திருக் கன்றாப்பூர்

                                                                   திருக் கன்றாப்பூர்

(கோயில் கண்ணாப்பூர்)


சோழநாட்டுத் தென்ககரகரைத் திருத்தலம்.

 

இறைவர்                   : நடுதறியப்பர்,  நடுதறிநாதர்.

 

இறைவியார்             : வல்லிநாயகிமாதுமையம்மை

 

தல மரம்                   : கல்பனை (பனையில் ஒருவகை -  தற்போது காணப்படுவதில்லை.)

 

தீர்த்தம்                    : சிவகங்கை.

 

வழிபட்டோர்           : இடும்பன்.

 

தேவாரப் பாடல்கள் : அப்பர் - மாதினையோர் கூறுகந்தாய்.

 

 

எப்படிப் போவது   

            திருவாரூரில் இருந்து 18கி.மீ. தொலைவில் இத் திருத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் சந்திப்பு  வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்துஅதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தை அடைந்து அங்கு இடப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1கி.மீ. சென்றால் திருத்தலத்தை அடையலாம். (கீழ கண்ணாப்பூர் என்ற ஊர் ஒன்று உள்ளது. பாடல் பெற்ற தலம் அது அல்ல. எனவே,கோயில் கண்ணாப்பூர் என்று கேட்க வேண்டும்). திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கோயில் கண்ணாப்பூர் நிறுத்தத்தில் இறங்கியும் கோயிலுக்குச் செல்லலாம்.

 

ஆலய முகவரி     

அருள்மிகு நடுத்தறியப்பர் திருக்கோவில்

கோயில் கண்ணாப்பூர்

கோயில் கண்ணாப்பூர் அஞ்சல்

வழி வலிவலம் S.O.

திருவாரூர் வட்டம்

திருவாரூர் மாவட்டம்

PIN - 610202

 

            காலை 8மணி முதல் 11மணி வரையிலும்மாலை 4-30மணி முதல் இரவு 7-30மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

            திருத்தல வரலாறு: சைவசமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியானாள். புகுந்த வீட்டில் மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். அவள் கணவன் அதுகண்டு மனைவி வழிபாடு செய்து வந்த அந்த இலிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட்டான். அப்பெண் வேறுவழியின்றி வீட்டின் பின்புறம் கன்று கட்டியிருந்த தறியையே (ஆப்பு) சிவபெருமானாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். ஒரு நாள் கணவன் அதையும் கண்டுகோபித்து அத்தறியைக் கோடரியால் வெட்டினான். தறி இரண்டாக பிளந்து அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அவன் மனைவியின் பக்தியை உலகத்தவரும்,அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார். இறைவன் அந்த ஆப்பில் இருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த தலம் திருகன்றாப்பூர். (கன்று + ஆப்பு + ஊர்). சைவப்பெண்ணும்அவள் கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது. இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுத்தறிநாதர் எனப்பட்டார். அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுத்தறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. மூல லிங்கத்தின் பாணப் பகுதியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.

 

            கிழக்கு நோக்கிய இக்கோயில் மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வாலயத்தில் கொடிமரமில்லை. பலிபீடம்நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள் பிரகாரம் சுற்றி வரும்போது தீர்த்த கிணறுவிநாயகர்அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம்விநாயக மூர்த்தங்கள் நான்குபிடாரியம்மன்சுப்பிரமணியர்சந்திரன்சூரியன்நவக்கிரகம்சனீஸ்வரன் சந்நிதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்து சம்பந்தர்அப்பர் இருவரும் காட்சி தருகின்றனர்.

 

            பிரகாரம் வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருமேனியுடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே மூலவர் நடுத்தறியப்பர் தரிசனம் தருகிறார். மூலவர் சதுரபீடம் ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

 

            இங்குள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும்இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர். (மற்றிருவர் இல்லை)

 

            மூலவர் - பாணத்தில் (தலவரலாற்றுக் கேற்ப) வெட்டிய தழும்புள்ளதுசதுர பீடம்.

 

            இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அ/மி. நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லை எ்ன்று அறியப்படுகிறது.

 

 

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

 

பெரிய புராணப் பாடல் எண் : 228

நீர்ஆரும் சடைமுடியார் நிலவுதிரு

            வலிவலமும் நினைந்து சென்று,

வார்ஆரும் முலைமங்கை உமைபங்கர்

            கழல்பணிந்து மகிழ்ந்து பாடி,

கார்ஆரும் கறைக்கண்டர் கீழ்வேளூர்,

            கன்றாப்பூர் கலந்து பாடி,

ஆராத காதலினால் திருவாரூர்

            தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.

 

            பொழிப்புரை : கங்கையாறு தங்கிய சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்றுகச்சை அணிந்த மார்பகத்தையுடைய மங்கையான உமையை ஒருகூற்றில் கொண்டவரின் திருவடிகளை வணங்கிமகிழ்ந்து பாடித்திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர்திருக்கன்றாப்பூர் முதலிய பதிகளுக்கும் சென்றுமனம் கலந்த ஒருமைப்பாட்டுடன் பாடிநிறைவுறாத ஆசை மிகுதியால் திருவாரூருக்குத் திரும்பவும் வந்தார்.

 

            குறிப்புரை : இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

 

1.    திருவலிவலம்: `நல்லான்காண்` (தி.6ப.48) - திருத்தாண்டகம்.

2.    திருக்கீழ் வேளூர்: `ஆளான` (தி.6ப.67) - திருத்தாண்டகம்.

3.    திருக்கன்றாப்பூர்: `மாதினையோர்` (தி.6ப.61) -                                                                                                               திருத்தாண்டகம்.

 

            இத்திருப்பதிகளோடுபின்வரும் திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து திருவாரூருக்குச் சென்றிருக்கவேண்டும் என இதுபொழுது இருக்கும் திருப்பதிகங்கள் கொண்டு அறிய முடிகின்றது. அவை        

 

1. திருக்கோளிலி:

(அ). `மைக்கொள்` (தி.5ப.56) - திருக்குறுந்தொகை.

(ஆ) `முன்னமே` (தி.5ப.57) - திருக்குறுந்தொகை.

 

2. திருப்பேரெயில்: `மறையும்` (தி.5ப.16) - திருக்குறுந்தொகை.

 

              மீண்டும் திருவாரூரை அணைந்துஐம்பொறிகளோடு வாழ இயலாமையை நினைந்து அருளிய திருப்பதிகம். `படுகுழிப் பவ்வத்தன்ன` (தி.4ப.52) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம்.

 

திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகம்.

 

 

6. 061    திருக்கன்றாப்பூர்          திருத்தாண்டகம்

                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

மாதினைஓர் கூறுஉகந்தாய்மறைகொள் நாவா,

            மதிசூடிவானவர்கள் தங்கட்கு எல்லாம்

நாதனேஎன்றுஎன்று பரவிநாளும்

            நைஞ்சுஉருகிவஞ்சகம்அற்றுஅன்பு கூர்ந்து,

வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு

            வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக்

காதன்மையால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :பார்வதி பாகனே! வேதம் ஓதும் நாவனே! பிறை சூடியவனே! தேவர்கள் தலைவனே! என்று புகழ்ந்து நாடோறும் மனம் இளகி உருகிவஞ்சகமில்லாத அன்பு மிகுந்துமுப்பொழுதும் வாசனை மிக்க நீரும் பூவும் கொண்டு மறவாது வாழ்த்திப்புகழ்ந்து அன்போடு தொழும் அன்பருடைய மனத்தினுள்ளே கன்றாப்பூரில் நடப்பட்டமுளை வடிவினனாய் உள்ள பெருமானைக் காணலாம்.

 

பாடல் எண் : 2

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி,

            வெளுத்துஅமைந்த கீளொடுகோ வணமும் தற்று,

செடிஉடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்,

            செல்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும்,

துடிஅனைய இடைமடவாள் பங்கா என்றும்,

            சுடலைதனில் நடம்ஆடும் சோதீ என்றும்,

கடிமலர்தூய்த் தொழும்அடியார் நெஞ்சிள் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி,வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து,கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

பாடல் எண் : 3

எவரேனும் தாமாக இலாடத்து இட்ட

            திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,

உவராதே அவரவரைக் கண்ட போதே

            உகந்து,அடிமைத் திறம்நினைந்து,அங்குஉவந்து நோக்கி,

இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி

            இரண்டுஆட்டாது ஒழிந்து,ஈசன் திறமே பேணிக்

கவராதே தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்துஉருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால்திருவேடத்தின் பெருமையை நினைத்துவெறுப்பில்லாமல்அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்துவிரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்துஅங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும்அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

பாடல் எண் : 4

இலம்காலம் செல்லாநாள் என்று நெஞ்சத்து

            இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு,

விலங்காதே நெறிநின்றுஅங்து அறிவே மிக்கு,

            மெய்அன்பு புகப்பெய்துபொய்யை நீக்கி,

துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்

            உண்டபிரான் அடியிணைக்கே சித்தம் வைத்துக்

கலங்காதே தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :யாம் பொருள் இல்லாதேம்இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்என்று மனத்தில் தளர்ச்சியுறாமல்பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டுநல்லவழியில் பிறழாமல் நின்றுஇறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்குபயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டுபொய்யை விடுத்துமெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

 

பாடல் எண் : 5

விருத்தனேவேலைவிடம் உண்ட கண்டா,

            விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்

ஒருத்தனேஉமைகணவாஉலக மூர்த்தீ,

            நுந்தாத ஒண்சுடரேஅடியார் தங்கள்

பொருத்தனேஎன்றுஎன்று புலம்பிநாளும்

            புலன்ஐந்தும் அகத்துஅடக்கிப் புலம்பி நோக்கிக்

கருத்தினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்ட வேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டுஐம்புலன்களையும் உள்ளே அடக்கிவேற்றுப் பற்றின்றித் தியானித்துஉள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

பாடல் எண் : 6

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்

            பொல்லாத புலால்உடம்பை நிலாசும் என்று

பசியினால் மீதூரப் பட்டே ஈட்டி,

            பலர்க்குஉதவல் அதுஒழிந்துபவள வாயார்

வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,

            வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக்

கசிவினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்துஅப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலை விடுத்துபவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

பாடல் எண் : 7

ஐயினால் மிடறுஅடைப்புஉண்டுஆக்கை விட்டு

            ஆவியார் போவதுமேஅகத்தார் கூடி,

மையினால் கண்எழுதிமாலை சூட்டி,

            மயானத்தின் இடுவதன்முன்மதியம் சூடும்

ஐயனார்க்கு ஆளாகிஅன்பு மிக்கு,

            அகங்குழைந்துமெய்யரும்பிஅடிகள் பாதம்

கையினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டுஉடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயேவீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்துகண்களை மையினால் எழுதிமாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்புபிறைசூடும் பெருமானுக்கு அடியவராகிஅன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து,எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.


பாடல் எண் : 8

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி,

            திகையாதே சிவாயநம என்னும் சிந்தைச்

சுருதிதனைத் துயக்குஅறுத்துதுன்ப வெள்ளக்

            கடல்நீந்திக் கரைஏறும் கருத்தே மிக்கு,

பரிதிதனைப் பல்பறித்த பாவ நாசா,

            பரஞ்சுடரேஎன்றுஎன்று பரவி நாளும்

கருதிமிகத் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல்சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்துமுத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்துநாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

பாடல் எண் : 9

* * * * * * * * *

பாடல் எண் : 10

குனிந்தசிலை யால்புரமூன்று எரித்தாய் என்றும்,

            கூற்றுஉதைத்த குரைகழல்சே வடியாய் என்றும்,

தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்,

            தசக்கிரிவன் மலைஎடுக்க விரலால் ஊன்றி

முனிந்துஅவன்தன் சிரம்பத்தும் தாளும் தோளும்

            முரண்அழித்திட்டு அருள்கொடுத்த மூர்த்தீ என்றும்,

கனிந்துமிகத் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே

            கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

 

            பொழிப்புரை :வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்தஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டுவிரலை ஊன்றிஅவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து,பின்அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

 

                                                            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...