பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை

 


பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை

-----

 

     கர்ப்பூரமும் வெள்ளை நிறம்.கடல் உப்பும் வெள்ளை நிறம்.இயற்கையில் கிடைக்கும் போது இரண்டும் ஒரே தோற்றம். ஆயினும்பயன்பாட்டால் கர்ப்பூரமும் கடல் உப்பும் ஒன்றாகா.

 

     நம்மில் பலரும் அறியாமையின் காரணமாகவோபொறாமையின் காரணமாகவோ சாதி,  குலம்பிறப்புபதவி மற்றும் பிற உலகியல் நிலைகளை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்துசெருக்குக் கொள்கின்றனர். மெத்தப் படித்தவர்கள் என்போரிடத்திலும் இந்த இழிகுணம் இல்லாமல் இல்லை. தொலைவில் இருந்து பார்த்தால் இது புலனாகாது. நெருங்கிப் பார்த்தால் புலன் ஆகும். முயற்சிஉழைப்பு காரணமாக உயர்ந்த பதவியில்உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் பிறந்த சாதி ஒன்றையே காரணமாக வைத்து தம்மைத் தாமே ஒப்பிட்டுக் கொள்வோரும் இல்லாமல் இல்லை. அவர்களுடைய முயற்சிஉழைப்பு முதலியவற்றை மறைத்து விட்டுதம்மை அவர்களுக்குச் சரிசமமாக காட்ட முயல்வோரும் உண்டு. இது தவறு என்கிறது "நீதிவெண்பா" என்னும் நூல். புண்ணியவாளரைப் போலவே,புல்லிய அறிவு உடையாரும் தோற்றத்தால் ஒத்து இருக்கலாம். அது ஒப்பு ஆகாது.

 

"கர்ப்பூரம் போலக் கடல் உப்பு இருந்தாலும்,

கர்ப்புரம் ஆமோ கடல் உப்பு?— பொற்பு ஊரும்

புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்

புண்ணியர்வாரோ புகல்."

 

இதன் பொருள் ---

 

     கடல் நீரில் உண்டாகும் உப்பு உருவத்தால் கருப்பூரத்தைப் போல வெண்மையாக இருந்தாலும்அந்த உப்பு தன்மையில் கருப்பூரம் ஆகிவிடாது. அதுபோலதீவினையாளர் அழகு மிகுந்த நல்வினையாளரைப் போலவே இருந்தாலும்தன்மையிலும் நல்வினையாளர் ஆவாரோநீ சொல். (ஆகமாட்டார்).

 

     மனித உடம்பில் நகம் இருக்கும் வரை அதை அழகு படுத்துவோம். உடம்பை விட்டு நீங்கிவிட்டால்அதற்கு மரியாதை ஏதும் இல்லை. நாம் இதுவரை போற்றிப் பாதுகாத்த நகம்தானே என்று யாரும் அதைப் பெட்டியில் வைத்தக் காப்பது இல்லை. மனிதனின் தலையில் இருக்கும் வரை மயிரினைப் பாதுகாப்பதும் அழகுபடுத்தவதும் நிகழும். தலையில் இருந்து உதிர்ந்துவிட்டால்யாரும் மதிப்பது இல்லை. ஆனால்புலியின் நகம்வெண்கவரிமானின் மயிர்மதம் பிடித்த யானையின் தந்தம் ஆகியவை அவை இருந்த இடத்திலும் சிறப்பு. அந்த இடத்தில் இருந்து வேறுபட்டாலும் சிறப்பு.

 

"வென்றி வரி உகிரும்,வெண்கவரி மான்மயிரும்,

துன்று மதயானைச் சுடர்மருப்பும் - நின்றநிலை

வேறு படினும் சிறப்பாம்;மெய்ஞ்ஞானி நின்றநிலை

வேறுபடினும் சிறப்பு ஆமே."           --- நீதிவெண்பா.

 

      வெற்றியை உடைய புலியினது நகமும்வெண்மையான கவரிமானின் மயிரும்நிறைந்த மதத்தை உடைய யானையினது ஒளி பொருந்திய கொம்பும் தாம் நின்ற நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவைகளுக்குப் பெருமையே மிகும். அதுபோலஉண்மையான அறிவுடைய பெரியோர் தாம் இருந்த நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவர்களுக்குப் பெருமையே உண்டாகும்.

 

     பெருமை என்பதுபெரிய தன்மையைக் குறிக்கும். பெரிய தன்மையாவதுசெய்வதற்கு எளிய செயல்களை விட்டுஅரிய செயல்களைச் செய்தல்கர்வம் இல்லாது இருத்தல்பிறருடைய குற்றங்களைச் சொல்லாது இருத்தல் போன்ற நற்குணங்களைக் குறிக்கும். தமது நிலையில் இருந்து எக்காலத்தும் தாழ்வதற்கு மனம் கொள்ளாத நிலையே ஒருவனுக்குப் பெருமை தருவது ஆகும். இதை "நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது" என்றார் திருவள்ளுவ நாயானார். இந்தப் பெருமையானது ஒருவனுக்குக் குடிப் பிறப்பினால் மட்டுமே அமைவது இல்லை. அவன் செய்கின்ற செயலினால் அமையும். செயல் என்பது செய்தற்கு அரிய செயல் என்பதால்"செயற்கு அரிய செய்வார் பெரியர்" என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டி அருளினார் என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம். பெரியர் என்பவர் பெருமைக்கு உரிய செயல்களைச் செய்தவர்.

 

     "பெருமையும் சிறுமையும் தான்த ர வருமேஎன்றது "வெற்றிவேற்கைஎன்னும் நூல்மேன்மையும் கீழ்மையும் தான் செய்யும் செய்கையாலேயே ஒருவனுக்கு உண்டாகும்பிறரால் உண்டாவதில்லை. இதையே,  "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்னும் திருக்குறளால் காட்டினார் நாயனார்.

 

     எனவேஎல்லா மக்களுக்கும் பிறப்பின் இயல்பு என்பது பொதுவாக ஒத்து இருந்தாலும்பெருமைசிறுமை என்று சொல்லப்பட்ட சிறப்பு இயல்புகள்அவரவர் செய்கின்ற தொழில்களில் வேறுபாட்டால் ஒவ்வா என்கின்றார் நாயனார். எந்த சாதியில் பிறந்தவராக இருந்தாலும்பஞ்சபூதச் சேர்க்கையால் ஆகிய உடம்பு எல்லாருக்கும் ஒத்தே இருக்கும். அவர்களிடத்தில் உண்டாகின்ற நற்செயல்களால் பெருமையும்தீயசெயல்களால் சிறுமையும் வரும். நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் தீய செயல்களைச் செய்வானானால்அவனுக்குப் பெருமை உண்டாகாது.

 

     எடுத்துக்காட்டாகபெரியபுராணத்துள்சண்டீச நாயனார் வரலாற்றைக் காணலாம். சண்டீச நாயனார் அவதரித்த திருச்சேய்ஞ்ஞலூர் என்னும் திருத்தலப் பெருமையைதெய்வச் சேக்கிழார் பெருமான்பின்வருமாறு காட்டினார்.

 

"செம்மைவெண்ணீற்றுஒருமையினார்,

            இரண்டுபிறப்பின்சிறப்பினார்,

மும்மைத்தழல் ஓம்பிய நெறியார்,

            நான்குவேதம்முறைபயின்றார்,

தம்மைஐந்துபுலனும்பின்செல்லும்

            தகையார்,அறுதொழிலின்

மெய்ம்மைஒழுக்கம்ஏழ்உலகும்

            போற்றும்மறையோர்விளங்குவது."

 

இதன் பொருள் ---

 

       செம்பொருளை அடைதற்குக் காரணமாகிய திருவெண்ணீற்றில் ஒன்றுபட்ட ஒழுக்கம் உடையவராய்இருபிறப்பின் சிறப்புடையவராய்ஆகவனீயம்காருகபத்தியம்தக்கிணாக்கினியம் என்னும் மூவகைத் தீயையும் வளர்த்து வரும் நன்னெறி உடையவராய்நான்மறைகளையும் முறையாகப் பயின்றவராய்ஐம்புலன்களும் தம்வழி நிற்கு ம்தகுதி உடையராய்த்தாம் செய்யும் ஓதல்ஓதுவித்தல்வேட்டல்வேட்பித்தல்ஈதல்ஏற்றல் என்னும் ஆறுதொழில்களிலும் உண்மை நிறைந்த ஒழுக்கத்தை மேற்கொண்டு ஏழுலகமும் போற்றும் சீலமுடையவராய் வாழும் அந்தணர்கள் வாழும் சிறப்புடையது அவ்வூர்.

 

     ஏழ் உலகும் போற்றுகின்ற சீலத்தால் மிக்க அந்தணர்கள் இருந்த அந்த ஊரில்அந்தணர் குலத்தில்காசிப கோத்திரத்தில் பிறந்த எச்சதத்தன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தான் என்பதையும் காட்டுகின்றார்.

 

"பெருமைபிறங்கும்அப்பதியின்

            மறையோர்தம்முள்பெருமனைவாழ்

தருமம்நிலவுகாசிபகோத்

            திரத்துத்தலைமைசால்மரபில்,

அருமைமணியும்அளித்து,அதுவே

            நஞ்சும்அளிக்கும்அரவுபோல்

இருமைவினைக்கும்ஒருவடிவாம்

            எச்சதத்தன்உளன்ஆனான்".

 

இதன் பொருள் ---

 

     இத்தகைய பெருமை மிக்க அப்பதியில் வாழும் மறையவர்களில்சிறப்புடைய இல்லற நெறியில்அறம் நிலவிய காசிப கோத்திரத்தின் தலைமை சான்ற நன்மரபினில்அருமையான இரத்தினத்தையும் தந்துஅதுவே நஞ்சினையும் தரும் பாம்பைப் போலநல்வினை தீவினை எனும் இருவினைகளையும் செய்யும் ஒருவனாக எச்சதத்தன் என்னும் பெயருடைய ஓர் அந்தணன் வாழ்ந்து வந்தான்.

 

     காசிப கோத்திரத்தில் பிறந்து விட்டதாலேயே எச்சதத்தன் என்பவன் சிறப்புப் பெறவில்லை. அவனை நச்சுப் பாம்பு என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவேஒருவனுக்குப் பெருமையோ சிறுமையோபிறந்த குலத்தினால் உண்டாவதில்லை. ஒருவன் செய்யும் செயல்களின் காரணமாக உண்டாவது என்பதை அறியலாம். பாணர் குலத்தில் பிறந்தவரைத் தான், "திருப்பாணாழ்வார்" போற்றிக் கொண்டாடுகிறோம்.

 

இந்த உண்மையை,

 

"பிறப்புஒக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்புஒவ்வா

செய்தொழில்வேற்றுமையான்."

 

என்னும்திருக்குறளால்காட்டினார்நாயனார்.

 

     தொழில் அளவில் எந்தத் தொழிலும் தாழ்ந்த தொழில் அல்ல. எல்லாம் உயர்ந்த தொழிலே. துப்புரவுப் பணியாளர் இல்லையானால்ஊரும்திருக்கோயிலும் கூடத் தூய்மை ஆக இருக்காது. ஊரில் யாரும் வாழ முடியாது. திருக்கோயிலுக்கும் யாரும் செல்ல முடியாது. திருக்கோயில் நிகழ்வுகளும் செம்மையாகாது. செருப்புத் தைப்பவர் ஒருவர் இல்லையானால்ஒவ்வொருவர் நிலையும் என்ன ஆகும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளலாம்.

 

     துப்புரவுப் பணியாளர் ஒருவர் தனது தொழிலைச் செம்மையாகச் செய்தால்அந்தத் தொழில் சிறப்புப் பெறுகிறது. செருப்புத் தைப்பவர் தனது தொழிலைச் செம்மையாகச் செய்தால் சிறப்பு. ஏனோ தானோ என்று செய்தால் அது இழிவு. உழவுத் தொழிலை ஒருவர் செம்மையாகச் செய்தால்அது சிறப்பு. நெசவாளி ஒருவர் நெய்தல் தொழிலைச் செம்மையாகச் செய்தால் அது சிறப்பு. இல்லையேல் இழிவு. ஆகவேசெய்கின்ற தொழிலில் வேற்றுமை என்பது தொழிலினைச் செய்பவனது,மனச் செம்மையைப் பொருத்தே அமைகிறது. மருத்துவர் ஒருவர் தனது தொழிலைச் செம்மையாகச் செய்தால் அது சிறப்பு. பணம் பண்ணுவதையே நோக்கமாக ஒரு மருத்துவர் இருந்தால் அவர் சிறப்புப் பெறமாட்டார். இதே போல எல்லாத் தொழில்களுக்கும் கொள்ளலாம். ஆகவே, "செய்தொழில் வேற்றுமை" என்று நாயனார் காட்டியதுதொழில்களுக்குள் வேற்றுமையை அல்ல. செய்யும் தொழிலில் சிறப்பையும்இழிவையுமே காட்டும்.

 

     கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாடலும்இந்த உண்மையைத் தெளிவிக்கும்படியாக உள்ளது காண்க.  வாலிக்கு இராமன் கூறிய தெளிவுரை இது.

                                                                                                

"இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை

மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்."   --- கம்பராமாயணம்வாலி வதைப்படலம்.

 

இதன்பதவுரை---

 

     இனையது ஆதலின்-உண்மை இத்தன்மையது ஆதலால்எக்குலத்து யாவர்க்கும் -எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர்கள் எல்லோர்க்கும்மேன்மையும் கீழ்மையும் உயர்வும்இழிவும்வினையினால் வரும்அவரவர் செய்யும் செயல்களால் வரும்அனைய தன்மை அறிந்தும்அத் தன்மையை நீ உணர்ந்திருந்தும்மனையின் மாட்சி பிறன் மனையாளின் கற்பு மாண்பினைஅழித்தனைஅழித்தாய்; என்றான் என்றுஉரைத்தான்மனுநீதியான் மனுநீதியில் தவறாதவனாகிய இராமன்.

 

    ஒருவனுக்கு நற்செயலால் மேன்மையும் தீச்செயலால் கீழ்மையும் வரும்  என்பது இராமன் கூற்றாக உணர்த்தப்பட்டது. எந்தக் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும்அவரது செயல் ஒன்றினாலேயே மேன்மையும் கீழ்மையும் உண்டாகும்.

 

     பிறப்பினால் மட்டுமே ஒருவருக்குச் சிறப்பு உண்டாவதில்லை என்பதை"குமரேச சதகம்" கூறுமாறு காணலாம்..

 

"சிங்கார வனம் அதில் உதிப்பினும் காகமது

     தீஞ்சொல் புகல் குயில் ஆகுமோ?

திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி

     செங்கஞ்ச மலர் ஆகுமோ?

 

அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது

     ஆனையின் கன்று ஆகுமோ?

ஆண்மை ஆகிய நல்ல குடியில் பிறந்தாலும்

     அசடர் பெரியோர் ஆவரோ?

 

சங்குஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான்

     சாலக்கி ராமம் ஆமோ?

தடம்மேவு கடல்நீரிலே உப்பு விளையினும்

     சார சர்க்கரை ஆகுமோ?

 

மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம்

     வைத்த மெய்ஞ்ஞான குருவே!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல் நீடு

     மலைமேவு குமர ஈசனே."

 

இதன் பொருள் ---

 

     மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே - குற்றமற்ற இனிய தமிழ் முனிவராகிய அகத்திய முனிவருக்கு மெய்ப்பொருளை உபதேசித்த உண்மை ஞான குருநாதனே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     காகம் அது சிங்கார வனம் அதில் உதிப்பினும் தீஞ்சொல் புகல் குயில் ஆகுமோ - காகம் ஆனது அழகிய மலர்ச் சோலையில் பிறந்தாலும் இனிமையாகக் கூவும் குயில் ஆகுமோ?  கொட்டி திரை எறியும் வாவியில் பூத்தாலும் செங்கஞ்ச மலர் ஆகுமோ - நீர் நிறைந்து அலைவீசும் பொய்கையிலே மலர்ந்ததாலேயே கொட்டியானது,செந்தாமரை மலரைப்போல் சிறப்புப் பெறுமோ?,  முயலானது அம் கானகத்தில் பிறந்தாலும்ஆனையின் கன்று ஆகுமோ - அழகிய காட்டிலே பிறந்ததாலேயே முயலானது,யானைக் கன்றைப்போல் ஆகுமோ?  அசடர் ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் பெரியோர் ஆவரோ - வீரம் பொருந்திய உயர்ந்த மரபிலே பிறந்தாலும்,அறிவற்ற பேதைகள்,பெரியோராக மதிக்கப்படுவரோ? சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ - சங்குகள்உலாவும் பாற்கடலிலே தோன்றியதாலேயே கருநிறம் பொருந்திய நத்தையானது சாலக்கிராமம் ஆகுமோ?  தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ - விரிந்து பரந்துள்ள கடலிலே வெண்ணிறமுள்ள உப்புத் தோன்றினாலும் அது இனிய சர்க்கரைஆகுமோ?

 

     காக்கையும் குயிலும் நிறத்தால் கருமையாகவே இருப்பன. காக்கையானது "காகா" என்று கரையும். அதில் இனிமை இருக்காது. ஆனால்குயில் இனிமையாகக் கூவும்.  தாமரை பூக்கின்ற தடாகத்திலேதான் கொட்டிப் பூவும் பூக்கின்றது. தடாகத்தில் பூத்ததாலேயே கொட்டிப்  பூவானதுதாமரை மலர் ஆகாது. கடலிலே தோன்றுகின்ற நத்தையானது கருநிறம் பொருந்தி இருக்கும். சாளக்கிராமம் திருமால் அடியார்க்கு மிகவும் விருப்பமானது. கூழாங்கல்லைப் போன்று கருமையாக இருக்கும். திருமால் பள்ளிகொண்டு இருக்கும் பாற்கடலில் பிறந்து கருநிறம் பொருந்தி இருப்பதாலேயேநத்தையை சாளக்கிராமம் என்று திருமால் அடியார் கொள்ள மாட்டார்கள். கடல் நீரிலே தோன்றி வெண்மை நிறம் பொருந்தியதாக உப்பு இருப்பதால்அது இனிய சருக்கரை ஆகாது. உப்பும் சருக்கரையும் நிறத்தில் வெண்மையாகவே உள்ளவை. சருக்கரை இனிப்பதால் அதை தனித்தும் உண்ணலாம். பிற பண்டங்களோடு கூட்டியும் உண்ணலாம். ஆனால்உப்பை தனித்து உண்ண முடியாது. பண்டத்திற்குச் சுவை கூட்ட மட்டுமே அது பயன்படும். 

 

     இவை போலவேஉயர்ந்த குடியில் பிறந்து விட்டதாலேயேஅறிவு அற்றவனையும் உயர்ந்தவன் என்று யாரும் கொண்டாட மாட்டார்கள் என்றார். பிறப்பினால் யாருக்கும் சிறப்பு வராது. பண்பினால் தான் சிறப்பு.

 

     ஓடுகின்ற நீரில் ஆங்காங்கே சுழி இருக்கும். அந்தச் சுழியில் அகப்பட்டுக் கொண்ட பொருள் எதுவும் அதைவிட்டு வெளியில் வர முடியாது. சுழியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவன்அதில் இருந்து மீண்டு வர முடியாது. சாதிகுலம்பிறப்பு என்பனவற்றையும் சுழி என்கிறார் மணிவாசகப் பெருமான். அந்தச் சுழியில் அகப்பட்டுக் கொண்டவர்க்குத் துன்பமே விஞ்சி நிற்கும். நல்லறிவு சிறிதும் இருக்காது. அப்படிப்பட்டவன் இறையருளைப் பெறுதல் என்பது நிச்சயம் முடியாது.

     

"சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் 

ஆதம்இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு 

பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என்உரை மாய்த்துக் 

கோது இல் அமுது ஆனானைக் குலாவு  தில்லைக் கண்டேனே." 

 

என்பது மணிவாசகப் பெருமான் பாடி அருளிய திருவாசகப் பாடல்.

 

     "நால்வகை வருணத்துள் இன்ன குடியில் உயர்ந்த பிறப்பு எடுத்தவர் இவர், அல்லாதவர் இவர் என்ற வேறுபாட்டைத் தொடக்கத்திலிருந்தே நினைத்துப் பழகினதால்மீட்டு வரமுடியாத நீர்ச்சுழலில் அகப்பட்டவன் போல அடியேன் ஆயினேன். என்னை நல்வழிப்படுத்தி ஆதரவு தருவார் யாரும் இல்லாத நாயேனாக இருந்தேன். அவ்வாறு இருந்த என்னை ஆட்கொள்ள விரும்பினார் குருநாதர். என்னிடத்தே நிறைந்து இருந்த பேதைமைக் குணத்தையும் பிறர் வடிவத்தைக் கொண்டேஇவர் உற்றார் என்றும்,இவர் மற்றவர் என்றும்இவர் பகைவர் என்றும்வேறுபடுத்திக் காணும் மன இயல்பையும் போக்கினார். அது மட்டும் அல்லாமல்நான் என்னும் அகங்காரம் ஆகிய அகப்பற்றும்,எனது என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றும் மிகுந்துசெருக்கு நிறைந்த என் சொற்களையும் மாய்த்ததன் மூலம் இப்பிறப்பில் அடியேனுக்கு உள்ள அல்லலைப் போக்கினார். இந்த அல்லல்களை அறுத்ததன் பின்னர் என்னை ஆட்கொள்ளவும் செய்தார். அவ்வாறு செய்த அமுது போன்ற குருநாதரை அழகிய தில்லை அம்பலத்தில் கண்டேனேஎன்கிறார் மணிவாசகப் பெருமான்.

 

     அப்பர் பெருமானும் கோத்திரம் குலம் என்று சொல்லிக் கொண்டு திரிவதால் பயன் இல்லை என்கிறார். கோத்திரம் குலம் பற்றிப் பேசுகின்றவர்களை "சழக்கர்கள்" என்கிறார். சழக்கர் என்னும் சொல்லுக்குகுற்றம்தீமைபயனின்மைபொய் என்று பொருள்.

 

"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?

பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்

மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே."

 

இதன் பொருள் ---

 

     சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம்குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின்திருமாற்பேற்று இறைவர் ஒரு மாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.

 

"பித்து எ(ல்)லாம் உடைய உலகர்தம் கலகப்

     பிதற்று எ(ல்)லாம் என்று ஒழிந்திடுமோ?"

 

என்றார் வள்ளல்பெருமான்.  "பித்து வகைகள் எல்லாவற்றையும் உடைய உலக மக்களின் கலகம் விளைவிக்கும் பிதற்றுரைகள் எல்லாம் என்று நீங்குமோ?என்று அவர் இரங்குகிறார். உலகில் பித்து ஏறினார் பலவகை உள்ளனர். சாதிப் பித்துசமயப் பித்துபொருள் பித்துகொள்கைப் பித்துகாமப் பித்து எனப் பித்து வகை மிகப் பலவாக உள்ளதால், "பித்து எல்லாம்"என்று கூறுகின்றார். பித்துக் கொண்டவர்களின் பேச்சுக்களில் தெளிவில்லாமையால் அவற்றைப் பிதற்றல்என்று பேசுகின்றார். இப் பிதற்று உரைகளால் ஆன்மநேய ஒருமை உணர்வு சிதைந்து கெடும் என்பதால் அவ்வாறு கூறுகின்றார்.

 

     சாதிசமயச் சழக்கை விட்டால்தான்சோதி வடிவமாக உள்ள உள்ள இறையைக் காணமுடியும் என்பதைக் காட்ட, "சாதி சமயச் சழக்கை விட்டேன் - அருள் சோதியைக் கண்டேன் அடீ" என்று பாடினார் வள்ளல்பெருமான். சாதிகள் இல்லை என்று வாயால் சொன்னாலும்உள்ளத்தில் சாதி உணர்வு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பலசாதியினரும் பணிபுரியும் அலுவலகங்களில் பணி புரியும் மெத்தப் படித்தவர்களிடையேயும் சாதி உணர்வு வேர் பிடித்து இருப்பதைக் காணலாம்.  பலவகை மக்களும் கூடி வாழும் இடங்களிலும் கூடசாதி உணர்வு இல்லாமல் இல்லை.

 

     குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை படைக்கப்பட்டதாக பகவத் கீதை கூறுகிறது.  தூல உடலைப் பற்றி வந்தது அல்ல. தூல உடலில் ஐரோப்பியர் அனைவரும் வெள்ளையர். அவர்கள் எல்லோரும் பிராமண இயல்பு உடையவர்கள் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம். ஆயினும் அவர்கள் எல்லோரும் சத்திரிய இயல்பு உள்ளவர்கள் அல்லர். மங்கோலியர் மஞ்சள் நிறம் உடையவர் என்பதால்அவர்களை வைசியர்கள் என்று சொல்ல முடியாது. இராமனும் கிருட்டிணனும் கருப்பு நிறம். அவர்கள் சூத்திரர்கள் அல்லர். அவர்களைப் போன்ற உடல் நிறம் உடையவர்களைச் சூத்திரன் என்று சொல்ல முடியாது. தூல உடலின் நிறத்தை வைத்தோஉடலில் புனையப்படும் கோலத்தை வைத்தோஒருவனுடைய இயல்பைச் சொல்ல முடியாது. சத்துவ குணம் நிறைந்து இருப்பவன் பிராமணன். சத்துவகுணமும் சிறிது ரசோ குணமும் கூடி இருப்பவன் சத்திரியன். ரசோகுணம் பெரும்பகுதியும்சிறிது சத்துவ குணமும்சிறிது தமோ குணமும் பொருந்தி இருப்பவன் வைசியன். தமோகுணம் பெரிதும்சிறிது ரசோகுணமும் பொருந்தி இருப்பவன் சூத்திரன். சத்துவ குணத்தின் நிறம் வெண்மை. ரசோகுணம் சிவப்பு. தமோகுணம் கறுப்பு.  

 

     நான்கு வருணங்கள் என்பவை மனத்தின் பரிபக்குவத்தை ஒட்டியவை. ஆனால்உலக வழக்கில் நான்கு வருணங்கள் என்பவை பிறப்பை ஒட்டியதாக அமைந்து விட்டது. சமூக அமைப்பில் ஒழுங்கு இருக்குமானால்அவை தத்துவ அமைப்போடு ஒத்து இருக்கும். ஒரு குடும்பத்தில் பிறந்த நால்வரில் அவரவர் மனோபக்குவத்திற்கு ஏற்ப ஒருவன் பிராமணன் ஆகவும்இன்னொருவன் சத்திரியன் ஆகவும்மற்றொருவன் வைசியன் ஆகவும்வேறு ஒருவன் சூத்திரன் ஆகவும் இருக்க முடியும். சமூகத்தார் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் வருணதர்மம் பரமார்த்திக உண்மைக்கு ஒத்ததாய் இருக்குமானால்அந்த சமூகம் மேம்பாடு அடையும். பரார்த்திக உண்மையில் இருந்து பிறழுகின்ற சமூகம் சீர்கேடு அடையும்.

 

     இறுதியாக ஒரு பிரமாணம்.....

 

"ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்

மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க

பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்

கவரார் கடலின் கடு."

 

     கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுகின்ற துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய இந்தப் பாடல் ""நன்னெறி" என்னும் நூலில் உள்ளது.

 

இதன் பொருள் ---

 

            நஞ்சை உடைய பாம்பினிடத்தே தோன்றிய பெரிய மாணிக்கத்தை இகழ்பவர் இல்லை. திருப்பாற்கடலினிடத்தே தோன்றிய நஞ்சை விரும்புபவரும் இல்லை. அதுபோல அறிவினால் அல்லாமல்,பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்ளக் கூடாது.

 

            ஆக்கும் - கல்வியால் உண்டாக்கும். மீக்கொள்- மேன்மையாகக் கொள்ளுகிற. அரவின் பருமணி - பாம்பின் சிறந்த மணி. கடு - நஞ்சு.

 

     எனவேதான், "சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார். ஆனாலும்அந்தப் பாவம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பாவம்.

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...