சாங்காறும் வழிபடுவார்க்கு அணியனாகின்றவனும் ,பணிவுடையவராய், குடியை , உள்ளத்தில் பற்றின்றிப் புரந்து , மனம் உருகிநின்று , தம்மை மெய்யடியார் கூட்டத்துள் வைத்தெண்ணும் வாழ்க்கையை யுடையவர்க்கு அடிமை செய்தலில் தவறாத நெறியை உணர்த்து மாற்றால், என்னை மறுபிறப்பெடுத்தலாகிய குற்றத்தை அறுத்துத் தூயனாக்கியவனும் , மாவடுப் போலும் கண்களையுடைய உமாதேவியை விரும்பி ஒருபாகத்தில் வைத்தவனும் ஆகிய பெருமானை , அடியேன் , திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 4
நாத்தான் தன்திற மேதிறம் பாது
நண்ணிஅண் ணித்துஅமு தம்பொதிந்து ஊறும்
ஆத்தா னை,அடி யேன்தனக்கு என்றும்
அளவிறந்த பஃல் தேவர்கள் போற்றும்
சோத்தா னை,சுடர் மூன்றிலும் ஒன்றித்
துருவி மால்பிர மன்அறி யாத
மாத்தா னை,மாத்து எனக்குவைத் தானை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : அடியேற்கு , எனது நா , தனது புகழைச் சொல்லு தலில் என்றும் மாறுபடாதவாறு என்னிடத்துப் பொருந்தி , உள்ளே அமுதம் நிறைந்தாற்போல இனித்து ஊற்றெழுகின்ற துணைவனாய் உள்ளவனும் , எண்ணில்லாத பல தேவர்களும் துதித்து வணங்குகின்ற வணக்கத்திற்கு உரியவனும் . ` ஞாயிறு, திங்கள் , தீ ` என்னும் முச்சுடர் களிலும் வேறற நிற்பவனும் , திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாத பெருமையை உடையவனும் , எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை , அடியேன், ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 5
நல்இசை ஞானசம் பந்தனும் நாவினுக்கு
அரையனும் பாடிய நல்தமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துஉகப் பானை,
தொண்ட னேன்அறி யாமை அறிந்து,
கல்இ யல்மனத் தைக்கசி வித்து,
கழல்அடி காட்டி,என் களைகளை அறுக்கும்
வல்இயல் வானவர் வணங்கநின் றானை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும் , திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த , தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய ,முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும் , அடியேனது அறியாமையை அறிந்து , கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி , கழல் அணிந்த தனது திருவடியைப் பெறுவித்து , எனது குற்றங்களை எல்லாம் அறுத்த வன்மையையுடைய , தேவர் பலரும் வணங்க நிற்கின்ற பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 6
பாடுமா பாடி, பணியுமாறு அறியேன்,
பனுவுமா பனுவிப் பரவுமாறு அறியேன்,
தேடுமா தேடித் திருத்துமாறு அறியேன்,
செல்லுமா செல்லச் செலுத்துமாறு அறியேன்,
கூடுமாறு எங்ஙனமோ என்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்து,எனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தல்என் பானை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : யான், முன் உள்ள பாடல்களை, அவைகளைப் பாடும் நெறியாற் பாடி இறைவனை வழிபடுமாற்றை அறிந்திலேன் ; புதிய பாடல்களை யாக்கும் நெறியால் யாத்துத் துதிக்கு மாற்றினையும் அறிந்திலேன் ; மனத்தில் உள்ள குற்றங்களை ஆராயும் நெறியால் ஆராய்ந்து கண்டு அதனைத் திருத்தும் வகையை அறிந்திலேன் ; அதனால் , அதனை நன்னெறியிற் செல்லுமாறு செலுத்தும் வழியை அறிந்திலேன் ; இவற்றால் ` இவன் நன்னிலையைப் பெறுதல் எவ்வாறோ !` என்று நல்லோர்கள் இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து , என்னையே சிறப்பாக யாவர்க்கும் காட்டி , ` இவன் எனக்கு அடிமை ` என்று சொல்லி வெளிக்கொணர்ந்து , தனக்கு ஆளாகக் கொண்டு , ` இனி , நீ , பயனின்றி வாடி வருந்தலை ` என்று தேற்றிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்த தனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனம் காண்பேன் !
பாடல் எண் : 7
பந்தித்தவ் வல்வினைப் பற்றுஅறப் பிறவிப்
படுக டல்பரப் புத்தவிர்ப் பானை,
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தன்அடி யார்க்குச்
சிந்தித் தற்குஎளி தாய்த்திருப் பாதம்
சிவலோ கம்திறந்து ஏற்றவல் லானை,
வந்திப் பார்தம் மனத்தின்உள் ளானை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால் , பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும் ,தன்னை உணர்ந்த உணர்வின் வலிமையால் , தம் செயல்களைத் தன்னிடத்தே சேர்த்து , அதனால் , செய்யும் செயலெல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள் , நினைத்தற்கு எளியவாய்க் கிடைத்தலானே , தனது சிவலோகத்தின் வாயிலைத் திறந்து , அதன்கண் அவர்களைப் புகச்செய்ய வல்லவனும் , தன்னையே வணங்குகின்ற வர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 8
எவ்எவர் தேவர்இ ருடிகள் மன்னர்
எண்இறந் தார்கள்மற்று எங்கும்நின்று ஏத்த,
அவ்அவர் வேண்டிய தேஅருள் செய்து,
அடைந்தவர்க் கேஇடம் ஆகிநின் றானை,
இவ்இவ கருணைஎம் கற்பகக் கடலை,
எம்பெரு மான்அரு ளாய்,என்ற பின்னை
வவ்விஎன் ஆவிம னங்கலந் தானை,
வவிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : தேவர்கள் , இருடிகள் , அரசர்கள் முதலாக எண்ணிறந்தவர்களாகிய எவரெவரும் , எவ்விடத்திலும் இருந்து வழிபட , அவ்வெல்லா இடங்களிலும் நின்று அவர்களது வழி பாட்டினை ஏற்று , அவரவர் விரும்பியதை அவர்கட்கு அளித்து , இவ்வாற்றால் , தன்னை அடைந்தவர்க்குப் புகலிடமாய் நிற்பவனும் , இவ்வாறு உள்ள இவை இவையாகிய அருளைத்தருகின்ற எங்கள் கற்பகத் தருவும் கடலும் போல்பவனும், யான், `எம் பெருமானே, எனக்கு அருள்செய்` என்று வேண்டிக்கொண்ட பின்பு, என் உயிரைத் தன்னுடையதாகக் கொண்டு , என் உள்ளத்திலே எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 9
திரியும் முப்புரம் செற்றதும், குற்றத்
திறல்அ ரக்கனைச் செறுத்ததும், மற்றைப்
பெரிய நஞ்சுஅமுது உண்டதும், முற்றும்
பின்னையாய் முன்ன மேமுளைத் தானை,
அரிய நான்மறை அந்தணர் ஓவாது
அடிப ணிந்துஅறி தற்குஅரி யானை,
வரையின் பாவைம ணாளன்எம் மானை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும் , குற்றம் செய்த , வலிமையுடைய அரக்கனாகிய இராவணனை ஒறுத்ததும் , ஏனை , பெரிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய் ,எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும் , அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள் , மனம் மாறுபடாது நின்று அடிபணிந்தும், அவர்களால் அறிதற்கு அரியவனும், மலைமகட்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை , அடியேன், ` திருவலிவலம்` என்னும் இத்தலத்தில் அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 10
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்,
சான்று காட்டுதற்கு அரியவன், எளியவன்
தன்னை, தன் நிலாமனத் தார்க்கு
மான்று சென்றுஅணை யாதவன் தன்னை,
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
பொழிப்புரை : தன்னொடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து , அதனை நிரப்ப , மாயோனது உதிரத்தை ஏற்றவனும் , யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை யுடையவனும் , தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும் , தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும் ,அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !
பாடல் எண் : 11
கலிவ லங்கெட ஆர்அழல் ஓம்பும்
கற்ற நான்மறை முற்றுஅனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண்டு அடியேன்
மன்னு நாவல்ஆ ரூரன்வன் தொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தால்உகந்து ஏத்தவல் லார்போய்
மெலிவுஇல் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே
பொழிப்புரை : வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்த்தற்கு ஏதுவான , பெரியோர் பலரும் போற்றிக் கற்ற நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவினனாகிய சிவபெருமானை , அவனை எஞ்ஞான்றும் தன்னிடத்து நீங்காது கொண்டு நிற்கும் , ` திருவலிவலம் ` என்னும் தலத்தில் வந்து கண்டு , அவன் அடியவனும் , நிலை பெற்ற திருநாவலூரில் தோன்றியவனும் , ` வன்றொண்டன் ` எனப் பெயர்பெற்றவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , இனிய இசையையுடைய , செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும் , மனத்தால் விரும்பிப் பாடவல்லவர்கள் , தேவர்கள் விரும்பிப் போற்ற , துன்பம் இல்லாத வானுலகத்தைப் போய் அடைவர் ; இது திண்ணம் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment