அறம் எது?

 


எது அறம் ?

-----
     

     கி. பி. ஐந்தாம்நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை  தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். சிறந்த கலைஞர்களாகவும்தேர்ந்த அரசியல்வாதிகளாகவும் இருந்தனர். அவர்களுடைய சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள் இன்றும் உள்ளன.


     முற்காலப் பல்லவருள் சிறந்தவன் மகேந்திரவர்மன். அவன் இசையில் வல்லவன்ஓவியத்தில் வல்லவன்நாடக ஆசிரியன்அவனுக்குக் குணபரன்அவனிபாஜனன்சத்யசந்தன்விசித்திர சித்தன்போத்தரையன்புருஷோத்தமன்சத்ருமல்லன்சேதகாரி என்ற சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டன. பிற்காலப் பல்லவருள் சிறந்த மன்னன் இராசசிம்மப் பல்லவன் என்பவன். ஒவ்வொரு பல்லவனும் ஒவ்வொரு துறையில் வல்லவனாய் இருந்தான். தன் முன்னோர்கள் செய்ததைப் போலவே தானும் ஒரு கலையை வளர்க்க நினைத்த இராசசிம்ம பல்லவன்அதற்குத் திருக்கோயில் கட்டுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான். அலைந்து திரியும் மனத்தை ஒரு நிலையில் நிறுத்தி அனுபவத்தை உண்டாக்குவதே கலையின் பயன். மனத்தை ஒருநிலைப் படுத்தி அனுபவத்தை வழங்குவது எல்லாக் கலைகட்கும் பொதுவாயினும்நுண்கலைகள் (Fine Arts) எனப்படும் கட்டடம்சிற்பம்ஒவியம்இசைபாடல்கள் என்ற ஐந்தும் சிறப்புப் பெறுகின்றன. மனித வாழ்வின் நிலையாமையை உணர்ந்த நம்முன்னோர்இந்த ஐந்து நுண்கலைகளையும் இறைவனுக்கே அர்ப்பணித்தனர். மன்னர்கள் கட்டி வழிபட்ட திருக்கோயில்கள் இன்றும் உள்ளன. அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்று காணப்பெறவில்லை.


     எகிப்து நாட்டை ஆட்சி செய்தவர்கள்தம்முடைய சடலத்தைப் புதைக்கஉலகம் வியக்கும் 'பிரமிடுகளைச் சமைத்தார்கள். ஆனால்நம் நாட்டில் திருக்கோயில்களைத் தவிர வேறு எதனையும் நிலைபெறும்படி கட்டவே இல்லை.


     திருக்கயிலை மலையில் உமையை ஒரு பாகத்தில் கொண்டு சிவபெருமான் எழுந்தருளியுள்ளான். காஞ்சிபுரத்தில் கயிலை மலையை ஒத்த ஒரு கோயில்எடுப்பித்துஅதில் இறைவனை நிறுத்த விழைந்தான் இராசசிம்ம பல்லவன். கலைகளுக்கெல்லாம் மூலமான இறைவனுக்கே ஒரு கோயில் எடுக்க வேண்டுமானால்அக்கோயில்  கலைச் சிறப்பு மிக்கதாக இருக்க வேண்டும். தனது காலத்தில் தமிழ் நாட்டில் எத்துணைக் கலை நுணுக்கம் இருந்ததோஅத்தனையும் ஒவ்வொரு கோயிலிலும் குடிபுகவேண்டும் என்று முடிவு செய்தான் அப்பல்லவ மன்னன். 'செங்கோலுக்கு மிஞ்சின சங்கீதமா?’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. பல்லவச் சக்கரவர்த்தியே ஒரு முடிவு செய்தால்அதனைக் கொண்டு செலுத்துவது தவிர வேறு வழியில்லை. பல்லவ மன்னனோகலை ஆர்வமும் பத்தியும் நிறைந்தவன்செல்வாக்குக்கோ குறைவில்லை. அவ்வாறு இருக்கசிறந்த கலைக்கோயில் தோன்றக் கேட்கவா வேண்டும்! இன்றுசிதிலமான நிலையிலும் காஞ்சிக்  கயிலாயநாதர் கோயில் ஈடும் எடுப்பும் இல்லாமல் விளங்குகின்றது. ஒப்பற்றமுறையில் கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்ய நாளும் குறித்துவிட்டான்.


     சென்னைக்குச் சிறிது தொலைவில் இருப்பது திருநின்றவூர்’.  இராசசிம்மன் காலத்தில் வளம் நிறைந்திருந்த  இவ்வூரில் பூசலார்’ என்ற ஒரு நாயனார் இருந்தார். சிவனடியாராகிய அவர் வறுமையில் வாழ்ந்தாலும் இறைவனுக்குத் திருக்கோயில் ஒன்று சமைக்க வேண்டும் என்ற அவா உடையவராய் இருந்தார். நீண்ட நாட்கள் முயன்றும்கோயில் கட்ட ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை அவருக்கு. எவ்வளவு முயன்றும் கோயில் கட்டவாய்ப்பு இல்லை என்பதை அறிந்த அவர்பிறர் தயை இல்லாமலே கோயிலைக் கட்ட முனைந்தார். அழியக் கூடிய கல்லாலும் மரத்தாலும் கோயில் கட்டுவதானால்பிறருடைய தயை வேண்டும். எனவேபூசலார் ஒரு புதிய வழியைக் கண்டார். அவர் யாருக்காகக் கோயில் எழுப்ப வேண்டும்இறைவனுக்குத் தானேஎனவேமனத்தினாலேயே கோயிலைக் கட்ட முடிவு. செய்தார். அரசன் என்று கோயிலுக்குக் கடைக்கால் இட்டானோஅன்றே அவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து மனத்தில் கடைக்கால் இட்டார். கல் மரம் முதலியவற்றை மனத்தினாலேயே பெற்றுமனத்தினாலேயே நிருமாணித்துப் பெரிய கோயிலைக் கட்டி முடித்துவிட்டார். 


     பூசலார் நாயனார் மனத்தால் திருக்கோயில் அமைத்த விதம் பற்றிதெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுவதைக் காணலாம்...


"அடுப்பது சிவன்பால் அன்பர்க்கு 

     ஆம்பணி செய்தல் என்றே

கொடுப்பது எவ்வகையும் தேடி 

     அவர் கொ(ள்)ளக் கொடுத்து,கங்கை

மடுப்பொதி வேணி ஐயர் 

     மகிழ்ந்து உறைவதற்கோர் கோயில்

எடுப்பது மனத்துக் கொண்டார் 

     இருநிதி இன்மை எண்ணார்."

 

இதன் பொருள் ---

 

     சிவபெருமானுக்கும் அவருடைய அன்பர்களுக்கும் ஆகும் பணிகளைச் செய்தலே தக்கது என்று துணிந்துஅடியவர்களுக்குக் கொடுப்பதற்கு என எவ்வகையாலும் பொருளைத் தேடிஅவர்கள் கொள்ளும்படி தந்துதிருக்கோயில் அமைப்பதற்குப் பெருந்திரளான செல்வம் தம்மிடம் இல்லாமையை எண்ணாதவராய்க் கங்கை தங்கிய சடையையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளி இருப்பதற்கு என ஒரு கோயிலைக் கட்டும் செயலையும் தம் உள்ளத்தில் கொண்டார்.

 

"மனத்தினால் கருதி எங்கும்

            மாநிதி வருந்தித் தேடி

எனைத்தும் ஓர் பொருட்பேறு இன்றி

            என்செய்கேன் என்று நைவார்;

நினைப்பினால் எடுக்க நேர்ந்து

            நிகழ்வுறு நிதியம் எல்லாம்

தினைத்துணை முதலாத் தேடிச்

            சிந்தையால் திரட்டிக் கொண்டார்."

 

இதன் பொருள் ---

 

     திருக்கோயில் அமைப்பதற்கென வேண்டும் பொருளைத் தேடிப்பெறும் இடங்களை உள்ளத்தால் நினைத்துஎங்கும் அப்பெருஞ் செல்வத்தை வருந்தித் தேடியும்ஒரு சிறிதும் அதனைப் பெறும் பேறு கிட்டாதவராய்இனி என் செய்வேன் என்று வருந்திநினைவால் கோயில் எடுக்க எண்ணித் துணிந்துஅச் செயல் நிகழ்வதற்குரிய செல்வங்களை எல்லாம் தினையளவு கிடைப்பினும் அதனையும் சிறிது சிறிதாக உள்ளத்தால் சேர்த்துக் கொண்டனர்.

 

"சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி

நாதனுக்கு ஆலயம்செய் நலம்பெறும் நன்னாள் கொண்டே

ஆதரித்து,ஆகமத்தால் அடிநிலை பாரித்து,அன்பால்

காதலில் கங்கும் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்".

 

இதன் பொருள் ---

 

     திருக்கோயிலைக் கட்டுவதற்கு உரிய சாதனங்களுடன் தச்சர்களையும் மனத்தால் தேடிக் கொண்டுஇறைவற்குக் கோயில் எடுப்பிப்பதற்குரிய நலம் மிக்க நல்ல நாளையும் பொழுதையும் குறித்துக் கொண்டுவிரும்பிஆகம நெறியின்படிஅடிநிலை எடுத்துஅன்பின் நிறைவினால் ஆசை மிகுந்துஇரவிலும் பகலிலும் உறங்காது கோயில் எடுக்கலானார்.

 

     இவ்வாறு அவர் மனத்தில் கட்டிய கோயிலுக்குக் குடமுழுக்குக்குச் செய்வதற்கும் ஒருநாள் குறிப்பிட்டு விட்டார். இராசசிம்மப் பல்லவன் காஞ்சிபுரத்தில் தான் கட்டிய கயிலாயநாதர் ஆலயத்துக்குக் குடமுழுக்குச்  செய்யக் குறித்த அதே நாளைத்தான் பூசலாரும் குறித்திருந்தார். விடிந்தால் குடமுழுக்கு நடைபெற வேண்டும். காஞ்சீபுரம் விழாக் கோலம் பூண்டு கிடக்கிறது. குடமுழுக்குக்கு முதல் நாள் இரவுபல்லவன்  கனவில் இறைவன் தோன்றினான். "அன்பனேதிருநின்றவூரில் வாழும் பூசலார் பல நாளாய் முயன்று கட்டிய கோயிலுக்கு நாளைக் குடமுழுக்குக் குறித்துள்ளார். அங்கு நான் செல்ல வேண்டும். எனவே நீ கட்டிய கோயிலின் குடமுழுக்கைத் தள்ளி வைத்துக்கொள்’ என்று கூறினான்.

 

"நின்றவூர்ப் பூசல் அன்பன் 

     நெடிதுநாள் நினைந்து செய்த

நன்றுநீடு ஆலயத்து 

     நாளைநாம் புகுவோம்,நீ இங்கு

ஒன்றிய செயலை நாளை 

     ஒழிந்துபின் கொள்வாய் என்று

கொன்றைவார் சடையார் தொண்டர் 

     கோயில் கொண்டு அருளப் போந்தார்."

 

இதன் பொருள் ---

 

     'திருநின்றவூரில் உள்ள பூசல் என்ற அன்பன் நீண்ட நாட்களாக நினைவு அளவில் செய்த நன்மையால் நீடும் கோயிலில்நாளை நாம் புகுவோம்: எனவேநீ செய்யப் புகுந்த குடமுழுக்கினை நாளை வைத்துள்ளமையை மாற்றிக் கொள்கஎன்று கூறிக்கொன்றை சூடிய நீண்ட சடையுடைய இறைவர் பூசலாரின் கோயிலில் எழுந்தருளுவித்து இருக்கும் திருமேனியைக் கொண்டருள எழுந்தருளினார்.

 

     விழித்து எழுந்த மன்னன் பதறி விட்டான். எவ்வளவோ முயன்று தான் கட்டிய  கோயிலின் குடமுழுக்கைத் தள்ளி வைத்துக்கொள்ள வேண்டுமாம். இது இறைவன் கட்டளை. யார் அந்தப் பூசலார்தன் கோயிலைவிட அவர் கட்டிய கோயில் எவ்வாறு சிறந்ததுஅது சிறந்தது என்பதனால் தானே இறைவன் அங்கே செல்வதாகக் கூறிவிட்டான்தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும் பல்லவன் கோயிலை அறியுமே! ஆனால்காஞ்சியை அடுத்து உள்ள திருநின்றவூரில் இறைவனும் விரும்பும் ஒரு கோயில் தோன்றுவதானால்அது அரசனாகிய தனக்குத்  தெரியாமலா போயிருக்கும்


     இவ்வாறு நினைந்த அரசன் உடனே பூசலார் கோயிலைக் காணப் புறப்பட்டான். திருநின்றவூரில் வந்து கோயில் எதனையும் காணாமல் திகைத்தான்.  ஊராரை விசாரித்துப் பூசலார் தங்கியுள்ள இடத்தை அடைந்தான்; "ஐயா!  நீங்கள் கட்டிய கோயில் எங்கேஅதைக் காணத் துடிக்கின்றேன்!’" என்றான். வியப்பில்  மூழ்கிவிட்ட பூசலார்தாம் கோயில் கட்டியது அரசனுக்கு எவ்வாறு தெரிந்தது என்று வினவினார். அரசன் நடந்தவற்றைக் கூறினான். இறைவன் தம்பால் காட்டிய கருணையை  வியந்த பூசலார்தாம் மனத்திலேயே கோயில் கட்டிய வரலாற்றை எடுத்து உரைத்தார். உண்மையை உணர்ந்த மன்னன்அவரை வணங்கி விடை கொண்டான். அவ் வரசனைஅசரீரி கேட்டவன்’ என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.


     இந்த வரலாற்றினால் அறியப்படும் உண்மை ஒன்று உண்டு. எவ்வளவு பெரிய கோயிலைக் கட்டினாலும்அதனை ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்தாலும், 'நான்தான் அதனைச் செய்தேன்!’ என்ற அகங்காரம் ஒரு துளி அளவு அரசன் மனத்தில்  ஒட்டிக்கொண்டிருந்தமையின் அவன் கட்டிய கோயில் இறைவன் குடி இருக்கத் தகுதி இல்லாதது ஆகிவிட்டது. தூய்மையான மனத்துடன் செய்யப்படுவனவே அறம்’ என்று கூறுகின்றார் திருவள்ளுவ நாயனார். மனத் தூய்மை இல்லாமல் எவ்வளவு பெரிய அறத்தைச் செய்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை. அது வெற்று ஆடம்பரமேதான் என்று,


"மனத்துக்கண் மாசு இலன் ஆதல்அனைத்து அறன்;

ஆகுல நீர பிற"

 

என்னும் திருக்குறளின் வழி அறிவிக்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

       'நான் செய்தேன்!என்ற அகங்காரத்துடன்  கட்டிய கோயில் ஆடம்பரமாய் நின்று விட்டது. நான் செய்தேன் என்னும் எண்ணத்தையும் ஒழித்துவிட வேண்டும்.

 

"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம்ஏகம் சரணம் வ்ரஜ|                      

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச||"

 

என்கிறது பகவத் கீதை.

 

இதன் பொருள் ---

 

     எல்லா தருமங்களையும் பரித்தியாகம் செய்துவிட்டுஎன் ஒருவனையே சரண் அடைவாயாக. நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன்வருந்தாதே.

 

     இதையே சிவஞானசித்தியார் என்னும் மெய்கண்ட சாத்திரம் பின்வருமாறு கூறுகிறது....

 

"யான் செய்தேன்,பிறர் செய்தார்,என்னது,யான் என்னும்

            இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்து,

தான்செவ்வே நின்றிட அத் தத்துவன் தான் நேர

            தனை அளித்து முன்நிற்கும்;வினை ஒளித்திட்டு ஓடும்;

நான் செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கு இன்றி

            நண்ணுவிக்கும் போகத்தை பண்ணுவிக்கும் கன்மம்;

ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால்

            ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழியாது அன்றே."

 

       நான் பிறர்க்கு இன்ன நன்மைதீமை செய்தேன்பிறர் எனக்கு இன்ன நன்மைதீமை செய்தார் என்று கருதுவது நான் எனது என்னும் செருக்கினால் விளையும் மனக்கோட்டம் ஆகும். இத்தகைய மனக்கோட்டத்தை ஞானம் என்னும் நெருப்பால் காய்ச்சி அதனை நிமிர்த்துதல் வேண்டும். அவ்வாறு நிமிர்த்தி இறைவனின் திருவருள் வழியிலே தன்முனைப்பு இன்றி  நிற்கவே இறைவன் நேராக வெளிப்பட்டுத் தோன்றி அருள் பாலிப்பான். அவனுடைய முன்னிலையில் நில்லாது  ஞானம் உடையாரின் வினைகள் ஒளித்துவிடும். இவ்வாறன்றி இதனை நான் செய்தேன் என்று தன் முனைப்போடு செயல்படுவோர்க்கு இறைவன் விளங்கித் தோன்றுதல் இலன். மேலும் அவர்கள் செய்யும் வினைக்கு ஏற்ற பயனையும் இறைவன் ஊட்டுவான். எனவே,அவர்களுக்கு வேறு வினையும் தோன்றும். மாயையினால் ஆகிய கருவிகளைப் பொருந்தி அறியும் சிற்றறிவினின்றும் வழிபட்டு ஏகனாகி இறைபணி நிற்கும் ஞானம் உதித்தால் அன்றிஒருவருக்கும் யான் எனது என்னும் செருக்கு ஒழிவதில்லை.

 

     நான் எனது என்னும் அகங்கார மமகாரங்கள் மனத்தை மாசு படுத்துவன. மனமாசு உள்ள வரையில் ஒருவன் செய்பவை அறம் ஆகா. மனமாசு அற்ற நிலையில் செய்யும் செயல்கள் அனைத்துமே இறைவன் செயல்கள் ஆகிவிடுகின்றன. உடல் பொருள் ஆவி என்னும் மூன்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விடுதல் வேண்டும். அப்போது இந்த உடல் இறைவனுடைய உடல் ஆகிவிடுகின்றது. அந்த நிலையில் ஆன்மாவுக்கு என்று வரும் இடையூறு ஒன்று இல்லை.  வருகின்ற இடையூற்றைத் தடுத்தும்வந்த இடையூற்றைப் போக்கியும் ஆன்மா தன்னைத் தானே காத்துக் கொள்ளும் சுதந்தரம் இல்லை. எனவேஎல்லாவற்றிற்கும் உரியவன் இறைவனே ஆகிவிடுகிறான்.

 

"அன்றே என்றன் ஆவியும்

    உடலும் உடைமை எல்லாமும்,

குன்றே அனையாய்! என்னைஆட்

    கொண்ட போதே கொண்டிலையோ?

இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ?

    எண்தோள் முக்கண் எம்மானே!

நன்றே செய்வாய் பிழைசெய்வாய்

    நானோ இதற்கு நாயகமே."

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய "திருவாசகம்".

     

இதன் பொருள் ---

 

     எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையஎமது தலைவன் ஆகிய சிவபெருமானே! மலையை ஒத்த பெரியோனே! நீ என்னை ஆட்கொள்ள வந்த அன்றேஎன்னை ஆட்கொண்ட அப்பொழுதேஎன்னுடைய உயிரையும்உடம்பையும்,  பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோஅங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ?  உண்டாகாது. ஆதலின்எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும்தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் நானோ? (அல்லன்).

 

     எனவேஎது அறம்என்றால்ஏகன் ஆகி இறைபணி நிற்றலே அறம் ஆகும். அவ்வாறு நின்றால் ஆணவம் இல்லை. மாயை இல்லை. நான் செய்தேன் என்னும் கன்மமும் இல்லை. மனமாசு அற்ற நிலையில் செய்யும் செயலே உண்மையான அறம் ஆகும். மற்றபடி அறச் செயல்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாம் ஆரவாரத் தன்மையை உடையனவே ஆகும்.

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...