திருக் கைச்சினம்
(கச்சினம், கச்சனம்)
சோழநாட்டுத் தென்கரைத் திருத்தலம்.
இறைவர் : கைச்சினேசுவரர், கைச்சினநாதர்
இறைவியார் : வெள்வளை நாயகி
தல மரம் : கோங்கிலவு
தீர்த்தம் : வச்சிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்
தேவாரப் பாடல்கள்: திருஞானசம்பந்தர் - தையலோர் கூறுடையான்.
எப்படிப் போவது
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 18கி.மீ. தொலைவிலும், திருநெல்லிக்காவல் இரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் ஊள்ளது. திருகோளிலி, திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற திருத்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு கைச்சின நாதேசுவரர் திருக்கோயில்
கச்சனம்
திருவாரூர் மாவட்டம்
PIN 610201
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருத்தல வரலாறு: கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது மோகம் கொண்ட இந்திரன், முனிவர் இல்லாத போது இந்திரன் கெளதமரைப் போலவே உருமாறி அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். விபரீதம் நடந்துள்ளதை ஞானநாட்டத்தால் உணர்ந்த முனிவர் ஆசிரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்திற்கு வந்து மண்ணால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். பலகாலம் வழிபட்டும் தன் சாபம் நீங்காமல் இருக்கக் கண்ட இந்திரன் சிவலிங்கத்தைக் கைகளால் கட்டிப் பிடித்துக் கொண்டு சிவனிடம் தன்னை மன்னித்து அருளும்படி வேண்டினான். இவ்வாறு இந்திரன் செய்து வர, இந்திரனின் கைச்சின்னம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறியது. தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன்,நீண்ட நாள் சாபத்தில் சிக்கி வருந்திய இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தார். இதனாலேயே இந்திரன் பூஜை செய்த இந்த சிவலிங்கத்திற்கு கைச்சின்ன நாதேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. தலமும் கைச்சின்னம் என்று பெயர் பெற்று இன்றளவில் மருவி கச்சனம் என்று வழங்குகிறது. இன்றைக்கும் சிவலிங்கத் திருமேனியில் கைவிரல் குறி இருப்பதை சிவாச்சாரியாரைக் காண்பிக்கச் சொல்லிப் பார்க்கலாம்.
கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களில் இதவும் ஒன்று. மதிற்சுவருடன் கூடிய கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் நேரே கொடிமரம்,பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் உள் பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரகம், சுப்ரமணியர், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிகள் இருக்கின்றன. இறைவி வெள்வளை நாயகி சந்நிதி தனிக் கோயிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் உள்ளது. சுற்றுப் பிராகார கோஷ்டங்களில் முறையே ஜேஷ்டாதேவி, துர்க்காதேவி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். இந்திரன் ஐராவதத்தின் தந்தத்தால் செய்த வெள்வளையை அம்பிகைக்கு அணிவித்து வழிபட்டதால் அம்பிகைக்கு வெள்வளை நாயகி என்று பெயர் ஏற்பட்டது.
இத்தலத்தில் இறைவன் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார். இந்திரன் சாபம் விலகியதும், தியாகராஜர் காட்சி தந்ததும், அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் விலகியதுமாகிய சிறப்புடைய இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள ரிஷபாரூட தட்சிணா மூர்த்தி. ரிஷபத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர் ஆகியவை பார்க்க வேண்டியவையாகும்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீநிவாச பெருமானின் அழகிய திரு உருவம் உள்ளது. இவ்வாலயத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தோண்டும் போது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள் சிலை இதுவாகும். மகாலட்சுமியின் சகோதரியாக கருதப்படும் ஜேஷ்டாதேவிக்கு (மூதேவி) இக்கோயிலில் தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
பெரிய புராணப் பாடல் எண் : 574
நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,
உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்,
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி,
திருமலிவெண் துறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி,பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.
குறிப்புரை : இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:
திருக்காறாயில் - நீரானே (தி.2ப.15) - இந்தளம்.
திருத்தேவூர் - 1. பண்ணிலாவிய (தி.2ப.82) - காந்தாரம். -
2.காடுபயில் (தி.3ப.74) - சாதாரி.
திருநெல்லிக்கா - அறத்தாலுயிர் (தி.2ப.19) - இந்தளம்.
திருக்கைச்சினம் - தையலோர் (தி.2ப.45) - சீகாமரம்.
திருத்தெங்கூர் - புரைசெய் (தி.2ப.93) - பியந்தைக்காந்தாரம்.
திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3ப.16) - காந்தாரபஞ்சமம்.
திருக்கோட்டூர் - நீலமார்தரு (தி.2ப.109) - நட்டராகம்.
--------------------------
திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம்
2.045 திருக்கைச்சினம் பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தையலோர் கூறுஉடையான், தண்மதிசேர் செஞ்சடையான்,
மைஉலா மணிமிடற்றான், மறைவிளங்கு பாடலான்,
நெய்உலா மூவிலைவேல் ஏந்தி, நிவந்துஒளிசேர்
கையுடையான் மேவிஉறை கோயில் கைச்சினமே.
பொழிப்புரை :மாதொருபாகனும், குளிர்ந்த பிறைமதி சூடிய செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும்,வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய்பூசப் பெற்ற மூவிலை வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும்.
பாடல் எண் : 2
விடமல்கு கண்டத்தான், வெள்வளைஓர் கூறுஉடையான்,
படமல்கு பாம்புஅரையான், பற்றாதார் புரம்எரித்தான்,
நடமல்கும் ஆடலினான், நான்மறையோர் பாடலினான்,
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.
பொழிப்புரை :விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும், மதயானையை உரித்ததோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் கைச்சினம்.
பாடல் எண் : 3
பாடலார் நான்மறையான், பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியம் துன்று கரந்தையொடும்,
ஆடலான் அங்கை அனல்ஏந்தி, ஆடுஅரவக்
காடலான் மேவிஉறை கோயில் கைச்சினமே.
பொழிப்புரை :பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும், பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி, செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில் அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
பாடல் எண் : 4
பண்டுஅமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்சு
உண்டபிரான் என்றுஇறைஞ்சி, உம்பர் தொழுதுஏத்த
விண்டவர்கள் தொல்நகரம் மூன்றுஉடனே வெந்துஅவியக்
கண்டபிரான் மேவிஉறை கோயில் கைச்சினமே.
பொழிப்புரை :முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப்,பகைவருடைய பழமையான முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவிஉறையும் கோவில் கைச்சினம்.
பாடல் எண் : 5
தேய்ந்துமலி வெண்பிறையான், செய்யதிரு மேனியினான்,
வாய்ந்துஇலங்கு வெண்ணீற்றான், மாதினைஓர் கூறுஉடையான்
சாய்ந்துஅமரர் வேண்டத் தடங்கடல்நஞ்சுஉண்டு,அநங்கைக்
காய்ந்தபிரான் மேவிஉறை கோயில் கைச்சினமே.
பொழிப்புரை :தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும், சிவந்ததிருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும், மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப்பெரிய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
பாடல் எண் : 6
மங்கைஓர் கூறுஉடையான், மன்னு மறைபயின்றான்,
அங்கைஓர் வெண்தலையான், ஆடுஅரவம் பூண்டுஉகந்தான்,
திங்களொடு பாம்புஅணிந்த சீரார் திருமுடிமேல்
கங்கையினான், மேவிஉறை கோயில் கைச்சினமே.
பொழிப்புரை :மாதொரு கூறனும், நிலையான வேதங்களை ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில் திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
பாடல் எண் : 7
வரிஅரவே நாண்ஆக, மால்வரையே வில்ஆக,
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்,
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்ததுஓர்
கரிஉரியான், மேவிஉறை கோயில் கைச்சினமே.
பொழிப்புரை :வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற்பொறியைத்தூவும் சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
பாடல் எண் : 8
போதுஉலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுஉமையாள் அஞ்ச மலைஎடுத்த வாள்அரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்றுஆடும்
காதலினான் மேவிஉறை கோயில் கைச்சினமே .
பொழிப்புரை :உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதிக்க அவனை முன் போல விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும், இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்புடையவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறை கோயில் கைச்சினம்.
பாடல் எண் : 9
மண்ணினைமுன் சென்றுஇரந்த மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ணம் எரிஉருவம் ஆயபிரான்,
பண்இசையால் ஏத்தப் படுவான், தன் நெற்றியின்மேல்
கண்உடையான், மேவிஉறை கோயில் கைச்சினமே.
பொழிப்புரை : மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும், தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
பாடல் எண் : 10
* * * * * *
பாடல் எண் : 11
தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவிஉறை கோயில் கைச்சினத்தைப்
பண்இசையால் ஏத்திப் பயின்ற இவைவல்லார்
விண்ணவராய் ஓங்கி வியன்உலகம் ஆள்வாரே.
பொழிப்புரை :குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன் மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓதவல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற அவ்வுலகை ஆட்சிபுரிவர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment