கரும்பு துவர்த்தது -- தேன் புளித்துக் கசந்தது
-----
அருணகிரிநாதர் தம் காலத்துக்கு முன்பிருந்தே இந்த நாட்டில் முருகனைப் பற்றி வழங்கி வந்த செய்திகளை எல்லாம் அறிந்திருந்தார்.முருகன் ஒரு கன்னிகையைக் காதலித்த திருவிளையாடலைச் சொல்கிறார்.அவன் குமரன். பெரும் பைம்புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை ஆகிய வள்ளிநாயகியை விரும்பிச் சென்றான். நம்மைப் போலவே இந்த உலகத்தில் ஒன்றும் அறியாத பேதைப் பெண்ணாக இருந்த அவளுக்கு கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது. அவளை எம்பெருமான் இங்கே வந்து மணந்து கொண்டான். தேவயானையை முருகப் பெருமான் மணந்து கொண்டதனால் வாழ்வு பெற்றவர்கள் தேவர்கள். ஆனால்,நமது மண்ணில் பிறந்த வள்ளிநாயகியை முருகன் மணந்து கொண்ட செய்தியைக் கேட்டால் நமக்கும் வாழ்வு உண்டென்று நம்பத் தோன்றுகிறது. நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு அதிலிருந்து மிகுதியாகிறது.
"பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல்காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பினால் மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம்தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும்புளித்து அறக் கைத்ததுவே".
என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் ஒரு பாடல்.
இந்தப் பாட்டில் "பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை" என்பது முதல் பகுதி. இது கந்தபுராணம். அடுத்து இருப்பது இரண்டாம் பகுதி. அருணகிரிநாதரது சொந்தப் புராணம். இந்தப் புராணத்தில் மூன்று அத்தியாயங்கள் இருக்கின்றன. "மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள” என்பது முதல் அத்தியாயம். “அரும்பும் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே" என்பது இரண்டாவது. "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத் ததுவே" என்பது மூன்றாவது. முதற்பகுதியிலே அருணகிரியார் கந்தபுராணக் கதையைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியிலே மூன்று பிரிவுகளாக அவன் அருளால் பெறும் இன்பத்தைப் புலப்படுத்துகிறார்.
வள்ளிநாயகி வாழ்ந்த புனம் பச்சைப் பசேல் என்று தினைப் பயிர் விளைந்த கொல்லை. புனம் என்பது தினைப்பயிர் விளையும் நிலம். அங்கே வள்ளியம்மை சிற்றேனல் காக்கிறாள். ஏனல் என்றால் தினை என்று பொருள். சிறிய தினைப் பயிரை வள்ளிநாயகி காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் பேதை. பேதை என்பது பெண்களின் பருவங்களில் முதலாவது. ஏதும் அறியாமையை உடைய பருவம் அது. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உணவு ஆக விளங்கும் தினைப்பயிரைக் கிளி, குருவி முதலியவை கொத்திக் கொண்டு போகாமல் இருக்க ஆலோலம் பாடி அவற்றைத் துரத்திக் கொல்லையைக் காவல் செய்து வருகிறாள்.
உயிர்கள் எல்லாம் உடம்பைப் பெற்று, பொறிகளின் வாயிலாக இன்ப துன்பங்களை நுகர்ந்து திரும்பத் திரும்ப இறந்தும் பிறந்தும் வருவதற்கு நிலைக்களமாக இந்த விரிந்த உலகம் அமைந்திருக்கிறது. உலகத்தில் விளைகின்ற பொருள்களை அனுபவித்துக் காத்து, அவற்றைத் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உரிய பொருளாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆன்மாக்கள் காவல் புரிகின்ற பெரிய கொல்லையாக இறைவன் இந்தப் பூமியை அமைத்திருக்கிறான்.அகன்ற இந்த உலகத்தில் அறியாமையை உடைய உயிர்கள் சிற்றின்பத்தையே அனுபவித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதுபோல, இந்த விரிந்த உலகத்தில் அருட்செல்வர்கள் எல்லை இல்லாதபேரின்பத்தைத் தம் உழைப்பினால் விளைத்து இன்பத்தை அடைவார்கள். பணக்காரர்கள் அனுபவிப்பது நெல்; ஏழைகள் அனுபவிப்பது தினை. அருட்செல்வர்கள் நுகர்வது பேரின்பம். அருள் இல்லாத ஏழைகள் அநுபவிப்பது சிற்றின்பம். சிற்றின்பத்தைக் கிஞ்சித் போகம் என்றும், பேரின்பத்தை மகா போகம் என்றும் சொல்வார்கள்.
ஆன்மா இறைவனோடு ஒட்டி வாழ வேண்டியது. ஆனால் அது உலகத்திலே பிறந்து, அறியாமையில் சிக்கி, பாசத்தில் கட்டுப்பட்டு, சிற்றேனல் காக்கின்ற பேதைப் பெண் வள்ளியைப் போல் சிற்றின்பத்துக்காக முயன்று அதை நுகர்ந்து கொண்டிருக்கிறது. சிறையில் அகப்பட்ட கைதி, அதனையே தன் வீடாகக் கருதிச் சிறையில் உள்ள மற்றக் கைதிகளோடு உறவு கொண்டாடி வாழ்ந்து வருவதைப் போல, இந்த உலகமாகிய சிறையில் அடைக்கப்பட்ட உயிர்கள் தம்மைப் போலவே இந்தச் சிறையாகிய உலகத்திற்கு வருகின்ற மற்ற உயிர்களோடு உறவு முறை கொண்டாடி வாழ்கின்றன. தம்முடைய சொந்த வீடு எது என்பதை உணராமல் இருக்கின்றன. தினைப் புனத்தில் வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த வாழ்க்கையைத்தான் ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
குறமகள் ஆகிய வள்ளிநாயகி தங்களுடைய குல தெய்வமாகிய முருகனைக் கொஞ்சம் நினைத்தாள். நினைத்த மாத்திரத்திலே ஓடி வந்து விட்டான், அவளுக்கு வாழ்வு அளிக்க. தன்னை மெல்ல நினைத்தாலும் உடனே வேகமாக ஓடி வந்து அருள் செய்கிறவன் முருகன். பருவம் அறிந்து ஓடி வந்து இன்பம் அளிப்பவன் அவன். பேதையாக இருந்த ஆன்மாவாகிய வள்ளிநாயகி, பருவம் அடைந்து பக்குவ ஆன்மாவாக ஆகிவிட்டாள்.பக்குவம் வந்தவுடனே இறைவன் ஒடி வந்தான். அவளிடம் தான் இன்பத்தை அடைய விரும்பி வந்தவனைப் போல ஒடி வந்தான். இதுதான் பெரியவர்களின் தன்மை. யாருக்காவது அவர்கள் உபகாரம் செய்ய நினைத்தால்,ஏதாவது சிறு வேலையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அந்த வேலைக்கு ஈடு செய்வது போலப் பன்மடங்கு உபகாரம் செய்வார்கள். முருகனும் அப்படியே வள்ளிக்கு வாழ்வு அளிக்க விரும்பினான். ஆனால்,அவளிடம் இருந்து தான் இன்பம் அடைய விரும்புகிறவனைப் போல ஒடி வந்தான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியாக அவளிடம் கெஞ்சிக் கூத்தாடினான்.
அவன் பேரருளாளன். தன்னிடம் இருக்கும் அருளை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு உடனே அருளுகிறான். "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே" என்ற முருகனின் பெருங்கருணையை அருணகிரிநாதர் புகழ்ந்து பாடுகிறார்.
இறைவனைக் கூப்பிடும் போதே ஓடி வரச் சித்தமாக இருக்கிறான். நாம்தாம் அவனைக் கூப்பிடுவதில்லை. "நீ கூறும் கடவுள் எங்கே இருக்கிறான்?" என்று கேட்ட இரணியனுக்குப் பிரதலாதன், 'எங்கும் இருப்பான்' என்று சொன்னவுடனே, "இவன் எந்த இடத்திலும் இருப்பான்" என்று சொல்லி விட்டானே; "இரணியன் தட்டுகின்றது எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து வெளிப்பட வேண்டுமே!" என்று எண்ணி நரசிங்கமூர்த்தி, பிரகலாதன் வார்த்தையைக் காப்பாற்றும் பொருட்டு இரணியன் தட்டும் இடத்திலே எழுந்தருளினான் இறைவன். நாம் அன்பினால் தட்டினால் நம்மைக் காப்பாற்ற அவன் வருவான். நாம் தட்டுவது இல்லை; தட்டுவதாக நினைத்தால் போதாது; நடித்தால் போதாது."நானும் ஐந்தரைக் கட்டையில் பாடி, தாளம் போட்டு இறைவனைக் கூப்பிடுகிறேன்; அவன் வரக் காணோமே" என்று சொன்னால் பயன் இல்லை. மெள்ளக் கூப்பிட்டாலும் போதும்;இணைப்பை அமைத்துக் கொண்டு கூப்பிட வேண்டும். உண்மையாக உள்ளம் உருகி, இருதயத்தோடு இணைந்து கூப்பிட்டால் அவன் நிச்சயம் வருவான்.
உள்ளத்தோடு ஒட்டி, உருகி இறைவனை அழைக்கக் கூடிய நிலை நமக்கு வர வேண்டும். அப்படிக் கூப்பிடும் வன்மை இருந்தால் ஆண்டவன் நமக்கு அருள் கொடுக்க ஓடி வரக் காத்திருக்கிறான். இதனை நமக்கு நிரூபிக்கிறாள் வள்ளிநாயகி. அவள் குறத்தியாக இருந்தாலும் இறைவனுடைய நினைப்போடு இருந்தாள். முருகனையே நினைக்கிற சாதி அவள் பிறந்த சாதி. எல்லா வகையிலும் முருகனையே நினைந்து வாழ்கின்ற குறச்சாதி மக்களுக்கிடையே வாழ்ந்த வள்ளி,முருகனை நினைத்தாள். அவளிடம், தான் இன்பம் நுகர வந்தவனைப்போல முருகன் ஓடி வந்தான். அவள் அவனிடம் போகவில்லை.'பெரும் பைம்புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பி' வருகிறான். அவளை ஆட்கொள்வதற்காகவே அவன் வருகிறான்.
இறைவனை நாம் எப்படி நினைப்பது என்றால், தக்க வழியினைக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான். சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனைமெய்யன்பினால் மெல்ல மெல்லநினைக்க வேண்டும்; தியானம் செய்ய வேண்டும். நீண்ட நாள் நோயிலே கிடந்தவனுக்கு நோய் தெளிந்தவுடன் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள் என்று மருத்துவர் சொல்வார். இல்லாவிட்டால் விக்கல் வந்து வேதனைப் படுத்தும். "வழங்குகின்றாய்க்கு உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டுவிழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்"என்கிறார் மணிவாசகப் பெருமான்.பல பல காலமாக இறப்பு, பிறப்பு ஆகிய பிணிகளிலே வேதனைப்பட்டுக் காய்ந்து கருகிப் போய் இருக்கின்ற ஆன்மாக்களுக்கு இறைவனது அருள் நீரைப் பாய்ச்ச வேண்டுமென்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாய்ச்ச முடியும். ஆறு நிறைய வெள்ளம் போகிறதே என்று அந்த ஆற்றுக்கு அருகில் உள்ள வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆற்றின் கரையையே உடைத்துவிடலாமா? ஆற்றிலே வெள்ளம் போனாலும் மடை வழியேதான் பாய்ச்ச வேண்டும்.
இறைவனது தியானம் எளிதில் மனிதனுக்குக் கிட்டாது. பழக்கத்தால் பல படிகளை ஒவ்வொன்றாகக் கடந்தால்தான் முன்னேற முடியும். மாடி ஏறும்போது ஒவ்வொரு படியாகக் காலைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் ஏறுகிறோம். பல சொற்களை ஒரு குழந்தை ஒரே நாளில் கற்றுக் கொண்டுவிட முடியாது. ஒவ்வொரு சொல்லாகவே அது கற்றுக் கொள்ளும். வாயிலே போட்ட கவளத்தை நன்றாக மென்று உள்ளே செலுத்திய பிற்பாடுதான் மற்றொரு கவளத்தை எடுத்துப் போட்டுக் கொள்ள முடியும்.
அதுபோலவே, இறைவனது தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மெல்ல மெல்ல உள்ள (நினைக்க) வேண்டும். அமைதியாகத் தியானம் பண்ண வேண்டும். அவன் திருநாமத்தை உச்சரிக்கும்போது அது நமது உள்ளத்திலே பதியும்படியாகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானித்தால் இன்பம் உண்டாகும். அவனை இருதயம் ஒன்றி மெல்ல மெல்ல உள்ளினால்தான் ஆனந்தம் அரும்பும்; பரமானந்தம் அரும்பும்; தனிப் பரமானந்தம் அரும்பும்; நாம் சுகமென்று சொல்லும் நுகர்ச்சிக்கு அப்பாற்பட்ட மிக உயர்ந்த இன்பம் அந்தத் தனிப் பரமானந்தம். தனி என்பது ஒப்பற்றது என்பதைக் குறிப்பது. தனக்குச் சமானம் இல்லாத,மேல் ஒன்றும் இல்லாத, மிக உயர்ந்த ஆனந்தம் அது. அது இறைவனை மெல்ல மெல்ல உள்ளுவதனால் அரும்பும்.
பசி உடைய ஒருவனுக்கு, ஒரு பிடி உண்ட உடனேயே அவன் பசி தீர்ந்துவிடாது. ஓர் அளவுக்கு பசி தீரலாம். அதைப் போல இறைவன் நாமத்தை ஒரு முறை சொன்னால் அந்த அளவுக்குப் பயன் உண்டு. மெல்ல மெல்லத் தியானிக்க ஆரம்பித்தால் ஆனந்தம் உண்டாகிறது. மேலும் விடாமல் சொன்னால் பரமானந்தம் உண்டாகிறது. சொல்லிக் கொண்டேயிருந்தால் தனிப் பமானந்தம்
"ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இந்த மாநிலமே" என்பார் மணிவாசகப் பெருமான். ஆனந்த வெள்ளம் அப்படிப்பட்டது. அதில் மூழ்கினால் பேச வராது. பரமானந்தம் அரும்பும் நிலை ஆரம்ப நிலை. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் நிலை வேறு.இறைவனது திருநாமத்தை மெல்ல மெல்ல உள்ள உள்ளப் படிப்படியாக இன்பம் உண்டாகும். இந்த உலக இயலில் உழைக்கின்ற உழைப்பின் அளவுக்குப் பயன் கிடைக்கிறது என்றால், அருள் நெறியில் உழைத்த உழைப்பு உண்மையாக இருந்தால் உண்மையாக இன்பம் அரும்புவதைக் காணலாம்.
இறைவன் பெருங்கருணையாளன். அவன் நாம் எவ்வளவுக்கு உழைக்கிறோமோ அதனைவிடப் பன்மடங்கு அருளைத் தருவான். உலகியலில் ஈடுபட்டிருந்த நமக்கு, உடம்புக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தைச் சுவைத்து, பொறிகள் எல்லாம் அடங்கிச் சமாதி நிலையை அடைவது முடியாமல் இருக்கலாம். ஆனால் சின்னச் சின்னத் துளியாக அரும்புகின்ற ஆனந்தத்தை அநுபவிக்கலாம். அது அரிது அல்ல. வள்ளிமணாளனை மெய்யன்பினாலே மெல்ல மெல்ல தியானித்தால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஆனந்தம் அரும்பும்.
புளிக்கும் மாங்காய் மரத்திலே இருக்கிறது. பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது. அது பழுத்துவிட்டால்,அதன் பச்சை நிறம் பொன்னிறமாகிறது. கடினமாய் இருந்தது போய் நெகிழ்ச்சி பெறுகிறது. அதன் புளிப்பு மாறி இனிப்பாகிறது. நன்றாகப் பழுத்துவிட்டால் யாரும் பறிக்காமல் தானாகவே மரத்திலிருந்து நழுவிவிடுகிறது. அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. நாமும் இறைவன் திருவடியை நினைந்து அவனைத் தியானம் பண்ணப் பண்ண, அந்தத் தியானம் உள்ளத்தில் ஏற ஏற உள்ளத்தில் ஆனந்தம் அரும்பும். இது இவ்வுலக வாழ்வில் உண்மையில் நடக்கக் கூடியதே. கற்பனை அன்று.
தன்னை நாடி இன்பம் நுகர்வானைப்போல ஒடி வந்த முருகனை வள்ளி அணைக்கவில்லை. முதுகு கூனி குறுகிப் போன கிழவனாக வந்தான். நாடகம் ஆடினான். அவள் அவனை பொருட்படுத்தவில்லை. யானை வந்து அவளைப் பற்றிஇழுக்கப் போனபோது, "ஆவிக்கு மோசம் வரும்" என்று தெரிந்து கொண்டபோது, "என்னைக் காப்பாற்ற உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை; உன் பற்று அன்றி எனக்கு வேறு ஒரு பற்றும் இல்லை" என்று இறைவனைப் போய்த் தழுவிக் கொண்டாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். அவளுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தான்.
நம்மிடம் உள்ள பொறிகள் எல்லாவற்றையும்விட நாக்குத் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. நாக்காகிய பொறிக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். இனிமையான இசையைக் கேட்டு அனுபவிக்கின்றோம். அதைச் சொல்லும்போது, அவர் பாடிய பாடல் தேன் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம். நமது அன்பிற்குரிய குழந்தையைப் பார்த்துக் கட்டிக் கரும்பே என்று பாராட்டுகிறோம். இப்படி, எந்தப் பொறியினால் இன்பம் அடையக் கூடிய பொருளாயினும் அதற்கு நாக்கு என்னும் பொறியினால் இன்புறும் பொருளையே உதாரணமாகச் சொல்கிறோம். நம் வாழ்வில் நாக்கு எல்லாப் பொறிகளையும் விட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதுதான் அதற்குக் காரணம்.
குழந்தை பிறந்த உடனேயே பாலைச் சுவைத்துக் குடிக்கின்றது. பிறக்கும்பொழுது அது நாக்குக்கு அடிமையாகி விடுகிறது. கடைசியில் இறக்கும் தருவாயில், காது கேட்கவில்லை; கண்மூடிப் போய்விட்டது. வாயும் கிட்டி விட்டது. பஞ்சால் பாலைத் தோய்த்துத் தோய்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதோ, இன்னும் சற்று நேரத்திலோ போய் விடும் என்று சொல்கிறார்கள். "பவனமாய்,சோடையாய்,நா எழாப்பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு, சிவனதாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே" என்று இந்தக் காட்சியை நமது மனக்கண் முன் கொண்டு வந்து காட்டுகின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.ஆக, பாலிலே தொடங்கிய வாழ்க்கை, பாலிலேயே முடிகிறது. இறக்கும் அளவும் அவனை அடிமையாக்கி வைத்திருப்பது நாக்கு என்னும் பொறி ஒன்றுதான். நாக்கின் சுவைக்கு நாம் அடிமைப்பட்டிருப்பதாலேயே, மற்றப் பொறிகளால் நுகரும் இன்பத்தைத் தரும் பொருள்களையும் தேன் என்றும், பால் என்றும், கரும்பு என்றும் சொல்கிறோம்.
அருணகிரிநாதர், "சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ளுவதன் மூலம் அரும்புகின்ற தனிப் பரமானந்தத்தைச் சுவைத்தவர்களுக்குக் கரும்பும் துவர்த்துப் போகும்; செந்தேனும் புளித்துப் போய்ப் பிறகு கசந்தே போகும்" என்கிறார்.முருகனைத் தியானித்து வரும் ஆனந்தத்தைச் சுவைத்த பிறகு,உலக இன்பம் அனைத்தும் சுவையற்றுப் போகும். வெறுப்பை உண்டாக்கும்.
பாதாம் அல்வா சாப்பிட்ட பிறகு காபியைச் சாப்பிட்டால், காபியின் சுவை தெரிவது இல்லை.தினமும் சாப்பிடுகிற சாப்பாட்டிலேயே ஒன்று மிக இனிப்பதானால், மற்றொன்று சுவை இழந்து விடும்போது, பேரின்பத்தைத் தித்தித்து அறிந்த பிறகு,சிற்றின்பத்திலே சுவை இருக்காது. "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே" என்பது உண்மை அனுபவம்.
கரும்பும் தேனும் ஐந்து பொறிகளினாலும் அடைகின்ற இன்பங்களுக்கு அடையாளமாக இருக்கின்றன. கரும்பு ஒருவனுடைய முயற்சியினாலே விளைந்து இன்பத்தைக் கொடுக்கின்ற பொருள். தேன் ஒருவனுடைய முயற்சி இல்லாமலேயே விளைந்து இன்பத்தைத் தருகின்ற பொருள். மனிதனுடைய இன்பங்கள் இரண்டு வகை. தன்னுடைய முயற்சியினாலே பெறுகின்ற இன்பம் ஒருவகை; முயற்சி இல்லாமலேயே முன்னை வினையின் பயனாக அடையும் இன்பம் ஒரு வகை. கரும்பும் தேனும் அந்த இரண்டையும் குறிக்கின்றன. இறைவனை உள்ளன்போடு மெல்ல மெல்ல உள்ளுவதால் அரும்பும் தனிப் பரமானந்தத்தின் ஒரு துளியைச் சுவைத்தாலும் போதும்.பிறகு கரும்பும் துவர்த்துப் போய்விடும்.செந்தேனும் புளித்து, அறவே கைத்துப் போய்விடும். ஐந்து இந்திரியங்களினாலே அனுபவிக்கின்ற உலகியல் இன்பம் யாவும் நமக்குத் துவர்த்துப் போய்விடும்.புளித்துப் போய்விடும்.கைத்துப் போய்விடும் என்பது குறிப்பு.
சமய நெறியிலே சாதனம் புரிகின்றவர்களைப் பார்த்தால் பலருக்கு அவர்கள் செயல் பைத்தியக்காரத்தனம் என்று தோன்றும். ஏழு வயதுப் பெண் குழந்தை இருக்கிறாள். அவளை மணப்பதற்குரிய உரிமை பெற்றவனும் அவள் வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வயது பதினாறு. ஒரு நாள் அவன் தன் மாமன் மகளை அன்போடு அணைத்துக் கொள்கிறான். அவளோ அவன் பிடியில் இருந்து ஓடிவிடுகிறாள். அவளுக்கு அவனுடைய முகத்திலுள்ள மீசை குத்துவது அருவருப்பை அளிக்கிறது. ஆனால், இந்தபெண் பருவம்அடைந்தவுடன், அவனே அவளை மணந்து கொள்கிறான். அவளுக்கு இன்பம் கொடுக்கிறான். அப்போது அந்தப் பெண் நினைக்கிறாள். "அடடா நமக்கு இந்த இன்பம் தெரியாமல் போய்விட்டதே! அவர் கைகளைப் பிடித்து உதறி எறிந்தோமே; அது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்" என்று நினைக்கிறாள்.
"கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும்
கைக்கொள்வள் பக்குவத்தில்;
கணவன் அருள் பெறின், முன்னே சொன்னவாறு என் எனக்
கருதி நகை ஆவள்"
என்று பாடுகிறார் தாயுமானவர்.
பருவம் அடையாத பேதைப் பெண்ணைப் போல இறைவனைத் தியானிப்பதனால் நம் உள்ளங்களில் இன்றைக்கு இன்பம் உண்டாகவில்லை. நாம் மெய்யன்பினால் உள்ளுவதில்லை. நாம் இன்னும் பக்குவம் அடையவில்லை. பக்குவம் நமக்கு வந்து விட்டால் அவனைத் தியானம் செய்யும்போது ஆனந்தம் நமது உள்ளத்தில் அரும்பும். அதைச் சுவைத்த பிறகு, "ஆகா! இந்த இன்பம் தெரியாமல் இத்தனை நாளாக இருந்தோமே. உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் பொறிகளின் வாயிலாகச் சுவைப்பதுதான் இன்பம் என்று எண்ணி ஏமாந்து போய்விட்டோமே! இது என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று தோன்றும்.
உலகியல் இன்பங்களை விட்டுவிட நமக்கு மனம் வராது. நம்முடைய அனுபவத்தில் பொறிகளால் நுகரும் இன்பமே இன்பமாக இருக்கிறது. வேறு இன்பம் இருப்பதாகச் சொன்னாலும் அதை நம்ப முடிவதில்லை. அதனால் இந்த உலகியல் இன்பங்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த இன்ப நுகர்ச்சியை அடியோடு விட்ட பிறகே இறைவனுடைய இன்ப அனுபவம் சித்திக்கும் என்று சொல்வது முறை அல்ல. இந்த இன்பத்தில் இருக்கும்போது மெல்ல மெல்லத் தியானிக்கத் தொடங்கினால் அருளின்பம் அரும்பத் தொடங்கும். இந்த உலகியல் இன்பம் கொஞ்சம் கொஞ்சமாகப் புளிக்கத் தொடங்கும்.
விலை மதிப்பு உள்ள பொருள் ஒன்றை ஒருவன் வாங்கி வருகிறான். அதைக் கீழே வைக்க மனம் வரவில்லை. அதையே கையில் பற்றிக் கொண்டிருக்கிறான். அவனிடமுள்ள அப் பொருளை அப்போது பறிப்பதென்பது முடியாத காரியம். ஆனால்,அவனுக்குத் தூக்க மருந்தைக் கொடுத்துவிட்டால், அதன் வேகம் ஏற, ஏற அவன் கையிலுள்ள பொருள் தானே நழுவி விழுந்துவிடும். அப்படி நழுவுவதற்குக் காரணம் தூக்கம். அது அவனிடம் மெல்ல மெல்லச் சென்று பற்றிக் கொண்டது.இறைவனை மெய்யன்பினால் மெல்ல மெல்லத் தியானிப்பதனால் பரமானந்தம் என்னும் தூக்கம் படர்கிறது. அப்போது அதுவரையில் இனிமையாக இருந்தன யாவும் தாமே நழுவி விடுகின்றன.
வள்ளிநாயகியின் வாழ்வைப் பொருளாக வைத்து, இந்த உண்மையை அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலே சொல்கிறார்.
"பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல்காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்து, செந்தேனும்புளித்து அறக் கைத்ததுவே"
இதன் பொருள் ---
பெரிய பசுமை தங்கிய தினைப்புனத்தில், சிறிய தினைக் கொல்லையைக் காவல் புரிகின்ற வள்ளிநாயகியின் கொங்கைகளை விரும்புகின்ற குமாரக் கடவுளை உண்மையான அன்புடன் மெல்ல மெல்ல நினைக்க, அந்த நினைப்பினால் ஒப்பற்ற பெரிய இன்பமானது தோன்றும். அந்தப் பேரின்பத்தை அடியேன் அனுபவித்து, அதன் இனிமையை உணர்ந்த பொழுதே இனிமை மிக்க கரும்பும் துவர்த்துப் போனது. இனிமையான தேனும் புளித்து மிகவும் கசந்து விட்டது.
இந்த அனுபவத்தையே திருமூல நாயனாரும், அப்பர் பெருமானும் பின்வருமாறு காட்டுவதை அறிந்து இன்புறலாம்.
"கரும்பும் செந்தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்;
கரும்பும் முன் கைத்தது,தேனும் புளித்ததே." --- திருமந்திரம்.
இதன் பொருள் ---
கருப்பஞ் சாற்றையும், தேனையும் கலந்து உண்டவழி, அதன் இனிப்பு இத்தகையதுஎன வரையறுத்துச் சொல்ல வாராமைபோல, `இன்னது` என வரையறுத்துச் சொல்ல வாராத ஓர் இன்பம் இந்த மனித உடம்பில் தானே உண்டாகின்றது. அது அரிவையர் இன்பம். (பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்" --- திருக்குறள்) அதனால் அதனை மக்கள் பின்னும் அதன் மீது வெறுப்புக் கொள்ளாது மேலும் விரும்பு கன்றனர். ஆயினும், மலரில் மணம் போல,அறிவினுள் அறிவாய் எழுகின்ற ஓர் ஆனந்தம் உண்டு. அதுவே சிவானந்தம் என்னும் பரமானந்தம். அதனை அடையவே உயர்ந்தோர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த ஆனந்தம் அவர்களது முயற்சியால் அவர்கள் அறிவிலே வெளிப்பட, அதனை அவர்கள் நுகர்ந்த பின் அவர்கட்கு மேலே, குறிப்பிட்ட கருப்பஞ்சாறு போன்ற இன்பங்களும் கசந்து விடுகின்றன. தேன் போன்ற இன்பங்களும் புளித்து விடுகின்றன.
"அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டு, நல் இட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே." --- அப்பர் தேவாரம்.
இதன் பொருள் ---
கோங்கின் அரும்பு போன்ற முலை உடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையை விட்டு நீங்கி, நல்ல பக்தி கொண்டு, திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச் சிந்திக்கக் கரும்புச் சாற்றை விடத் தித்திக்கும் காண்பீராக.
No comments:
Post a Comment