திருக் கோளிலி
(திருக்குவளை)
சோழநாட்டுத் தென்கரைத் திருத்தலம்.
இறைவர் | பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேசுவரர். |
இறைவியார் | வண்டமர் பூங்குழலி. |
தல மரம் | தேற்றாமரம் |
தீர்த்தம் | பிரம தீர்த்தம். |
வழிபட்டோர் | பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், |
தேவாரப் பாடல்கள் | 1.திருஞானசம்பந்தர் - 1. நாளாய போகாமே 2. அப்பர் -1. மைக்கொள் கண்ணுமை, 2. முன்னமே நினையாது 3. சுந்தரர் - 1. நீள நினைந்தடியேன். |
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்திருத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற திருத்தலங்கள் அருகாமையில் அமைந்துள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோயில்
திருக்குவளை
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN 610204
காலை 7 மணி முதல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருக்கோளிலி தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது. பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.
கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிராகாரத்திற்கு எதிரே மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன
இத்தலத்திலிருந்து சுமார் 1கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய அற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
பெரிய புராணப் பாடல் எண் : 514
புற்று இடங்கொளும் புனிதரைப் போற்றி, இசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்து, இசைப் பதிகங்கள் பாடி
நல் தவத்திருத் தொண்டர்க ளொடுநலம் சிறப்ப,
மற்றுஅவ் வண்பதி தன்இடை வைகும்அந் நாளில்.
பொழிப்புரை : புற்றிடங்கொண்டருளும் தூயவரான இறைவரைப் பணிந்து போற்றி இசைபெருகுமாறு பற்றும் அன்புடனே வணங்கி, இனிய இசையால் திருப்பதிகங்களைப் பாடி நல்ல தவத் தினை மேற்கொண்ட தொண்டர்களுடன், நன்மை சிறந்து ஓங்குமாறு, அவ்வளமுடைய பதியில் தங்கியிருக்கும் நாள்களில்,
பெ. பு. பாடல் எண் : 515
மல்லல் நீடிய வலிவலம், கோளிலி, முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர்தம் பதிபல தொழுதே,
எல்லை யில்திருப் பதிகங்க ளால்பணிந்து, ஏத்தி,
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர்தொழ அணைந்தார்.
பொழிப்புரை : உலகின் துன்பங்களைத் தீர்க்க வந்த பிள்ளை யார், திருவருள் செழிப்பால் சிறந்த `திருவலிவலம்\', `திருக்கோளிலி\' முதலாக உள்ள நான்மறைகளின் முதல்வரான இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் தொழுது, அளவில்லாத திருப்பதிகங்ளைப் பாடி, மீண்டும் திருவாரூரின்கண் தொழுவதன் பொருட்டாக வந்தார்.
குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:
திருவலிவலம்:
1.பூவியல் புரிகுழல் (தி.1ப.123) - வியாழக்குறிஞ்சி
2.ஒல்லையாறி (தி.1ப.50) - பழந்தக்கராகம்.
திருக்கோளிலி: 1.நாளாயபோகாமே (தி.1ப.62) - பழந்தக்கராகம்.
இவை முதலான பல பதிகள் என்பன திருஏமப்பேறூர், திருச்சாட்டியக்குடி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. `தொழெுதே' என்பது `தொழல்' என்றும் பாடம்.
திருஞானசம்பந்தர் அருளி திருப்பதிகம்
1.062 திருக்கோளிலி பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நாள்ஆய போகாமே நஞ்சுஅணியும் கண்டனுக்கே
ஆள்ஆய அன்புசெய்வோம், மடநெஞ்சே, அரன்நாமம்
கேளாய், நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம்அருளிக்
கோள்ஆய நீக்கும்அவன் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
பாடல் எண் : 2
ஆடுஅரவத்து அழகுஆமை அணிகேழல் கொம்புஆர்த்த
தோடுஅரவத்து ஒருகாதன் துணைமலர்நல் சேவடிக்கே
பாடுஅரவத்து இசைபயின்று பணிந்துஎழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்கும்அவன் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :படம் எடுத்து ஆடும் இயல்புடைய பாம்பை நாணாகக் கொண்டு அதில் அழகிய ஆமை ஓட்டையும் பன்றிக் கொம்பையும் கோத்து அணிந்தவனும், தோடாகப் பாம்பையே கொண்டவனும் ஆகிய சிவபிரானது இரண்டு மலர் போன்ற சிவந்த நல்ல திருவடிகளையே பாடலால் வரும் இசையினால் பாடிப்பழகிப் பணிந்து வணங்குபவர்களின் மனக்கோணலைத் தீர்த்தருள்பவன் திருக்கோளிலி எம்பெருமானாவான்.
பாடல் எண் : 3
நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரங்கொண்டு
ஒன்றிவழி பாடுசெயல் உற்றவன் தன்ஒங்கு உயிர்மேல்
கன்றிவரு காலன்உயிர் கண்டு,அவனுக்கு அன்றுஅளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :அழகிதாக மலர்ந்த புதிய பூக்களைக் கொண்டு இருக்கு வேத மந்திரங்களைக் கூறி மன ஒருமையோடு வழிபாடு செய்த மார்க்கண்டேயனின் உயர்ந்த உயிரைக் கவரச் சினந்து வந்த இயமனது உயிரைப் போக்கி அம்மார்க்கண்டேயனுக்கு அன்றே என்றும் பதினாறாண்டாக இருக்கும் வரமளித்தவன், பொன் போல் விளங்கும் கொன்றை மலரைச் சூடிய எம் திருக்கோளிலிப் பெருமானாவான்.
பாடல் எண் : 4
வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கண் பால்ஆட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமம் தேர்ந்துசிதைப் பான்வரும்அத்
தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்றுஅருளிக்
கொந்துஅணவு மலர்கொடுத்தான் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்.
பாடல் எண் : 5
வஞ்சமனத்து அஞ்சுஒடுக்கி வைகலும்நல் பூசனையால்
நஞ்சுஅமுது செய்துஅருளும் நம்பிஎன வேநினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துஉகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சுஅணவும் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :வஞ்சகமான மனத்தைத் திருத்தி ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும் சிவபக்தனும், பாண்டவர் ஐவரில் ஒருவனுமான அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி மகிழ்ந்தவன், கொஞ்சும் கிளிகள் வானவெளியில் பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம்பெருமான் ஆவான்.
பாடல் எண் : 6
தாவியவன் உடன்இருந்தும் காணாத தற்பரனை,
ஆவிதனில் அஞ்சுஒடுக்கி அங்கணன்என்று ஆதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி அடிகளுக்கு நல்கும்அவன்
கோஇயலும் பூஎழுகோல் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :மூவுலகங்களையும் தாவி அளந்த திருமால் தன்னோடு உடனிருந்தும் திருவடிகளைக் காண இயலாதவாறு சிறந்து நின்ற தற்பரனாகிய சிவபிரானை, ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கருணையாளனாக உயிர்க்குயிராய்க் காதலித்து வழிபடும் நாவால் புகழத்தக்க பெரியவராகிய நமிநந்தி அடிகளுக்கு அருள்புரிந்தவன், தலைமை சான்ற மலர் மரங்களை உடைய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானாவான்.
பாடல் எண் : 7
கல்நவிலும் மால்வரையான், கார்திகழும் மாமிடற்றான்,
சொல்நவிலும் மாமறையான், தோத்திரஞ்செய் வாயின்உளான்
மின்நவிலும் செஞ்சடையான், வெண்பொடியான், அங்கையினில்
கொல்நவிலும் சூலத்தான் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :கற்கள் செறிந்த பெரிய கயிலாயமலையில் எழுந்தருளியிருப்பவன். கருமை விளங்கும் பெரிய மிடற்றை உடையவன். புகழ் பொருந்திய வேதங்களை அருளிச்செய்தவன். தன்னைத் தோத்திரிப்பாரின் வாயின்கண் உள்ளவன். மின்னல் போன்ற சிவந்த சடையினை உடையவன். திருவெண்ணீறு அணிந்தவன். அழகிய கையில் கொல்லும் தொழிலில் பழகிய சூலப்படையை ஏந்தியவன். இத்தகையோனாகி விளங்குவோன் திருக்கோளிலியின்கண் விளங்கு எம்பெருமானாவான்.
பாடல் எண் : 8
அந்தரத்தில் தேர்ஊரும் அரக்கன்மலை அன்றுஎடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாள்அவனுக்கு ஈந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :ஆகாய வெளியிலே தேரை ஊர்ந்து வரும் இராவணன் கயிலைமலையைப் பெயர்த்த போது அழகிய தனது கால் விரலால் சிறிதே ஊன்றிய அளவில், அவன் உடல் நெரிந்து, மந்திரமாக விளங்கும் வேதகீதங்களைப் பாடிப் போற்றச் சந்திரஹாசம் என்னும் வாளை ஈந்து அருள் செய்தவன், கொத்துப் போல இரண்டு முனைகளை உடைய பிறை மதியைச் சூடிய சடையினனாகிய திருக்கோளிலி எம்பெருமானாவான்.
பாடல் எண் : 9
நாணம்உடை வேதியனும் நாரணனும் நண்ணஒணாத்
தாணு,எனை ஆள்உடையான், தன்னடியார்க்கு அன்புடைமை
பாணன்இசை பத்திமையால் பாடுதலும் பரிந்துஅளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :ஐந்து தலைகளில் ஒன்றை இழந்ததால் நாணமுற்ற வேதியனாகிய பிரமனும், திருமாலும் அணுக முடியாத நிலைத்த பொருள் ஆனவனும் என்னை அடிமையாக உடையவனும், தன் அடியவர்கட்கு அன்பு வடிவானவனும், பாணபத்திரன் பத்திமையோடு பாடப்பரிவோடு அவனுக்கு அருள் புரிந்தவனுமான வளைந்த பிறைமதியைச் சென்னியில் சூடிய சிவபிரான், திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.
பாடல் எண் : 10
தடுக்குஅமரும் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளாது, ஈசனையே ஏத்துமின்கள்,
நடுக்கம்இலா அமருலகம் நண்ணலும் ஆம்அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரம்கொடுக்கும் கோளிலிஎம் பெருமானே.
பொழிப்புரை :தடுக்கை உடையாக விரும்பும் சமணரும், தர்க்க சாத்திரங்களில் வல்ல புத்தர்களும் கூறுகின்ற இடுக்கண் வளரும் மொழிகளைக் கேளாது ஈசனையே ஏத்துமின்கள். துளங்காது அமரர் வாழும் வானுலகத்தை அடைதலும் கூடும். அப்பெருமான் திருவடிகள், வேறுயாராலும் தர இயலாத வரங்கள் பலவற்றையும் தரும். அவ்விறைவன் திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.
பாடல் எண் : 11
நம்பனை,நல் அடியார்கள் நாம்உடைமாடு என்றுஇருக்கும்
கொம்புஅனையாள் பாகன்எழில் கோளிலிஎம் பெருமானை,
வம்புஅமரும் தண்காழிச் சம்பந்தன், வண்தமிழ்கொண்டு
இன்புஅமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே.
பொழிப்புரை :நல்ல அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாடவல்லவர்கள் அப்பெருமானையே அடைவர்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு
பெரிய புராணப் பாடல் எண் : 228
நீர்ஆரும் சடைமுடியார் நிலவுதிரு
வலிவலமும் நினைந்து சென்று,
வார்ஆரும் முலைமங்கை உமைபங்கர்
கழல்பணிந்து மகிழ்ந்து பாடி,
கார்ஆரும் கறைக்கண்டர் கீழ்வேளூர்,
கன்றாப்பூர் கலந்து பாடி,
ஆராத காதலினால் திருவாரூர்
தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.
பொழிப்புரை : கங்கையாறு தங்கிய சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்று, கச்சை அணிந்த மார்பகத்தையுடைய மங்கையான உமையை ஒருகூற்றில் கொண்டவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ந்து பாடித், திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலிய பதிகளுக்கும் சென்று, மனம் கலந்த ஒருமைப்பாட்டுடன் பாடி, நிறைவுறாத ஆசை மிகுதியால் திருவாரூருக்குத் திரும்பவும் வந்தார்.
குறிப்புரை : இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:
1. திருவலிவலம்: `நல்லான்காண்` (தி.6ப.48) - திருத்தாண்டகம்.
2. திருக்கீழ் வேளூர்: `ஆளான` (தி.6ப.67) - திருத்தாண்டகம்.
3. திருக்கன்றாப்பூர்: `மாதினையோர்` (தி.6ப.61) - திருத்தாண்டகம்.
இத்திருப்பதிகளோடு, பின்வரும் திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து திருவாரூருக்குச் சென்றிருக்கவேண்டும் என இதுபொழுது இருக்கும் திருப்பதிகங்கள் கொண்டு அறிய முடிகின்றது. அவை
1. திருக்கோளிலி:
(அ). `மைக்கொள்` (தி.5ப.56) - திருக்குறுந்தொகை.
(ஆ) `முன்னமே` (தி.5ப.57) - திருக்குறுந்தொகை.
2. திருப்பேரெயில்:
`மறையும்` (தி.5ப.16) - திருக்குறுந்தொகை.
மீண்டும் திருவாரூரை அணைந்து, ஐம்பொறிகளோடு வாழ இயலாமையை நினைந்து அருளிய திருப்பதிகம். `படுகுழிப் பவ்வத்தன்ன` (தி.4ப.52) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம்.
திருநாவுக்கரசர் அருளிய திருக்கதிகங்கள்
5. 056 திருக்கோளிலி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மைக்கொள் கண்உமை பங்கினன், மான்மழுத்
தொக்க கையினன், செய்யதுஓர் சோதியன்,
கொக்கு அமர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.
பொழிப்புரை : மையணிந்த கண்களையுடைய உமையை ஒருபங்கில் உடையவனும் , மானும் மழுவும் பொருந்திய கைகளை உடையவனும் , செவ்விதாகிய ஒப்பற்ற ஒளி வடிவினனும் , மாமரங்கள் பொருந்திய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் உறையும் திகம்பரனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் நாசமாம் .
பாடல் எண் : 2
முத்தி னை,முதல் ஆகிய மூர்த்தியை,
வித்தி னை,விளைவு ஆய விகிர்தனை,
கொத்து அலர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் அல்லலே.
பொழிப்புரை : முத்தினைப் போல்வானும் , உலக முதலாக உள்ள திருவுரு உடையோனும் , வித்தும் விளைவும் ஆகிய மேலானவனும் , பூங்கொத்துக்களை உடைய பொழில்கள் சூழ்ந்த கோளிலியில் உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும் .
பாடல் எண் : 3
வெண்தி ரைப்பர வைவிடம் உண்டதுஓர்
கண்டனை, கலந் தார்தமக்கு அன்பனைக்
கொண்டல் அம்பொழில் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்குஅல்லல் இல்லையே.
பொழிப்புரை : வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் , நெஞ்சு கலந்து தொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும் , மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .
பாடல் எண் : 4
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை
குலவி னான், குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்தனை நித்தல் நினைமினே.
பொழிப்புரை : வலிய வினைகள் பலவும் கெடும் தன்மையினால் , கங்கையும் மதியும் உலவும் ஒள்ளிய சடை பொருந்தியவனும் ,குளிரும் பொழில்களை உடைய கோளிலியில் நிலவியவனுமாகிய பெருமானை நாடோறும் நினைந்து தொழுவீராக !` தொழுவார்க்கன்றி வினை நீங்கா ` என்பது கருத்து .
பாடல் எண் : 5
அல்லல் ஆயின தீரும், அழகிய
முல்லை வெண்முறு வல்உமை அஞ்சவே
கொல்லை யானை உரித்தவன், கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.
பொழிப்புரை : அழகிய முல்லையைப் போன்ற வெள்ளிய முறுவலை உடைய உமாதேவியார் அஞ்சுமாறு குறிஞ்சியில் வாழும் யானையை உரித்தவனும் , கோளிலியில் உறையும் திருவருட் செல்வனுமாகிய பெருமான் சேவடிகளைச் சென்று தொழுவீர்களாக ; உம் அல்லலாயின அனைத்தும் தீரும் . ` அல்லல் நீங்கும் என்பதற்குக் கயாசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தமை சான்று ` என்றபடி .
பாடல் எண் : 6
ஆவின் பால்கண்ட அளவில் அருந்தவப்
பாலன் வேண்டலும், செல்என்று பாற்கடல்
கூவி னான்,குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.
பொழிப்புரை : பசுவின் பாலை முன் உண்டமையால் , மிக்க அருந்தவம் உடைய பாலனாகிய உபமன்யு அப்பால் வேண்டலும், ` செல்க` என்று பாற்கடலைக் கூவி அருளியவனும் குளிர் பொழில் களையுடைய கோளிலியில் விரும்பி உறைபவனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் வீடும் . ` பெருமானது அளவில் ஆற்றலும் பேரருளுடைமையும் `குறித்தபடி .
பாடல் எண் : 7
சீர்த்த நன்மனை யாளும், சிறுவரும்,
ஆர்த்த சுற்றமும் பற்றுஇலை, ஆதலால்,
கூத்த னார்உறையும் திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழுமின் இடர் தீருமே.
பொழிப்புரை : பெருமைமிக்க நல்ல மனைவியும் , பெற்ற பிள்ளைகளும் , பொருந்திய சுற்றத்தாரும் நிலைத்த சார்பு ஆதல் இல்லையாதலால் ஆடும் பெருமான் உறையும் திருக்கோளிலியை ஏத்தி , நீர் தொழுவீராக ; நும் இடர்கள் தீரும் . ` இறைவனே இருமைக்கும் நீங்காத்துணை ` என்றபடி .
பாடல் எண் : 8
மால் அதுஆகி மயங்கும் மனிதர்காள்,
காலம் வந்து கடைமுடி யாமுனம்,
கோல வார்பொழில் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.
பொழிப்புரை : மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே ! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதற்கு முன்னம் , அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக ! ` யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க !` என்றபடி .
பாடல் எண் : 9
கேடு மூடிக் கிடந்துஉண்ணும் நாடுஅது
தேடி நீர்திரி யாதே, சிவகதி
கூடலாம் திருக் கோளிலி ஈசனைப்
பாடுமின் இரவோடு பகலுமே.
பொழிப்புரை : கேடுகள் சூழ்ந்து மூடிக்கிடந்து துயர் என்னும் நாகநாட்டினைத் தேடி , நீர் திரியாது , திருக்கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடுவீர்களாக ; பாடுவீர்களாயின் சிவகதியே கூடலாம் .
பாடல் எண் : 10
மடுத்து மாமலை எந்தல்உற் றான்தனை
அடர்த்துப் பின்னும் இரங்கி அவற்குஅருள்
கொடுத்த வன்உறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.
பொழிப்புரை : செருக்கை உட்கொண்டு திருக்கயிலாயப் பெருமலையை எடுக்கலுற்றானாகிய இராவணனை நெருக்கிப் பின்னும் இரக்கமுற்று அவனுக்கு அருள்கொடுத்த பெருமான் உறைகின்ற கோளிலியே தொழப் பழைய பிறவிகளிற் செய்த வினைத் துன்பங்கள் விடுத்து நீங்கும் . ` பிழைத்தாரையும் பின்னர் இரங்கி வந்தடையில் முதல்வன் காத்தருள்வான் ` என்பது குறிப்பு .
திருச்சிற்றம்பலம்
5. 057 திருக்கோளிலி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முன்ன மேநினை யாதுஒழிந் தேன்உனை,
இன்னம் நான்உன சேவடி ஏத்திலேன்,
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்னனே, அடி யேனை மறவலே.
பொழிப்புரை : செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே ! ( தியாகராசனே !) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன் ;இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை ; ஆயினும் அடியேனை மறவாதே ; என்னை நினைந்தருள்வாயாக ! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி .
பாடல் எண் : 2
விண் உளார்தொழுது ஏத்தும் விளக்கினை,
மண் உளார்வினை தீர்க்கும் மருந்தினை,
பண் உளார்பயிலும் திருக் கோளிலி
அண்ணலார் அடி யேதொழுது உய்ம்மினே.
பொழிப்புரை : விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும் , மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக !
பாடல் எண் : 3
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்,
ஆளும் நோய்கள்ஓர் ஐம்பதோடு ஆறுஎட்டும்,
ஏழை மைப்பட்டு இருந்துநீர் நையாதே
கோளிலி அரன் பாதமே கூறுமே.
பொழிப்புரை : நம்முடைய வாழ்நாள்களின் வரையறையை நாளும் அறியும் ஆற்றல் இல்லை ; நம்மை ஆளும் நோய்களோ தொண்ணூற்றெட்டுக்கு மேலாகும் . அறிவின்மையின்கண் பொருந்தியிருந்து நீர் வருந்தாமல் கோளிலிச் சிவபெருமான் பாதமே கூறுவீராக .
பாடல் எண் : 4
விழவின் ஓசை ஒலிஅறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி,
அழல்கை யான்அம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே.
பொழிப்புரை : விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும் , தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும் , அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக .
பாடல் எண் : 5
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை,
காலன் ஆகிய காலற்கும் காலனை,
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன் பாதம் தொழுமினே.
பொழிப்புரை : மும்மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியும் , காலகாலனும் , அழகுமிக்க பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள சூலத்தைக் கையிலே உடையானுமாகிய பெருமானின் பாதங்களைத் தொழுவீராக .
பாடல் எண் : 6
காற்ற னைக்கடல் நஞ்சுஅமுது உண்டவெண்
நீற்றனை நிமிர் புன்சடை அண்ணலை,
ஆற்ற னைஅம ருந்திருக் கோளிலி
ஏற்ற னார்அடி யேதொழுது ஏத்துமே.
பொழிப்புரை : காற்று வடிவாயவனும் , கடல் விடம் உண்டவனும் , வெண்ணீறணிந்தவனும் , நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும் , சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை , அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக.
பாடல் எண் : 7
வேதம் ஆயவிண் ணோர்கள் தலைவனை,
ஓதி மன்உயிர் ஏத்தும் ஒருவனை,
கோதி வண்டுஅறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
பொழிப்புரை : வைதிகத் தேரின் உறுப்புக்களாய் நின்ற விண்ணோர்களுக்குத் தலைவனும் , நிலைபெற்ற உயிர்கள் ஓதி ஏத்தும் ஒப்பற்றவனும் , வண்டுகள் கோதி ஒலிக்கும் மலர்களின் வளமுடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .
பாடல் எண் : 8
நீதி யைல்தொழு வார்கள் தலைவனை,
வாதை யான விடுக்கும் மணியினை,
கோதி வண்டுஅறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
பொழிப்புரை : முறையாகத் தொழுவார்களது தலைவனும் , துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும் , வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேத நாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .
பாடல் எண் : 9
மாலும் நான்முக னாலும் அறிவொணாப்
பாலின் மென்மொழி யாள்ஒரு பங்கனை,
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.
பொழிப்புரை : மாலும் பிரமனும் அறியவியலாத , பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக .
பாடல் எண் : 10
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம்முடி பத்துஇறுத் தான்அவற்கு
இரக்கம் ஆகிய வன்திருக் கோளிலி
அருத்தி யாய்அடி யேதொழுது உய்ம்மினே.
பொழிப்புரை : அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி , அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும், பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக் கோளிலிக்கு விருப்பமாகி , அவன் அடிகளே தொழுது உய்வீராக .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர் திருப்பதிக வரலாறு:
திருத்தொண்டத்தொகை அருளித் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் நம்பியாரூரரிடத்தில் அளவற்ற அன்புடையவராய குண்டையூர்கிழார் செந்நெல் பருப்பு முதலிய பொருள்களை முட்டாமல் கொடுத்து வந்தார். வானம் முறை வழங்காமல் மாநிலம் வளம் சுருங்கியது. அதனால் சுந்தரருக்குப் பொருள்கள் வழங்க முடியாமல் குண்டையூர்கிழார் வருந்தி, இரவு உணவு உண்ணாமல் துயில்கொள்ள, இறையருளால் நெற்கள் குவியல் குவியலாக நிரம்பின. குண்டையூர்கிழார் கண்டு திருவருளை வியந்து தொழுது சுந்தரருக்குச் செய்தியைக் கூறி, நெல் எடுக்க ஆட்கள் பல வேண்டுமே என்று கூறினார். சுந்தரரும், திருக்கோளிலிக்கு எழுந்தருளி திருவருளை வியந்து நெல் எடுக்க ஆள் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12ஏயர்கோன். புரா. 10 - 22.)
பெரிய புராணப் பாடல் எண் : 10
தாளாண்மை உழவுதொழில்
தன்மைவளம் தலைசிறந்த
வேளாளர், குண்டையூர்க்
கிழவர்எனும் மேதக்கோர்,
வாள்ஆர்வெண் மதிஅணிந்தார்
மறையவராய் வழக்கினில்வென்று
ஆளாகக் கொண்டவர்தாள்
அடைந்து, அன்பால் ஒழுகுவார்.
பொழிப்புரை : முயற்சிக்கேற்ற முழுப்பயனை நல்கும் உழவுத் தொழிலின் இயல்பால், வளம் தலைக்கொண்ட வேளாண் குடியினராய குண்டையூர்க் கிழார் என்னும் பெயருடைய பெரியவர், ஒளி நிறைந்து விளங்கும் வெண்மதியைச் சூடிய பெருமான் இவ்வுலகில் அந்தணராய் வடிவு கொண்டு வந்தருளி, வழக்கினில் வென்று ஆண்டருளப் பெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகளையே பற்றாகக் கொண்டு, அன்பினால் அவருக்குத் தொண்டுகள் செய்து வருவாராய்,
பெ. பு. பாடல் எண் : 11
செந்நெல்லும், பொன்அன்ன
செழும்பருப்பும், தீங்கரும்பின்
இன்நல்ல அமுதும்முதல்
எண்ணில்பெரும் பலவளங்கள்
மன்னியசீர் வன்தொண்டர்க்கு
அமுதாக, வழுவாமல்
பன்னெடுநாள் பரவையார்
மாளிகைக்குப் படிசமைத்தார்.
பொழிப்புரை : செந்நெல்லும், பொன் போன்ற செழுமையான பருப்பும், தித்திப்பாய கரும்பின் நல்ல அமுதும், முதலாக எண்ணற்ற பலவகையான வளங்கள் யாவற்றையும் நிலைபெற்ற சிறப்பினையுடைய சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் திருவமுதாக அமைத்திட, இடையீடின்றிப் பன்னெடு நாள்கள், தமது இடத்திலிருந்து பரவையார் மாளிகைக்குப் படித்தரமாகத் தந்து வந்தார்.
பெ. பு. பாடல் எண் : 12
ஆனசெயல் அன்பின்வரும்
ஆர்வத்தால் மகிழ்ந்துஆற்ற,
வானமுறை வழங்காமல்,
மாநிலத்து வளம்சுருங்க,
போனகநெல் படிநிரம்ப
எடுப்பதற்குப் போதாமை,
மானம்அழி கொள்கையினால்
மனமயங்கி வருந்துவார்.
பொழிப்புரை : இவ்வாறாக அன்பினால் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து, அவருக்குச் செய்துவரும் காலத்து, ஒருசமயம் மழை பொழியாது ஒழிய, நிலத்தின் வளம் சுருங்கிடலால், திருவமுதிற்கு வேண்டிய நெல் அனுப்புதற்கு இயலாமையால், மானம் அழிந்த கொள்கையால், மனம் மயங்கிக் குண்டையூர்க் கிழார் வருந்துவாராகி,
பெ. பு. பாடல் எண் : 13
"வன்தொண்டர் திருவாரூர்
மாளிகைக்கு நெல்எடுக்க
இன்றுகுறை ஆகின்றது
என்செய்கேன்" எனநினைந்து
துன்றுபெரும் கவலையினால்
துயர்எய்தி உண்ணாதே
அன்றுஇரவு துயில்கொள்ள
அங்கணர்வந்து அருள்புரிவார்.
பொழிப்புரை : வன்றொண்டராய சுந்தரரின் திருவாரூர் மாளிகைக்கு நெல்லை எடுத்துச் சென்றிட இன்று குறை நேர்ந்ததே! என்செய்கேன்? என நினைந்து, பெருகும் கவலை மிகுதியால் துயர் அடைந்து, உணவும் அருந்துதலின்றி, அன்றிரவு துயில்கொள்ள, அது பொறாத அரிய தண்ணளியை யுடையவராய இறைவர், அவர் கனவில் தோன்றி அருள் செய்வாராய்,
பெ. பு. பாடல் எண் : 14
"ஆரூரன் தனக்கு உன்பால்
நெல்தந்தோம்" என்றுஅருளி
நீர்ஊரும் சடைமுடியார்
நிதிக்கோமான் தனை ஏவப்
பேரூர்மற்று அதன்எல்லை
அடங்கவும்நெல் மலைப்பிறங்கல்
கார்ஊரும் நெடுவிசும்பும்
கரக்கநிறைந்து ஓங்கியதால்.
பொழிப்புரை : `நம்பியாரூரனுக்கு அளித்தற்காக உன்பால் நெல்லினைக் கொடுத்துள்ளோம்' என்று குண்டையூர்க் கிழாருக்கு அருள்செய்து, கங்கைநீர் உலவும் சடைமுடியை உடைய சிவபெருமான், நிதியின் தலைவனான குபேரனை ஏவுதலும் அச்செயலால், அப்பேரூராய குண்டையூரின் எல்லை அடங்கவும் நெல்லின் மலையாகவே பொலிந்து, மேகம் தவழும் நெடிய வானமும் மறைய, எங்கும் அந்நெல்மலை ஓங்கியது.
பெ. பு. பாடல் எண் : 15
அவ்இரவு புலர்காலை
உணர்ந்துஎழுவார் அதுகண்டே,
"எவ்உலகில் நெல்மலைதான்
இது"என்றே அதிசயித்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார்
திருவருளின் செயல் போற்றி,
கொவ்வைவாய்ப் பரவையார்
கொழுநரையே தொழுதுஎழுவார்.
பொழிப்புரை : அன்றைய இரவு விடியும் காலத்து, உறக்கத்தினின்றும் நீங்கி உணர்ந்து எழும் குண்டையூர்க் கிழார், எவ்வுலகின் நெல்மலைதான் இஃது! என்று வியந்து, செவ்விய பொன்மலையாம் மேருவை வில்லாக வளைத்த பெருமானின் திருவருளின் செயலைப் போற்றி செய்து, கொவ்வைப் பழம் போலும் வாயினையுடைய பரவையாரின் கணவரான சுந்தரரையே நினைந்து தொழுவாராய்,
பெ. பு. பாடல் எண் : 16
"நாவலூர் மன்ன னார்க்கு
நாயனார் அளித்த நெல்இங்கு
யாவரால் எடுக்கல் ஆகும்,
இச்செயல் அவர்க்குச் சொல்லப்
போவன்யான்" என்று போந்தார்,
புகுந்தவாறு அருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ,
நம்பியும் எதிரே சென்றார்.
பொழிப்புரை : திருநாவலூர் அரசர்க்கு இறைவனால் தரப்பட்ட நெல்மலையை, இங்கு யாவரால் அவ்விடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்? ஆதலால், அவ்வற்புதச் செயலை நேரில் அவருக்குச் சொல்ல யான் போவன் எனத் திருவாரூருக்குச் சென்றார்; தேவர்கட்கும் தேவராய பெருமானாரும் நம்பியாரூரருக்கு அங்கு நிகழ்ந்த தன்மையை அருள, அவரும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு எதிர் சென்றார்.
பெ. பு. பாடல் எண் : 17
குண்டையூர்க் கிழவர் தாமும்
எதிர்கொண்டு, கோதுஇல் வாய்மைத்
தொண்டனார் பாதம் தன்னில்
தொழுது,வீழ்ந்து, எழுந்து நின்று,
"பண்டுஎலாம் அடியேன் செய்த
பணிஎனக்கு இன்று முட்ட,
அண்டர்தம் பிரானார் தாமே
நெல்மலை அளித்தார்" என்று.
பொழிப்புரை : தம் பதியை நோக்கி எதிர்வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குண்டையூர்க் கிழாரும் எதிர்கொண்டு, குற்றமற்ற வாய்மையை உடைய அத்தொண்டரைத் தொழுது, வீழ்ந்து எழுந்து நின்று, பெருமானே! முன்பெல்லாம் அடியேன் உமக்குச் செய்துவந்த பணிக்கு இன்று முட்டுப்பாடுற்ற நிலையில், தேவாதி தேவனாய பெருமானார் தாமே, வேண்டிய நெல் மலையைத் தந்துள்ளார் என மொழிந்து, பின்னரும்,
பெ. பு. பாடல் எண் : 18
"மனிதரால் எடுக்கும் எல்லைத்து
அன்றுநெல் மலையின் ஆக்கம்,
இனிஎனால் செய்யல் ஆகும்
பணிஅன்று இது", என்னக் கேட்டுப்
"பனிமதி முடியார் அன்றே
பரிந்து உமக்கு அளித்தார் நெல்"என்று
இனியன மொழிந்து தாமும்
குண்டையூர் எய்த வந்தார்.
பொழிப்புரை : `இந்நெல்மலையின் பெருக்கம் மனிதரால் எடுத்திடும் எல்லையில் அடங்குவதன்று. அது என்னால் செய்யத்தகும் பணியும் அன்று' என்று மொழிந்திடச் சுந்தரரும் அவரை நோக்கி, `குளிர்ந்த இளம்பிறையைச் சூடிய சிவபெருமான் உம்பால் பரிந்து இந்நெல் மலையைக் கொடுத்தார்' என இனியவாய சொற்களைக் கூறித் தாமும் அவருடன் கூடிக் குண்டையூர்ப் பதியை அணைய வந்தருளினார்.
பெ. பு. பாடல் எண் : 19
விண்ணினை அளக்கும் நெல்லின்
வெற்பினை நம்பி நோக்கி,
அண்ணலைத் தொழுது போற்றி,
அதிசயம் மிகவும் எய்தி,
'எண்ணில்சீர்ப் பரவை இல்லத்து
இந்நெல்லை எடுக்க ஆளும்
தண்நிலவு அணிந்தார் தாமே
தரில்அன்றி ஒண்ணாது' என்று.
பொழிப்புரை : வானளாவ உயர்ந்து நிற்கும் நெல்மலையை நோக்கியருளி, நம்பியாரூரர் பெருமானைத் தொழுது போற்றி, வியப்புற்ற நிலையில், அளவற்ற நீர்மையை உடைய பரவையின் மாளிகைக்கு இந்நெல் மலையை எடுத்துச் செல்ல, ஆளினைக் குளிர்ந்த பிறை அணிந்த பெருமானே தந்தால் அன்றி, இது எம்மால் எடுக்க முடியாது என மொழிந்து,
பெ. பு. பாடல் எண் : 20
ஆள்இடவேண் டிக்கொள்வார்,
அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான்
கோயிலினை வந்துஎய்தி,
"வாள்அன கண் மடவாள்
வருந்தாமே" எனும்பதிகம்
மூளவரும் காதலுடன்
முன்தொழுது பாடுதலும்.
பொழிப்புரை : நெல்மலையை எடுத்திட ஆள்களைத் தருமாறு வேண்டிக் கொள்வாராய், அதற்கு அருகிலுள்ள திருப்பதியான திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் பெருமானை அடைந்து, திருமுன் நின்று வணங்கி, `வாள்போலும் நீண்ட வரிவிழியை உடைய பரவை வருந்தாதவாறு இந்நெல் மலையை அவள் மனையில் கொண்டு சேர்க்க நல்ல ஆள்களைத் தந்தருளும்' என்னும் கருத்தமைந்த திருப் பதிகத்தை, மேன்மேலும் பெருகி வளர்கின்ற அன்பினால் தொழுது பாடுதலும்,
குறிப்புரை : இக்கருத்து அமைவுடைய பதிகம், `நீள நினைந்தடியேன்' (தி.7ப.20) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.
"நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே".
என இப்பதிகத்து வரும் முதற் பாடலிலும், `நெல்லிட ஆள்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும்' எனவரும் பத்தாவது பாடலிலும் கூறப் பெறும் பொருண்மையை முகந்தே ஆசிரியர் இவ்வரலாற்று அமைவைத் தருகின்றார். `அவள் வாடி வருந்தாமே' என்றது பரவையார் இறைவற்கும், அடியவர்களுக்கும், நாளும் சிறப்பொடு பூசனை செய்துவரும் செயற்பாட்டிற்கு அன்றி வேறு காரணத்தால் அன்றாம்.
பெ. பு. பாடல் எண் : 21
"பகல்பொழுது கழிந்ததற்பின்
பரவைமனை அளவுஅன்றி,
மிகப்பெருகு நெல்உலகில்
விளங்கியஆ ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம்
பூதங்கள்" எனவிசும்பில்
நிகர்ப்புஅரியது ஒருவாக்கு
நிகழ்ந்தது, நின்மலன்அருளால்.
பொழிப்புரை : பகற்பொழுது கழிந்ததற்பின், பரவையின் மனைஅளவில் அல்லது, மிகப் பெருக விளங்கிடும் இந்நெல், உலகில் விளங்கிய சிறப்புடைய திருவாரூர் நிறைய வந்து சேரும்படி கொண்டு சேர்ப்பன நம் பூதங்கள் எனப் பெருமானின் திருவருளினால், விண்வழியாக ஒப்பற்றதொரு வாக்கு நிகழ்ந்தது.
பெ. பு. பாடல் எண் : 22
தம்பிரான் அருள்போற்றி,
தரையின்மிசை விழுந்துஎழுந்தே,
உம்பரால் உணர்வுஅரிய
திருப்பாதம் தொழுது ஏத்தி,
செம்பொன்நேர் சடையாரைப்
பிறபதியும் தொழுதுபோய்
நம்பர் ஆரூர் அணைந்தார்
நாவலூர் நாவலனார்.
பொழிப்புரை : தமது பெருமானின் இத்திருவருள் நிகழ்வைக் கேட்ட திருநாவலூரர், அவ்வருளிப்பாட்டை நினைந்து, தொழுது போற்றி, நிலம்மீது விழுந்து எழுந்து, தேவராலும் உணர ஒண்ணாத திருவடிகளைத் தொழுது வணங்கி, அங்கிருந்து நீங்கிச் செம்பொன்னை ஒத்த சடைமுடியையுடைய பெருமானைப் பிற பதிகளிலும் சென்று வணங்கித் திருவாரூர் வந்து சேர்ந்தார்.
குறிப்புரை : பிற பதிகளாவன திருவலிவலம், திருநெல்லிக்கா, திருக்காறாயில், திருஏமப்பேறூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இவற்றிற்குரிய திருப்பதிகங்கள் எவையும் கிடைத்தில.
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருப்பதிகம்
7. 020 திருக்கோளிலி பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீள நினைந்து அடியேன்,
உமை நித்தலும் கைதொழுவேன்,
வாள்அன கண்மடவாள்
அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்,
குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்,
ஆளி் இலை, எம்பெருமான்,
அவை அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
பாடல் எண் : 2
வண்டுஅம ரும்குழலாள்
உமை நங்கைஓர் பங்குஉடையாய்,
விண்டவர் தம்புரமூன்று
எரி செய்தஎம் வேதியனே,
தெண்திரை நீர்வயல்சூழ்
திருக் கோளிலி எம்பெருமான்,
அண்டம் அதுஆயவனே,
அவை அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி , ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே , பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே , தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , உலகெலாம் ஆகியவனே , அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; ஆதலின் , அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளை யிட்டருள் .
பாடல் எண் : 3
பாதிஓர் பெண்ணை வைத்தாய், பட
ரும்சடைக் கங்கை வைத்தாய்,
மாதர்நல் லார்வருத்தம்
அது நீயும் அறிதி அன்றே,
கோதுஇல் பொழில்புடைசூழ்
குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்,
ஆதியே, அற்புதனே, அவை
அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , எல்லார்க்கும் முன்னவனே , யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே , நீ , உன் திருமேனியில் பாதியிற்றானே , ` உமை ` என்னும் ஒரு மாதராளை வைத்தாய் ; அது வன்றி , விரிந்த சடையின்கண் , ` கங்கை ` என்னும் மற்றொரு மாத ராளையும் வைத்தாய் ; ஆதலின் , நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே ? அதனால் உன்னை வேண்டுகின்றேன் ; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
பாடல் எண் : 4
சொல்லுவது என்உனைநான், தொண்டை
வாய்உமை நங்கையைநீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு
பூசல்செய் தார்உளரோ,
கொல்லை வளம்புறவில் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்,
அல்லல் களைந்து, அடியேற்கு அவை
அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது ? நீ , கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய, `உமை` என்னும் நங்கையை முன்பு மணந்து, பின்பு இடப்பாகத்திலே வைத்தாய் ; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ ? இல்லை ஆதலின் , எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை . அடியேன் , சில நெற்களை , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன்;அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி, அவற்றை அங்குச் சேர்த்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
பாடல் எண் : 5
முல்லை முறுவல் உமை ஒரு
பங்குஉடை முக்கணனே,
பல்அயர் வெண்தலையில் பலி
கொண்டுஉழல் பாசுபதா,
கொல்லை வளம்புறவில் திருக்
கோளிலி எம்பெருமான்,
அல்லல் களைந்து, அடியேற்கு அவை
அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே , சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , அடியேன் , குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . ஆதலின் , அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி , அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
பாடல் எண் : 6
குரவு அமரும் குழலாள் உமை
நங்கைஓர் பங்குஉடையாய்,
பரவை பசிவருத்தம் அது
நீயும் அறிதி அன்றே,
குரவுஅம ரும்பொழில்சூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்,
அரவம் அசைத்தவனே, அவை
அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய , `உமை` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே , பாம்பைக் கட்டியுள்ளவனே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே ? அவள் பொருட்டு , அடியேன் , குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
பாடல் எண் : 7
எம்பெரு மான்,உனையே நினைந்து
ஏத்துவன் எப்பொழுதும்,
வம்புஅம ரும்குழலாள் ஒரு
பாகம் அமர்ந்தவனே,
செம்பொனின் மாளிகைசூழ் திருக்
கோளிலி எம்பெருமான்,
அன்புஅது வாய்,அடியேற்கு அவை
அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே , செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே , அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான் ; வேறுயாரை வேண்டுவேன் ! என்னிடத்து அன்புடையையாய் , அவற்றை அங்குச் சேர்த்து உதவ . நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
பாடல் எண் : 8
அரக்கன் முடிகரங்கள் அடர்த்
திட்டஎம் ஆதிப்பிரான்,
பரக்கும் அரவு அல்குலாள் பர
வை அவள் வாடுகின்றாள்,
குரக்கினங் கள்குதிகொள் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்,
இரக்கம் அதுஆய், அடியேற்கு அவை
அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை :இராவணனது தலைகளையும் , கைகளையும் நெரித் திட்ட எங்கள் முதற்கடவுளே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே . அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள் ; அவள் பொருட்டு, அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; நீ இரக்க முடையையாய், அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
பாடல் எண் : 9
பண்டைய மால்பிரமன்
பறந்தும் இடந்தும் அயர்ந்தும்
கண்டில ராய்அவர்கள்
கழல் காண்பரிது ஆயபிரான்,
தெண்திரை நீர்வயல்சூழ்
திருக் கோளிலி எம்பெருமான்,
அண்டம் அதுஆயவனே,
அவை அட்டித் தரப்பணியே.
பொழிப்புரை : முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும் , ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக , இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே , தெளிந்த அலைகளையுடைய நீரை யுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளி யிருக்கின்ற எம்பெருமானே , எல்லா உலகமும் ஆனவனே , அடியேன் , குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
பாடல் எண் : 10
கொல்லை வளம்புறவில்
திருக்கோளிலி மேயவனை,
நல்லவர் தாம்பரவும்
திரு நாவல வூரன் அவன்,
நெல்லிட ஆட்கள்வேண்டி
நினைந்து ஏத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்து உலகில்,
அண்டர் வான்உலகு ஆள்பவரே.
பொழிப்புரை : கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை, நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான், தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி, மனம் பொருந்திப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் பாடவல்லவர், இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி, அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment