எது மானம்?
-----
"தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள்வாக்கு. பிறப்புத் துன்பம் கடல் போன்றது. "துக்க சாகரம்" என்றார் மணிவாசகப் பெருமான். "தாயொடு தான்படும் துக்க சாகரத் துயர்" என்றார். மரணம் என்பதும் துன்பமே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறப்பது பற்றியும் இறப்பது பற்றியும் கவலைப் படாமல் வாழ்கின்றவர் உலகில் பலர் உண்டு. 'நான் ஏன் பிறந்தேன்?' என்ற கேள்வியைக் கேளாத வரை, தொல்லை ஒன்றும் இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்களை எவ்விதமான துன்பமும் வந்து அடைவதும் இல்லை. பள்ளிக்கூடம் போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிற பையன் ஒருவன், தேர்வைப் பற்றிஎவ்விதக் கவலையும் படவேண்டுவதில்லை. ஆனால், நல்ல முறையில் பள்ளிக்கூடம் சென்று, நன்றாகப் படிக்கின்ற மாணவனுக்குத் தேர்வைப் பற்றிய கவலை தன்னாலேயே வந்துவிடும். பள்ளிப் படிப்பைச் சிறப்பாக முடித்தவனுக்கு, அடுத்த கல்வி நிலையைப் பற்றிய கவலையும் வந்து விடும்.
மனிதனாய்ப் பிறந்த ஒருவனுக்கும், விலங்காய்ப் பிறந்த ஒன்றுக்கும் வேறுபாடு உள்ளது. மனிதனுக்கு மனஅறிவு என்ற ஆறாவது அறிவு தரப்பட்டுள்ளது. அதை நன்கு பயன்படுத்தி வாழ வேண்டும். ஐந்தாவது அறிவோடு வாழ்க்கை நின்றுவிடுமானால், அது விலங்கு வாழ்க்கையே. மனத்தைப் பயன்படுத்திஅறிவு, சிந்தனை, கொள்கை, குறிக்கோள் முதலியவற்றோடு வாழ்பவனே மனிதனாய் வாழ்பவன்.குறிக்கோள் இல்லாது போனால் கெட்டுப் போவான்.
"பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதைமார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இ(ல்)லாது கெட்டேன்,
சேல்உலாம் பழனவேலித் திருக்கொண்டீச்சுரத்து உ(ள்)ளானே!"
என்று அப்பர் பெருமான் பாடுகிறார்.
குறிக்கோள் இல்லாவிட்டால், மானம் (பெருமை) இல்லை. அவமானம் தான். மானத்துடன் வாழும் வாழ்க்கையே மனித வாழ்க்கை ஆகும். மானம் என்ற சொல்லின் பொருள் இன்று நம்மில் பலராலும் வேறுவிதமாகக் கொள்ளப்படுகிறது. ஒருவனை மற்றொருவன் நாய் என்று பேசிவிட்டால், கூறப்பட்டவன் தன்னுடைய மானம் போய் விட்டதாகக் கருதுகிறான். அதனைப் போக்கிக் கொள்ள ஒரு போராட்டமே நடத்தத் தயாராகி விடுகிறான். சட்டப் போராட்டம் கூடச் செய்கிறான். மற்றவனை இழிவாகப் பேசியவனும், மற்றவனுடைய மானத்தைப் போக்கி விட்டதாகக் கருதி மகிழ்ச்சி அடைகின்றான்.
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், ஒருவனை நாய் என்று பேசுதல் இழிவு ஆகாது. பேசியவனுடைய அறியாமையை அது காட்டுகின்றது. நாயின் பெருமையை நாலடியார் விரிவாகப் பேசுகின்றது. நாயினுடைய நன்றி அறியும் சிறப்பைக் கூற வந்த நாலடியார், "நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும்" என்று கூறிவிட்டு, அதற்குக் காரணமும் கூறுகின்றது. நாய் போன்றவர் நட்பு வேண்டுமாம். ஏன் தெரியுமா? "எறிந்த வேல் மெய்யதா வால் குழைக்கும் நாய்" என்கிறது நாலடியார். அதாவது, தன்னை வளர்த்தவன் கோபத்தால் வேல் என்னும் ஆயுதத்தைத் தன்மேலே எறிந்தாலும், அதற்காகக் கோபிக்காமல் வாலைக் குழைத்துக்கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தும். அப்படி இருக்க, நாய் என்று கூறி ஒருவனை அவமானப்படுத்துவதாக நினைப்பதும், மானம் போய்விட்டதாக நினைப்பதும் தவறு என்று தெளிவாகும். யாருக்குத் தெளிவாகும்? கல்வி அறிவு உள்ளவர்க்கு.
திருக்குறளில் "மானம்" என்று ஓர் அதிகாரத்தையே நாயனார் வைத்து உள்ளார். "மானம்" என்ற சொல்லுக்கு அழகான பொருளைத் தருகிறார், திருக்குறளுக்கு உரை கண்ட பரிமேலழகர். "மனிதன் தன்னுடைய நிலையினின்று தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்துழி, உயிர் வாழாமையும் ஆம்" என்பது அவர் காட்டிய பொருள். எனவே, பிறன் ஒருவன், நாய் என்று ஏசிய பொழுது உண்மையில் மானம் போய்விடவில்லை. ஆனால், அவ்வாறு சொன்ன மனிதனுடன், சொல்லப் பெற்றவன் சண்டைக்குப் போகும் பொழுதுதான், தன்னுடைய மானத்தை இழக்கின்றான். பிறன் ஒருவனுடன் சண்டையிடும் பொழுது மனிதன் மனிதத் தன்மையில் இருந்து தாழ்ந்து விடுகின்றான். அதனாலேதான் மானத்தை இழக்கின்றான்.
திருக்குறள் கூறுகின்ற முறையில் மானத்தை இழக்காமல் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவன் சேர மன்னன். தமிழ் வளர்ப்பதிலும் வீரத்துடன் வாழ்ந்த நிலையிலும் தமிழ்நாட்டு முடிவேந்தர் மூவரும் சம மதிப்பு உடையவர். இன்று 'கேரளம்’ என்ற தனிப் பெயர் தாங்கி நிற்கும் நிலப்பகுதி, ஒரு காலத்துத் தமிழ்நாடாய் இருந்தது. இந்தச் சேரமான் இரும்பொறை சிறந்த தமிழ்ப் புலவன்.சேரர் பரம்பரையில் புலவராய் இருந்த அரசர் பலர். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள், இவ்வரசக் கவிஞருள் முடிமணி போன்றவர். சேரமான்பெருமாள் நாயனார் என்பவர் சிறந்த சிவனடியார். நாயன்மார் வரிசையில் வைத்துப் போற்றப் பெறுகிறவர். சிறந்த புலவரும் கூட. சேரமான் இரும்பொறை ஒருமுறை சோழன் செங்கணான் என்பவனோடு அறப்போர் தொடுத்தான். அரசனாய் இருக்கும் ஒருவன், பல காரணங்களால் போர் புரிதல் அறம் எனக் கருதப்பெற்றது அந்த நாளில். இவர் இருவர் இடையே மூண்ட போரில் சேரமான் கணைக்கால் இரும்பொறை தோற்றுவிட்டான். சோழனால் சிறை பிடிக்கப்பட்டான். தோல்விக்காக வருந்தவில்லை சேரன். ஆனால், பகைவனுடைய சிறையில் இருப்பதைப் பெருத்த அவமானமாகக் கருதினான். காரணம், அரசன் என்ற அவருடைய நிலை தாழ்ந்து போய், வேற்று அரசனுடைய கைதியாய் இருக்கிறான். இந்த நிலையில் தண்ணீர் வேண்டி இருந்தது அவனுக்கு. காவலாளனைப் பார்த்துத் தாகம் தீரத் தண்ணிர் கேட்டான். அவன் உடனே தண்ணிரைக் கொணர்ந்து தாராமல், இவனைக் கொஞ்சம் எள்ளி நகையாடி விட்டுக் கடைசியில் ஒரு பாத்திரத்தில் தண்ணிர் தந்தான். ஏற்கெனவே சிறைப்பட்டுக் கிடப்பதை மானம் அழிந்த செயலாகக் கருதி வருந்தும் சேரனுக்கு, காவலாளி செய்த செயல் அடியோடு பிடிக்கவில்லை. எவ்வளவுதான் தண்ணீர் விடாய் இருப்பினும், மானத்தை இழந்து பகைவனது ஏவலனிடம் கேட்டு வாங்கிய தண்ணீரைக் குடிக்க மனம் வரவில்லை சேரனுக்கு. அவனுடைய புலமை உள்ளம் வேலை செய்யத் தொடங்கியது.
"குழந்தை இறந்து பிறந்தாலும், பிறக்கும்போதே குறைப் பிண்டமாகப் பிறந்தாலும், அவற்றை முழு ஆள் அல்ல என்று கருதி வாளால் வெட்டியே மண்ணில் புதைப்பார்கள் மறக்குடி மறவர்கள். அப்படி இருக்க, பகைவர் கை வாளுக்கு இரையாகிச் சாகாமல், சங்கிலியால் கட்டி நாய் போல் இழுத்து வந்து சிறை செய்த பின்னும்,அவர்கள் தரும் தண்ணீரைக் குடித்து, நீர் வேட்கையைத் தணித்துக் கொண்டு உயிர் வாழ எண்ணும் என்னைப் போன்ற மன வலிமை அற்றவர்களையும், இரந்து உண்டு உயிர் வாழ நினைப்பவர்களையும் மன்னன் என்று இவ்வுலகத்தார் ஏற்றுக் கொள்வார்களோ?" என்று மனம் புழுங்கிப் பாடிய இப்பாடல் "புறநானூறு" என்னும் நூலில் உள்ளது.
"குழவி இறப்பினும்,ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளில் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் வுலகத் தானே !" --- புறநானூறு.
காட்டில் கவரிமான் என்று ஒருவகை மான் உண்டு.. உடல் நிறைய நீண்டு வளர்ந்த, மயிர் இருக்குமாம் அந்த மானுக்கு. இவ்வளவுமயிர் உடல் முழுவதும் இருந்தும், ஒரு மயிர் எங்காவது சிக்கி உதிர்ந்துபோனால், அந்த மான் உயிர் வாழாமல் இறந்து விடுமாம். அந்த மானைத்தான், மானத்தோடு வாழும் பெரியோர்க்குஉதாரணம்காட்டுகின்றார் திருவள்ளுவ நாயனார்.
“மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"
என்னும் திருக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்து காட்டியவன். சேரமான் கணைக்கால் இரும்பொறை.
"மானம் பட வரின் வாழாமை முன் இனிதே" என்றும் "மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே" என்றும் "இனியவை நாற்பது" என்னும் நூல் கூறும். தலைமயிரும், கூரிய நகமும், வெண்மையான பல்லும், தமக்கு என்று ஒரு நிலை உடைய மானமுள்ள பெரியோரும் தாம் இருக்கின்ற நிலையில் இருந்து தவறிப் போகாத போதே நன்மதிப்பு. நிலை தவறும் இடத்தில் நன்மதிப்பு இல்லை. இழிவே உண்டு என்கிறது "நீதிவெண்பா" என்னும் நூல்.
"தலைமயிரும் கூர்உகிரும் வெண்பல்லும் தந்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும் நிலைதவறும்
தானத்தில் பூச்சியமோ தான்." --- நீதிவெண்பா.
ஒலி பொருந்திய மத யானையை அடித்து வீழ்த்தி விடும் காட்டில் வழ்கின்ற வேங்கைப்புலி. அப்படி வீழ்த்திய யானை இடப்பக்கமாக வீழ்ந்தால், அந்த யானையின் இறைச்சியை வேங்கை உண்ணாது. அதைப் போலவே, வானுலக இன்பமே கைக்கு வருவதாக இருந்தாலும், பெருமைக்கு உரியவர்கள், தங்கள் தன்மானத்துக்குக் கேடு வரும் வந்தச் செயலையும் செய்யமாட்டார்கள் என்கிறது "நாலடியார்" என்னும் நூல்.
"கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் மழுங்க வரின்." --- நாலடியார்.
சூரபதுமன், இந்திரன் மகனாகிய சயந்தனையும் தேவரையும் பிடித்துச் சிறை வைத்தான். அவர்களை விடுவிப்பதற்காக முருகன் படை எழுந்தது. சூரன் மகனாகிய பானுகோபன் அச் சேனையை எதிர்த்தான். வீரவேல் கொண்டு போர் புரியும் முருகனை ஒரு நாளும் வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்தான். சூரபதுமனிடம் சென்று, "இன்று மாற்றார் மீது மாயப் படையை ஏவினேன். அதனினும் சிறந்த படைக்கலம் என்னிடம் இல்லை. அம் மாயப் படையும் பயனற்றுப் போயிற்று. நீ நெடுங்காலம் வாழவேண்டும்; அரசாள வேண்டும் என்பது எனது ஆசை. அவ்வாசையால் ஒன்று கூறுகின்றேன். வானவரை நீ சிறையினின்றும் விட்டுவிட்டால் படையெடுத்து வந்த முருகன்,சீற்றம் தணிந்து,நம் நாட்டைவிட்டு அகல்வான். உனது அரசு நீடூழி வாழும்" என்றான். அதைக் கேட்ட சூரபதுமன் பொங்கி எழுந்தான். "மைந்தா! என் முன் நின்று என்ன பேசினாய்? வானவரை விட்டேன் என்றால் என்னை யார் மதிப்பார்? இவ் வுலக வாழ்க்கை நிலையற்றது என்பதை நீ அறியாயோ? இளமையும் செல்வமும் வீரமும் இனைய பிறவும் இன்று இருந்து நாளை அழிந்தே தீரும். அழியாமல் நிற்பது புகழ் ஒன்றே. ஆதலால், என் ஆவி கொடுத்து அரும்புகழ் பெறுவேனே அல்லாமல், வானவரை விடுவித்து வசையினுக்கு ஆளாகி வாழமாட்டேன்" என்று பொரிந்து தள்ளினான் என்று கந்தபுராணம் கூறுகிறது.
"இறந்திட வரினும்,அல்லால்
இடுக்கண் ஒன்று உறினும்,தம்பால்
பிறந்திடும் மானம் தன்னை
விடுவரோ பெரியர் ஆனோர்?
சிறந்திடும் இரண்டு நாளைச்
செல்வத்தை விரும்பி,யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை,
சூரன் என்று ஒரு பேர் பெற்றேன்." --- கந்த புராணம்.
துரியோதனன் சிறந்த போர்வீரன். இவன் தனது சிற்றப்பன்மக்களான பாண்டவருக்கு அடங்கி வாழ விரும்பாமல் இறுதி வரையில் அவர்களைப் பகைத்துப் போர் புரிந்தான். எல்லாவற்றையும் போரிலே இழந்து, தனியனாக நின்ற துரியோதனன் மீது கருணை கொண்டு, பதினெட்டாம் நாள் அன்று போர் புரிய வந்த அவனைப் பார்த்து, தம்முடன் கூடி அவனையே உலகை ஆளும்படியும், ஒத்துப் போகும்படியும் தருமன் கூறினான். அதற்கு, அவன் தன்னுடன் பிறந்தார், உறவினர், நண்பரை எல்லாம் தனக்காக மடியவிட்டு, நாடு, அரசபோகம் என்றவுடன் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு ஒத்துப்போக முடியாது என்று கூறினான். ஆகவே, துரியோதனன் மானம் உடையவனாகக் கருதப்பட்டான். "அரைக் காசுக்குப் போன மானம், ஆயிரம் பொன் கொடுத்தாலும் வராது" என்னும் பழமொழிக்கு விளக்கமாக, "தண்டலையார் சதகம்" கூறுவது காணலாம்.
"கான்அமரும் கவரி, ஓரு மயிர்படினும்
இறக்கும், அது கழுதைக்கு உண்டோ;
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்,
சுயோதனனை மறந்தார் உண்டோ;
ஆனகஞ்சேர் ஒலிமுழங்குந் தண்டலையா
ரே,சொன்னேன், அரைக்கா சுக்குப்
போன அபிமானம், இனி ஆயிரம் பொன்
கொடுத்தாலும் பொருந்திடாதே." --- தண்டலையார் சதகம்.
இதன் பொருள் ---
முரசுகலந்த ஓசை முழங்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி விளங்கும் சிவபெருமானே! காட்டில் இருக்கும் கவரிமான், தனது உடம்பில்ஒரு மயிரை இழந்தாலும் இறந்து விடும். அந்தப் பண்பு கழுதைக்கு இருக்கிறதோ? (இல்லை) மானத்தோடு வாழ்கின்றவனே ஆடவரில் சிறந்தவன். துரியோதனனை மறந்தார் யார்? (அவன் இறுதி வரை மானத்தோடு வாழ்ந்தான் அல்லவா)அரைக் காசுக்குப் போன அபிமானம்,இனிஆயிரம் பொன் கொடுத்தாலும் திரும்ப வந்து பொருந்திடாதே.
ஆக, மனிதன் தன்னுடைய நிலையினின்று தாழாமையும்,தெய்வத்தால் தாழ்வு வந்துழி, உயிர் வாழாமையுமே மானம் ஆகும். தெய்வம் என்பது இங்கே ஊழைக் குறித்து நின்றது என்பதை அறிதல் வேண்டும். இதனை மேலே குறித்த புறநானூற்றுப் பாடலால் கண்டோம்.
ஒருவன் மற்றொருவனை இழிவாகப் பேசுவது மானம் அழிந்ததாகக் கொள்ளப்படாது. நாயால் கடியுண்ட ஒருவன் அந்த நாயைத் திருப்பிக் கடிப்பது இல்லை. அதைப் போலவே, கீழ்மக்கள் தகுதி பார்க்காது இழிசொல் பேசினாலும், அறிவுடைய சான்றோர் அவர்களைப் பார்த்துத் தமது வாயால் பதிலுக்கு மீண்டும் பழிச்சொல் கூறமாட்டார்கள் என்பதை "நாலடியார்" கூறும் பாடல் மூலமாக அறியலாம்.
"கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கு இல்லை - நீர்த்து அன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு."
ஆக, ஒருவன் எந்நாளும் தமது நிலையில் இருந்து தாழாமல் வாழ்வதே மானம் உடைமை ஆகும். "தலையின் இழிந்த மயிர் அனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை" என்று அருளினார் நாயனார் என்பதை அறிதல் வேண்டும்.
No comments:
Post a Comment