திருப் பந்தணை நல்லூர் --- 0859. இருவினை அஞ்ச





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருவினை அஞ்ச (திருப்பந்தணை நல்லூர்)

முருகா!
திருவடி தந்து அருள்வாய்


தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான


இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
     இருள்பிணி துஞ்ச ...... மலமாய

எனதிடர் மங்க வுனதருள் பொங்க
     இசைகொடு துங்க ...... புகழ்கூறித்

திருமுக சந்த்ர முருகக டம்ப
     சிவசுத கந்த ...... குகவேல

சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
     திகழந டஞ்செய் ...... கழல்தாராய்

மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
     மகிழரி விண்டு ...... மருகோனே

வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
     வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா

அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
     மமலனு கந்த ...... முருகோனே

அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருவினை அஞ்ச, வருவினை கெஞ்ச,
     இருள்பிணி துஞ்ச, ...... மலம் மாய,

எனது இடர் மங்க, உனது அருள் பொங்க,
     இசைகொடு துங்க ...... புகழ்கூறி,

திருமுக சந்த்ர முருக! கடம்ப!
     சிவசுத! கந்த! ...... குக! வேல!

சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
     திகழ நடம் செய் ...... கழல்தாராய்.

மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு
     மகிழ் அரி, விண்டு ...... மருகோனே!

வதை புரிகின்ற நிசிசரர் குன்ற
     வலம் வரு செம்பொன் ...... மயில்வீரா!

அருகுஉறு மங்கையொடு விடை உந்தும்
     அமலன் உகந்த ...... முருகோனே!

அருள்செறி பந்தணையில் இரு மங்கை
     அமளி நலங்கொள் ...... பெருமாளே.

பதவுரை

      மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு மகிழ் --- மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்து மகிழ்ந்த

      அரி விண்டு மருகோனே --- அரியாகிய மகாவிஷ்ணுவின் திருமருகரே!

      வதை புரிகின்ற நிசிசரர் குன்ற --- எல்லோரையும் வதைத்து வந்த அசுரர்கள் அழியுமாறு (வெற்றி வேலாயுதத்தை விடுத்தருளி) வெற்றிகொண்டு

      வலம்வரு செம்பொன் மயில்வீரா --- அழகிய மயில் மீது ஏறி உலகை வலமாக வந்த வீரத்தில் மிக்கவரே!

      அருகு உறும் மங்கையொடு விடை உந்தும் --- அழகு பொருந்திய உமாதேவியாருடன் விடை மீது இவர்ந்தருளுகின்ற,

      அமலன் உகந்த முருகோனே --- (இயல்பாகவே மலங்களில் நீங்கிய) சிவபெருமான் விரும்பும் முருகப் பெருமானே!

      அருள் செறி பந்தணையில் --- அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில்

      இரு மங்கை அமளி நலங்கொள் பெருமாளே --- வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடன் மலர்ப் படுக்கையில் இன்புறும் பெருமையில் மிக்கவரே!

      இருவினை அஞ்ச --- சஞ்சிதம் என்னும் எஞ்சு வினை, பிராரப்தம் என்னும் நுகர்வினை ஆகிய இருவினைகளும் அஞ்,


      வருவினை கெஞ்ச --- ஏறுவினை என்னும் ஆகாமியம் என்னை வந்து பொருந்தாமல் அகல,

      இருள்பிணி துஞ்ச --- துன்பத்தைத் தருகின்ற நோய்கள் வலியிழந்து போ,

      மலம் மாய --- ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்து ஒழிய,

      எனது இடர் மங்க --- எனது துயர் இல்லாமல் போக,

      உனது அருள் பொங்க --- தேவரீரது திருவருள் பெருக,

      இசைகொடு துங்க புகழ்கூறி --- இன்னிசையுடன் தேவரீரது உயர்ந்த திருப்புகழைப் பாடி,

      திருமுக சந்த்ர --- சந்திரன் போன்ற அழகிய திருமுக மண்டலத்தை உடையவரே!

     முருக --- முருகப் பெருமானே!

     கடம்ப --- கடப்ப மலர் மாலையைச் சூடியவரே!

      சிவசுத --- சிவக் குமாரரே!

     கந்த --- கந்தசுவாமியே!

     குக --- அடியார்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவரே!

     வேல --- வேலாயுதப் பெருமானே!

     சிவசிவ என்று --- சிவசிவ என்று போற்றி வழிபடுவதால்,

      தெளிவுறு நெஞ்சு திகழ --- தெளிவுபெற்ற எனது நெஞ்சம் சிறப்புற்று விளங்,

      நடம் செய் கழல் தாராய் --- திருநடனம் புரிந்தருளும் திருவடிகளைத் தந்தருள்வாய்.


பொழிப்புரை

     மருதமரத்தையும், கம்சனையும் மாய்த்து மகிழ்ந்த, அரியாகிய மகாவிஷ்ணுவின் திருமருகரே!

         எல்லோரையும் வதைத்து வந்த அசுரர்கள் அழியுமாறு (வெற்றி வேலாயுதத்தை விடுத்தருளி) வெற்றிகொண்டு அழகிய மயில் மீது ஏறி உலகை வலமாக வந்த வீரத்தில் மிக்கவரே!

         அழகு பொருந்திய உமாதேவியாருடன் விடை மீது இவர்ந்தருளுகின்ற, இயல்பாகவே மலங்களில் நீங்கிய சிவபெருமான் விரும்பும் முருகப் பெருமானே!

         அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடன் மலர்ப் படுக்கையில் இன்புறும் பெருமையில் மிக்கவரே!

         சஞ்சிதம் என்னும் எஞ்சு வினை, பிராரப்தம் என்னும் நுகர்வினை ஆகிய இருவினைகளும் அஞ், ஏறுவினை என்னும் ஆகாமியம் என்னை வந்து பொருந்தாமல் அகல, துன்பத்தைத் தருகின்ற நோய்கள் வலியிழந்து போ, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்து ஒழிய, எனது துயர் இல்லாமல் போக, தேவரீரது திருவருள் பெருக, இன்னிசையுடன் தேவரீரது உயர்ந்த திருப்புகழைப் பாடி,  சந்திரன் போன்ற அழகிய திருமுக மண்டலத்தை உடையவரே! முருகப் பெருமானே! கடப்ப மலர் மாலையைச் சூடியவரே!  சிவக் குமாரரே! கந்தசுவாமியே! அடியார்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவரே! வேலாயுதப் பெருமானே! சிவசிவ என்று போற்றி வழிபடுவதால், தெளிவுபெற்ற எனது நெஞ்சம் சிறப்புற்று விளங், திருநடனம் புரிந்தருளும் திருவடிகளைத் தந்தருள்வாய்.


விரிவுரை


இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச ---

வினைகளின் தன்மையை "சார்புக் கோடுபாடு" என்றும் கொள்ளலாம். பல நொடிகள் சேர்ந்து நிமிடம் ஆவதும், பல நிமிடங்கள் சேர்ந்து ஒரு மணி ஆவதும், பல மணிகள் சேர்ந்து ஒரு நாள் ஆவதும் போல, ஒரு நாள் என்பது பல மணிகளாகவும், மணிகள் என்பது பல நிமிடங்களாகவும், பல நிமிடங்கள் பல நொடிகள் ஆகவும் கொள்ளப்படும்.

"ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை. அதாவது புறவிசையும், எதிர்விசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை.

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு" என்பது நியூட்டன் என்னும் அறிஞர் கொள்கை. இதுவே வினைக்கு சரியான விளக்கமாகும்.

பின்வரும் சிவஞான சித்தியார் பாடல்கள் வினைக்கு விளக்கமாக அமைந்தவை.

"இதம் அகிதங்கள் என்பது-
         இகல்மனம் வாக்குக் காயத்து
இதம் உயிர்க்கு உறுதி செய்தல்;
         அகிதம் மற்றது செய்யாமை;
இதம் அகிதங்கள் எல்லாம்
         இறைவனே ஏற்றுக் கொண்டு இங்கு
இதம் அகிதத்தால் இன்பத்
         துன்பங்கள் ஈவன் அன்றே".

நலம் தீங்குகள் என்பன மனம் மொழி மெய்களால் உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தலும் செய்யாது விடுதலுமாகும். இறைவனே ஒரு செயலின் நன்மை தீமைகளை மதிப்பிட வல்லவன். ஆகையால் அவற்றை அவனே கைக் கொண்டு அதனைச் செய்த உயிர்களுக்கு இன்பத் தையும் துன்பத்தையும் கூட்டுவான்.

இதம் அகிதம் என்ற வட சொற்களுக்கு முறையே நலம் தீங்கு என்று பொருள். இதம் என்பது உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தல். அகிதம் என்பது செய்யத் தகாதவற்றைச் செய்தல் மட்டும் இன்றி செய்யத் தக்கவற்றைச் செய்யாமையுமாகும்.

"இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
         இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
அவன் இவனாய் நின்றமுறை ஏகனாகி
         அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும் இவன் செய்தி எல்லாம் என்செய்தி என்றும்
         செய்ததுஎனக்கு இவனுக்குச் செய்தது என்றும்
பவம்அகல உடனாகி நின்று கொள்வன் பரிவால்
         பாதகத்தைச் செய்திடினும் பணி ஆக்கி விடுமே".

சிவபெருமான் தன்னை வழிபடும் அடியார்களுடன் பிரிப்பின்றி உடன் நிற்பான். அத்தகைய அடியார்கட்கு உலகில் நலம் தீங்குகள் செய்தவர்கே அச்செயல்களின் பயன் சென்று இசையும். அல்லாமல், அடியார்களுக்கு வினைப்பயன் எய்தாது. தன் முனைப்பு அற்றுத் திருவருளில் ஒடுங்கித் தலைவன் செயலே தம் செயலாக அரன் பணியில் நிற்கும் இவ்வடியார்களுக்கு உயிரின் குற்றமாகிய மலமும் நீங்கும். சிவபெருமானும் அடியார்களின் செயல்கள் எல்லாம் தன் செயலாகவும், அடியார்களுக்குச் செய்த எல்லாம் தனக்குச் செய்தன எனவும் உடனாக நின்று ஏற்றுக் கொள்வான். அவ்வாறு கொள்ளவே அடியார்களின் பிறப்பு அகலும். அத்தகைய அடியவர்கள் சிவபிரான் மீது கொண்ட அன்பின் மிகுதியால் எப்போதேனும் தீங்கு செய்திடினும் இறைவன் அதனையும் தனது பணியாக ஏற்று அருளுவான்.

இப்பாடலில் இவன் என்ற சொல் அடியார்களைக் குறித்தது. அவன் என்ற சொல் சிவபெருமானைக் குறித்தது.

வினையின் விளக்கம் மேலும் பின்வருமாறு அறுவுறுத்தப்பட்டு உள்ளதும் அறிக...

நல்வினை தீவினை என்றுஇரு வகையால்
சொல்லப் பட்ட கருவில் சார்தலும்
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்

தீவினை என்பது யாதுஎன வினவின்    
ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழை
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்எனச் சொல்லிற் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர்
இத்திறம் படரார், படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக்  
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் 

நல்வினை என்பது யாதுஎன வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்...
                     ---  மணிமைகலை, பவத்திறம்....காதை.

இதன் பதவுரை ---

நல்வினை தீவினை என்று இருவகையால் --- நற்செய்கையும் தீச்செய்கையுமாகிய இருவகைச் செய்கைகளால்; சொல்லப்பட்ட கருவிற் சார்தலும் --- மக்கள் தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை அடைவதும் ; கருவிற்பட்ட பொழுதினுள் தோற்றி --- அப் பிறப்புக்களில் இயைந்த காலத்தே அவற்றோடே தோற்றி; வினைப்பயன் விளையுங்காலை --- செய்வினைப் பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில்; மனப் பேரின்பமும் --- மனத்தின்கண் பெரிய இன்பத்தையும்; கவலையும் --- துன்பத்தையும்: காட்டும் --- காட்டுவதும் செய்யும்.

தீவினை என்பது யாதென வினவின் --- தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; அதுகேளாய் --- யான் சொல்லுவதனைக் கேட்பாயாக;

1.   கொலையே களவே காமத் தீ விழைவு --- கொலையும் களவும் காமமாகிய தீய வேட்கையுமாகிய; உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் --- கெடாத உடம்பால் உண்டாகும் தீவினைகள் மூன்றும்;

2.   பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என --- பொய்யுரையும் புறங்கூறலும் கடுஞ்சொற் சொல்லுதலும் பயனில்சொல் சொல்தலும் என்று ; சொல்லில் தோன்றுவ நான்கும் --- வாக்கினிடத்தே உண்டாகும் தீவினைகள் நான்கும் ;

3.   வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று --- பிறர் பொருளை வௌவக் கருதலும் வெகுளுதலும் குற்றம் பட உணர்தலும் என்று ; உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என --- மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றும் என;
பத்து வகையால் --- பத்து வகைப்படுவதால்; பயன் தெரி புலவர்
--- வினைவகையும் அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்; இத்திறம் படரார் --- இப் பத்தினையும் ஒரு நாளும் நெஞ்சாலும் நினையார்; படர்குவராயின் --- நினைவராயின் ; விலங்கும் பேயும் நரகருமாகி --- விலங்கும் பேயும் நரகருமாகிய கதிகளுள் பிறந்து ; கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் --- கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப வுடம்புற்று வருந்துவர்.

நல்வினை யென்பது யாதென வினவின் --- நல்வினை என்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி --- முன்பு சொல்லப்பட்ட பத்துவகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி; சீலம் தாங்கி --- சீலத்தை மேற்கொண்டு; தானம் தலைநின்று --- தானங்கள் பலவற்றையும் செய்து; மேலென வகுத்த ஒரு மூன்று திறத்து --- மேற்கதி யென்று சான்றோரால் வகுத்துரைக்கப்பட்ட மூன்றாகிய; மக்களும் தேவரும் பிரமருமாகி --- மக்களென்றும் தேவரென்றும் பிரம ரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து; மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் --- தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர்.


இருவினை என்ப மனமுதல் மூன்றின்
     இயற்றும் இதம் அகிதங்கள்,
பெருவினைப் பயன்கள் புண்ணிய பாவம்
     பேசும் இக் கருமத்தின் பயன்கள்
மருவிடும் இன்ப துன்பமாம் அவைதாம்
     ஆய்வின் அவ் இருவினை தோற்றும்
ஒருதனு விளைப்ப மற்றொரு தனுவின்
     உணப்படுங் கெட்டும் கேடு இலவாய்.
                                ---  தணிகைப் புராணம்.

இதன் பொருள் ---

     ஆன்மாக்கள் மனவாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் செய்யப்படும் இதம் அகிதம் என்பனவே இருவினை என்று சொல்வார்கள். (நூல்களால் விதந்து) சொல்லப்படுவனவாகிய புண்ணிய பாவங்கள் பெரிய இருவினையின் பயனாய்க் காரணமும் காரியமுமாய் இருக்கும். இப்புண்ணிய பாவங்களின் பயன்கள் (ஆன்மாக்களிடத்து) இன்பமும் துன்பமுமாகப் பொருந்தும். அவ்வின்ப துன்பங்களை ஆன்மாக்கள் நுகர்ந்து நீக்குங்காலத்துப் பின்னரும் அவ்விருவினை உளவாகும். ஓர் உடல் வினைகளைச் செய்ய வேறோர் உடலின்கண் வினைகள் கெட்டும். (பயன் கேடு இன்றி) வேறோருடம்பில் நுகரப்படும்.


தூயவாய் அமைக்கப் படும்வினை எவர்க்குந்
     தூயவாய் இருப்பன பலவே,
தீயவாய் விலக்கப் படுவன எவர்க்கும்
     தீயவாய் இருப்பன பலவே,
தூயவாய் ஒருவர்க்கு, ஒருவருக்கு ஒழியும்
     தீயவாய் இருப்பவும் பலவே,
தீயவாய் ஒருவர்க்கு, ருவருக்கு அடுக்கும்
     தூயவாய் இருப்பவும் பலவே.
                                ---  தணிகைப் புராணம்.

இதன் பொருள் ---

     (நூல்களால்) தூயனவாக நியமிக்கப்படும் நல்வினைகள் யாவர்க்கும் நன்மையுடையனவாக இருப்பன பலவாம். (நூல்களால்) தீயன என்று விலக்கப்படும் தீவினைகள் யாவர்க்குந் தீயனவாக இருப்பன பலவாம். (நூல்களால் விதித்த நல்வினைகள்) பெரியார் ஒருவர்க்கு நல்லனவாய், (நூல் நெறி ஒழுகாத கீழோற்கு) விதி ஒழிந்து தீயனவாய் இருப்பவும் பலவேயாம். (நூல்களால் விலக்கப்பட்ட) வினைகள் ஒருவர்க்குக் கருத்து வகையான் பொருந்தும் தூயனவாய் இருப்பனவும் பலவேயாம்.

இன்பமே பயக்கும் புண்ணியம் எல்லாம்,
     இழிதரு பாவங்கள் எல்லாம்
துன்பமே பயக்கும், புண்ணிய பாவம்
     தொக்கதம் பயன் தராது ஓழியா,
கொன்படு வினைகள்ஒழி இரு வினையும்
     குலாவுறு புண்ணிய பாவ
வன்புறு பயனை யப்பயன் போல
     வழங்குறாது ஒழிவகை இலையே.
                                ---  தணிகைப் புராணம்.

இதன் பொருள் ---

     புண்ணியச் செயல்கள் யாவும் இன்பத்தையே தரும். இழிக்கத் தக்க பாவங்கள் யாவும் துன்பத்தையே தருவனவாம். புண்ணிய பாவம் என்னும் இருசெயலும் தமக்கெனத் தொகை செய்யப்பட்ட பயனாய இன்ப துன்பினைத் தாராது ஓழியாவாம். (நீரடித்தல் அழுக்குத் திரட்டல் முதலிய) வீணாகிய வெறுவினைகள், ஒழிக்கின்ற சிவ நல்வினை தீவினைகளும், தம் பயனாகப் பொருந்தும் புண்ணிய பாவங்களின் வலிய பயனாகிய இன்பதுன்பினை அப் பசுக்களின் இருவினைப் பயன்கள்போலத் தராமல் நீங்கும் வகையும் இல்லையாம்.

"பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றிய மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்,
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்று இவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன;

தின்றனை அனைத்தும், அனைத்து நினைத் தின்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை; நரகில் கிடந்தனை;
இன்பமுந் துன்பமும் இருநிலத்து அருந்தினை,
ஒன்று ஒன்று ஒழியாது உற்றனை"              --- பட்டினத்தடிகள்.

"அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி,
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை; யான் அவர்
தந்தையர் ஆகியுந் தாயர் ஆகியும்
வந்து இராததும் இல்லை; முந்து
பிறவா நிலனும் இல்லை; அவ்வயின்
இறவா நிலனும் இல்லை; பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை;
யான் அவை
தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை;
அனைத்தே காலமும் சென்றது..."             --- பட்டினத்தடிகள்.

உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பத் துன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்த குடியில் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில்தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு முரணும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என அறிக.

நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் என்க.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு?  எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? ஆதலின் வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது என்க.  குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்பது உறுதி. அது, எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,
சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி
மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செய்கமலத்து ஆம்.
  
வினை மூவுருவம் கொள்ளும்

வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.

பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்திதத்துவத்தினிடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.
  
கன்மநெறி திரிவிதம், நல் சாதிஆயுப் போகக்
         கடன் அது என வரும், மூன்றும் உயிர் ஒன்றில் கலத்தல்,
தொன்மையது ஊழ்அல்லது உணவுஆகா, தானும்
         தொடங்குஅடைவில் அடையாதே தோன்றும், மாறித்
தன்மைதரு தெய்விகம் முற்பௌதிகம் ஆன்மிகம் ஆம்,
         தகையில்உறும் அசேதன சேதனத்தாலும் சாரும்
நன்மையொடு தீமைதரு சேதனனுக்கு இவண் ஊண்
         நாடில்அதன் ஊழ்வினையாய் நணுகும் தானே. --- சிவப்பிரகாசம்.

         வினைக்கு ஈடாக இனம் வாழ்நாள் துய்த்தல் ஆகிய மூன்றும் ஓர் உயிருக்குத் தொன்று தொட்டுப் பொருந்தி வரும். அவ்வினை பக்குவம் அடைந்த காலத்தே உயிர்களுக்குப் பயன் தரும். உயிர்களால் நுகரப்படும். அப்போது அது ஊழ் என்ற பெயரைப் பெறும். வினை யீட்டப் பட்ட கால அடைவிலே உயிர், வினைப் பயன்களை நுகர்வதில்லை. வினையின் வன்மை மென்மைகளுக்கு ஈடாகவும், பக்குவப்பட்ட முறைமையிலும் உயிர்கள் அவற்றின் பயன்களை நுகருமாறு இறைவன் கூட்டுவான். வினைகள் உயிரை வந்து சாரும் போது மூன்று வழிகளிலே வந்தடையும். அவற்றை ஆதி தெய்விகம் ஆதி ஆன்மிகம் ஆதி பவுதிகம் என்று கூறுவர். அறிவற்ற பொருள்களாலும் அறிவுடைப் பொருள்களாலும் வினைப்பயன் வினைசெய்த உயிரைச் சாரும். ஓர் ஆன்மாவின் இப்பிறவியில் அவ்வுயி நல்லனவும் தீயனவும் நுகர்வதனை ஆய்ந்து பார்த்தால் அவை அவ்வுயிரின் முன்னை வினைப் பயனைப் பொறுத்தே அமைகின்றன என்பது புலனாகும்.


வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.

அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.

ஆகாமியம் - செய்யப்படுவது.
சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம் - அநுபவிப்பது.

இனி, பிராரத்தம்  ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1)     ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள்.

அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்.

(2)     ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.

அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.

(3)     ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.

அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

பனியால் இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில் பவுதிகம் ஆகும்.

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1.    உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2.    வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3.    அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4.    அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5.    மாந்திர வினை ---  சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம். அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.

இருவினை முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா லோகநாயகா.        ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

"அவையே தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி நிற்கும் அன்றே".

என்ற சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல் புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.

இவ்வினைகளே பிறப்பு இறப்புக்குக் காரணமாம். வினை ஒழிந்தால் இத் தேகம் தினைப் போது அளவும் இராது.

வினைப்போக மேஒரு தேகம் கண்டாய்,
         வினைதான் ஒழிந்தால்
தினைப்போது அளவுநில்லாது கண்டாய்,
         சிவன் பாதம் நினை,
நினைப்போரை மேவு, நினையாரை
         நீங்கி நெறியின் நின்றால்
உனைப்போல் ஒருவர்உண்டோ, மனமே!
         எனக்கு உற்றவரே.                  ---  பட்டினத்தார்.

இதன் பொருள் ---

", மனமே! இவ்வுடம்பானது இருவினையின் காரியத்தால் ஆகியது. அக் கன்மத்தை நுகர்ந்து முடிந்தால், இவ்வுடம்பு ஒரு கணமும் நில்லாது அழியும். ஆதலினால், சிவபெருமானை நினைப்பாயாக. சிவசிந்தை செய்யும் அடியாருடன் உறவு கொள்வாயாக. சிவசிந்தை இல்லாதவரை விட்டு விலகுதி.  இங்ஙனம் நீ நடப்பாயேல் எனக்கு உற்ற துணைவர் உன்னைப்போல் ஒருவர் உண்டோ?” என்று பட்டினத்தடிகள் கூறுமாறு காண்க.

உயிர்கட்கு முற்பிறப்பில் செய்யப்பட்டுக் கிடந்த இருவினைக்கு ஈடாக இப்பிறப்பின் கண் இன்ப துன்பங்கள் எய்தும். 

வினை சடமாகலின் அதனை இறைவன் உயிர்கட்கு உரிய காலத்தில் ஊட்டுவன்.  மருத்துவனும் மன்னனும் போல் என்று உணர்க.

இருவினை இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்துஇறந்து
வருவது போவது ஆகும், மன்னிய வினைப் பலன்கள்
தரும் அரன் தரணியோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவும் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.
                                                                                 ---  சிவஞான சித்தியார்.


இருள்பிணி துஞ்ச ---

வினையால் வருகின்ற துன்பத்தைத் தருகின்ற பிணிகள் இந்த உடம்பைச் சாராது ஒழியவேண்டும்.

இருள் என்றது உடம்பால் அனுபவிக்கின்ற துன்பத்தையும், உயிரால் அனுபவிக்கப்படுகின்ற பிறவித் துன்பத்தையும் குறிக்கும்.

இசைகொடு துங்க புகழ்கூறி ---

துங்கம் - உயர்வு, பெருமை.

மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே ---

கண்ணன் மருதமரத்தை முனிந்தது

குபேரனுடைய புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்று இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை இன்றி, நீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரதமுனிவர், "இது அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்றி வளர்ந்து, தேவ ஆண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம் தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார்.  அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.

கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள்.  எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ! இது என்ன அதிசயம்! இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, கண்ணன் தனது இடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை, யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று, தாமோதரனைப் போற்றி செய்து, தங்கள் பதவியை அடைந்தார்கள்.

வருமத யானைக் கோடு அவை திருகி, விளாவில் காய்கனி
     மதுகையில் வீழச் சாடி, ...... அச் சத மா புள்
பொருது இரு கோரப் பாரிய மருதிடை போய், ப்போது ஒரு
     சகடு உதையா, மல் போர்செய்து ...... விளையாடி
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா! வஜ்ராயுத
     புரம் அதில் மா புத்தேளிர்கள் ...... பெருமாளே.      --- திருப்புகழ்.

திருவொடு பெயர்ந்து, இருண்ட வன மிசை நடந்து, இலங்கை
     திகழ் எரி இடும் குரங்கை, ...... நெகிழாத
திடம் உள முகுந்தர், கஞ்சன் வரவிடு மெல் வஞ்சகங்கள்
     செறிவுடன் அறிந்து வென்ற ...... பொறியாளர்,
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு, மருது இடை தவழ்ந்து நின்ற,
     பரமபத நண்பர், ன்பின் ...... மருகோனே! --- (மருமலரினன்) திருப்புகழ்.

                                     கண்ணன் கம்சனை அழித்தது.

மதுரையை அதர்ம வழியில் அரசு புரிந்து வந்த கம்சன், கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு, வஞ்சகமாக பூதகி, திருணாவர்த்தன், சகடாசுரன் முதலிய பலரை அனுப்பினான். அவர்கள் வேறு வேறு மாய வடிவில் வந்து கண்ணனைக் கொல்ல முயன்றார்கள். அவர்களது மாயத்தைக் கண்ணபிரான் அறிந்து அவர்களை எல்லாம் கொன்று இறுதியில் கம்சனையும் மாய்த்து, உக்ரசேனனுக்கு முடிசூட்டி அறத்தை நிலைநாட்டி அருளினார்.

வதை புரிகின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில்வீரா ---

சூரசங்காரத்தை முடித்த வெற்றிக் களிப்புடன் முருகப் பெருமான் மயில் மீது ஆரகணித்து உலகை வலமாக வந்தார்.


திடுக்கிடக் கடல், சுரர்கள் முறிபட,
     கொளுத்து இசைக் கிரி பொடிபட, சுடர் அயில்
     திருத்தி விட்டு, ரு நொடியினில் வலம்வரும் ...மயில்வீரா!   --- திருப்புகழ்.

.....           .....           .....விளங்கிய ...... மயில்ஏறி
அடையலர்கள் மாள, ஒரு நிமிடந்தனில்
     உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்
     அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ...... பெருமாளே. ---  திருப்புகழ்.

அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலங்கொள் பெருமாளே ---

"அமளி நலம் கொள் பெருமாளே" என்று திருவருணைத் திருப்புகழிலும் அடிகளார் போற்றி உள்ளமை காண்க.

"திருப்பந்தணை நல்லூர்", சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "பந்தநல்லூர்" என்று வழங்குகிறது.

கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர் --- பசுபதீசர்.
இறைவியார் --- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம்  --- சூரியதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.

இத் திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு.  உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக் கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார். பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையை பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப் பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம் வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.

பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.

காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.

சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞானசம்பந்தர் திருவாயில்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துரை

முருகா! திருவடி தந்து அருள்வாய்



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...